அன்புள்ள மது,
மிக அழகாக எழுதப்பட்ட தொடர்.
முதல் பாகத்திலிருந்தே மென்மையான காட்சிகள் நிறைந்திருந்தாலும் இதற்கு அடியில் ஒரு அழுத்தத்தை எப்படியோ கோடிட்டுக் காட்டிக்கொண்டே வந்தீர்கள். அதனால் பெருமாள் பயணத்தை, காதலர்களின் இனிமையான அந்த மாலையை நேரடியாக ரசிக்க முடியாமல் ஒரு வித கலக்கத்துடனேயே படித்தேன். தொடரில் எந்த இடத்தில் அந்த கலக்கத்துக்கு வித்திட்டீர்கள் என்று சரியாக சொல்லமுடியாமல் போவது தான் உங்கள் முதல் வெற்றி.
துல்லியமான வற்ணணைகள் உங்கள் பலம். பொதுவாக இந்த திறமை உள்ளவர்கள் அதை அதிகமாக பயன்படுத்த முனைவதுண்டு. அதனால் எல்லா இடத்தில் அபரிமிதமான வர்ணணைகள் இருக்கும் (நான் டிக்கென்ஸின் ரசிகன் அல்ல :-)]. ஆனால் நீங்கள் சரியாகவே பயன்படுத்தி வருகிறீர்கள்.
யூகலிப்டஸ் இலைகள் உவமானம், கீழிருந்து மேல் செல்லும் மின்னல்கள், 'குயிலிக்கு மை தடவினாற் போல' என்று எதிர்பாராத இடங்களில் படிக்கக் கிடைப்பது இனிமையான அநுபவம்.
உரையாடல்கள் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சங்கரும் குழந்தையும் பேசும் இடங்கள் [யெல்லோவே போதும் இல்லையா :-)].'பித்தம்' சற்றே திணிக்கப்பட்டதாக தெரிந்தாலும் ரசிக்கும்படியாகவே இருக்கின்றது.
பிரதான கதாபாத்திரங்கள் எல்லோரும் அட்டை மனிதர்களாக இல்லாமல் உயிர்ப்புடன் இருக்கிறார்கள். உங்கள் நடையும் உரையாடல்களும் இதை சாதித்திருக்கின்றன.
'திருவிளையாடல் புராண மேற்கோள் தனியாக தெரிந்தது. அந்த மேற்கோள் இல்லாமல் சாதாரணமாக அதை சொல்லியிருக்க முடியுமே என்று தோணியது. கே.எஸ்.ஜீ எச்சரிக்கை கொடுத்திருந்தாலும் அந்த ஆறு உவமானம் (அழகாக இருந்தாலும்)சங்கரின் பேச்சுவழக்கில் ஒட்டாமல் தெரிந்தது.
இதெல்லாம் என் அபிப்ராயம். அவ்வளவுதான். நான் கொஞ்சம் இருக்கமான எழுத்தை ரசிக்கும் பழமைவாதி.நீங்கள் உங்கள் பாணியைத் தொடருங்கள்.
வாழ்த்துக்கள்.