'அண்ணன் ஒரு கோயில்'(10-11-1977)
http://i1087.photobucket.com/albums/...g?t=1321525476
அண்ணன் ஒரு கோயிலை தரிசித்த அனுபவம்.
நேற்று 'சிவந்த மண்' நினைவலைகள் என்றால் இன்று நம் அண்ணன் நம்மிடையே ஒரு கோயிலாய் வலம் வந்த நினைவலைகள் நெஞ்சில் நிழலாட ஆரம்பித்து விட்டது. ஆம்... இன்று 'அண்ணன் ஒரு கோயில்' வெளியான நாளல்லவா! 77-ல் வெளியான அவன் ஒரு சரித்திரம், தீபம், இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் காவியங்களுக்கு அடுத்து 10-11-1977-ல் தித்திக்கும் தீபாவளித் திரை விருந்தாக 'அண்ணன் ஒரு கோயில்' ரிலீஸ். முந்தைய படங்களான இளைய தலைமுறை, நாம் பிறந்த மண் ஆகியவை சுமாராகப் போன நிலையில் சற்று சோர்வடைந்திருந்த நம் ரசிகர்களுக்கு தடபுடலாய் தலைவாழை தீபாவளி விருந்தளித்து அனைவையும் திக்குமுக்காடச் செய்தார் அண்ணன் (ஒரு கோயிலாய்). அண்ணனுக்கு சொந்தப்படம் வேறு. 74-ல் வெளிவந்த தங்கப்பதக்கத்திற்குப் பிறகு 77-ல் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களுக்குப் பிறகு சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த வெற்றிக் காவியம். மிகுந்த எதிர்பார்ப்பு இந்தக் காவியத்திற்கு. கோபால் சார் சொன்னது போல் தீபாவளி நமக்கு ராசியாயிற்றே. அதுவும் நம் சொந்த பேனர் வேறு. அமைதியாய் ஆர்ப்பாட்டமில்லாமல் வெளிவந்து அசுரத்தனமான வசூல் சாதனை புரிந்தது 'அண்ணன் ஒரு கோயில்'.
கடலூரில் நியூசினிமா திரையரங்கில் ரிலீஸ். நாம் பிறந்த மண்ணும் அதே தியேட்டரில்தான் ரிலீஸ். ஆனால் மூன்று வாரங்களே தாக்குப் பிடித்தது. அதற்கு முந்தைய படமான 'இளையதலைமுறை' கடலூர் துறைமுகம் கமர் டாக்கீஸில் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் ஓடி பின் நியூசினிமா திரையரங்கில் ஷிப்ட் செய்யப்பட்டது. எனவே மூன்று படங்களுமே தொடர்ந்து நியூசினிமாவில் ரிலீஸ். அதுமட்டுமல்ல. இளையதலைமுறைக்கு முந்தைய படமான தீபமும் இங்குதான் வெளியாகி வெற்றி சுடர் விட்டு பிரகாசித்தது. எனவே நியூசினிமா எங்களுக்கு கோயில் ஆனது. அங்கேயே 'அண்ணன் ஒரு கோயில்' வெளியானதில் எங்களுக்கு மகிழ்ச்சி. நியூசினிமா கடலூர் அண்ணா மேம்பாலத்திற்கு அதாவது பழைய கடிலம் ஆற்றுப் பாலத்தின் கீழ் அமைந்துள்ள தியேட்டர். வழக்கம் போல ஒன்பதாம் தேதியே தியேட்டர் திருவிழாக் கோலம் காண ஆரம்பித்து விட்டது. கொடிகளும் தோரணங்களுமாய் தியேட்டர் முழுக்க ஒரே அலங்கார மயம். அண்ணன் அழகான கண்ணாடி அணிந்து ஒயிட் கோட் சூட்டில் அற்புதமாய் (சுமித்ரா