-
இவ்விந்தையை என்னென்று
சொல்வது
வியந்தார் தமிழாசிரியர்..
வழக்கமாய்
முத்து முத்தாய் எழுதும் முத்து
கொஞ்சம் கோழிக் கிறுக்கலாய்..
என்னடா ஆச்சு..
ட்ராயரைத்தூக்கி விட்ட படி
வழக்கமா எதிர் வீட்டு அக்கா
சொல்லிக் கொடுக்கும்
ஸ்கூல் முடிச்சுப் போனதும்..
போனவாரம் அக்கா போய்டுச்சு..”
“ஓ கல்யாணம் ஆய்டுச்சா..”
“இல்லை சார்”
தலையை அசைத்தான் தீர்மானமாக..
“செத்துப்போச்சு
ஏதோ காதலாம்”
கண்ணில் முட்டியது அழுகை..
சரி..போ..என்னிடம் வா
ஸ்கூல் முடிந்ததும்..
சொல்லித் தருகிறேன் என்றவருக்கு
பையனின் எதிர் வீட்டு அக்காவின் முகம்
நிழலாய்..
-
நிழலாய்
தொடர்வது
வினை
விதி
பாவம்
புண்ணியம்
சாவு
கிரகம்
நட்பு
மனசாட்சி
-
மனசாட்சி
சற்றேனும் சிலருக்கு இருப்பதனால்
அவ்வப்போது
பெய்கிறது மழை..
-
மழையின் சத்தம்
மனதிற்கு இதம்
தாலாட்டும் கீதம்
கிடைக்குமா நிதம்
-
நிதம் நினைக்கணும்
நிழலாய் தொடரணும்
சதா கொஞ்சனும்
சகஜமாய் பழகணும்
விடாமல் துரத்தனும்
விழாமல் தாங்கனும்
இமைக்காமல் பார்க்கணும்
மலைக்காமல் ரசிக்கணும்
-
ரசிக்கணும் என்றுதானே ஒப்பனை
அலங்கார சாதனங்களின் விற்பனை
என்னைப் பார் என் அழகைப் பார் என்று
மூடியும் மூடாமலும் தெரியும் அங்கங்கள்
கண்ணைக் கவரும் கவர்ச்சி விளம்பரங்கள்
கருத்தை மயக்கும் மாய வலைகள்
விரிப்பவவை வர்த்தக நிறுவனங்கள்
மழுங்குதுதே மெல்லிய உணர்வுகள்
-
உணர்வுகள் அனிச்சமலராய்...
உரசல்படாமல் காத்துக்கொள்ள
கவசமிட்டால் வந்தது
கல்நெஞ்சக்காரி பட்டம்!
-
மனம் கொண்ட மணங்கள் -
தருமாம் மனோரஞ்சிதம்
மனம் கொண்ட உணர்வுகள் ....
வருமா அவள் சம்மதம் ?
-
சம்மதம்..
துரட்டியைத் தொட்டெடுக்கவும் சம்மதம்
பொதுப்பாதையில் சிதறப்பட்ட
நரகலைப் பெருக்கி அகற்ற..
சம்மதம்..
முள்ளைக் கையாளவும் சம்மதம்
மென்நெஞ்சில் தைத்த வேறோர்
முள்ளைக் கீறி எறிய
-
எறிய எடுத்த அம்பு கையில்
தயக்கம் பார்த்தன் நெஞ்சில்
ரத்த சொந்தங்களன்றோ எதிரில்
பிறந்தது கீதை சாரதி வாயில்
-
வாயிலில் கருப்புத் தோரணமா
வீட்டினுள் அவர் இருக்கும்போது?
கண்மை இடாததற்கு
கன்னியின் விளக்கமிது!
-
விளக்கமிது என எழுதினாலும்
பல சமயங்களில்
முழு மதிப்பெண் கிடைப்பதில்லை
ஏனெனில் தமிழ் மொழிப் பரீட்சையாம்..
பையன் அம்மாவிடம்
தயங்கியவாறே சொல்ல
அம்மா சொன்னாள்
இட்ஸ் ஆல்ரைட் டா..
கணிதம் இயற்பியல் வரலாற்றில்
நல்ல மார்க் எடுப்பாயல்லவா
அது போதும்..!
-
போதும்.. ஊடல் என்ற உப்பிட்டது..
தாகம் கொல்லுமுன்
கூடல் நீர் ஊற்றிவிடு..
உயிர் நனையட்டும்!
