http://i57.tinypic.com/nqwkm0.jpg
Printable View
தாழம்பூ - பாடல் புத்தகம் பதிவு மிகவும் அருமை ரவிச்சந்திரன் சார் .
காஞ்சித்தலைவன் பொன் விழா செய்திகள் - நன்றி திரு ரூப் குமார் சார் .
Courtesy - net
1963இல் வந்த படம். கலைஞர் கருணாநிதியின் கதை வசனம். அவரும் முரசொலி மாறனும் படத்தின் இயக்குனர் காசிலிங்கமும் தயாரிப்பாளர்கள். கே.வி. மகாதேவன் இசை. எம்ஜியாரைத் தவிர, பானுமதி, எஸ்.எஸ்.ஆர்., எம்.ஆர். ராதா, விஜயகுமாரி, அசோகன், டி.ஏ. மதுரம், எஸ். ராமாராவ், மனோரமா, ஜி.சகுந்தலா நடித்திருக்கிறர்கள். முதலில் ஒரு காட்சியில் வருவது பிற்காலத்தில் பிரபலமான வில்லன் நடிகர் செந்தாமரை போல் இருக்கிறது. பிற்காலத்தில் புகழ் பெற்ற இயக்குனர் மகேந்திரன் இந்த படத்தில் எம்ஜிஆரின் சிபாரிசில் உதவி இயக்குனராக பணி புரிந்தாராம். நான் டைட்டில்களில் அவர் பெயரை கவனிக்கத் தவறிவிட்டேன்.
கோட்டை, அரச சபை செட்கள் நன்றாக இருக்கிறது. எம்ஜியார் நரசிம்ம வர்ம பல்லவனாகவும், எஸ்.எஸ்.ஆர். தளபதி பரஞ்சோதியாகவும், அசோகன் புலிகேசியாகவும் வருகிறரகள். காஞ்சித் தலைவன் என்பது அறிஞர் அண்ணாவை குறிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். “காஞ்சித் தலைவன் கை காட்டிய வழியில் கரை ஏறியவரகள் அனேகம்” போன்ற பல வசனங்களை அங்கங்கே கேட்கலாம்.
எம்ஜியார் அரச உடையில் வரும்போது நல்ல அழகாக இருக்கிறார். அசோகன் ஃபுல் ஃபார்மில் இருக்கிறார்.
இந்த படம் வந்த போது கலைஞரும் எஸ்.எஸ்.ஆரும் எம்.எல்.ஏக்களாகவும், எம்ஜியார் எம்.எல்.சியாகவும் இருந்திருக்கிறார்கள்.
கர்நாடகாவில் இந்த படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டதாம். அப்பவே ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது.
எம்.ஆர். ராதா பாட்டு பாடும் காட்சிகள் அபூர்வம். இதில் அவருக்கு ஒரு பாட்டு காட்சி – “உலகம் சுத்துது எதனாலே” என்ற ஒரு பாட்டு. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய பாட்டு இல்லை, ஆனாலும் எனக்கு 30 வருஷங்களுக்கு பின்னும் எனக்கு ஏனோ இன்னும் ஞாபகம் இருக்கிறது.
முதலில் ஒரு பாட்டில் – ஆலங்குடி சோமு எழுதிய “அவனி எல்லாம் புகழ் மணக்கும்” – மகாபலிபுரத்தின் பகீரதன் தவம் க்ளோஸ் அப்பில் காட்டினார்கள். எப்போதோ சின்ன வய்தில் டூர் போனபோது பார்த்தது. அப்போது இதையெல்லாம் பார்ப்பதைவிட நண்பர்களுடன் ஓடி விளையாடுவதில்தான் ஆர்வம் அதிகமாக இருந்தது. மீண்டும் ஒரு முறை போய் பார்க்க வேண்டும்.
“கண் கவரும் சிலையே”, “ஒரு கொடியில் இரு மலர்கள்”, “வானத்தில் வருவது ஒரு நிலவு” போன்றவை மெதுவான இனிமையான மெலடிகள். கே.வி. மகாதேவன் எப்போதுமே பாட்டுக்குத்தான் மெட்டமைப்பாராம். அப்படி செய்தால் கவிதைகளின் தரம் அதிகப்படுகிறது. இந்தக் கவிதைகளும் நன்றாக இருக்கின்றன. எம்ஜிஆரும் விஜயகுமாரியும் இணைந்து நடிக்கும் ஒரே பாட்டு “ஒரு கொடியில்”தானாம். :-))
.