பாடும் "அண்ணன் ஒரு கோயிலென்றால்" பாடலில் அணிந்து வருவாரே... அந்த டிரஸ்.) நிற்கும் கண்கொள்ளா கட்- அவுட். அண்ணனின் முழு உடலையும் கவர் பண்ணும் அலங்கரிக்கப்பட்ட மிகப் பெரிய மாலை. ஜிகினாத் தாள்கள் மின்னும் அண்ணன் படங்கள் ஒட்டிய அழகழகான கண்ணைப் பறிக்கும் ஸ்டார்கள். தியேட்டரின் வாயிலே தெரியாத அளவிற்கு கீழே தூவப்பட்ட தென்னங் குருத்துகள். பழைய கடிலம் பாலம் இருமருங்கிலும் நடப்பட்ட ஆளுயர பச்சைத் தென்னங் கீற்றுகள். தியேட்டரினுள்ளே வைப்பதற்கு ரசிகர் குழாம் செய்து வைத்துள்ள வாழ்த்து மடல்கள் (கண்ணாடி பிரேம் போட்டு அலங்கரிக்கப்பட்ட தலைவர் ஸ்டில்களுடன் கூடிய படங்கள்) என்று அதம் பறந்து கொண்டிருக்கிறது. இரவு ஒருமணி தாண்டியும் அலங்காரங்கள் செய்வது நிற்கவே இல்லை. படம் எப்படி இருக்குமோ.என்று ஒவ்வொருவரும் ஆவல் மேலிடப் பேசிக்கொண்டிருக்கிறோம். படப்பெட்டி இரவே வந்து விட்டதாக வேறு தியேட்டர் சிப்பந்திகள் கூறி விட்டார்கள். அலங்காரங்கள் முடிந்து தியேட்டரை விட்டு போகவே மனமில்லை. ஆனால் மழைக் காலமானதால் மேகமூட்டமாக இருந்தது. மழை வந்து எல்லாவற்றையும் கெடுத்து விடப் போகிறது என்று வேண்டாத தெய்வமில்லை. அலங்காரங்கள் அனைத்தும் ஒரு நொடியில் பாழ்பட்டுப் போகுமே என்று அனைவர் முகங்களிலும் கவலை ரேகை. நல்லவேளையாக வேண்டியது வீண் போகவில்லை. சிறு தூறல்களுடன் வந்த மழை நின்று விட்டது. பெருமூச்சு விட்டுக் கொண்டு அவரவர் வீடுகளுக்குப் பிரிய மனமில்லாமல் பிரிந்தோம். சில தீவிரவாதிகள் வீட்டுக்கே போகவில்லை. செகண்ட் ஷோ முடிந்ததும் சைக்கிள் ஸ்டான்டிலேயே பழைய போஸ்ட்டர்களைத் தரையில் விரித்து அலங்காரங்கள் செய்த அசதியில் படுத்து குறட்டை விட ஆரம்பித்து விட்டனர்.
வீட்டை அடையும்போது சரியாக அதிகாலை இரண்டரை மணி. தூக்கம் வருமா... கண்களிலும், மனம் முழுவதிலும் அண்ணனே நிரம்பி வழிகிறார். சிறிது நேர தூக்கத்திலும் கோவில் கோவிலாக கனவு வருகிறது. அம்மாவிடம் சொல்லி ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பச் சொல்லிப் படுத்தேன். நான்கு மணிக்கு நான் அம்மாவை எழுப்பிவிட்டேன். "ஏண்டா.. தூங்கினா என்ன" என்று அம்மா செல்லக்கடி கடித்தார்கள். ஆனால் அவர்களுக்கு தெரியும் இது திருந்தாத கேஸ் என்று. விறுவிறுவென சாஸ்திரத்திற்கு தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அது சரியாக தலையில் ஊறக் கூட இல்லை... சுட்டும் சுடாததுமான வெந்நீரில்(!) திருக்கழு(கு)க்குன்றம் கழுகு போல