Originally Posted by
RAGHAVENDRA
மய்யம் இணைய தளத்தில் பங்கேற்பாளர்களில் சில வகை உண்டு. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எந்த தலைப்பு தங்களைக் கவர்கிறதோ அதில் தங்களுடைய கருத்தைப் பகிர்ந்து கொள்பவர்கள். சிலர் தங்களுக்கென சில நண்பர்கள் வட்டாரத்தை அறிந்து தேர்ந்தெடுத்து அவர்களோடு சம்பந்தப்பட்ட தலைப்புகளில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்பவர்கள். சிலர் தங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் தொய்வேற்பட்டால் அவற்றில் வம்பு வளர்ப்பது போன்று சில சர்ச்சைகளை உருவாக்கி அவற்றின் மூலம் அத்தலைப்புகளுக்கு அதிக பார்வையாளர்களை வரவழைப்பது.
இவற்றைத் தாண்டி இம்மய்யத்தில் பங்கு கொள்வதற்கென்றே தங்களுடைய உழைப்பு, நேரம், திறமை போன்றவற்றை அர்ப்பணித்து தங்களுடைய கருத்துக்களை மட்டுமின்றி தங்களுடைய உழைப்பின் மூலம் அரிய ஆவணங்களையும் பகிர்ந்து கொள்வது. இவ்வகையினரின் பங்கேற்பின் மூலம் சமீபகாலமாக சில ஆண்டுகளில் நம்முடைய மய்யம் இணைய தளம் உலக அளவில் அதிகமாக பேசப்படும் இணையதளமாகியுள்ளது என்பது உண்மை. இத்தகைய உழைப்பினை அவர்கள் அளிப்பதற்காக அவர்கள் எதிர்பார்ப்பது ஆதாயம் ஏதுமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதிகபட்சம் நம் நண்பர்களின் பாராட்டுக்கள் தான் இந்த உழைப்பிற்கேற்ற அங்கீகாரம். இந்த ஆவணங்கள் தமிழ் திரையுலக வரலாற்றிற்கும் பயன்படுவது நமது மய்யம் இணையதளத்திற்கும் சிறப்பாகும்.
சுமார் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முந்தைய ஆவணங்கள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் போது அவற்றின் மதிப்பு அளவிடமுடியாததாகும். இவற்றை இங்கு தரவேற்றுவதற்கும் பேருழைப்பு தேவைப்படும்.
இவ்வளவும் செய்து இங்கு தரவேற்றும் போது அவற்றை குப்பைகள் என்றும் பக்கங்களை நிரப்புவதற்கான உத்திகள் என்றும் கொச்சையாக விமர்சனங்கள் வரும் போது எந்த படைப்பாளியும் உள்ளம் வருந்தத்தான் செய்வான். இப்படிப்பட்ட கேலிகளும் கிண்டல்களும் விமர்சனங்களும் சில சமயம் திட்டமிட்டே செய்யப்படுபவையாகக் கூட இங்கே தோற்றமளித்தன. இதனால் மன வருத்தத்துடன் நடிகர் திலகம் திரியிலிருந்து விலகி நின்ற நண்பர்களில் ஒருவர்தான் நமது அன்பிற்குரிய நெய்வேலி வாசுதேவன் அவர்கள். மற்றவர்களில் அன்பிற்குரிய பம்மலார் அவர்களும் அடியேனும் அடங்குவோம். இதே போல இம்மய்யத்திற்கு புகழ் சேர்க்கும் அரிய ஆவணங்களை - அவை பத்திரிகை விளம்பரங்களாகட்டும் - பாட்டுப்புத்தகப் பக்கங்களாகட்டும் - நிழற்படங்களாகட்டும் - வேற்று மொழி பத்திரிகை விளம்பரங்களுமாகட்டும் - பழைய திரையரங்க நிழற்படங்களாகட்டும் - அவற்றை வழங்குவதில் எம்.ஜி.ஆர்.திரி நண்பர்கள் அன்பிற்குரிய வினோத், திருப்பூர் ரவிச்சந்திரன், வேலூர் ராமமூர்த்தி, செல்வகுமார் உள்பட பலர் உள்ளனர்.
எந்த அளவிற்கு திறனாய்வு படைப்புத்திறன் சார்ந்ததோ அதைவிட அதிகமாகவே ஆவணங்கள் தரவேற்றலும் படைப்புத்திறன் சார்ந்ததுவே.
துரதிருஷ்டவசமாக நடிகர் திலகம் திரியில் தான் ஆவணங்கள் சிறுமைப்படுத்தப்பட்டன, அதுவும் வழங்கப்ப்ட்ட ஆவணங்கள் எல்லாமே அந்நாளைய விளம்பரங்கள், பத்திரிகை பக்கங்கள் என அரிய வகையிலானவை. வெறும் நிழற்படங்களைக் கொண்டு நடிகர் திலகம் திரியில் பக்கங்கள் நிரப்பப் படவில்லை.
இவற்றின் அடிப்படையில் தான், பங்கேற்பாளரின் உழைப்பை சிறுமைப்படுத்தப் பட்ட மனவேதனையின் அடிப்படையில் தான் வாசுதேவன் போன்ற சிறந்த உழைப்பாளிகளின் பதிவுகளைப் பார்க்க வேண்டும். அவருடைய மனவேதனையைப் புரிந்து கொண்டால் தான் ஒரு படைப்பாளியின் கஷ்டங்களை உணர முடியும்.
வாசுதேவன், பம்மலார், வினோத், போன்ற சிறந்த ஆவணக்காப்பாளர்கள் கிடைத்தது நம்முடைய மய்யத்தின் மிகச்சிறந்த பெருமை.
அதை பெருமையாகக் கருதி அவர்கள் மனம் நோகாமல் ஊக்கமளிப்பது மற்ற நண்பர்களின் கடமை என நான் எண்ணுகிறேன்.