-
எங்குறை தீரநின்று ஏற்றுகின்றேன், இனி யான் பிறக்கில்,
நின் குறையே அன்றி யார் குறை காண்! இரு நீள் விசும்பின்
மின் குறை காட்டி மெலிகின்ற நேர் இடை மெல்லியலாய்-
தன் குறை தீர, எம்கோன் சடை மேல் வைத்த தாமரையே.
அபிராமி தாயே! என்னுடைய குறைகளெல்லாம் தீர உன்னையே வணங்குகின்றேன். இக் குறையையுடைய பிறவியை நான் மறுபடியும் எடுத்தால், அது உன்னுடைய குறையேயாகும். எம் தந்தை சிவ பெருமான் தன் குறை தீரச் செய்த பாதத் தாமரைகளை உடையவளே.
enkuRai theeranNinRu ERRukinREn; ini yaan piRakkil,
nNin kuRaiyE anRi yaar kuRai kaaN?-iru neeL visumbin
min kuRai kaatti melikinRa nEr idai melliyalaay!-
than kuRai theera, emkOn chadai mEl vaiththa thaamaraiyE.
-
தாமம் கடம்பு, படை பஞ்ச பாணம், தனுக் கரும்பு,
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது, எமக்கு என்று வைத்த
சேமம் திருவடி, செங்கைகள் நான்கு, ஒளி செம்மை, அம்மை
நாமம் திரிபுரை, ஒன்றோடு இரண்டு நயனங்களே.
அபிராமி தாயே! உன்னுடைய மாலை கடம்ப மாலை, படைகளோ பஞ்ச பாணங்கள்(மலர் அம்புகள்), வில்லோ கரும்பு, உன்னுடைய நெற்றிக் கண்களோ அருட் கண்கள், நான்கு கரங்களோ செந்நிறமாகும். உன்னை வயிரவர்கள் வணங்கும் நேரமோ, நள்ளிரவாகும். திரிபுரை எனும் பெயரும் உண்டு. நீ எனக்கு மேலாக வைத்திருக்கும் செல்வம் நின்னுடைய திருவடித் தாமரைகளேயாகும்.
thaamam kadambu, padai pancha paaNam, thanuk karumbu,
yaamam vayiravar Eththum pozhuthu; emakku enRu vaiththa
chEmam thiruvadi, chenkaikaL naaNnku, oLi chemmai, ammai
naamam thiripudai, onRodu iraNdu nNayanankaLE.
-
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்,
அயனும் பரவும் அபிராம வல்லி அடி இணையைப்
பயன் என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும், பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.
முக்கண்களையுடைய சிவன், திருமால், பிரும்மா முதலானோரும் வணங்கக் கூடிய தேவி அபிராமியாகும். அவளுடைய பாதங்களிலெ சரண் அடைந்த அடியார்கள், இந்திர போகத்தையும் விரும்ப மாட்டார்கள். தேவ மகளிர் பாடி, ஆட, பொன் ஆசனமே கிடைத்தாலும், அன்னையின் பாதச் சேவையையே பெரிதென நினைவார்கள்.
nayanankaL moonRudai naathanum, vEthamum, naaraNanum,
ayanum paravum abiraama valli adi iNaiyaip
payan enRu koNdavar, paavaiyar aadavum paadavum, pon
chayanam porunthu thamaniyak kaavinil thankuvarE.
-
தங்குவர், கற்பக தாருவின் நீழலில், தாயர் இன்றி
மங்குவர், மண்ணில் வழுவாய் பிறவியை, மால் வரையும் ,
பொங்கு உவர் ஆழியும், ஈரேழ் புவனமும், பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே.
பெரிய மலைகளையும், நுரைக் கடலையும், பதினான்கு உலகத்தையும் அமைத்த அபிராமி தாயே! உன்னுடைய திருமேனியை இடையுறாது சிந்தையிலே தியானிப்பவர், சகலத்தையும் தருகிற கற்பக மரத்தின் நிழலையும் பெற்று இன்புறுவர். இடைவிடாது தோன்றும் மானிடப் பிறவியும் இல்லாமல் போவர்.
thankuvar, kaRpaka thaaruvin nNeezhalil; thaayar inRi
mankuvar, maNNil vazhuvaay piRaviyai;-maal varaiyum,
ponku uvar aazhiyum, eerEzh puvanamum, pooththa unthik
konku ivar poonkuzhalaaL thirumEni kuRiththavarE
-
குறித்தேன் மனத்தில் நின் கோலம் எல்லாம், நின் குறிப்பு அறிந்து
மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி, வண்டு கிண்டி
வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான் ஒரு கூற்றை, மெய்யில்
பறித்தே, குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே.
அபிராமி தாயே! பஞ்ச பாணங்களை உடையவளே, உன்னுடைய திருக்கோலத்தையே மனதில் நினத்து தியானிக்கின்றேன். உன்னுடைய திருவருளால், மருட்டுகின்ற யமன்வரும் வழியை கண்டு கொண்டேன், அதனோடு, அவன் வரும் வழியையும் அடைத்து விட்டேன்.
kuRiththEn manaththil nNin kOlam ellaam; nNin kuRippu aRinthu
maRiththEn maRali varukinRa nErvazhi; vaNdu kiNdi
veRiththEn avizh konRai vENip piraan oru kooRRai, meyyil
paRiththE, kudipukuthum pancha paaNa payiraviyE.
-
பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்ச பாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வ்ராகி- என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே.
