-
கடல் மைனா..
*
சின்னக் கண்ணன்..
*
26. பெருமாள் பிரசாதங்கள்*
பள்ளி கொண்ட ராமனின் கருவறையை விட்டு வெளியில் வ்ந்து கொஞ்சம் வெளிப் பிரகாரத்தை ஒட்டி இடது புறமாக அமைந்திருந்தது மடப்பள்ளி என்றழைக்கப் படும் கோவில் சமையலறை..கொஞ்சம் விசாலமாகவே அமைந்து அடுப்புகள் எல்லாம் சுவற்றின் பக்கமிருக்க விறகுப் புகை உள்ளே தங்காதவாறு செம்மண்ணால் செய்யப் பட்ட புகை போக்கிகள் அடுப்புக்கு மேற்புறத்தில் அமைக்கப் பட்டிருந்தன.. பிர்சாதங்கள் அன்றாடம் பெருமாளுக்குப் படைக்கப் பட்டு வந்ததால் அவை நிறம் மாறிக் கரிய நிறத்திலிருந்தாலும் அதுவும் ஒரு வித அழகாய்த் தான் இருந்தது.
கருவறையை விட்டு வெளியில் வந்த வீர நாராயணர் சற்று நடந்து தள்ளியிருந்த மடப்பள்ளியில் நுழைந்த போது ஒரு விறகடுப்பில் அகண்ட பித்தளைப் பாத்திரத்தில் அக்கார அடிசில் கொதித்துக் கொண்டிருந்தது.. அக்காரம் போட்ட அதாவது கரும்பினிலிருந்து எடுக்கப் பட்ட சர்க்கரை, பசுவின் பால், பசு நெய், கலிங்க நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குங்குமப் பூ போன்ற கலவைகளினால் எழுந்த மணம் அந்த மடப்ப்ள்ளியெங்கும் பரவி இருந்தது. ஒரு உதவியாள் நின்றபடி அடுப்பை மெல்லவே எரியவிட்டு அவ்வப்போது கிளறிவிட்டுக் கொண்டிருந்தான்.
ஒரு புறம் இன்னொருஅடுப்பிலிருந்து இறக்கிய தஞ்சையிலிருந்து வந்த அரிசியில் செய்து சற்றே குழைவாக இருந்த சாதத்தை விரித்து வைக்கப் பட்டிருந்த ஓலைப்பாயில் சாதித்து (போட்டு) அதன் மீது பசுந்தயிர், சிறிதளவு பால், நறுக்கிய பச்சை மிளகாய்கள், கொஞ்சம் சிறு மாங்காய்த் துண்டங்கள் போட்டு மரக்கரண்டியால் மென்மையாகவும் வேகமாகவும் ததியோன்னம் பிசைந்து கொண்டிருந்தாள் கனகம் என்ற வயது முதிர்ந்த பெண்..
இன்னொரு பக்கம் ததியோன்னத்திற்கு ஏதுவாக இருக்கட்டுமென்று இன்னொரு அடுப்பில் சிறிய பித்தளைப்பாத்திரத்தில் பச்சைப் பசேலெனப் புளிமிளகாய் கொதித்துக் கொண்டிருக்க அதன் மணமும் அக்கார அடிசிலின் மணமும் கலந்து வாழ்க்கையில் உணவின் மணத்தில் கூட இன்பமும் துன்பமும் இருக்கும் எனக் காட்டியவாறு இருந்தன..
(தொடரும்)
-
*
கடல் மைனா..
*
சின்னக் கண்ணன்..
*
27. வீர நாராயணரின் கவலை
*
வீர நாராயணர் எல்லாவற்றையும் பார்த்தாலும் கூட எதுவும் அவரது மனதிலும் நாசியிலும் ஏறவில்லை.. அக்காரவடிசல் என்றும் அக்கார அடிசல் என்றும் சொல்லப் படும் திருக்கண்ணமுதைக் கிளறிக் கொண்டிருந்தவனிடம் “ஆராவமுது.. என்னப்பா ஆகிவிட்டதா” எனக் கேட்கவேண்டுமே எனக் கேட்க “இதோ அரை நாழிகை மாமா”என்ற பதில் வர, பின்னர் அந்த விறகடுப்பையே பார்த்தவண்ண்ம் இருந்தார் வீர நாராயணர்.. அவர் வந்தது, அவர் முகத்தில் தெரிந்த கவலை எல்லாவற்றையும் கண்ட கனகம் “என்னாயிற்று ஸ்வாமிகளே” எனக் கேள்வி கேட்டு சுடச்சுடத் ததியோன்னம் பிசைந்ததினால் மரக்கரண்டி பிடித்த கை சற்றே வேர்க்க அருகிருந்த பாத்திரத்தில் இருந்த நீரில் தனது கைகளை அலம்பி விட்டும் கொண்டாள்.. வீர நாராயணரின் கண்கள் அனிச்சையாய்க் கனகத்தின் கைகளை நோக்கின..
*
கனகமாகப் பட்டவள் சிறுவயதிலிருந்தே பெருமாளுக்கு நேர்ந்து விடப்பட்டிருந்தாலும் நிறைய திருவிழாக்களின் போது நடனம் புரிந்தவள் தானெனினும் தனக்கென வாரிசு என யாரையும் கொள்ளவில்லையாதலின் யெளவனம் போன பிறகு கோவில் மடப்பள்ளியிலேயே பிரசாதங்களையும் செய்து கொண்டு வந்திருந்தாள்..சோழ அரசாங்கத்திலிருந்து அவளுக்கான வீடும் நிலமும் ஒதுக்கப் பட்டு வருடாவருடம் மானியமும் வந்து கொண்டிருந்ததால் அவளுக்கு வசதிகளைப் பற்றி எந்தக் குறையும் இல்லாமலும் அவ்வாறு தந்த கோவிந்தனுக்குச் சேவை செய்வதையே குறிக்கோளாகவும் கொண்டிருந்தாள். அவளது கைகளை அலம்பிய போது முதுமை நெருங்கியதற்கான சுருக்கங்கள் அவள் புறங்கையில் தெரிய வீர நாராயணரின் கண்களில் ரேணுகா தேவியின் செங்காந்தள் மலர்க் கைகள் தெரிந்தன..