“மயங்காத மனம் யாவும் மயங்கும்” என்ற பானுமதி சொந்தக் குரலில் பாடும் பாட்டும் இனிமையாக இருக்கிறது. சமீபத்தில் அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியில் பானுமதி நடனம் ஆடுவதைப் போல் யாரோ இமிடேட் செய்தார்கள். சும்மா நின்ற இடத்திலேயே முகபாவம் மட்டும் மாற்றுவார், அங்கே இங்கே ஸ்டைலாக நடப்பார், அவ்வளவுதான். இந்தப் பாட்டில் பானுமதி முக்கால்வாசி அப்படித்தான் நடனம் ஆடுகிறார்.
.
“வெல்க நாடு வெல்க நாடு வெல்க வெல்கவே” என்ற பாட்டும் சுமாராக இருக்கிறது. கலைஞர் எழுதியது. முதலில் “வெல்க காஞ்சி வெல்க காஞ்சி” என்று எழுதப்பட்டு பிறகு சென்ஸார் ஆட்சேபணையால் மாற்றி எழுதப்பட்டதாம்.
இந்தப் படத்தில் ஆலங்குடி சோமு நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறர் – 9 பாட்டுகளில் 7 அவர் எழுதியதுதான். “கண் கவரும் சிலையே”, “ஒரு கொடியில்”, “வானத்தில் வருவது”, “மயங்காத மனம் யாவும்” அவர் எழுதியவைதான்.
மற்ற இரண்டு பாட்டுக்களும் கடி – “உயிரைத் தருகிறேன்”, “மக்கள் ஒரு தவறு செய்தால்” என்ற பாட்டுக்கள். இவையும் சோமு எழுதியவையே.
ஒன்பதில் 4 பாட்டு தேறும்.
கலைஞரின் வசனம் எழுதும் திறனை ஆகா ஓகோ என்பார்கள்.
நரசிம்ம வர்மன் (எம்ஜியார்), பரஞ்சோதி (எஸ்.எஸ்.ஆர்.) இலங்கை மன்னன் (யாரோ) மூவரும் காஞ்சியில் ஒரு வலிவான குழு. பரஞ்சோதிக்கும் பல்லவரின் தங்கை விஜயகுமாரிக்கும் லவ். அவர்களை சூழ்ச்சியால் தோற்கடிக்க பானுமதியும் எம்.ஆர். ராதாவும் புலிகேசியால் (அசோகன்) அனுப்பப்படுகிறார்கள். ராதா இலஙகை மன்னனின் மனைவியை வைத்து மூவர் குழுவை பிரிக்க செய்யும் முயற்சி ஆரம்ப வெற்றிக்குப் பிறகு தோல்வி அடைகிறது. பானுமதி உண்மையிலேயே பல்லவனை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் பானுமதி எம்ஜியார் காதலை பரஞ்சோதி விரும்பவில்லை. அதனால் விஜயகுமாரியையும் தளபதி பதவியையும் விட்டுவிடுகிறார். சமயம் பார்த்து புலிகேசி படை எடுக்கிறார். பல கோட்டைகளை வெல்கிறார். எம்ஜியாரை கொல்ல செய்த சதியில் விஜயகுமாரி மாட்டிக்கொண்டு இறந்துவிடுகிறார். அவர் அப்படி இறந்துவிடுவார் என்பதை அவரே 5 நிமிஷம் முன்னால் “உயிரைத் தருகிறேன்” என்று ஒரு பாட்டு பாடி நமக்கு சொல்லிவிடுகிறார்.
. மனம் திருந்திய பரஞ்சோதி திரும்பி வந்து எல்லாரும் சேர்ந்து புலிகேசியை தோற்கடித்து சுபம்!
எம்ஜியார் படத்தில் மற்றவர்களுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நான் பார்த்ததில்லை.
. எம்ஜியாருக்கு ஒரு மல்யுத்தம்தான் பெரிய சண்டை.