-
நனையட்டும் மனிதம்
சிறுமழையாய் புனிதம்
துளிர்க்கட்டும் இப்பயிர்
சிலிர்க்கட்டும் எமதுயிர்
-
உயிர் உடம்பு எடுத்ததா
உடம்பு உயிர் எடுத்ததா
சிவவாக்கியர் வாக்கியம்...
பதிலில்லை இன்னமும்...
அசைவது உயிரா - சிதைந்து
வளர்வது உயிரா
உணர்வது உயிரா- கற்று
உயர்வது உயிரா
இனம் பெருக்குவது - சூழலுக்கு
ஏற்ப மாறுவது..
சிந்திப்பது..
நினைவில் வைப்பது..
???????????
உயிர் தந்த அறிவால் அலசியும்
உயிரின் வடிவம் பிடிபடவே இல்லை!
-
பிடிபடவே இல்லை சந்தை நிலவரம்
புரியவே இல்லை திரைகளின் ஆதிக்கம்
தெளிவேயில்லை கலாச்சார குழப்பம்
பொங்கி வடியுது ஒரு கோடி ஆதங்கம்
-
ஆதங்கம் அடிக்கடி படுவாள் மாமியார்..
என் குழந்தைகளில் இவனைத் தவிர
மத்தவாள்ளாம் நல்லா இருக்கா..
எனக்கு சுருக்கென்றிருக்கும்..
மனைவியிடம் சொல்வேன்..
ஏன் உன் இரண்டாவது அண்ணாவிடம்
மட்டும் உன் அம்மாவிற்குப்
ப்ரியம் அதிகம்..
நீங்கள் மொத்தம் அறுவர் ஆச்சே..
ஏதோ வயசானவா
விடுங்கோ..
வருடங்கள் பல
சென்ற பிறகுதான் புரிந்தது..
அது
அனைவரும் நலமாய் இருக்க
நினைத்த ஆசை..
-
ஆசை அனைவரும் சமமாய் இருக்க..
ஆனால் இறைவனின் படைப்பில்
சிலர் மனநலம் குன்றி....
உடலில் மட்டும் வளர்ந்து...
உள்ளம் வளராமல் ... வளர வாய்ப்பே இல்லாமல்!!!!
If immature, its possible they might grow.. we can hope!
Alas.. in cases of dysmature, they never grow but we can adapt and cope!
தேவனின் மாற்றுத்திறன் தென்படும் உயிர்கள்..
அலட்சியப்படுத்தாமால் அரவணைப்போம்!
-
அரவணைப்போம் உலகமயமாக்கலை
பழகுவோம் கன்னாபின்னா கலைகளை
விதைத்திடுவோம் மலட்டு விதைகளை
அடைப்போம் உள்நாட்டு சிறு வணிக வழிகளை
வேடிக்கைப் பார்ப்போம் பழுக்கும் பிஞ்சுகளை
அறிவோமா அழிக்க வந்த இந்த மாயசுழலை
-
சுழலும் உலகப்பநது
சூடாகி மாற்றங்கள்.
மாறும் உலகில் மாறாதிருக்க
யான் வனவிலங்கல்லேன் --
கவியரசின் மொழிகேட்டு
மாறுகிறோம்..நிச்சயமாய்!
ஏறுமாற்றமா இறங்குமாற்றமா?
அதுதான் தடுமாற்றமாய்!!!
-
தடுமாற்றமாய் இருக்கிறது
புத்தம்புதிய பாதையிது
பழகாத மனிதர்களோடு
புரியாத பழக்கங்களோடு
புது மருமகளின் மறு வீடு
போராடித்தான் வென்றிடு
-
வென்றிடுவது போராட்டங்களால் மட்டுமன்று..
விட்டுக்கொடுப்பதிலும்.. ஏன்
வேண்டுமென்றே தோற்பதிலும் கூட உண்டு..
இல்லறம்...
இனிய விநோத ஆடுகளம்...
-
ஆடுகளம் தான் இது..
புதிது புதிதாக ஆட்டக்காரர்கள்
நீந்தித் தவழ்ந்து எழுந்து
வெற்றி நடை போட்டவர்களும் உண்டு..
இடையிலேயே படக்கென
முடிந்தவர்களும் உண்டு..
ஆட்டம் முடியும் என்று
ஆட்டக்காரர்களுக்குத் தெரியும்
எப்போது என்று தெரியாது..
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
மட்டும்
சுவாரஸ்யம் தான்
எப்போதும் புதிய ஆட்டங்களைப் பார்ப்பது..
ஏதோ
ஆட்டக்காரகள் மாறிக் கொண்டே இருந்தாலும்
ஆடுகளம்
இருக்கிறது அப்படியே..
-
அப்படியே இருக்கும் ஆடுகளம்...