கழுகுக் குளியல் குளித்துவிட்டு, அம்மா போட்டுத் தந்த காபியை (சு)வைத்து விட்டு, ஆறுமணிக்கெல்லாம் கிளம்பி விட்டேன். "ஏண்டா! தீபாவளி அதுவுமா சாப்பிட்டுட்டு போகக் கூடாதா," என்று அம்மா கோபித்துக் கொண்டார்கள். இது இந்த தீபாவளிக்கு மட்டுமில்லை. தலைவர் பட தீபாவளி ரிலீஸ்களின் அத்தனை தீபாவளிக்கும் இதே கூத்துதான். "சாமியாவது கும்பிட்டு விட்டுப் போ"..என்று அவசர அவசரமாக வடை சுட்டு, தீபாவளி பலகாரங்களை இலையில் வைத்து, எனக்காகவே ஒரு அவசர படையலை முன்னாடியே அம்மா போட்டு விடுவார்கள். ஏதோ பேருக்கு சாமி கும்பிட்டு விட்டு சைக்கிளில் ஒரே ஓட்டம். இது என் கதை மட்டுமல்ல. அனைத்து ரசிகர்களுக்கும் இதே கதைதான்.ஆறரை மணிக்கெல்லாம் தியேட்டரில் அனைவரும் ஆஜர். புதுத் துணியெல்லாம் கிடையாது. யார் அதையெல்லாம் பார்த்தார்கள்?... பின் முந்தைய இரவு செய்த அலங்காரங்களையெல்லாம் ஒரு தடவை கரெக்ட் செய்து பின் தலைவரைப் பற்றிய பேச்சும், படத்தின் வெற்றியைப் பற்றிய பேச்சும்தான். தீபாவளி அன்று ஐந்து காட்சிகள். முதல் காட்சி ரசிகர் ஷோ காலை ஒன்பது மணிக்கு. ரசிகர் ஷோ டிக்கெட்டுகள் அப்படியே இருமடங்கு விலை. தலைவர் படம் அச்சடித்த அட்டை ஒன்று கொடுப்பார்கள். ஒவ்வொரு கிளாஸுக்கும் தகுந்தவாறு அட்டையின் நிறம் மாறும். கவுண்ட்டரில் டிக்கெட் கிடையாது. ஒரு வாரம் முன்னமேயே டிக்கெட் காலி. நேரமாக ஆக கூட்டம் திருவிழா போல கூட ஆரம்பித்து விட்டது.
எங்கு நோக்கினும் ரசிகர்கள் தலைகள்தான். பட்டாசுகள் வெடிக்கத் துவங்கியாகி விட்டது. சும்மா ஆட்டம் பாம்களாக வெடித்துத் தள்ளுகிறது. அனைவரும் காதுகளைப் பொத்திய வண்ணமே இருக்கிறார்கள். புஸ்வானம் மத்தாப்புகளாய் சிதறுகிறது. சரவெடிகள் சரமாரியாய் கொளுத்தப்படுகின்றன. எங்கும் தலைவரை வாழ்த்தும் 'வாழ்க' கோஷம் தான்.ஆயிரம்வாலாக்களும், ஐயாயிரம் வாலாக்களும் தியேட்டர் வாசலைக் குப்பையாக்குகின்றன.
அரங்கினுள் நுழைய மணி அடித்தாயிற்று. அனைவரும் 'நான் முந்தி... நீ முந்தி'... என்று கேட்டில் முண்டியடித்துக் கொண்டு டிக்கெட் கிழிப்பவரிடம் அட்டையைக் கொடுத்துவிட்டு ஒரே ஓட்டம். செகண்ட் கிளாஸ் சீட்களின் வரிசையான மூன்று ரோக்களை வெளியிலிருந்து வரும் நண்பர்களுக்காக கயிறு கட்டி மொத்தமாக ஆக்கிரமிப்பு செய்தாகி விட்டது...