payan paduvathu yaarukku?
பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
நேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.
இது கலித்தொகைப் பாடல் பகுதி.
மலையில் பிறக்கும் சந்தனம்.அதனால் மலைக்குப் பயனில்லை. நாம் பூசிக்கொள்கிறோம். நமக்குப் பயன் தருகிறது.
அதுபோல முத்தினால் கடல் பெற்ற பலன் யாது? மனிதன் அணிந்துகொள்ளத்தானே அது பயன்படுகிறது.
பெண்மகளும் அதுபோல, பிறந்தவீட்டுக்குப் பயன்படுவதில்லை என்கிறது பாடல்.
The various contradictory aspects of God (Murugan)
தனிவேல்
முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே 13
இது கந்தரனுபூதிப் பாடல்களிலொன்று.
முருகன் இணையற்ற வேலைத் தன்னிடம் வைத்திருப்பவன். அவனே முனிவன்.அவனேகுரு. உருவன், அதாவது உருவமுமுடையவன்; அருவன், அதே சமயம் உருவமும் இல்லாதவன்.
அவன் அருகில் இல்லாததுபோல் நாம் நினைத்தாலும் அவன் இருக்கின்றான். இருள் என்றால் அவன் இருள் -- ஒளியென்றால் அவன் ஒளி. இரண்டு அமைப்புகளும் ( அம்சங்களும்) பொருந்தியவன். அன்றும் இன்றுமுள்ளான் ஆகவே என்றுமுள்ளவன்.
அவனருள்கொண்டு அறியாதவருக்கு, பாவம்! எங்கே விளங்கப்போகிறது? இவையெல்லாம் அறியார் அறியும் தரமோ என்று அறியாரை நினைத்து இரங்கத்தான் முடியும்.
உருவம் வைத்து அவனை வணங்கும் அவ்வேளையில் அவன் "அரு" (உருவம் இல்லாதவன் ) என்பதையும் நெஞ்சில் நிறுத்திக்கொள்ள வேண்டும். இறைவன் இருளாகவும் இருக்கின்றான், ஒளியாகவும் இருக்கின்றான். பாதி உலகம் இரவில் இருளாக இருந்தாலும் , உலகம் இருக்கத்தானே செய்கிறது. அதுபோல் இருநிலைகள் உள்ளது கடவுள்.
பேச்சு வழக்கில் சொல்லவேண்டுமானால், அவன் இருளுமில்லை, ஒளியுமில்லை, உருவமும் இல்லை, அருவமும் இல்லை, இருக்கின்றான்,இல்லாமலும் போய்விடுகின்றான்,
அருள் வந்தாலன்றி அவன் அகப்பட மாட்டன்!
இருளன்று!ஒளியன்று! உருவன்று! அருவன்று! ஆனால் நின்றது (இருக்கின்றது) என்று எல்லாம் எதிர்மறையில் பாடியது மெய்சிலிர்க்கவைக்கும் அழகு.
இது அருணகிரிநாதர் தந்த பாடல்.
இந்து மதத்தின் போதனையும் அதுவே.
kAnthaaraththil thamizan - puRam
புறநானூறு உலோச்சனார் பாட்டு
இப்போது ஒரு புற நானூற்றுப் பாடலைச் சுவைப்போம்.
