-
Courtesy: Tamil Hindu
காற்றில் கலந்த இசை 13: எழுபதுகளின் இருவர்- எம்.எஸ்.வி. எஸ்.பி.பி.
எம்.எஸ்.வி. மறைவுச் செய்தி வெளியான சில மணிநேரத்தில் எஸ்.பி.பி.யின் பேஸ்புக் பக்கத்தில் வெளியான எம்.எஸ்.வி.யின் புகைப்படம் அனைவரையும் அதிரவைத்தது. மெலிந்த உடல், நரைத்த தாடியுடன் முதுமையின் கொடுங்கரம் அவரைப் பற்றியிருந்ததைப் பார்த்த பலரும் கலங்கியிருப்பார்கள்.
அவர் அருகே லேசாகச் சிரித்தவாறு அமர்ந்திருந்தார் எஸ்.பி.பி. ஆனால், தன்னை உருவாக்கிய இசை மேதையின் உடல்நிலை அப்படி ஆனதை நினைத்து உள்ளுக்குள் கதறிக்கொண்டு இருந்திருப்பார். ஏனெனில், அவரது இசைப்பயணத்தின் வழிகாட்டியும் வழித்துணையும் எம்.எஸ்.வி.தான்!
பகல் நேரத்துப் பாடல்கள்
சில பாடல்கள் காலத்துடன் இறுகப் பிணைக்கப் பட்டவை. அந்தப் பாடல்களைக் கேட்கும்போது குறிப்பிட்ட அந்தக் காலத்துக்கு நம்மை அழைத்துச் சென்றுவிடும் தன்மை கொண்டவை. இளையராஜா காலம் தொடங்குவதற்கு முன்னதான காலம், அவரது வருகைக்குப் பிறகான சில ஆண்டு காலம் ஆகிய காலகட்டத்தில் வெளியான எம்.எஸ்.வி.யின் பாடல்கள் அந்த வகைமையில் அடங்கக்கூடியவை. பாலசந்தரின் பரீட்சார்த்தப் படங்கள் வெளியான காலகட்டமும், கமல், ரஜினி போன்ற நடிகர்கள் அறிமுகமாகியிருந்த காலகட்டமும் இதில் அடக்கம்.
‘வால் பேப்பர்’ ஒட்டப்பட்ட அட்டைச் சுவர்கள் கொண்ட அறைகள், அகன்ற வானத்தை வெறித்து நிற்கும் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பு போன்ற இடங்களில், பெரும்பாலும் பகல் நேரங்களில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல்கள் தரும் உணர்வு மிக வித்தியாசமானது. 70-களின் மத்திய தரக் குடும்பங்களின் வாழ்க்கை, தாம்பத்ய உறவின் சிக்கல்கள் இக்காலகட்டத்தின் பாடல்களில் பொதிந்திருக்கும். இப்பாடல்களைக் கேட்கும்போது பகல் நேரத்தின் வெம்மையையும், பாடல் தரும் ஆறுதல் நிழலையும் உணர முடியும்.
அந்தக் காலகட்டத்தில் பிற பாடகர்களும் பாடகிகளும் எம்.எஸ்.வி.யின் இசையில் முக்கியமான பாடல்களைப் பாடியிருந் தாலும், எஸ்.பி.பி.யே பிற இசையமைப் பாளர்களின் இசையில் பாடி யிருந்தாலும் ‘எம்.எஸ்.வி.-எஸ்.பி.பி.’ ஜோடி தந்த பாடல்கள் தனிச்சுவை கொண்டவை. இளம் குரலுடன் தனது பயணத்தைத் தொடங்கிய எஸ்.பி.பி.யின் குரலில் கம்பீரமும் பாந்தமும் வெளிப்படுவதற்கு எம்.எஸ்.வி.யின் பாடல்கள் சிறந்த களமாக அமைந்தன.
கண்ணனை நினைக்காத (சீர் வரிசை), பொன்னென்றும் பூவென்றும் (நிலவே நீ சாட்சி) நிலவே நீ சாட்சி (நிலவே நீ சாட்சி), ராதா காதல் வராதா (நான் அவனில்லை), மங்கையரில் மகராணி (அவளுக்கென்று ஒரு மனம்), ஊர்கோலம் போகின்ற கிளிக்கூட்டம் எல்லாம் (அக்கரைப் பச்சை), நான் என்றால் அது அவளும் நானும் (சூரியகாந்தி), அன்பு வந்தது என்னை ஆள வந்தது (சுடரும் சூறாவளியும்), தென்றலுக்கு என்றும் வயது (பயணம்), ஓடம் அது ஓடும் (கண்மணி ராஜா), காதல் விளையாட (கண்மணி ராஜா), கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் (எவளோ ஒரு பெண்ணாம்), மாதமோ ஆவணி (உத்தரவின்றி உள்ளே வா), மார்கழிப் பனியில் (முத்தான முத்தல்லவோ), தொடங்கும் தொடரும் புது உறவு (முடிசூடா மன்னன்), மான் கண்ட சொர்க்கங்கள் (47 நாட்கள்) என்று முடிவின்றி நீளும் பட்டியல் அவர்களுடையது.
பாலசந்தர்- எம்.எஸ்.வி.- எஸ்.பி.பி.
