வெற்றிக்கு ஒருவன் (08.12.1979)
நண்பர் கோல்ட்ஸ்டார் சதீஷ் திடீரென ‘வெற்றிக்கு ஒருவன்’ ஸ்டில்களைப் பதிவிட்டிருப்பதை பார்த்ததும் எனக்கும் நினைவு பின்னோக்கிப் பயணிக்கத் துவங்கியது. ரிலீசன்று முதல்முதல் பார்த்த அனுபவம் மனதில் நிழலாடத் துவங்கியது. (பிறகென்ன, இதுபோன்ற நினைவலைகள் மற்றும் அசைபோடல்கள்தானே நம் சொத்துக்கள்). நடிகர்திலகத்தின் படங்கள் வழக்கம்போல சனிக்கிழமை வெளியாவது போலவே இந்தப்படமும் சனிக்கிழமையன்று ரிலீசானது. முதல் நாள் காலைக்காட்சி மன்றத்துக்கான ஸ்பெஷல் காட்சியாக கீழ்ப்பாக்கம் ஈகா திரையரங்கில் நடைபெற்றது. அன்றைக்கு காலை மிக முக்கியமான வேலை இருந்ததால் ஸ்பெஷல் காட்சிக்குப்போக முடியவில்லை. சாந்தி வளாக நண்பர்களான கோவை சேது, மந்தைவெளி ஸ்ரீதர், திருவான்மியூர் சங்கர், வீரராகவன் அன்புள்ள காலைக்காட்சிக்கு ஈகா சென்றிருந்தனர். படம் எப்படி என்று தெரிந்துகொள்ள மனது அலை மோதியது. காலைக்காட்சி பார்த்துவிட்டு வீடுகளுக்கு சென்றவர்கள் மாலை 3.30 மணிக்கு மீண்டும் சாந்தியில் கூடினர். சாந்தியில் அப்போது பட்டாக்கத்தி பைரவன் 51-வது நாளாக ஓடிக்கொண்டிருந்தது. வெற்றிக்கு ஒருவன் படம் பற்றிய ரிசல்ட் இப்படியும் அப்படியுமாக இருந்தது. (வெற்றிக்கு ஒருவன் படத்தின் முந்தைய பெயர் 'கண்ணே கனியமுதே', இது முன் வந்த 'அன்பே ஆருயிரே' பெயர்போல உள்ளது என்ற அதிருப்தி ரசிகர்கள் மத்தியில் உலவியது. வெற்றிக்கு ஒருவன் என பெயர் மாற்றப்பட்ட பின் ரசிகர்கள் திருப்தி அடைந்தனர்).
அத்துடன் இப்படம் கவரிமான் படக்கூட்டணியால் உருவாக்கப்பட்டு வந்ததால் அதுவும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இதே கூட்டணியால் உருவாக்கப்பட்டு வந்த 'ரிஷிமூலம்' படமும் அப்போது தயாரிப்பில் இருந்து வந்தது.
ரசிகர்கள் அனைவரும் (ஸ்பெஷல் காட்சி பார்த்தவர்கள் உள்பட) மாலைக்காட்சிக்கு திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டரில் ரிசர்வ் செய்திருந்தோம். (படம் ஸ்டார், ஸ்ரீகிருஷ்ணா, ஈகா தியேட்டர்களில் ரிலீசாகியிருந்தது). எனவே நான்கு மணியளவில் சாந்தியில் இருந்து ஜாகையைக் கிளப்பிக்கொண்டு ஸ்டார் நோக்கி நடையைக்கட்டினோம். ஏற்கெனவே படம் பார்த்திருந்தவர்கள் காட்சிகளைப் பற்றி சிலாகித்துப் பேசியவண்ணம் வந்தனர்.
திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் எப்போதும் ஹிந்திப்படங்கள் அதிகமாக ஓடக்கூடிய தியேட்டர். திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ஐஸ் ஹவுஸ் பகுதிகளில் உருது பேசும் முஸ்லிம்கள் அதிகமிருப்பது காரணமாக இருக்கலாம். யாதோன்-கி-பாராத் அங்குதான் ஒரு வருடம் ஓடியது. தமிழ்ப்படங்கள் அபூர்வமாகவே திரையிடப்படும். வருடத்தில் 12 வாரங்கள் அனைத்து அரங்குகளிலும் தமிழ்ப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என்ற அரசு சட்டமியற்றியபின் அங்கு ஸ்டாரில் தமிழ்ப்படங்கள் திரையிடப்பட்டன. அப்படி திரையிடப்பட்ட சிவகுமாரின் 100-வது படமான ரோசாப்பூ ரவிக்கைக்காரி 100 நாட்களுக்கு மேல் செம ஓட்டம் ஓடியது. அப்படி ஸ்டாரில் திரையிடப்பட்ட படம்தான் வெற்றிக்கு ஒருவன். (நண்பகல் காட்சி பார்ப்பதற்கு மிக அருமையான தியேட்டர் ஸ்டார்).
படம் சுமார் என்ற ரிசல்ட் வந்திருந்த போதிலும் நமது ரசிகர்கள் தியேட்டர் அலங்காரங்களிலும், மாலைகளிலும் குறை வைக்கவில்லை. ஆனால் எப்படித்தான் அலங்காரம் செய்தாலும் சில தியேட்டர்களில் எடுபடாது. அதில் ஸ்டார் தியேட்டரும் ஒன்று. அந்த சமயத்தில் சாந்தி வளாகத்தில் இளையராஜா எதிர்ப்பு கோஷ்டி ஒன்று உருவாகி, இளையராஜா இசையமைத்த படங்களைப் பற்றி குறை சொல்வதும், குதர்க்கம் பேசுவதுமாக இருந்து வந்தது. இந்தக்கூட்டத்துக்கு செல்வராஜ் என்பவர் தலைமையேற்று வீண் விவாதங்கள் செய்து வந்தார். அவர்களும் நடிகர்திலகத்தின் ரசிகர்கள்தான். இருப்பினும் இளையராஜா படங்கள் என்று வரும்போது நடிகர்திலகத்தின் படங்களையும் வைத்துப்பார்க்காமல் பேசுவார்கள். இதனால் சாந்தியில் பலமுறை வீணான சச்சரவுகள் வந்துள்ளன. ஏற்கெனவே இவர்கள் கவரிமான், நல்லதொரு குடும்பம் போன்ற படங்களை கன்னா பின்னாவென்று விமர்சித்துள்ளனர். இப்போது செல்வராஜும் தன கூட்டத்துடன் ஸ்டாரில் ஆஜராகியிருந்தார். அவர்கள் காலை சிறப்புக்காட்சி பார்த்திருந்ததால், படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பற்றியெல்லாம் அவர்கள் மட்டமாக பேசத்துவங்கியதும், ரசிகர்கள் மத்தியில் திடீரென கலவரம் மூண்டது. (அவர்கள் நடிகர்திலகத்தின் நடிப்பைப்பற்றியோ மற்ற விஷயங்களைப்பற்றியோ குறை சொல்ல மாட்டார்கள். இருப்பினும் பொதுமக்கள் மத்தியில் இப்படி மட்டமாக பேசுவது ரசிகர்களுக்கு ஆத்திரமூட்டத்தானே செய்யும்).
அதுவும் கலவரம் நடந்தது போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில். நல்லவேளை போலீஸ் வந்து தலையிடுவதற்குள் மன்றத்தினரே கலவரத்தை அடக்கி விட்டனர். இது முடிந்த கையோடு மாலைக்காட்சிக்கு கதவுகள் திறக்க உள்ளே போய்விட்டோம்.
டைட்டில் அட்டகாசமாகத் துவங்கினாலும், படம் துவக்கம் மந்தமாகவே இருந்தது. தொட்டதற்கெல்லாம் பயப்படும் கோழையாக நடிகர்த்திலகத்தைப்பார்க்க கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது. போகப்போக படம் டல்லடித்தது. எஸ்.பி.முத்துராமன், இளையராஜா. பாபு கூட்டணியிலிருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் தந்தையின் கொலை நடந்ததை நினைத்து நினைத்து நடிகர்திலகத்துக்கு தைரியமும், ஆவேசமும், பழியுணர்ச்சியும் பொங்கத் துவங்கியதிலிருந்து படம் சூடு பிடித்தது.