படம் எம்ஜியார் ரசிகர்களுக்காக. புதிய படமாக இருக்கும்போது கொஞ்சம் ரிச்சாக இருந்திருக்கும்.
நண்பர்களுக்கு வணக்கம்,
தோழர்களின் உழைப்பு மலைப்பை தருகிறது. திரு.எஸ். வி.சார், திரு. செல்வகுமார் சார், திரு.ராமமூர்த்தி சார், திரு.லோகநாதன் சார், திரு.சைலேஷ் பாசு சார், திரு. முத்தையன் அம்மு, திரு.திருப்பூர் ரவிச்சந்திரன், திரு.யுகேஷ் பாபு, திரு. ரூப் குமார் சார், திரு. ஜெய்சங்கர் சார் (தங்கள் தாயாரின் கால் எலும்பு முறிவு குணமாகி விட்டதா சார்?) நீ்ண்ட நாட்களாக காணவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்த திரு.கலியபெருமாள் சார் மற்றும் அனைத்து நண்பர்களின் உழைப்புக்கும் தலைவணங்குகிறேன்.
காஞ்சித் தலைவன் படத்தின் 52ம் ஆண்டு துவக்க நாள் இன்று. அருமையான வரலாற்றுக் காவியம். தலைவர் நரசிம்ம பல்லவராக இதில் மிக அழகாக இருப்பார். தளபதி பரஞ்சோதியாக அமரர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வழக்கம்போல தனது சொந்தப் படம் போல ஈடுபாட்டுடன் நடித்திருப்பார். அந்த வகையில் நண்பர் திரு.முரளி அவர்கள் மொழியில் சொன்னால் இதையும் அவர் ‘எடுத்த’ படம் என்று கொள்ளலாம்.
மரணம் என்பதே துயரமான ஒன்றுதான். என்றாலும் சில மரணங்கள் நமக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அந்த பட்டியலில் கடைசியாக சேர்ந்திருப்பது திரு.எஸ்.எஸ்.ஆர். அவர்களின் அமரத்துவம்.
காஞ்சித் தலைவன் படத்தை பற்றிய எனது கருத்துக்களை தனியே பதிவிடுகிறேன்.அதோடு இந்தப் படம் வெளியாவதற்கு முன் நடந்த சுவையான சம்பவத்தை ஒரு பிரபல எழுத்தாளர் கூறியதையும் தனியே பதிவிடுகிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
‘அண்ணாவே தலைவர்’
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திரு.பி.சி.கணேசன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இருந்து காஞ்சித் தலைவன் படத்துக்கு முன் நடந்த ஒரு சுவாரசிய சம்பவம். நண்பர்கள் பார்வைக்கு;
-------
ஒருமுறை அண்ணா திருவாரூருக்கு வந்திருந்தார். பக்கத்தில் இருந்த கொரடாச்சேரி என்ற ஊரில் எம்.ஜி.ஆருக்கு வீரவாள் பரிசளிக்கிற விழாவுக்காக வந்திருந்தார். காட்டூர் ராமையா என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். எம்.ஜி.ஆரும் அங்கேதான் தங்கியிருந்தார். அண்ணாவை பார்க்கச் சென்ற நான், எம்.ஜி.ஆருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டேன். கருணாநிதியை அந்த விழாவுக்கு அழைக்கவில்லை. இத்தனைக்கும் அதற்கு முதல்நாள் வரை திருவாரூரில்தான் கருணாநிதி தங்கியிருந்தார். அப்போது கருணாநிதி என்னிடம் சொன்னார், ‘‘நம்முடைய மாவட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு விழா. அண்ணா தலைமையில் விழா, என்னைக் கூப்பிடவில்லை. நீங்கள் விழாவுக்கு போகப் போகிறீர்களா?’’
நான் சொன்னேன், ‘‘விழாவுக்கு போகும் உத்தேசம் இல்லை. காட்டூரில் ராமையா வீட்டில் தங்கும் அண்ணாவை மட்டும் பார்க்கலாம் என்றிருக்கிறேன்.’’
கருணாநிதி சொன்னார், ‘‘எம்.ஜி.ஆர். முகத்தில் இனி ஒருபோதும் நான் விழிக்கவே மாட்டேன்.