இக்கூட்டணியில் கணிசமான எண்ணிக்கையிலான பாடல்கள் கே. பாலசந்தர் இயக்கிய படங்களில் இடம்பெற்றவை. ‘நிழல் நிஜமாகிறது’ படத்தின் பாடல்களில்தான் எஸ்.பி.பி.யின் குரலில் எத்தனை விதமான பாவங்கள். கண்ணதாசனின் பங்களிப்பு இக்கூட்டணியை மேலும் செழிக்கச் செய்தது. ‘கம்பன் ஏமாந்தான்’ பாடலில், ‘… அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல… அட… நானும் ஏமாந்தேன்’ எனும் வரியில் சுய இரக்கம், சுய எள்ளல் கலந்த ஒரு சின்னச் சிரிப்பு அவர் குரலில் இருக்கும். அதேபோல், ’இலக்கணம் மாறுதோ’ பாடலில், ‘தெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்… பாடாமல் போனால் எது தெய்வமாகும்’ எனும் வரியில் எஸ்.பி.பி.யின் குரலில் இருக்கும் பாந்தமும் பரிவும் உருக்கிவிடும்.
உலுக்கும் வயலின் இசையுடன் தொடங்கும் ‘வான் நிலா நிலா அல்ல’ (பட்டினப் பிரவேசம்) பாடல் இந்த ஜோடியின் இன்னொரு சாதனை. ‘இன்பம் கட்டிலா.. அவள் தேகக் கட்டிலா’ எனும் வரியில் எஸ்.பி.பி.யின் குரலில் ஏக்கம், இயலாமை, தத்துவ மனம் வெளிப்படும். இரண்டு சரணங்களின் இறுதி வரிகளை வயலினால் பிரதியெடுக்கும் எம்.எஸ்.வி.யின் கற்பனை அற்புதமானது.
‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தின் ‘கடவுள் அமைத்து வைத்த மேடை’ மிகப் பெரிய வெற்றியடைந்த பரிசோதனை முயற்சி. ‘அவர்கள்’ படத்தின் ‘ஜூனியர்’ பாடலும் இதில் அடங்கும். ‘மிமிக்ரி’ கலையின் சாத்தியங்களைப் பாடலுக்கு நடுவே புகுத்துவதற்கு அற்புதத் திறன் மட்டுமல்ல, சோதனை முயற்சிக்கான துணிச்சலும் வேண்டும். அது எம்.எஸ்.வி.யிடம் ஏராளமாக இருந்தது.
என்று நினைத்தாலும் இனிக்கும்!
இளையராஜாவின் வருகைக்குப் பின்னர் வெளியான ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படம் விஸ்வநாதனின் விஸ்வரூபத்தை ரசிகர்களுக்குக் காட்டியது. டைட்டிலிலேயே ‘இது ஒரு தேனிசை மழை’ என்று எழுதியிருப்பார் பாலசந்தர்.
‘எங்கேயும் எப்போதும்’, ‘இனிமை நிறைந்த’ போன்ற பாடல்களில் துள்ளும் உற்சாகம், ‘யாதும் ஊரே’ பாடலில் சுற்றுலாப் பயணியின் குதூகலம், ‘பாரதி கண்ணம்மா’, ‘நினைத்தாலே இனிக்கும்’ பாடல்களில் பொங்கும் காதல் உணர்வு என்று இசையின் வீச்சை எல்லைகளுக்கு அப்பால் கொண்டுசென்றிருப்பார் எம்.எஸ்.வி. அவரது கற்பனைக்கும் உழைப்புக்கும் உயிர் கொடுத்திருப்பார் எஸ்.பி.பி.
கண்ணதாசன் மறையும் வரை- 1980-களின் தொடக்க காலம் வரை எம்.எஸ்.வி.யின் இசைப் பயணத்தில் தொய்வு ஏற்படவில்லை. அதற்குப் பின்னரும் அவரால், ஹிட் பாடல்களைத் தர முடிந்தது. இளையராஜாவுடன் இணைந்து ’மெல்லத் திறந்தது கதவு’ படத்தில் அவர் தந்த பாடல்கள் மறக்க முடியாதவை. குறிப்பாக, ‘தேடும் கண் பாவை தவிக்க’ பாடல் கம்போஸ் செய்யப்பட்டபோது, அதைப் பாடுவது மிகச் சிரமம் என்று நினைத்ததாக எஸ்.பி.பி. குறிப்பிட்டிருக்கிறார். ஒரு கஜல் பாடலுக்குரிய அம்சங்களுடன் மிக மென்மையாக நகரும் அப்பாடல், காலத்தை வெல்லும் கலையாற்றலின் எடுத்துக்காட்டு!
-
Courtesy: Tamil Hindu
எம்.எஸ்.விக்கு எப்படி இரங்கல் தெரிவிப்பது?