(அராத்தல் குரூப் என்று எங்கள் குரூப்புக்கு பெயர்) அனைத்து ரசிகர்களும் பலூன்களை பறக்க விட்டுக் கொண்டே உள்ளே நுழைகின்றனர். கிடுகிடுவென தியேட்டர் ரசிகர்கள் தலைகளால் நிரம்பி வழிகிறது. திரையருகே சில வானரங்கள் பட்டாசுகளை சரம் சரமாய் கொளுத்திப் போட தியேட்டர் சிப்பந்திகள் கடுப்பாகி ஓடோடி வந்து பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என தடுக்கின்றனர். தியேட்டர் முன் மேடை முழுவதும் மெழுகுவர்த்திகள் கொளுத்தி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். படம் துவங்க பெல் அடித்து விளக்குகள் அணைக்கப்பட்டு முதல் 'நல்வருகை' ஸ்லைடில் என்.எஸ். கிருஷ்ணன் முகமலர்ந்து சிரித்து அனைவரையும் வரவேற்கிறார். பின் தியேட்டரின் 'புகை பிடிக்காதீர்கள்'...'முன் சீட்டின் மீது காலை வைக்காதீர்கள்'... 'தினசரி நான்கு காட்சிகள்'... 'தீபாவளியை முன்னிட்டு ஒருவாரத்திற்கு ஐந்து காட்சிகள்'... என்று சம்பிரதாய ஸ்லைடுகள் போட்டு முடித்த பின்னர் நம் ரசிகர்களின் "இப்படத்தைக் காண வந்த ரசிகர்களுக்கு நன்றி" என்று பல்வேறு ஸ்டைலான போஸ்களில் அண்ணன் நிற்கும் ஸ்லைடுகள் போடப்பட்டவுடன் சும்மா விசில் சப்தம் காது சவ்வுகளைப் பதம் பார்த்து விட்டது. சரியாக முப்பத்தைந்து நன்றி ஸ்லைடுகள். ஸ்லைடுகள் முடிந்ததும் உடனே படத்தைப் போட்ட விட்டார்கள். 'அண்ணன் ஒரு கோயில்' சென்சார் சர்டிபிகேட் போட்டவுடன் சும்மா அதம் பறக்கிறது. பின் 'நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்' என்று போட்டதுதான் தாமதம்....ரசிகர்கள் இருக்கைகளை விட்டு எழுந்து ஒரே குதிதான். அண்ணன் ஒரு கோயில் என்று நெகடிவில் சிகப்பும் பச்சையுமாய் கோவில் கோபுரம் ஒன்று சுற்றுகையில் தேங்காய்கள் உடைபட்டு நொறுங்கும் சப்தம் முதல் வகுப்பு வரை கேட்கிறது. டைட்டில் வேறு அற்புதமாய் இருந்தது. எல்லோர் முகத்திலும் சந்தோஷத்தின் உச்சம். ('டைட்டில் பார்க்க வேண்டிய ஒன்று' என்று 'ராணி' வார இதழ் கூட விமர்சனத்தில் சிலாகித்து பாராட்டி எழுதியது.) டைட்டிலிலேயே தெரிந்து விட்டது படம் பிய்த்து உதறப் போகிறது என்று. டைட்டில் முடிந்தவுடன் எம்.எஸ்.வி.யின் அற்புதமான ரீ-ரிகார்டிங்கில் காட்டுப்பகுதியில் போலீஸ் வேட்டை நாய்கள் "லொள்..லொள்".. என்று குரைத்து காவலர்களுடன் துரத்த, லாங்க்ஷாட்டில் ஒரு உருவம் பரபரவென ஓடிவர, அனைவரும் இருக்கையை விட்டு தன்னையறியாமல் எழுந்து விட, தொப்பி அணிந்து, கண்ணாடிசகிதம் நம் அண்ணன் முழங்கால் வரையிலான வயலட் கலர் ஓவர்கோட்டுடன் ஓட்ட ஓட்டமாக, வேர்க்க விறுவிறுக்க, திரும்பி திரும்பிப் பார்த்தபடியே கோரைப் புற்களை கைகளால் விலக்கி விலக்கி ஓடி வர... விறு விறுவென அப்படியே நம்மைப் ப(தொ)ற்றிக்கொள்ளும் சீன் முதல் காட்சியிலேயே