March 25th
__________
இறை என்ற நிலையில் எல்லாம் தெரிந்திருப்பதையும், ரிஷிகள்-ஞானிகள் என்ற நிலைக்கு உயர்ந்தவர்களால், ஞானக் கண் கொண்டு விஷயங்களை துல்லியமாய் கணித்து சொல்ல முடிவதையெல்லாம் ஆச்சர்யமான விஷயமாக சாமான்ய மனிதன் பார்க்கிறான். 'தெரிந்தது தெரியாதது பிறந்தது பிறவாதது அனைத்தும் யாம் அறிவோம்' என்ற திருவிளையாடல் வசனம் நினைவில் ஆடுகிறது. எப்படி இவர்களால் ஞானக்கண் கொண்டு நடப்பதையும் நடந்ததையும் கண்டுணர முடிகிறது? அது என்ன ஞானக் கண்? இதற்கு அசோக்-கின் கதாபாத்திரம் மூலமாக கதாசிரியர் விளக்கம் அளிக்க முற்பட்டிருக்கிறார்.
நடந்தவை, நடப்பவை எல்லாம் ஆகாசம் என்ற ether-ல் பதிவாகி இருக்கின்றன. இதை aakashic records என்று சொல்வார்கள். இதை படிக்க முடிந்தவர்கள், பிரித்து அறியக்கூடிய ஞானிகள் பலர் இருந்தார்கள். நாஸ்ட்ராடமஸ்-ன் கணிப்புக்களும் இவ்வகையைச் சார்ந்தது. நடந்த நடக்கிற, நடக்கப் போகிற என்ற கால வரையரையைக் கடந்து நிற்கின்ற பதிவுகள் ஆகாசம் எங்கும் நிரம்பியிருக்கின்றன.
"அப்படி உன்ன பத்தியும் நிச்சயமா எழுதி வெச்சிருப்பா" என்று வசுமதியும், நாதனும் நம்பிக்கையோடிருக்க, "என் சுவடி கிடைக்காது" என்கிறான் அஷோக். அவனது சுவடியை அடையாளம் கண்டு படிக்கும் தருணத்தில் எதிர்பாராத பேய்க்காற்று ஊரெங்கும் வீசி, அவன் ஓலையை காணாமல் போக்கிவிடுகிறது. அரண்டு போய் வீடு திரும்புகின்றனர் நாதன் தம்பதிகள்.
இவனைப் பற்றிய ரகசியங்களைப் படிக்கவிடாமல் ஏதோ ஒரு ஷக்தி தடைசெய்ததென்றால், இவன் யார் என்பதில் அப்படி என்ன ரகசியம் இருக்க முடியும்? இவன் சாதாரண மனிதன் அல்ல, அப்படியென்றால் அவதாரமா?
அவதாரம் என்றாலே 10 மட்டுமே குறிப்பிடுகிறோம், புத்தரைக் கூட அவதாரமாக கருதுவதில்லை என்ற கருத்து நிலவி வருகிறது. உண்மையில் புராணங்களின் கூற்றுப்படி தன்வந்திரி, பிருகு, தத்தாத்ரேயர் உட்பட 22 அவதாரங்கள் இருக்கின்றன. அதில் புத்தர் 21ஆம் அவதாரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. கருட புராணம் மற்றும் வேறு சில புராணங்களிலும் இதைப்பற்றிய தகவல்களைக் காணலாம். பத்து அவதாரங்கள் மட்டுமே பேசப்படுபவையாய், முக்கியமானதாய் இருக்கின்றன, அதைத் தவிர இன்னும் சில அவதாரங்களும் கூறப்பட்டிருக்கிறது. இருபத்தி இரண்டாம் அவதாரமாக கல்கி அவதரிக்கப்போவதாக எழுதியிருக்கிறது. இப்படிப்பட்டகள், பிறக்கும் (அல்லது உருவெடுக்கும் போது) போதே 'தான் ஒரு அவதாரம்' என்ற தெளிந்த ஞானத்துடன் உருவெடுக்கின்றனர்.
வேறு சிலர் தம் உயர் நிலையை விட்டுத் தாழ்ந்து, பிறழ்ந்து, பூமியில் பிறந்து பின் உயர் நிலை எய்துகின்றனர். இன்னும் சிலர் ஏதேனுமொரு குறிப்பிட்டதொரு உயர் நோக்கத்திற்காகப் படைக்கப்படுகின்றனர் (பூமியில் பிறப்பெடுக்கின்றனர்)
இதில் அசோக் போன்றவர்கள் அவதாரங்கள் இல்லை என்றாலும், மேற்-சொல்லப்பட்ட வகைகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம் என்ற கருத்துடனும் அதன் பின் தேவலோகத்தின் அறிமுகக் காட்சியுடன் இன்றைய தொடர் முடிந்தது.
பி.கு: தயாரிப்பாளர் "என்ன சார் மலேஷியா, சிங்கபூர்ன்னு காமிப்பீங்கன்னு பார்த்தா தேவலோகம் வருது" என்று கிண்டல் அடிக்க, பதிலுக்கு பஞ்சமே இராத சோ, "நீங்க குடுக்கற காசுக்கு கூடுவாஞ்சேரி கூட காட்ட முடியாது" என்று பதிலளித்தது தொடரின் களையைக் கூட்டியது.
பி.கு2: நாடி ஜோதிடத்திற்கு கைரேகையைக் கணக்கெடுப்பார்கள். அதைப் பற்றி ஏதும் காட்டாது, நேரே சுவடி எடுத்துவிட்டார் திரைக்கதை எழுதிய வெங்கட்!!! (இதெல்லாம் என்னதுக்கு விலாவாரியா என்று நினைத்திருக்கக்கூடும்)
பி.கு3: (இன்றைய தொடரில் நான் மிகவும் ஒன்றிப் போனேன். சத்தியமாக, மெய் சிலிர்த்தது என்றால் அது மிகையல்ல. ...
...
Another feeble n agnostic duo inside me asks me to give due credits to spl effects and audios and dialogues :P )
(வளரும்)