எம்.எஸ்.வி., கண்ணதாசன், ராமமூர்த்தி
மனதில் தோன்றியதை அப்படியே பேசிவிடும் வெகு சிலரில் விஜயகாந்தும் ஒருவர். அதனாலேயே கிண்டலுக்கும் உள்ளாகுபவர் அவர். எம்.எஸ்.வி.யின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது ஊடகங்களுக்குப் பேட்டியளித்த விஜயகாந்த் ‘எனக்கு இரங்கல் தெரிவிக்க மனம் வரவில்லை’ என்றார். பெரும்பாலானோரின் உணர்வும் அதுதான். நம்முடன் எப்போதும் இருப்பவர் இவர் என்ற உணர்வு ஒரு சிலரிடம் மட்டும்தான் ஏற்படும்; அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் எம்.எஸ்.வி. அவருடைய இறப்பைப் பற்றிச் சொல்லப்போனால் நம் கிராமத்து வழக்கில்தான் சொல்ல வேண்டும்:
‘கல்யாணச் சாவு’. இப்படிப்பட்ட மரணங்களின்போது ஒரு பெருவாழ்வு நினைவுகூரப்பட்டு ‘ஆகா, எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்’ என்ற பெருமகிழ்ச்சிதான் நம்மிடம் வெளிப்படும். எம்.எஸ்.வி காலமானதைக் கேள்விப்பட்டுப் பலரும் துயரத்தில் ஆழ்ந்துபோய் அவருடைய பாடல்களைக் கேட்க ஆரம்பித்துக் கடைசியில் சந்தோஷ உணர்வை, பரவச உணர்வை அடைந்ததுதான் உண்மை.
யோசித்துப் பார்த்தால் ஒரு விஷயம் புரிகிறது. நாம் கண்ணதாசனைக் கொண்டாடியிருக்கிறோம், டி.எம்.எஸ், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ் போன்றோரைக் கொண்டாடியிருக்கிறோம். ஆனால், எம்.எஸ்.வி.யை அந்த அளவுக்குக் கொண்டாடவில்லை.
எம்.எஸ்.வி. இசையமைத்த எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களைக்கூட எம்.எஸ்.வி-யின் பாடல்களாகக் கருதாமல் எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களாகக் கருதிதான் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். தனது கலையின் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டவர் எம்.எஸ்.வி., அதனால்தான் நாம் எம்.எஸ்.வியின் பாடல்களில் கண்ணதாசன், டி.எம்.எஸ், பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றோரைக் காண்கிறோமேயொழிய எம்.எஸ்.வியைக் காண்பதில்லை.
ஆக, கண்ணதாசனின் அற்புதமான வரிகள், டி.எம்.எஸ்., பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் ஈடிணையற்ற குரல்கள், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோரின் உத்வேகம், சோகம் போன்ற எல்லாவற்றுக்கும் பின்னால் நின்று களம் அமைத்துக்கொடுத்து அவர்களை முன்னிலைப்படுத்தியதுதான் எம்.எஸ்.வியின் இசை. ‘நான் ஆணையிட்டால், அது நடந்துவிட்டால்’ என்று எம்.ஜி.ஆர். நீதியின் சாட்டையை வீசும்போது நாம் எம்.எஸ்.வி.யையா நினைத்துப்பார்க்கிறோம்? எம்.ஜி.ஆரைத்தானே நினைத்துப் புல்லரிக்கிறோம். ‘நான் ஆணையிட்டால்’ என்ற டி.எம்.எஸ்ஸின் குரலைப் பின்தொடரும் ஏற்றமிகு கொம்பு சத்தம்தான் தமிழ் வாழ்வில் எம்.ஜி.ஆரின் இடம் எது என்பதற்கு அழுத்தம் திருத்தமாகக் கட்டியம் கூறியது.
இரட்டை இசையமைப்பாளர்கள்
எம்.எஸ்.வி-யைப் பற்றிப் பேசும்போது அங்கே கண்ணதாசன் இருப்பார். கண்ணதாசனைப் பற்றிப் பேசும்போது எம்.எஸ்.வி. இருப்பார். ‘இந்த மன்றத்தில் ஓடிவரும் இளம் தென்றலைக் கேட்கின்றேன்’ என்ற பாடல் வரிகளைக் கேட்கும்போதெல்லாம் பிரமிப்பாக இருக்கும். அதிலும் ‘மன்றம்’ என்ற சொல்லின் பயன்பாடு அற்புதமாக இருக்கும். சாதாரணமாகச் சொல்லும்போது கவித்துவமற்ற, பண்டிதத்தன்மை கொண்ட ஒரு சொல் அது.
ஆனால், எம்.எஸ்.வியின் மெட்டுக்குள் நுழையும்போது அது எளிமையான, அழகான சொல்லாக மாறிவிடுகிறது. இவ்வளவு எளிமையான சொற்கள், அதிக கனமில்லாத சொற்கள், அழகான சொற்கள் எப்படி இவ்வளவு இயல்பாகப் பொருந்தி, ஓடிவருகின்றன என்ற வியப்பு ஏற்படும். யோசித்துப்பார்த்தால் ஒரு உண்மை தெரியும்.
அந்த மெட்டின் இயல்பே அதுதான். வேறு எப்படியும் எழுதிவிட முடியாது. இது கண்ணதாசனைக் குறைத்துச் சொல்வதில்லை. கண்ணதாசனிடம் அற்புதமான வரிகளை வாங்கும் வித்தை எம்.எஸ்.வி.யின் மெட்டுக்குத் தெரிந்திருக்கிறது; எம்.எஸ்.வியின் அற்புதமான மெட்டுக்குள் எப்படிப் பாய்வதென்று கண்ணதாசனின் வரிகளுக்குத் தெரிந்திருக்கிறது. அப்படிப்பட்ட பரஸ்பர உறவு அது.