அபிராமி தாயே! உன்னை பயிரவர் வணக்கக் கூடிய பயிரவி, பஞ்சமி, பாசத்தையும், அங்குசத்தையும் உடைய பாசாங்குசை, ஐவகை மலர் அம்புகளையுடைய பஞ்சபாணி, வஞ்சகரின் உயிரை மாய்க்கும் சண்டி, மகா காளி, ஒளி வீசும் கலை பொருந்திய வயிரவி, சூரிய, சந்திர மண்டலத்தில் உள்ளோர்க்கு மண்டலி, சூலத்தையுடைய சூலி, உலகளந்த வராகி, என்றெல்லாம் பல நாமக்கள் குற்றமற்ற வேதங்களில் கூறப்படுகின்றன. அதையே அடியார்கள் மீண்டும் மீண்டும் சொல்லி வாழ்த்தி வணங்கி வழிபடுகின்றனர்.
payiravi, panchami, paasaankucai, pancha paaNi, vanchar
uyir avi uNNum uyar chaNdi, kaaLi, oLirum kalaa
vayiravi, maNdali, maalini, chooli, varaaki--enRE
cheyir avi nNaanmaRai chEr thirunNaamankaL cheppuvarE.
-
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல்
அப்பும் களப அபிராம வல்லி, அணி தரளக்
கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழுங்கடையும்
துப்பும், நிலவும் எழுதி வைத்தேன், என் துணை விழிக்கே.
அபிராமி தாயே! உன்னையே என் இரு கண்களில் எழுதி வைத்தேன். சந்தனக் கலவையும், சிறந்த அணிகலன்களும் புரளவும், சிறந்த முத்துக் கொப்பும், வைரத்தோடு, செழுமையான கருணைமிகு கடைக்கண்களும், குளிர்ச்சியை உமிழ்கின்ற நிலவைப் போன்ற திருமுகமும், இவைகளைக் கொண்ட திருவடிவை என் மனதில் இருத்தினேன்.
cheppum kanaka kalachamum pOlum thirumulaimEl
appum kaLapa abiraama valli, aNi tharaLak
koppum, vayirak kuzhaiyum, vizhiyin kozhunkadaiyum,
thuppum, nilavum ezhuthivaiththEn, en thuNai vizhikkE.
-
விழிக்கே அருள் உண்டு, அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு, அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று, வெம் பாவங்களே செய்து, பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு, என்ன கூட்டு இனியே?
அபிராமி தாயின் விழிகளில் என்றும் அருளுண்டு. வேத முறைப்படி வழிபட எனக்கு நெஞ்சமும் உண்டு. ஆகையால், பழியையும், பாவத்தையும் விளைவித்து, பாழ் நரகக்குழியில் அழுந்தி வாழும் பேதையரோடு எனக்கு இனி என்ன தொடர்பு?
vizhikkE aruL uNdu, abiraama vallikku; vEdham chonna
vazhikkE vazhipada nenchu uNdu emakku; avvazhi kidakka,
pazhikkE chuzhanRu, vem paavankaLE cheythu, paazh narakak
kuzhikkE azhunthum kayavar thammOdu, enna koottu iniyE?
-
கூட்டியவா என்னைத் தன் அடியாரில், கொடிய வினை
ஓட்டியவா, என்கண் ஓடியவா, தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா,
ஆட்டியவா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே.
அபிராமி தாயே! பொற்றாமரையில் வாழும் பேரழகானவளே! என்னை உன் அடியார்கள் கூட்டத்தில் சேர்த்தவளே, நான் செய்த கொடிய வினைகளையெல்லாம் ஒழித்தவளே, ஒன்றும் அறியாத எனக்கு, உன்னுடைய உண்மை உருவைக் காட்டியவளே, உன்னை கண்ட என் கண்ணும், மனமும் களிநடம் புரிகின்றது. இவ்வாறெல்லாம் நாடகமாடச் செய்தவளே, உன் கருணையை என்னவென்பேன்.
koottiyavaa ennaith than adiyaaril, kodiya vinai
ottiyavaa, eNnkaN Odiyavaa, thannai uLLavaNNam
kaattiyavaa, kaNda kaNNum manamum kaLikkinRavaa,
aattiyavaa nadam--aadakath thaamarai aaraNankE.
-
அணங்கே அணங்குகள் நின் பரிவாரங்கள் ஆகையினால்
வணங்கேன் ஒருவரை, வாழ்த்துகிலேன் நெஞ்சில், வஞ்சகரோடு
இணங்கேன், எனது உனது என்றிருப்பார் சிலர் யாவரொடும்
பிணங்கேன், அறிவு ஒன்று இலேன், என்கண் நீ வைத்தபேர் அளியே.
அபிராமி தாயே! என்னிடத்தில் நீ வைத்த பெருங்கருணையினால் நான் கள்ள நெஞ்சம் உடையவரிடம் நெருங்க மாட்டேன், மற்ற சக்திகளையும் வணங்க மாட்டேன். ஒருவரையும் போற்ற மாட்டேன். நான் அறிவில்லாதவனாயினும், என்னுடையதெல்லம் உன்னுடையது என்று உன்னை வணங்கும் ஞானிகளோடு மட்டும் பிணங்காது சேர்ந்து உறவாடுவேன்.
aNankE!-aNankukaL nNin parivaarankaL aakaiyinaal,
vaNankEn oruvarai; vaazhththukilEn nNenchil; vanchakarOdu
iNankEn; enathu unathu enRiruppaar chilar yaavarodum
piNankEn; aRivu onRu ilEn; eNnkaN nNee vaiththapEr aLiyE!