http://i61.tinypic.com/30aq534.png
என் அண்ணனும் இதய மன்னனும்
ஒருவர் ஒரு துறையில் காலூன்றி முத்திரை பதிப்பதே அரிது. காலூன்றிய அந்த துறையில் சாதனை படைப்பது அதைவிட அரிது. இரண்டு துறைகளில் சாதனை படைப்பது என்பது அரிதிலும் அரிது. அந்த வகையில் கலைத்துறை, அரசியல்துறை என இரண்டு துறைகளிலும் சாதனை படைத்தவர் நம் தலைவர். அரசியல்துறையில் அவர் சாதனை படைப்பதற்கும் அது சரித்திரமாவதற்கும் உதவியது திண்டுக்கல் இடைத்தேர்தலின் வெற்றி. திண்டுக்கல் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடந்த நாள் இன்று.
அந்த தேர்தலில் 1972-ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி தொடங்கப்பட்டு 7 மாதக்குழந்தையாக தவழ்ந்த அ.தி.மு.க.வை மக்கள் வாரி அணைத்து வெற்றியை பரிசளித்தனர். இப்போதிருக்கும் இளம் தலைமுறையினருக்கு அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது என்று தெரிந்திருக்கும். ஆனால், அந்த வெற்றியின் வீரியம் பற்றி எந்த அளவுக்கு தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை.
ஒருபுறம் அப்போது மாநில அதிகாரத்தில் இருந்த திமுகவின் அசுர பலத்தோடு அக்கட்சியின் வேட்பாளர் திரு. பொன்.முத்துராமலிங்கம். மறுபுறம் சர்வ வல்லமை பொருந்திய மத்திய அரசை ஆட்சி செய்து கொண்டிருந்த இந்திரா காங்கிரஸின் வேட்பாளர் திரு.சீமைச்சாமி. இன்னொருபுறம் அப்போதிருந்த அரசியல் சூழலில் திமுகவை விடவும் பலம் பொருந்திய கட்சியாக விளங்கிய ஸ்தாபன காங்கிரஸ் (தேர்தலில் 2-வது இடத்தை அக்கட்சி பெற்றதே சான்று) வேட்பாளர் திரு.என்.எஸ்.வி. சித்தன்.
இந்தக் கட்சிகளை எல்லாம் மீறி அதிமுகவின் வேட்பாளர் திரு.மாயத்தேவர் அந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றார் என்றால் புரட்சித் தலைவர் என்ற தனி மனிதர், மக்களின் ஆதரவோடு செய்த மிகப் பெரிய சாதனை. அதிலும் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கையான 4 லட்சத்து 91 ஆயிரத்து 553 வாக்குகளில் அதிமுக பெற்ற வாக்குகள் 2 லட்சத்து 60 ஆயிரத்து 930. பாதிக்கும் மேற்பட்ட வாக்குகளை விடவும் கூடுதலாக அதிமுக பெற்றது என்றால் அந்த வெற்றியின் வீச்சை புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியல்துறையில் முதன் முறையாக இந்த வெற்றி சாதனையை படைப்பதற்கு முன்பாக பல்வேறு இடையூறுகள், சதிகள் ஆகியவற்றை முறியடித்து மே 11ம் தேதி உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட்டு படம் அமோக வெற்றி பெற்றதன் மூலம் திரைப்படத்துறையிலும் சாதனை படைத்தார். இது நடந்த 12-வது நாளில் அரசியலில் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த சாதனையைச் செய்த சாதனைச் சக்ரவர்த்தி நம் தலைவர் என்பது, நம்மை நெஞ்சு விம்ம பெருமிதம் கொள்ளச் செய்கிறது.
இந்த வெற்றிகளுக்கு காரணம் பேரறிஞர் அண்ணாவை ‘என் அண்ணன்’ என்று தலைவர் ஏற்றுக் கொண்டிருந்தார். அவரின் ஆசியோடும் மக்களின் ஆதரவோடும் தமிழகத்தின் இதய மன்னனாக தலைவர் இன்றும் விளங்குகிறார். என்றும் விளங்குவார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்