இது பிரசவ வைராக்கியமாக இருக்குமோ என்று நான் எண்ணிக் கொண்டேன். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்துக்குள்ளாக வந்த விளம்பரம் என்னை நகைக்க வைத்தது. கருணாநிதியின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடிக்கும் ‘காஞ்சித் தலைவன்’ என்கிற படத்தின் பூஜைபற்றிய விளம்பரம் அது.
------
திரும்பிப் பார்க்கிறேன் (அரசியல் தலைவர்களுடன் எனது அனுபவங்கள்) பக்.39, 40
ஆசிரியர் : பி.சி.கணேசன்
விக்னேஸ்வரா பதிப்பகம், ஏ/1. ராசி அபார்ட்மெண்ட்ஸ், 13, ரெட்டி தெரு, விருகம்பாக்கம், சென்னை - 600 092.
திரு.பி.சி. கணேசன் அவர்கள் அரசியல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர். பல துறைகள் தொடர்பான நூல்களை எழுதியவர். காமராஜர் காலத்தில் காங்கிரசின் அதிகாரபூர்வ நாளேடான நவசக்தியின் ஆசிரியர் பொறுப்பில் இருந்தவர்.
அவர் கூறியிருப்பதில் இருந்து பல விஷயங்கள் தெரிகிறது. சிறிய ஊரான கொரடாச்சேரியில் அண்ணா தலைமையிலான விழாவில் தலைவருக்கு வீரவாள் வழங்கப்பட்டிருக்கிறது. பேரறிஞர் அண்ணாவை தலைவராக ஏற்றுக் கொண்ட தலைவர் கருணாநிதியை தலைவராக ஏற்றுக் கொண்டதில்லை. அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாவுக்கு அழைக்கவில்லை என்பது மட்டுமல்ல, கருணாநிதியை அழையுங்கள் என்று அண்ணாவும் வற்புறுத்தவில்லை என்பது கவனிக்கத்தக்கது. தலைவர் ‘முகத்தில் விழக்க மாட்டேன்’ என்று கூறிய கருணாநிதிதான் தனது படக் கம்பெனியின் வளர்ச்சிக்காக தலைவரை அணுகியுள்ளார் என்பதும் வெள்ளிடை மலை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
‘அழகுத் தலைவன்’
மேகலா பிக்சர்ஸ் சார்பில் கருணாநிதி, முரசொலி மாறன் தயாரிப்பில் 1963ம் ஆண்டு வெளியான தலைவரின் படம்.
‘கண்கவரும் சிலையே...’ அட்டகாச பாடலுடன் சிற்ப கூடத்தில் தலைவரின் அறிமுகம். இதிலும் அவரது தேக்குமர தேகத்தை காணலாம். அவரை சாதாரண குடிமகன் என்று நினைக்கும் பானுமதி அடுத்த காட்சியில் அவர் மன்னர் என்று அறிந்து அதிர்ச்சியை வெளிப்படுத்துவதும் அந்த காட்சியில் தலைவர் கம்பீரமாக நடந்து வருவதும் அற்புதம்.
தலைவருக்கு விருந்து கொடுக்க அழைக்கும் பானுமதி, உணவில் விஷம் கலக்கப்பட்டிருப்பதை அறிந்து அவரை உணவை அருந்த விடாமல் தடுக்க வேண்டுமென்றே கோபமூட்டுவார். தங்கள் நாட்டுக்கு வந்துள்ள விருந்தாளி அதிலும் பெண் என்பதால் தலைவர் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்க முடியாமல் ‘‘ஆமாம்... ஆமாம்..’ என்று கூறிக் கொண்டே அமர்ந்திருக்கும் ஆசனத்தின் கைப்பிடியை உடைத்து கோபத்தை வெளிப்படுத்தும் காட்சியில், தலைவரின் நடிப்பு டாப்.