நடிகர்திலகம் - ஸ்ரீபிரியா ஜோடியின் டூயட் பாடல் 'தோரணம் ஆடிடும் மேடையில் நாயகன் நாயகி' பாடல் மிக நன்றாகப் படமாக்கப் பட்டிருந்தது. வில்லனின் கையாள் 'லென்ஸ்-கன்' கொண்டு சுடுவதற்காக, பலமாடிக் கட்டிடத்தில் ஏறும்போது படிக்கட்டில் அவன் காலடியோடு கூடவே கேமரா தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும் காட்சியில் பாபுவின் ஒளிப்பதிவு கைதட்டல் பெற்றது. இதற்கு சற்று முன் மூடுபனியில் பாலுமகேந்திரா இதை முயற்சித்திருந்தாலும் இந்த அளவுக்கு தொடர்ச்சியாக இல்லை.
தைரிய புருஷனாக ஆனபின் நடிகர்திலகத்தின் நடிப்பு தூள் பரத்தியது. அதர்க்கேற்றாற்போல வில்லன் நம்பியார், அவரது மேனேஜர் ஒய்.ஜி.பார்த்தசாரதி ஆகியோர் சிறப்பாக நடித்திருந்தனர். தியாகம் படத்துக்குப்பின் இந்தப்படத்தில் ஜஸ்டின், நடிகர்திலகத்துடன் சண்டைக்காட்சியில் நடித்திருந்தார். ஸ்ரீபிரியா ஜோடிப்பொருத்தம் இப்படத்தில் நன்றாக இருந்தது. படம் முடிந்து வெளியே வந்தபோது, சிறப்புக்காட்சி பார்த்த ரசிகர்கள் சொன்ன அளவுக்கு மோசமில்லைஎன்று தோன்றியது. அவர்கள் காலையில் ரொம்ப எதிர்பார்த்துப்போய், எதிர்பார்த்தபடி இல்லாததால் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள் போலும். ஆனால் மாலையில் நாங்கள் மோசமான ரிசல்ட்டோடு பார்க்கச்சென்றதால் பரவாயில்லை என்று தோன்றியதோ என்னவோ.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சமீபத்திய தொலைக்காட்சி பேட்டிகளில் நடிகர்திலகத்துடன் தான் பணியாற்றிய அனுபவங்களைக் கூறும்போது, தான் பணியாற்றிய கவரிமான், வெற்றிக்கு ஒருவன், ரிஷிமூலம் மூன்றும் சரியாகப்போகவில்லை என்ற தவறான தகவலைச் சொல்லி வருகிறார்.. அவரது இயக்கத்தில் வந்த 'ரிஷிமூலம்' மாபெரும் வெற்றி பெற்று 100 நாட்களுக்கு மேல் ஓடியது. புவனேஸ்வரி தியேட்டரில் அப்படத்தின் 100-வது நாள் ஷீல்டைப் பார்த்திருக்கிறேன்.
'ரிஷிமூலம்' என்றதும் இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1980 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி 40-க்கு 38 இடங்களில் அமோக வெற்றிபெற. அ.தி.மு.கவுக்கு இரண்டு இடங்களே கிடைத்தன. இதைத்தொடர்ந்து கருணாநிதியின் நச்சரிப்பால் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். தலையில் நடந்துகொண்டிருந்த அரசு கலைக்கப்பட்டது (இந்திரா செய்த பெரிய தவறு). அமைச்சரவை கலைக்கப்பட்டதை கண்டித்து எம்.ஜி.ஆர். தலைமையில் மவுண்ட் ரோடு அண்ணாசிலையிலிருந்து கவர்னர் மாளிகைக்கு மாபெரும் கண்டன ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் சாந்தி தியேட்டர் அருகே வந்தபோது, சாந்தி தியேட்டர் தாக்கப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அப்போது அங்கே ஓடிக்கொண்டிருந்த ரிஷிமூலம் படத்தின் பேனர்களும், கட்-அவுட்களும் முற்றிலும் கிழித்தெறியப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர் இருந்த வாகனம் முன்னே புகாரி ஓட்டல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்துகொண்டிருந்த அ.தி.மு.க.வினரால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது....