Quote:
பாட்டுக்கும் கவிதைக்கும் வேறுபாடு உண்டா? இல்லையா?
உறுதியாக உண்டு. ஒழுங்கமைவு உள்ள ஓசையே இசை. அந்த இசை பயின்று வருவதே பாடல். சாதாரண பேச்சுவழக்குச் சொற்களைக்கூட விருப்பம்போல வளைத்துப் பாடலாக்கிவிடலாம். இதனால்தான் 'இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று' என்றார்கள். இவை, காதுகளுக்கானவை.
பாடலுக்குள் இடம்பெறும் எதுகை, மோனை, இயைபு, சந்தம் அல்லது இசை, பாடுபவரின் குரல், பக்க வாத்தியங்கள், பின்னணி இசை ஆகியவை, கேட்பவரை ஏமாற்றக் கூடியவை; கவிதை போன்ற ஒரு மயக்கத்தைத் தரவல்லவை. பாடலின் கருத்தையோ, கவிநயத்தையோ(அப்படி ஒன்று இருந்தால்) அணுக விடாமல் கேட்பவரின் கவனத்தைத் திசைதிருப்பக் கூடியவை.
இப்படி எதிர்மறையாக இல்லாமல் சில தருணங்களில் இவை, கவித்துவத்திற்கு உதவும் கூறுகளாகவும் திகழும். அனைத்தும் சேர்ந்து கவிதையை மிக ஆழமாக நம் மனத்தில் பதியவும் வைக்கும். அது, அரிதாகத்தான் நிகழும்.
பாடல், கவிதை என்ற வடிவங்களின் மேல் தவறில்லை. அவற்றைக் கையாளுவோரின் திறனுக்கு ஏற்ப, பாடலுக்குள் கவிதையும் கவிதைக்குள் பாடலும் இடம்பெற வாய்ப்பு உண்டு. அத்தகைய இணைவு, அரிதாகத்தான் நிகழும். திரைப்படப் பாடல்கள் கவிதை ஆகுமா என்ற கேள்விக்கும் இந்தப் பதில் பொருந்தும்.
தமிழ் யாப்பு வடிவங்களுக்குப் பா என்றே பெயர். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்பவை, நான்கு வகைப் பாக்கள். இந்தப் பா என்பது, பாட்டைக் குறிக்கிறதா? இல்லை. பாடப்படுபவையே பாடல்கள்; பாடப்படாத நிலையில் இவை செய்யுள்களே. செய்யப்பட்டவை என்பதால் இப்பெயர்.
இந்தச் செய்யுள், பாடல் ஆகியவற்றிலிருந்து கவிதையை எப்படிப் பிரித்து அறிவது? ஓர் எளிய வழி உண்டு. இசையையும் அலங்காரங்களையும் படைப்பிலிருந்து உருவி எடுத்த பின்னும் ஓவியம், புகைப்படம் ஆகியவற்றிலிருந்து விலக்கி வைத்தபின்னும் படைப்பு, உயிர்த் துடிப்புடன் உள்ளதா? நம் உள்மனத்தைக் கவருகிறதா? அத்தகைய படைப்பிற்குள் கவிதை வாழ்கிறது. இன்றைய சூழலில் அதைக் காண்பது கொஞ்சம் கடினம்தான்.
நமக்கு தேவையான செய்தியாக இதை கட்டுடைக்கும் பொழுது கிடைப்பது என்னவென்றால் கவிதை என்பது தனித்து இயங்கும் தன்மையுடையதாய் இருக்க வேண்டும். இசை வேண்டும் கவிதைகள் இழுக்குடையவையாகும்.