கனகத்தின் கேள்விக்குப் பதில் ஏதும் சொல்லாமல் விறகடுப்பை மறுபடிவெறித்த படி மனதிற்குள் ராமனை நினைத்தார்..” ராமா..இது என்ன சோதனை எனக்கு.. எதற்காக அந்த ராஷ்டிர கூட இளவரசியின் கரங்களைக் காட்டினாய்..எனக்கு ரேகை சாஸ்திரம் எதுவும் தெரியாது தான்.. இருப்பினும் மேல் நோக்கி ஷணப் பொழுது அந்தக் கையைப்பார்க்கையில் ஆயுள் ரேகை பாதியில் நின்றிருக்கிறதே.. அட ராமா! இவளைத் தானே அந்த ராஜாதித்யரும் விரும்புகிறார் என ஆச்சார்யர் உறங்கப் போகும் முன் சொன்னார்.. ராஜாதித்யரின் ஜாதகப் படியும் நிலைமை சரியில்லை போல இருக்கிறது..இல்லையேல் ஏன் ஆச்சார்யர் பூடகமாய்ப் பேச வேண்டும். ராஜாதித்யருடன் வந்திருக்கும் வீரன் எழிலிடம் பார்க்கும் பார்வையில் சற்று மயக்கம் தெரிகிறது.. என்ன வேலை, என்ன கோத்திரம் என விசாரித்துப்பார்க்க வேண்டும்..அவளுக்கும் வயதாகிறது..இந்தப் பூதுகன் எங்கிருந்து வந்தான்..என்ன துணிச்சல்..இருந்தாலும் ராஜாதித்யரின் உணர்ச்சிகளின் அடக்கும் தன்மையை என்னவென்று சொல்வது..ஆச்சார்யர் சொன்னவுடன் அவர் பின்னாலேயே மண்டபத்திற்குப் புறப்பட்டு விட்டாரே..மண்டபத்தில் என்ன நடந்திருக்கிறதோ”எனப் பலவண்ணம் கண்களால் அடுப்பில் கண கணவென எரிந்து கொண்டிருந்த விறகைப் பார்த்த வண்ணம் யோசித்துக் கொண்டிருந்த வீர நாராயணரை “ஸ்வாமிகளே” எனக் கனகத்தின் குரல் இகலோகத்திற்கு இழுத்து வந்தது..
வீர நாராயணர் பார்த்த போது பாத்திரங்களில்அக்கார வடிசலும்,ததியோன்னமும் வைக்கப் பட்டு பெரிய தட்டால் மூடியும் இருக்க அந்தப் பாத்திரத்தின் பிடியையும் மூடியையும் ஒரு ஈர்த்துண்டால் பிடித்தவண்ணம் மடப்பள்ளியைச் சேர்ந்த இருவர் தயாராக எடுத்துச் செல்ல இருந்தனர்..கனகம் விருந்தினருக்காகச் செய்த புளிமிளகாயை வான் நோக்கிப் பார்த்து “பகவானே உனக்கே அர்ப்பணம்” என்றாள்.. வீர நாராயணர் செல்லலாம் எனத் தலையசைக்க பிரசாதங்களை இருவரும் எடுத்து நடக்க, பின்னாலேயே நடந்தார் அவர்..கருவறையை அடைந்து மறுபடி திரை போட்டு ராமனுக்கு, பொற்றாமரையாள் எனச் சொல்லப்படும் பூமா தேவிக்கு பிரசாதங்களை நைவேத்தியம் செய்து விட்டு மறுபடியும் ராஜாதித்யர் ரேணுகாவிற்காக சிறப்பு விண்ணப்பத்தையும் ராமனிடம் இட்டு விட்டு வெளியில் வந்தார்.. மடப்பள்ளி ஆரவமுது பொற்தட்டுகளுடன் காத்திருக்க பிரசாதங்களை எடுத்துக் கொண்டு மண்டபம் இருந்த திசையை நோக்கி நடக்கும் போது வீர நாராயணருக்குச் சற்றே பதறியது மனம்.. இரு விரோதிகள், ஒரு இளவரசி, வேற்று நாட்டு குருதேவர்..கிட்டத் த்ட்ட ஒரு நாழிகைப் பொழுதுக்கு மேல் ஆகிவிட்டதே..ஏதாவது வாக்குவாதங்கள் நடந்திருக்குமோ.. கோவில் என்றும்பார்க்காமல் மோதியிருப்பார்க்ளோ..ம்ம் அப்படி எல்லாம் நடந்திருக்காது..ராமன் பார்த்துக் கொண்டிருப்பான்.சரி தானே ராமா “ எனத் தனக்குள் ராமனையும் கேட்டுக் கொண்டு மண்டபத்தை அடைந்தார்..மண்டபத்தில் கண்ட காட்சியோ மாறாக இருந்தது..மாதவர், பூதுகன், ராஜாதித்யர் மூவரும் சிரித்த வண்ணம் இருந்தனர்!
(தொடரும்)
-