இந்தக் காட்சிக்கு முன்னால் வரும் பாடல் காட்சி. பானுமதியின் இனிமையான குரலில் ‘மயங்காத மனம் யாவும் மயங்கும்....’ இதில் தலைவரின் அழகு கொஞ்சும் சிரிப்பும் நிதானமான, அதேநேரம் கம்பீரமான நடையும் .... சொக்க வைக்கும். ‘மரத்தில் மறைந்தது மா மதயானை..’ என்று திருமூலர் தனது திருமந்திரத்தில் கூறியிருப்பது போல ‘தலைவரில் மறைந்தது மா மதயானை ’ என்றுதான் கூற வேண்டும். அந்த அளவுக்கு கட்டுக் கோப்பான, பலமான உடல் வாகை காணலாம். நீதிக்குப் பின் பாசம் படத்தில் ‘சின்ன யானை நடையைத் தந்தது’ என்று தலைவரை கவிஞர் பாடியிருப்பது இதைப் பார்த்துத் தானோ என்னவோ?
தளபதி பரஞ்சோதியாக திரு.எஸ்.எஸ்.ஆர். அவர்கள் நடிப்பு கச்சிதம். அவருக்கு வானத்தில் வருவது ஒரு நிலவு..... விஜயகுமாரியுடன் இனிமையான பாடல்.
அண்ணன், தங்கை பாசத்தை விளக்கும் ‘ஒரு கொடியில் இருமலர்கள்...’ பாடல் அருமையான மெலடி.
இலங்கை மன்னன் மான வர்மனாக வருபவர் வளையாபதி முத்துக்கிருஷ்ணன் அவர்கள். கணீர் குரலுடன் வசனம் பேசும் திறமையும் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறனும் வாய்ந்த நடிகர். அண்ணாவின் மேல் பேரன்பு கொண்ட திராவிட இயக்க நடிகர்களில் இவரும் ஒருவர். வளையாபதி என்ற படத்தில் திரு.முத்துக்கிருஷ்ணன் நடித்ததால் படத்தின் பெயர் இவருக்கு முன் சேர்ந்து கொண்டது. ‘வெண்ணிற ஆடை நிர்மலா’ போல.
மான வர்மன் தன் மனைவியின் நடத்தை குறித்து சந்தேகப்பட்டு தலைவரிடம் சொல்வா். உண்மையிலேயே அவர் அப்படித்தானா என்பதை கண்டுபிடிக்க தலைவர் அவரிடம் தவறான நோக்கத்துடன் அணுகுவது போல நடிப்பார். இருந்தாலும் தனது இயல்பான நன்னடத்தை குணம் காரணமாக, காமச் சிரிப்பாக இல்லாமல், இப்படி நடிக்க வேண்டியிருக்கிறதே என்ற சங்கடத்துடன் அந்தக் காட்சியில் லேசான அசட்டு சிரிப்பும், அந்த பெண்ணின் கையை பிடிக்கப் போகும்போது தனது கை லேசாக நடுங்குவதையும் அந்த நடுக்கத்தை தவிர்க்க முயற்சி செய்வதையும் தலைவர் தனது நடிப்பில் காட்டியிருப்பார் பாருங்கள்....... ஏ க்ளாஸ்.
சாளுக்கிய மன்னன் புலிகேசியாக திரு.அசோகனின் ஆக்ரோஷ நடிப்பும் அற்புதம்.
எதிரிநாட்டு உளவாளியாக வரும் திரு.எம்.ஆர்.ராதாவின் நடிப்பு வழக்கம்போல் ஆர்ப்பாட்டம். ‘உலகம் சுத்துது எதனாலே? நம்ம உடம்பு சுத்துது அதனாலே...’ என்று அவருக்கு ஒரு பாட்டு. பார்ட்டி ஏற்கனவே கொஞ்சம் லொள்ளு. குடித்து விட்டு ஆட்டம் போடும் காட்சி என்றால் கேட்கவா வேண்டும்? பாடலை எழுதியவர் கருணாநிதி. அனுபவித்து எழுதியிருக்கிறார் போல. இந்தப் பாடலை ஏ.எல்.ராகவன் பாடியுள்ளார். அதற்கு பதிலாக எம்.எஸ்.ராஜூ என்பவர் (பலே பாண்டியாவில், மாமா.. மாப்ளே பாட்டுக்கு ராதாவுக்கு குரல் கொடுத்தவர். சாந்தியில் ‘நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்’ பாடலுக்கு விசில் அடித்திருக்கும் திறமையாளரும் இவரே) பாடியிருந்தால் பாடல் இன்னும் reach ஆகியிருக்கும் என்று கருதுகிறேன்.
எதிரி நாட்டைச் சேர்ந்த மல்யுத்த வீரன் தனது நாட்டில் நடக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் நாட்டு வீரரை வீழ்த்தும்போது தலையை கவிழ்ந்து தர்மசங்கடத்தை வெளிப்படுத்தும் காட்சியில் தலைவரின் முகபாவம் கண்ணிலேயே நிற்கிறது. இருந்தாலும் அந்த வீரனை மதித்து பாராட்டுவதும் தலைவரின் பெருந்தன்மையை விளக்கும் காட்சி. அந்த வீரன் இந்த நாட்டில் என்னை எதிர்த்துப் போரிட யாரும் இல்லையா? என்று கொக்கரிப்பான். அப்போது, நாட்டின் மானத்தை காக்க தலைவரே கோபத்துடன் எழுந்து ஒவ்வொரு படியாக இறங்கி வருவதும் அப்போது, கிரீடம், மற்றும் உடைகளை ஒவ்வொன்றாக ஒவ்வொருவரிடம் கழற்றிக் கொடுத்துக் கொண்டே கோபத்துடன், நிதானமாக, இறங்கி வரும்போது திரையரங்கே வெறி கொண்டு அலறியது இப்போதும் காதுகளில் ஒலிக்கிறது.
அந்தக் காட்சியில் வீரனுடன் மோதுவதற்கு தயாராக, உடல் தெரியும் மெலிதான பனியனை அணிந்தபடி சண்டைக் கோழி போல தோளைக் குலுக்கும் தலைவரின் சிலிர்ப்பு... என்ன ஒரு உடல் மொழி. அந்த வீரன் தலைவரை விட நல்ல உயரம். இருந்தாலும் சண்டையின் முடிவில் அந்த வீரனை தலைவர் தனது தோள்களில் தூக்கி சுழற்றி வீசும் காட்சி. சமீபத்தில் நண்பர் சைலேஷ் பாசு அவர்கள், ‘பத்தாவது அடி உனக்கு வரும்’ என்று தலைவர் கூறிய ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அது குறித்து கருத்து தெரிவித்த திரு.யுகேஷ் பாபு, தலைவரை, ‘ரீல் சூப்பர் ஸ்டார் அல்ல, ரியல் சூப்பர் ஸ்டார் ’ என்று குறிப்பிட்டிருந்தார். அதுதான் நினைவுக்கு வருகிறது.
(இங்கே நண்பர்களுக்கு ஒரு விளக்கம். நரசிம்ம பல்லவர் பாத்திரத்தை தலைவர் ஏற்றிருந்தார். அந்த மன்னன் மல் யுத்தத்தில் சிறந்து விளங்கியவன். யாராலும் வெல்ல முடியாததால் அவன் ‘மாமல்லன்’ என்று போற்றப்பட்டான். கலையுணர்ச்சி கொண்ட அவன் நிர்மாணித்த கலைக்கோயில்தான் அவனது பெயரால் வழங்கப்படும் ‘மாமல்ல’புரம். நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தலைவர் நடிக்கும் படங்கள் பற்றிய விமர்சனங்களில் எனக்கு தெரிந்த செய்திகளையும் பகிர்ந்து கொள்கிறேன். தலைவரைப் பற்றி மட்டும் சொன்னால் போதும் என்றால் தயங்காமல் தெரிவியுங்கள். திருத்திக் கொள்கிறேன். ஏனென்றால், யாரும் போரடிப்பதாக நினைத்து விடக் கூடாது.)
வழக்கமாக எல்லாப் படங்களிலுமே அதிலும் அரச உடையில் தலைவர் அழகாக இருப்பார். அதிலும் இந்தப் படத்தில் அவர் நெற்றியில் இட்டிருக்கும் திலகம் அவரது முகத்துக்கு கூடுதல் அழகு தரும். முதல் முறை படத்தை பார்த்து விட்டு வெளியில் வந்ததும், தியேட்டர் வாயிலில் அடுத்த காட்சிக்கு வாழ்த்து கோஷங்களுடன் திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்கிடையே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவரின் கட் அவுட்டை சிறிது நேரம் பார்த்தபடி நின்றேன். படத்துக்கு ‘அழகுத் தலைவன்’ என்று பெயரிட்டிருக்கலாமோ என்று தோன்றியது.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்