திரைப்பட இசையைப் பொறுத்தவரை பிரதானமானவர்களாக இசையமைப்பாளர்களையும், அவர்களைச் சார்ந்திருக்கும் இரண்டாம் நிலையினராகப் பாடலாசிரியர்களையும் கருதுவதுதான் வழக்கம். ஆனால், இங்கு ஒரு இசையமைப்பாளர் காலம் முழுவதும் ஒரு பாடலாசிரியரைப் பிரதானப்படுத்தியபடி அவரைத் தூக்கிவைத்துக் கொண்டாடியிருக்கிறாரே, என்ன உறவு அது, என்ன மனிதர் எம்.எஸ்.வி!
அதனால்தான், கண்ணதாசனின் மரணம் தந்த அதிர்ச்சியிலிருந்து எம்.எஸ்.வியும் அவரது இசையும் பெரும்பாலும் மீளவே இல்லை. விஸ்வநாதன்-ராமமூர்த்தி மட்டுமல்ல, விஸ்வநாதன் கண்ணதாசனும் இரட்டை இசையமைப்பாளர்கள்தான். தமிழர்களின் ரத்தத்தில் மயக்கத்தை, உத்வேகத்தை, காதலை, துயரத்தை ஏற்றத் தெரிந்த இரட்டை இசைக் கலைஞர்கள் அவர்கள்.
எத்தனையெத்தனை பாடல்கள்! ‘யார் அந்த நிலவு’ (சாந்தி) பாடலையே எடுத்துக்கொள்வோமே! விசித்திரமான ஒரு உணர்வைக் கொடுக்கும் பாடல். அந்தப் படத்தைப் பார்க்காதவர்களுக்கு அந்தப் பாடல் மௌனியின் கதையைப் படிப்பதுபோல் ஒரு உணர்வை ஏற்படுத்தும். தூரத்தில் ஒலிக்கும் ஒரு பாடலைப் போல அந்தப் பாடலை உருவாக்கியிருப்பார் எம்.எஸ்.வி., அப்படியே பாடியிருப்பார் டி.எம்.எஸ்., அப்படியே எழுதியிருப்பார் கண்ணதாசன். ‘யார் அவள், எனக்கும் அவளுக்கும் என்ன உறவு, இது கனவா நனவா’ என்ற இனம்புரியாத உணர்வுக்கு உயிரூட்டிப் புகைமூட்டமான வரிகளாக எழுதியிருப்பார் கண்ணதாசன்:
இப்படி அவர்களுடைய உறவால் விளைந்த பாடல்கள் ஏராளம். அவர்களுடைய உறவு நம் வாழ்க்கையின் அனைத்து தருணங்களுக்குமான பாடல்களை உருவாக்கியிருக்கிறது. கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரிப் பருவத்தின் இறுதி நாள் பிரிவுக்கு ‘பசுமை நிறைந்த நினைவு’களை நாடுவது இன்று வரை நடக்கிறது.
காதலி/காதலன் பிரிவில் தவிக்கும் ஒருவருக்கு ‘நினைக்கத் தெரிந்த மனமே’ போன்று ஆறுதல் தருவது ஏது? ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ என்ற பாடல் போல் உழைப்பாளிகளுக்கு உத்வேகம் அளிக்கும் பாடல்கள் மிகவும் குறைவு. இன்றும் மணப்பெண்களைக் கிண்டல் செய்ய ‘வாராயோ தோழி’ பயன்படுகிறது.
எம்.எஸ்.வி.க்காக எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரை ஒன்றில் இப்படி எழுதப்பட்டிருந்தது: ‘மயக்கமா கலக்கமா’ என்ற பாடல் ஒரு மனிதரைத் தற்கொலையிலிருந்து தடுத்துக்கொண்டிருக்கும் வரை, ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடல் இன்னும் இன்னும் காதல் கதைகளைப் பூக்கச்செய்யும்வரை எம்.எஸ்.வி. வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்’. இந்த வரிகள் எம்.எஸ்.வி., கண்ணதாசன் இருவருக்கும் பொருந்துகின்றன என்பதைப் பார்க்கும்போது நாம் இவ்வளவு காலம் கண்ணதாசனைக் கொண்டாடியதில் மறைமுகமாக எம்.எஸ்.வி.யையும் கொண்டாடியிருக்கிறோம் என்ற உண்மை நமக்குப் புரிபடும்.
கண்ணதாசன், டி.எம்.எஸ்., பி. சுசீலா, பி.பி. ஸ்ரீனிவாஸ், எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்றோர் மட்டுமல்ல நான், நீங்கள் என்று அனைவரும் சேர்ந்த மொத்தம்தான் எம்.எஸ்.வி. திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் நாம் வாழும் காலத்துக்கே பின்னணி இசை கொடுத்த அந்த மகத்தான கலைஞனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது அபத்தமான விஷயமாக விஜயகாந்துக்குத் தோன்றியதில் ஆச்சரியமே இல்லை!
-
Courtesy: Tamil Hindu
எம்.எஸ்.வி.- தமிழர்களின் கிலுகிலுப்பை!
இலங்கை வானொலியில் மயில்வாகனன் சர்வானந்தாவோ, ராஜேஸ்வரி சண்முகமோ ‘பொங்கும் பூம்புனல்’ என்று சொல்லும்போது கடிகாரம் எட்டு மணியைக் காட்டும். அப்படியொரு சர்க்கரைப் பொழுதில்தான் எம்.எஸ். விஸ்வநாதன் என் செவியில் நுழைந்து மனசுக்குள் ரங்கராட்டினம் சுழற்றினார்.