களைகட்டி விடும். சஸ்பென்ஸ். திரில் என்றால் அப்படி ஒரு திரில். ஒரு த்ரில்லர் மூவிக்குண்டான அத்தனை விஷேச அம்சங்களோடு விறுவிறுப்பு என்றால் முதல் பதின்மூன்று நிமிடங்களுக்கு அப்படி ஒரு விறுவிறுப்பு. படம் பிரமாதப்படுத்தப் போகிறது என நிச்சயமாகி விட்டது. பின் நடந்ததையெல்லாம் சொல்ல திரியின் சில பக்கங்கள் போதாது. தலைவர் ஏன் போலீசிடம் இருந்து ஓடிவருகிறார்?... அடுத்து என்ன? என்று ஆவல் மேலிட ஒரே பரபரப்பாகவே எல்லோரும் காணப்பட்டார்கள். பேய்ப்பட பாடல் போல 'குங்குமக் கோலங்கள் கோவில் கொண்டாட" பாடல் வேறு ஆவலை அதிகப்படுத்துகிறது... நிச்சயமாகவே ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. பின் தலைவர் சுஜாதாவிடம் சொல்லும் தலைவர் சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள்... தலைவர், சுமித்ராவின் அண்ணன் தங்கை பாசப் பிணைப்பு காட்சிகள்...அருமையான "அண்ணன் ஒரு கோவிலென்றால்", "மல்லிகை முல்லை"பாடல் காட்சிகளில் ரம்மியமாக அருமையான காஸ்ட்யூம்களில் அண்ணன் வந்து அசத்துவதையும், மீண்டும் ஒரு பாசமலரைக் கண்டு கொண்டிருக்கிறோம் என்ற ஆனந்தமும், பூரிப்பும் ஒன்று சேர, அனைவரையும் பாசமெனும் அன்பு நூலால் கட்டி போட்டுவிட்டார்கள் நடிகர் திலகமும், சுமித்ராவும். உயிரான தங்கையை வில்லன் மோகன்பாபு கெடுக்க முயலும்போது பதைபதைத்து படுவேகமாக காரில் வந்து மோகன்பாபுவை அண்ணன் சின்னாபின்னப் படுத்தும் போது தியேட்டர் குலுங்கியது. பின் சஸ்பென்சை மறைத்து மோகன்பாபு சுடப்பட்டு சாயும் போதும், அண்ணனையே தங்கை தன் நிலை மறந்து யாரன்று கேட்க அதைக் கேட்டு அதிர்ந்து அண்ணனின் தலை பல கூறுகளாகப் பிளப்பது போன்ற காட்சிகளிலும் அப்படி ஒரு நிசப்தம். பின் தங்கையை பிரிந்து வாடி சுஜாதாவிடம் கதறும் போதும், ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் தங்கையைப் பார்த்து ஜெய்கணேஷிடம் அண்ணன் புலம்பும் அந்தக் குறிப்பிட்ட காட்சியில் தியேட்டரில் பூகம்பம் வெடித்தது என்றுதான் சொல்ல வேண்டும்... அப்பப்பா.. என்ன ஒரு ஆரவாரம்!... அந்த ஆரவாரத்தையே தூக்கிச் சாப்பிடும் கடவுளின் நடிப்பு...துடிப்பு...தங்கையின் குணநலன்களை விவரித்து, விவரித்து சிரித்து அழுதபடியே என்ன ஒரு புலம்பல்! ("அப்பப்பப்பா... ஒரு இடத்துல படுத்துக் கெடக்கறவளாஅவ! என்ன ஆட்டம்... என்ன ஓட்டம்... என்ன பாட்டு.... என்ன சிரிப்பு ...என்ன")... என்று வியந்தபடியே அண்ணாந்து அழுகையில் அரங்கு குலுங்கியதே....