முட்கால் காரை முதுபழன் ஏய்ப்ப
தெறிப்ப விளைந்த தீங்காந்தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு
பச்சூன் தின்று பைந்நிணம் பெருத்த
எச்சில் ஈர்ங்கை வில்புறம் திமிரிப்
புலம்புக் கனனே புல்லணற் காளை
ஒருமுறை உண்ணா அளவை பெருநிரை
ஊர்ப்புறம் நிறையத் தருகுவன்; யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி
ஆதரக் கழுமிய துகளன்
காய்தலும் உண்டு அக் கள்வெய் யோனே
என் உரை
முட்கால் காரை முதுபழன் ஏய்ப்ப -- முள் தாள்களை உடைய காரைச் செடியின் முதிய பழம் போல; தெறிப்ப விளைந்த தீங்காந்தாரம் -- முற்ற விளைந்த இனிய ( மது கிடைக்கும் வேற்று நாடாகிய ) காந்தாரத்தில்; நிறுத்த ஆயம் -- (தான் கவர்ந்து ஓட்டிக்கொண்டு வந்த) ஆ நிரைகளை நிறுத்த, தலைச்சென்று உண்டு -- (ஆங்கு கள் விற்போர்) இ¢டம் சென்று ( சில ஆக்களை விற்றுக் கள்வாங்கி ) உண்டு; பச்சூன் தின்று -- பச்சை இறைச்சியையும் (அதனுடன்) தின்று ; பைந்நிணம் பெருத்த -- இளகிய கொழுப்பு மிக்க (வடிய):; எச்சில் ஈர்ங்கை -- எச்சிலாகிவிட்ட ஈரக்கையை; வில்புறம் திமிரி --- வில்லில் பின்புறமாகத் திமிரிக்கொண்டு (தேய்த்துக்கொண்டு):; புலம்புக் கனனே -- (மீண்டும் ஆநிரைகளைக் கவர்ந்து இவண் கொண்டுவரப் ) புறப்பட்டுவிட்டான்; புல்லணற் காளை -- (இங்கிருப்பவராகிய ) சிறுமேல்வாயுடைய காளை(யர்); ஒருமுறை உண்ணா அளவை --- ஒரு தடவையில் (மது) உண்ணும் அளவை ( எட்டுமுன்பே); பெருநிரை --- பெருமளவிலான ஆனிரைகளை; ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் -- இவ்வூர் வெளியெல்லாம் நிறையும்படியாகக் கொண்டுவந்துவிடுவான்; யார்க்கும் -- (இவ்வூரில் ) யாராயினும்; தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி -- பழங்கள் சாடியைத் தொடாமல் பார்த்துக்கொள்;
ஆதரக் கழுமிய துகளன் -- ஆக்களைக் கொண்டுவரப் பொருந்திய குற்றமுடையான் ( நாம் ஏற்கத் தக்கவன் என்பது);
காய்தலும் உண்டு அக் கள்வெய் யோனே. -- அந்தக் கள் "சூடு" பிடித்தவன், மீண்டும் கள் விரும்பி (இவண்) வருதலும் உண்டு. (ஆகையினால்).
படையினர் மதுவுண்ணுதல் என்பது உலகியல்பு. கள்ளுண்ணாமை, புலால் உண்ணாமை, கொல்லாமை முதலிய நோன்புகள் அவர்களுக்கு வற்புறுத்தப்படவில்லை. ஆநிரை கவர்ந்துவருதல் என்பது போர் தொடங்கும் நிலையில் கைக்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் ஒன்று. இப்பாடல் கூறும் நிகழ்ச்சி நடைபெற்ற இடம் காந்தாரம் என்னும் நாட்டில். தமிழர் அந்நாடு வரை சென்று போர் செய்தமை இப்பாட்டினால் விளங்கும்.
"காய்தல்" என்ற சொற்பயன்பாடு சிறப்புக்குரியது. தொண்டை காய்ந்து கள் வேட்கை எடுக்கும் நிலையைக் குறிக்கிறது. இது குளிர் மிக்க இடமாதல் வேண்டும். இப்போர்மறவன் கள் உண்டு தன்னை "வெம்மை"ப்படுத்திக்கொண்டான்.என்று தெரிகிறது. "கள் வெய்யோன்" என்பது காண்க. எனினும் அவன் தன் கடமையை மிக்கத் திறமையுடனே செய்தான் என்பது பாடலில் தெளிவாய்த் தெரிகிறது.
புறநானூறு, உலோச்சனார் பாடியது. வெட்சித் திணை; உண்டாட்டுத் துறை