‘பூ மாலையில் ஓர் மல்லிகை/ இங்கு நான்தான் தேன் என்றது’ என்கிற பாடல் காதுகளுக்கு தந்த தித்திப்பைப் போன்று எந்தப் பழங்களும் என் வாய்க்குத் தரவே இல்லை.
நின்று நிதானித்துப் பார்க்கும்போது - இன்று நாற்பதைத் தாண்டியிருக்கும் தமிழர்களின் வாழ்க்கைப் பொழுதுகளில் ஒரு சென்டி மீட்டர் இசை மழையையாவது பொழிந்திருப்பார் எம்.எஸ்.வி.
இரவு ஏழரை மணிக்கு திருச்சி வானொலியில் ஒலிப்பரப்பாகும் ‘வயலும் வாழ்வும்’ நிகழ்ச்சியில்
‘தாய் வரம் தந்த வரம்… தாவரம்’ என்கிற பாடல் கசியும். விவசாயப் பின்னணியைச் சேர்ந்த எங்களுக்கெல்லாம் விஸ்வநாதன் இவ்வாறாகத்தான் அறிமுகமாகியிருந்தார்.
காதல், ஊடல், திருமணம், தாம்பத்யம், பிறப்பு, வறுமை, உயர்வு, நட்பு... என வாழ்வின் எல்லா சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்டிருக்கிறது அவருடைய இசை. தொலைக்காட்சி, கணினி போன்ற நவீன அறிவியல் சாதனங்களின் புழக்கமற்ற அப்போது ரேடியோதான் சந்தோஷ வாசல். அந்த வாசல் வழி வழிந்தோடிய விஸ்வநாதனின் விரல் வித்தை தமிழர்களின் 50 ஆண்டு கால மகிழ்ச்சியின் நீளம்.
எம்.எஸ்.வியின் சாதனை என்பது தமிழ்த் திரையிசையின் பாதி வரலாறு. படத்தின் பெயர் தெரியாது; அந்தப் படத்தைப் பார்த்திருக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. ஆனால், இது ‘எம்ஜிஆர் பாட்டு; இது சிவாஜி பாட்டு’ என்று சொல்லிவிட முடிகிற அளவுக்கு டி.எம்.எஸ்.ஸின் பக்கபலத்தோடு வித்தியாசம் காட்டியது எம்.எஸ்.வியின் இசை நுணுக்கம்.
ஒரு காலத்தில் மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை வரை பாய்ந்தோடியதைப் போல எல்லோருக்குமான இசையைத் தந்ததுதான் எம்.எஸ்.வி.யின் முதல் சாதனை.
அடுத்தது - அவர் போட்ட மெட்டுக்கள். சுயம்புவாக அவர் கொடுத்த பாடல்கள் அனைத்தும் வரலாற்றில் ‘கிளாஸிகல்’ ரகத்தில் சேர்ந்துவிடும். மாடர்ன் தியேட்டர்ஸ் ‘சுகம் எங்கே’ என்று ஒரு படம் தயாரித்தது. இசையமைப்பாளர்களாக ஒப்பந்தமான விஸ்வநாதன் - ராமமூர்த்தியிடம் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் “இந்தி டியூன் கொடுத்தா பாட்டு போடுவீங்களா?” என்று கேட்டுள்ளார்.
“நாங்க சொந்தமாதான் டியூன் போடுவோம். விருப்பமிருந்தா எங்களை புக் பண்ணுங்க. இல்லேன்னா எங்களை விட்டுடுங்க” என்று கம்பீரமாகச் சொன்னவர் எம்எஸ்வி.
எங்கள் கிராமத்தில் தங்கராசு என்கிற ஒரு சிகைதிருத்துநர் இருந்தார். அவருடைய ‘சார்மினார்’ சலூன்தான் எங்களின் விடுமுறை விருப்பம். எம்.எஸ்.வி.யின் தீவிர ரசிகர். ஒரு பாடலில் அதன் வரிகளை மட்டும் பாட மாட்டார். பாடலின் ஆரம்பத்திலோ இடையிலோ கடைசியிலோ வரும் இசைக் கருவிகளின் ஜாலங்களையெல்லாம் அவர் உருட்டிவிடும்போது, நாங்கள் திக்குமுக்காடிப்போவோம்.
‘ஊட்டி வரை உறவு' படத்தில் பி.சுசீலா பாடியது 'தேடினேன் வந்தது' என்கிற பாடல். அதனை தங்கராசு,
'தேடினேன் வந்தது...
டின்டக்கு டின்டக்கு...
நாடினேன் தந்தது
டின்டக்கு டின்டக்கு'
என்று பாடியதை நினைத்துப்பார்க்கும்போது எம்.எஸ்.வியின் இசை சாம்ராஜ்யம் தங்கராசு வரை விரிந்திருந்தது தெரிகிறது.
‘அவளுக்கென்ன அழகிய முகம்' என்ற ‘சர்வர் சுந்தரம்' படப் பாடலை பாடும்போது பாடல் வரிகளுக்கு இடையே டிரிபிள் பாங்கோஸும், கிளாரிநெட்டும் சேர்ந்திசைக்கும்
‘பாபப்பப்பம் பாபபப பாபப்பப்பம்...