அப்படியே இருப்பர்
முப்பத்துமுக்கோடி சந்திர சூரிய நட்சத்திரரும்..
எழுபது ஆண்டுகள் மட்டுமே பார்க்கும் என் விழிகளுக்கு..
எழுநூறு பில்லியன் ஆண்டு ஏட்டைப் புரட்டினால் தெரியும்
சிலர் பிறந்து ஒளிர்ந்து சிவந்து வீங்கி வெடித்து சிதற
சிலர் சுருங்கி கருத்து பெருங்குழியில் புதைய..
அண்டப் பெருவெளியில்
நட்சத்திர நாற்றங்காலில்
மாற்றமே சாசுவதம்..
காலமானி மட்டும் பலவிதம்..
-
பலவிதமாய் சுகங்கள்
துன்பங்கள்
ஏற்ற இறக்கங்கள்
எல்லாம் பார்த்தாயிற்று..
பொக்கை வாயில் ஆரம்பித்து
பொக்கை வாய்க்கு வந்தாயிற்று..
உணவை விட
இப்போது
எண்ணங்களை அசைபோடுவதே அதிகம்..
கோடு அதன்மேல்கோடு
அதன் மேல்கோடு
என
எண்ணங்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிறழ்கின்றன..
நிரந்தரத் துயில் எப்போது வரும்
என பயம் தான்..
கதை முடிந்துவிட்டால் அவ்வளவு தான்..
வெறும் தூசு தூசாகக்
காற்றில்கலக்க வேண்டியது தான்..
நினைப்பார்களா
இந்தக் காற்றில் நான் இருக்கிறேன் என்று..
எல்லாமே கேள்விக்குறிதான்..
ம்ம்
வாழ்க்கை பற்றிய பயம்
வாழ்ந்து முடியும் போது
இருக்கிறது அதிகமாய்..
-
அதிகமாய் யோசிப்பது அந்திம காலத்தில்
நிறைய நேரமிருக்கு கையில்
எளிதில் வருவதில்லை துயில்
வெறித்துப் பார்க்கும் வெட்டவெளியில்
எட்டிப்பார்க்கும் பரமாத்மாவின் ஒளியில்
கலக்கத் தவிப்பு ஜீவாத்மாவின் உயிரில்
-
உயிரில் கலக்கும் உணர்வாம் காதல்
உடல் மறைந்தாலும் பின் தொடருமாம்
சிந்தையில் மலரும் விந்தையாம் காதல்
சிற்றின்பம பேரின்பம் காண விழையுமாம்
தேடலின் முடிவில் தோன்றுமாம் காதல்
ஊடலில் ஒதுங்கி கூடலில் இணையுமாம்
-
இணையுமாம்
இன்னும் சொல்லிக் கொண்டு தான்
இருக்கிறார்கள் என
தம்மிடம் வருபவர்கள்
சொல்லி ஆதங்கப் படுவதைக்
கேட்டவண்ணம்
சிரித்த படி ஓடிக் கொண்டிருக்கின்றன
கங்கா காவேரி நதிகள்..
-
நதிகள் கரையில் வளர்ந்த நகரங்கள்
நல்மனித நாகரிகத்தின் ஏணிப்படிகள்
கலையும் கல்வியும் தவழும் மடிகள்
சரித்திரம் சொல்லும் வண்ண பாடங்கள்
-
நதிகள் கரை புரண்டோடும் மழைக் காலம்
மதகுகள் வாய் திறக்க கண்மாய் நிறையும்
மரஞ்செடிகள் தரை தட்டி சாலை மறிக்கும்
நஞ்சை வயல்களில் நெற்கதிர் மூழ்கும்
குளம் குட்டையில் சாரைகள் நெளியும்
முகங்கள் எல்லாம் குடைக்குள் ஒளியும்
பள்ளிக் கூடம் மூடப்பட்டு சிறார் கூட்டம்
காகிதக் கப்பல் விட மழையில் கால் பதிக்கும்
மின்சாரம் ஒரேயடியாய் நின்று போகும்
ஊரே சீக்கிரம் தூங்கி விடும்
-
தூங்கி விடும் கண்கள்
பொய்யாய்..
மெதுவாய் வந்து
உடை மாற்றி
கிசுகிசுத்து
என்னை எழுப்பப்பார்த்து
பின் படுத்துக் கொள்வாய்
ஹேய்
தூங்கிட்டேங்க்..
ஆஃபீஸ்லவேலை
தெரியுமே
ஸாரிம்மா
தெனசரி இதானே..
ஓகே குட் நைட்
நான் பேசாமல் இருந்தாலும்
நீ பார்த்துக்கொண்டிருக்கிறாய்
எனத் தெரியும்..
