சூரக்கோட்டை சிங்கக்குட்டி
------------------------------------
நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த டைட்டில் (படத்தின் தலைப்பு யாரைக்குறிக்கிறது என்பதால்).
ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த் இப்படத்தில் 'இளையதிலகத்தின்' ஜோடியாக நடித்தவர் மறைந்த 'சில்க்'ஸ்மிதா. சில்க் கதாநாயகியாக நடித்த, விரல்விட்டு எண்ணக்கூடிய படங்களில் ஒன்று. படத்தை இயக்கியவர் ராம.நாராயணன்.
பழம்பெரும் நடிகர் திரு.ஜெமினிகணேஷும் இப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருக்க எஸ்.எஸ்.சந்திரன், பிந்துகோஷ் ஆகியோர் நகைச்சுவை விருந்தளித்தனர். (ஒருகட்டத்தில், கொஞ்சும் சலங்கையின் பிரபலமான 'சாந்தா, உட்கார். ஏன் பாட்டை நிறுத்திவிட்டாய்?' என்ற வசனத்தை எஸ்.எஸ். பேசத்துவங்க, ஜெமினி 'புலவரே' என்று அதட்டியதும், 'மன்னிச்சுக்குங்க... நீங்க இருக்கிற இடத்தில் இந்த வசனத்தைப் பேசுவது தவறுதான்' என்று ஜகா வாங்குவது சிரிப்பையூட்டும்).
இளையராஜாவின் இசையில், பிரபு - சில்க் டூயட்
"காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ,
நெருங்கிவா படிக்கலாம் ரசிக்கலாம்"
பாடல் அந்த ஆண்டின் ஹிட் பாடல்களில் ஒன்று. (இன்றைக்கும் 'பிரபு ஹிட்ஸ்' சி.டி.க்களில் தவறாமல் இடம்பெறும் பாடல் இது). அனல்பறக்கும் சண்டைக்காட்சிகள் இடம்பெற்ற இப்படம், பிரபுவின் வெற்றிப்படங்களில் ஒன்று. குறிப்பாக B - C செண்ட்டர்களில் மிகப்பெரிய வரவேற்பைப்பெற்ற படம்.