ன்ட்டாகு... ன்ட்டாகு... ன்ட்டாகு’ என்று தங்கராசுக்குள் எம்.எஸ்.வி. புகுந்து புறப்படுவார்.
‘பாகப் பிரிவினை' படத்தில் ‘தாழையாம் பூ முடிச்சு' பாடலின் இடையே ஒலிக்கும்
‘தந்தானே தானனன்னே... தானன்னே தானனன்னே... தானன்ன தானானே...'
என்கிற ஹம்மிங்கை தங்கராசு மூலம் எங்கள் கிராமத்துக் கீர்த்தனையாக்கியவர் எம்எஸ்வி.
‘சிவந்த மண்' படத்தில் ‘ஒரு ராஜா ராணியிடம்' என்கிற பாடலை தங்கராசு பாடிக்கொண்டே வருவார். இடையில்
‘டண்டரரானே டண்டரரானே... டண்டர டண்டர டண்டர டண்டரரா...' என்று முழங்கிவிட்டு
‘வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்
புதுவிதமான சடுகுடு விளையாட்டு
விட்டுவிடாமல் கட்டியணைத்து
தொட்டது பாதி பட்டது பாதி
விதவிதமான ஜோடிகள் விளையாட்டு
இது காதலில் ஒரு ரகமோ இங்கு காதலர் அறிமுகமோ’ என்று சரணத்துக்குள் பாய்ந்துவிடுவார்.
ராகம், ஆலாபனை, அவரோகணம், தாளக்கட்டு, நோட்ஸ் எதுவுமே தெரியாது தங்கராசு என்கிற எங்கள் ஊர் எம்.எஸ்.வி.க்கு. தமிழகத்தில் எத்தனையோ தங்கராசுக்கள் இன்னமும் வாழ்கிறார்கள். இந்தச் சாதனையை எந்தத் திரையிசைக் கலைஞனும் இதுவரை நிகழ்த்தவே இல்லை.
சாஸ்திரிய இசை அரங்குகளில் பாடிக்கொண்டிருந்த பாலமுரளி கிருஷ்ணாவை ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த ‘கலைக்கோயில்’ படத்தில் ‘தங்க ரதம் வந்தது வீதியிலே…’ பாடலைப் பாட வைத்து, இன்னொரு உலகில் புகழ்பெற்ற மேதமையைத் தமிழ் திரையிசைக்குள் கொண்டுவந்தார் எம்.எஸ்.வி.
‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் ஒரு பாடலில் உண்மையிலேயே ஓர் அபூர்வ ராகத்தைப் பயன்படுத்த நினைத்தார் எம்.எஸ்.வி. அந்த நேரத்தில் பாலமுரளி கிருஷ்ணா ‘மஹதி’ என்கிற பெயரில் ஒரு ராகத்தை உருவாக்கியிருந்தார். அந்த ராகத்தையும் வேறு சில ராகங்களையும் குழைத்து ஒரு ராகமாலிகையாக எம்.எஸ்.வி. கம்போஸ் செய்ததுதான் ‘அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்’ பாடல்.
பந்துலு, பீம்சிங், ஸ்ரீதர், பாலசந்தர், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்று பல இயக்குநர்கள் தங்களின் பல்லக்கை வெற்றிகரமாக நகர்த்த சக்கரமாக இருந்தவர் எம்.எஸ்.வி. திரைப்படப் பாடல்களை இசையை உரித்துவிட்டுப் பார்த்தால் அதில் உள்ள தமிழ் சட்டென்று நம்மைக் கவர்ந்திருக்காது. கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம் போன்ற கவிஞர்களை நாம் கொண்டாட விஸ்வநாதன் ஒரு மூல காரணம்.
தமிழ்த் திரையிசையில் பல வடிவங்களில் இசையை வாரி வழங்கியவர் எம்.எஸ்.வி.
‘அன்புள்ள மான்விழியே/ஆசையில் ஓர் கடிதம்/ நான் எழுதுவதென்னவென்றால்/ உயிர்க்காதலில் ஓர் கவிதை’ என்று அஞ்சல் அட்டைக்கு இசைச் சிறகு முளைக்க வைப்பார்.
‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி/ புது சீர் பெறுவாள் வண்ணத் தேனருவி’ என்று கல்யாணப் பத்திரிகை வடிவில் அட்சதை தூவும் ஒரு பாடல். இந்தப் பாடலில் வரும் ‘தங்கள் நல்வரவை விரும்பும்/ ரகுராமன் ரகுராமன் ரகுரா…மன்’ என்கிற வரிகளின்போது யாருக்கும் தெரியாமல் கண்களைத் துடைத்துக்கொண்ட பல அண்ணன்களை நான் பார்த்திருக்கிறேன்.
‘வாராயோ தோழி வாராயோ’ என்று பல தமிழ் வீடுகளின் வாசலுக்கு மருமகள்களை வலது காலை எடுத்து வைத்து அழைத்து வந்திருக்கிறது எம்.எஸ்.வி-யின் இசை.
‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல
மலரும் விழிவண்ணமே - வந்து
விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
விடிந்த கலையன்னமே
நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே’ என்று ‘பாசமலர்’ படத்தில் கண்ணதாசனுடன் இணைந்து எம்.எஸ்.வி தந்த இசை தாலாட்டும் தாலாட்டு பாடியவர்களும் காணாமல் போன இந்நாட்களில் தமிழர்களின் கிலுகிலுப்பையாகும்.