கொஞ்சம் பீறிட்ட கோபத்தில்
திரும்பி இரண்டு மூன்று
செல்லக்குத்துக்கள் விட
ஏய் என்ன இது என நீயும்
பொய்யாய் அலறிச் சிரிக்க
நானும் சிரிக்க..
போடா..
இது தினமும் தொடராமல்
ஆக்கி விடேன் சிறுகதையாய்...
-
சிறுகதையாய் முடிந்தால் அழகு
சின்ன அத்தியாயமே தேன் துளி
மகாபாரதமாயதை இழுக்கையிலே
சின்னத்திரையில் நெடுந்தொடராய்
காணவும் கேட்கவும் சகியாததாய்
பாவம் வேறு கதியற்ற முதியோர்
-
முதியோர்...
யானைக்கூட்டத்தில் பெருந்தலைவி (matriarch)
பட்டறிவால் வழிநடத்தும் அருந்தலைவி..
அடுத்த தலைமுறைக்கு அறிவூட்டும் சுரபி..
முதியோர்...
மனிதக்கூட்டத்தில் கிழவன் - கிழவி..
இடத்தை அடைக்கும் உயிர்ப்பொதி
எதுக்களித்த இத்தலைமுறை அருந்தாமல் காய்ந்த அறிவு மடி!
-
மடிமீது சாய்த்து
மகனின் தலையை கோதி
முற்றம் வழியே
ஒற்றை நிலா பார்த்து
கணவரை நினைக்கையில்
கண்ணசந்தவன் தூங்கிப் போனதால்
கொலுசுக் கால்களை மௌனமாக்கி
தாழ்வாரம் கடந்தாள் மருமகள்
-
மருமகள் மற்றொரு மகள்
பாரம் சுமக்க இன்னொரு தோள்
பகிர்ந்து கொள்ள நல்ல தோழி
ஆலோசனைக்கு அரிய மந்திரி
ஆள வந்த அடுத்த சின்ன ராணி
நடைமுறைக்ள் பழகும் மாணவி
அகமகிழ்வாள் இல்லத்துக் கிழவி
இளந்தலைவியை செதுக்கும் சிற்பி
-
சிற்பியின்
கை விரல்க்ளின் வலி
அறியாமல்
காலங்கள் பல கடந்தும்
சிரித்துக் கொண்டிருக்கிரது
அந்தப் பெண் சிற்பம்...
-
சிற்பம் போல் அழகியென்றாலன்று
சிற்றிடை சுற்றிய சிற்றாடையில்
சிலுப்பிய கூந்தல் ஜீன்ஸில் இன்று
சீசன் மாறுவது ஆண்கள் கண்ணில்
-
கண்ணில் எப்போது தட்டுப் படும்
பொருள்
தேவைப்படும் போது
காணவில்லை என
கத்துவார் அப்பா..
நாட்கள் செல்லச் செல்ல
பேச்சைக் குறைத்துக் கொண்டு
தேவைப் படுவ்தை
கொஞ்சம் ஒழுங்காக இன்ன இடம்
என்று வைத்து விடுவார்..
எங்களுக்கும் சொல்லித்தந்தார்..
இப்போது
அப்பா மேலே போய்
கண்ணில் தட்டுப்படுவதில்லை என்றாலும்
எங்க்ள் வழக்கங்க்ளில்
இருந்து
புரிகிறார் அவர் புன்னகை..
-
புன்னகையின் பொருள் மாறும்
பூக்கக்காணும் முகத்திற்கேற்ப
சம்பவித்த சூழ்நிலைக்கேற்ப
ஆதரவு ஒப்புதல் ரசனையோடு
ஏளனம் எக்காளம் வஞ்சமென
உணர்த்தும் சேதிகள் ஏராளம்
-
ஏராளம் எண்ணிக்கையில் தொகுதி வேட்பாளர்கள்
சுறுசுறுப்பாக களத்தில் திரியும் பிரமுகர்கள்
ஓட்டு பிரியுமென்ற அதிர்ச்சியில் பெரிய கட்சிகள்
எல்லா திசையிலும் பணம் பொருள் இலவசம்
காற்றில் கலந்து விட்டிருந்த லஞ்ச வாசம்
பரப்பரப்பான வாக்குப் பதிவின் முந்தைய இரவு
பரலோகம் சென்றார் சுயேட்சை ஒருவர் மாரடைப்பில்
வாங்கியவற்றை ஏப்பமிட்டு வரவிருக்கும் இடைத்தேர்தலை
வரவேற்கத் தயார் நிலையில் ஊர் மக்கள்