http://i1087.photobucket.com/albums/...g?t=1321525416
அந்தக் காட்சியை ஒன்ஸ்மோர் கேட்டு ஓங்காரக் கூச்சலிட்டனர் ரசிகர்கள். இடைவேளையின் போது எல்லோர் முகத்திலும் வெற்றிப் பெருமிதம்...படம் டாப் என்று எல்லோரும் ஒருமித்த கருத்தையே கூறினர். படம் முழுவதும் நடிகர் திலகத்தின் நடிப்பு பட்டை கிளப்பியது. ரசிகர்கள் தம் பங்கிற்கு செய்த ஆரவாரம் சொல்லி மாளாது. தேங்காய் மனோரமா நகைச்சுவைக் காட்சிகளும் நன்கு ரசிக்க வைத்தன. அதைவிட காட்டில் போலீஸ் வேட்டையின் போது பெரிய மரக்கட்டைகளுக்கு மத்தியில் தலைவரும்,சுஜாதாவும் புரியும் சரச சல்லாப பின்னணிப் பாடலான "நாலு பக்கம் வேடருண்டு"...பாடலின் போது எத்தனை கோபால்கள் எம்பிக் குதித்தனர்! சீரியஸான காட்சிகளுக்கு நடுவே எல்லோரையும் நிமிர வைத்து வசியம் செய்த பாடல். (சற்று ஓவராக இருந்தால் கூட) இப்படியாக படம் முழுதும் ஒரே அட்டகாச அலப்பரைகள் தான். படமும் படு டாப். சஸ்பென்ஸ், திரில், பாசம், காதல், தியாகம் என்று எல்லாக் கலவைகளையும் மிக அளவாக அழகாகக் கலந்து, எல்லாவற்றுக்கும் மேல் வித்தியாசமான நடிகர் திலகத்தை நம்மிடையே உலாவ விட்டு படத்தை அட்டகாசமாய் இயக்கியிருந்த இயக்குனர் விஜயனுக்கு ஜெயமான ஜெயம். இறுதியில் படம் சுபமாய் முடிய அனைவர் முகத்திலும் மகிழ்ச்சித் தாண்டவம். அனைவரும் "அண்ணன் வாழ்க" என்ற விண்ணை முட்டும் கோஷத்துடன் பெருமிதத்துடன், முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு பிரகாசத்துடன் வெளியே வந்தோம்.
வெளியே வந்து பார்த்தால் ஐயோ! கூட்டமா அது... புற்றீசல் போல அவ்வளவு கூட்டம்... நீண்ட வரிசையில் கியூ... பழைய ஆற்றுப்பாலத்தில் தியேட்டரிலிருந்து கியூவளைந்து வளைந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை கியூ நிற்கிறது. போலீஸ் வேன் வந்து கூட்டத்தை லத்தியால் பிளக்கிறது. கட்டுக்கடங்காத கூட்டம். மழை வேறு வந்து விட்டது... கூட்டம்...ம்ஹூம்... நகரவே இல்லை...அடுத்த ஷோ ஆரம்பித்தாகி விட்டது.... டிக்கெட் கிடைக்காதவர்கள் அப்படியே கியூவில் மனம் தளராமல் மறுபடி அடுத்த ஷோவிற்காக நிற்க ஆரம்பித்தார்கள். நாங்கள் வீட்டிற்கு போகவே இல்லை... அங்கேயே பொறை ரொட்டியை வாங்கிக் கடித்துக் கொண்டு கிடைத்த டீயைக் குடித்துக் கொண்டு (தீபாவளி அதுவும் அருமையான வகைவகையான பலகாரங்களும், அருமையான மட்டன் குழம்பும், சுழியான் உருண்டைகளும், இட்லி, தோசைகளும் வீட்டில் காத்துக் கிடக்க இங்கே நெய் வருக்கியும் டீயும்...தேவையா!) டிக்கெட் கிடைக்குமா என்று அலைஅலையாய் தவிக்கும் மக்கள் வெள்ளம். படம் அட்டகாசமாய் வெற்றிபெற்றுவிட்டது என்ற சந்தோஷத்தில் தலைகால் எங்களுக்கு புரியவில்லை.பின் அடுத்த ஷோவிற்கு டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்து விட்டு மூன்றாவது காட்சியையும் பார்த்து ரசித்தோம். பின் தினமும் தியேட்டரில்தான் குடித்தனமே. நாங்கள் நினைத்தது போலவே அருமையாக ஓடி வெற்றிவாகை சூடியதோடு மட்டுமல்லாமல் நடிகர் திலகத்தின் மீள் தொடர்வெற்றிகளுக்கு அடிகோலிய பெருமையையும் சேர்த்துப் பெற்றது 'அண்ணன் ஒரு கோயில்'.
அன்புடன்,
வாசுதேவன்.