-
வாசு,
என்ன சொல்ல பாட்டைப் பற்றிச் சொல்லாமல் இருக்கலாமா..
//இந்தப் பாட்டிற்கு HTML ஒர்க்கெல்லாம் கிடையாது. பதிவுகள் கருப்பு வெள்ளையில்தான்// எனில் இந்த வரி தான் உங்கள் வயதைக் காட்டுகிறது..!
அந்தக் காலத்தில் ஹீரோவிற்கெல்லாம் கஷ்டமான வேலை..ஆ..ஊ என்றால் ஹீரோயினைத்தூக்கிக் கொள்வது போல் காட்டுவார்கள்..அதில் முகத்தில் சிருங்காரம் வேறு காட்ட வேண்டும்..என்ன சுவை என்னசுவை என நிர்மலாவைத் தூக்கியபடி பாடும் போது எப்படித் தான் கனத்தை முகத்தில்மறைத்தாரோ சிவகுமார்!
//விழி சிவந்தது
வாய் வெளுத்தது// வாயின் சிவப்பு விழியிலே மலர்க்கண் வெளுப்பு இதழிலே வரி நினைவில் வரவில்லையா.. மன்னவனின் தோளிரண்டை மங்கை எந்தன் கை தழுவ கார்குழலும் பாய் விரிக்கும் கண்சிவந்து வாய் வெளுக்கும்.. அதுவும் நினைவில்.வருகிறது
முழுக்க நனைந்து டூயட் பாடி முடித்த பிறகு சிவக்குமார் கோட் கழற்றி நிர்மலா நனையாமல் இருக்க அவருக்குப் போடுவது டைரக்டோரியல் டச்!
அந்தக்காலத்தில் கண்ணனும் கோபியரும் அதுவும் இந்த ப்படம் தானே..!
இருந்தாலும் பாடலில் மூழ்கி அழகாய் அலசி விலாவாரியாக எழுதி – எனக்கு வந்த இந்த மயக்கம் உங்களுக்கும் (எங்களுக்கும்) வரவேண்டும் என எழுதியதற்காக ஒரு குட்டிப் பரிசு (போட்டாச் இல்லை)
https://youtu.be/1UykRR6ZA_o
போனஸாக..
தாநூறு என்றாலோ சட்டெனவே கண்சிவந்து
தேனூறும் தெள்ளுதமிழ் பேச்சினிலே - வானூறும்
தூறலென மென்மையினைக் கன்னத்தில் சுட்டியே
பூடகமாய்க் கிள்ளியதே பூ
https://youtu.be/ddcUDbK-8Yg
மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்லக்கு…
முப்பாலுக்கும் அப்பால் போகும் எந்தன் கண்ணுக்கு..
*
-
CK - ஒரு புதிய கோணத்தில் மற்றைய உறவுகளை 3வது பாகத்தில் அலசலாம் என்றிருந்தேன் - தலைப்பு அதே என்றாலும் - சொல்லக்கூடிய விஷயங்கள் வேறு . ஒரு circuit complete பண்ணலாம் என்றிருந்தேன் - உங்களுக்கு பிடிப்பு இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன் . வேறு புதிய எண்ணங்கள் , கருத்துக்கள் தோன்றும் வரை இந்த திரியில் ஒரு பார்வையாளர் ஆக இருந்து , உங்கள் , மற்றும் பலரின் பதிவுகளைப்படித்து திறமைகளை இன்னும் வளர்த்துக்கொள்ளலாம் என்ற நினைக்கிறேன் - என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம் இதே திரியில் .....
அன்புடன்
-
டியர் ரவி சார்,
கருவின் கரு என்ற அருமையான தலைப்பை எடுத்துக்கொண்டு, அதை மிக மிக சுவாரஸ்யமாகவும் நேர்த்தியாகவும் கொண்டு சென்று 201 வெற்றிப்பதிவுகளை பூர்த்தி செய்திருப்பது ஒரு இமாலய சாதனை. என்பதில் சந்தேகமில்லை.
ஒவ்வொரு பதிவுக்கும் எடுத்துக்கொண்ட உண்மைச்சம்பவங்கள், எடுத்துக்கொண்ட முயற்சிகள், ஒவ்வொரு குட்மார்னிங் கிற்காக பதித்த காணக்கிடைக்காத அருமையான நிழற்படங்கள் (குறிப்பாக துருவக் கரடிகளின் விளையாட்டு) அனைத்தும் சூப்பர் அட்டகாசம். எல்லாவற்றிற்கும் மேலாக தந்தையரின் தியாக வாழ்க்கை பற்றிய அற்புத அலசல்கள் மனதைத் தொட்டன,
உங்கள் வித்தியாச பதிவுகளால் மதுர கானம் திரி பெருமை பெற்றுள்ளது.
மூன்றாம் பாகத்துக்கு வாழ்த்துக்கள்.
-
என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக மீண்டும் சந்திப்போம் இதே திரியில் .// ரவி..கோபம் இல்லை தானே.. என்றாவது ஒரு நாள் என்பதெல்லாம் செல்லாது.. நீங்கள் உங்கள் எண்ணங்க்ளை வழக்கம் போல் தொடருங்கள்.. பிடிப்பில்லை என்று சொல்லவில்லை.. ஆதிராமும் என் இதயத்துடிப்பை எகிற வைத்துவிட்டார்..கடைசி வரிக்கு தாங்க்ஸ் அவருக்கு - அதாவது கருவின் கருவிற்குத்தான் ஓய்வு எனச் சொல்லியிருக்கிறாரே தவிர உங்களை அல்ல..
அகெய்ன் கோபம் இல்லை தானே..
-
டியர் வாசு சார்,
உல்லாசப் பறவைகள் படத்தின் 'அழகு ஆயிரம்' பாடலின் விஸ்தாரமான ஆய்வு அருமையோ அருமை.
நேர்மையாக சொல்வதென்றால் உங்கள் ஆய்வுக்கு முன் அந்தப்பாடலை படத்தில் பார்த்தபோது அவ்வளவாக என்னைக் கவரவில்லை. இளையராஜா பாடல் என்பதால் அசுவாரஸ்யமாக பார்த்ததாலோ அல்லது காட்சி பிரம்மாண்டத்தில் மனதைப் பறிகொடுத்ததாலோ தெரியவில்லை.
ஆனால் இப்போது கேட்கும்போது உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் முன்னைவிட மனத்தைக் கவர்கிறது என்பதில் சந்தேகமில்லை.
பாடல் ஆய்வில் வழக்கம்போல உங்கள் அபரிமிதமான உழைப்பு மலைக்க வைக்கிறது. பாராட்டுக்கள்
-
டியர் சின்னக்கண்ணன் சார்,
தங்கள் வருகை மனதுக்கு மகிழ்ச்சியை தருகிறது. இனி உங்கள் பங்குக்கு அதிரடி ஆரம்பம் ஆகட்டும்.
நீங்கள் கேட்ட 'கண்ணுக்கு தெரியாத அந்தசுகம்' பாடலில் முத்துராமன் ஜோடி விஜயநிர்மலா. ஏற்கெனவே வாசு சார் சொல்லியிருக்கிறார்.
அந்தப்பாடல் சாத்தனூர் அணையில் எடுக்கப்பட்டதல்ல. வேறொரு அணைக்கட்டு. பெரிய மீன் வயிற்றுக்குள் ஒரு அக்குவாரியம் (மீன்காட்சி சாலை) அமைக்கப்பட்டிருக்கும். மு.க.முத்துவின் பிள்ளையோ பிள்ளையின் 'மீனாட்டம் கண்கொண்ட மீனாட்சி' பாடலிலும் இந்த அணைக்கட்டுதான். (பெயர்தான் தெரியவில்லை. வாசு சார் இருக்கையில் கவலை எதுக்கு?)
உனக்காக நான் படத்தில் நடிகர்திலகம் - லட்சுமி டூயட் படமாக்கப்பட்டது மலம்புழா அணைக்கட்டில். அங்குள்ள மிகப்பெரிய நிர்வாண யட்சிணி சிலை ரொம்ப பேமஸ்.
மாட்டுக்கார வேலனின் 'பட்டிக்காடா பட்டணமா' பாடல் வைகை அணையில் எடுக்கப்பட்டது.
சாத்தனூர் அணையும், வைகை அணையும் பெருந்தலைவர் ஆட்சியின் நூற்றுக்கணக்கான சாதனை வெள்ளத்தின் இரு துளிகள்.
-
டியர் வாசு சார்,
என் வேண்டுகோளை ஏற்று பாபு படத்தில் இடம்பெற்ற 'என்ன சொல்ல என்ன சொல்ல' பாடல் ஆய்வை சமர்ப்ப்பித்ததற்கு மிக்க நன்றி.
பாபு படத்தின் இடைவேளைக்குப்பின் பாபுவின் தியாகம், சோகம் என்று சென்று கொண்டிருந்ததை மாற்றி சற்று கிளுகிளுப்பூட்ட 'அந்தக்காலத்தில் கண்ணனும் கோபியரும்' பாடலையும் 'என்ன சொல்ல என்ன சொல்ல' பாடலையும் இடம் பெறசெய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இரண்டிலும் நம்ம ராட்சசி கலக்கியிருப்பார்.
மேலும் நடிகர்திலகம் தன படங்களில் நடிக்கும் சக நடிகர்களுக்கும் டூயட் பாடல் கொடுத்து மகிழ்வார் என்பதற்கு 'என்ன சொல்ல என்ன சொல்ல' இன்னொரு எடுத்துக்காட்டு.
'நான் கொடுத்த முத்திரைக்கு நன்றி சொல்' என்னுமிடங்களில் பாலா கொஞ்சுவார். எனக்கென்னவோ இந்தப்பாடல் அவ்வளவு விரசமாக தெரியவில்லை.
கருப்புவெள்ளை பாடல் ஆய்வை கருப்பு வெள்ளையிலேயே தந்திருப்பது பொருத்தமே.
உங்களைப்பார்த்து, நடிகர்த்திலகத்தைப்போல 'கேட்டதும் கொடுப்பவனே(ரே)' என்று பாடுவதா அல்லது ஜெயந்தியைப்போல 'நான் கேட்டேன் அவன்(ர்) தந்தான்(ர்)' என்று பாடுவதா என்று தெரியவில்லை.
பாராட்டுவதற்கு ரவி சாரைப்போல நானும் புது மொழியைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.