Originally Posted by saradhaa_sn
டியர் ராகவேந்தர் சார்,
சென்னை சாந்தி திரையரங்கின் பொன்விழாவையொட்டி, நீங்கள் அமைத்திருக்கும் பதாகை (பானர்) மிக அருமை. அதை வெறுமனே பானர் என்று சொல்வதை விட 'சாந்தி தகவல் களஞ்சியம்' என்று சொல்லலாம். அதன் ஒவ்வொரு அங்குலத்திலும் உங்களது ஆர்வமும் உழைப்பும் தெரிகிறது. இங்கு கணிணியில் அளவில் சிறியதாகத் தோன்றியபோதிலும் அது எவ்வளவு தகவல்களை உள்ளடக்கியுள்ளது என்பதை ஊகிக்க முடிகிறது. (அதில் இடம் பெற்றுள்ள செய்தித்தாள் விளம்பரங்களில் பல, நம்முடைய இணையதளத்தில் கூட இடம்பெறவில்லை என்று நினைக்கிறேன். கூர்ந்து பார்க்கும்போது தெரிகிறது).
வலது பக்கம் இடம் பெற்றுள்ள புதுப்பிக்கப்பட்ட 'சாந்தியை' விட, இடது பக்கம் இடம் பெற்றிருக்கும் 'பழைய சாந்தி'யே நம் மனதுக்கு அதிகம் சாந்தியளிக்கிறது. முன்பு 'உத்தமன்' படம் திரையிடப்பட்டிருந்தபோது, முதல்நாளன்று கொடிகள் தோரணங்கள், இமாலய கட்-அவுட் இவற்றுடன் என் தந்தையால் எடுக்கப்பட்ட வண்ணப்புகைப்படம் இன்றும் என் வீட்டுக் கூடத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது. (எனக்கென்னவோ புதுப்பிக்கப்பட்ட சாந்தி, நம்மை விட்டு விலகிப்போய்விட்டது போன்றதொரு உணர்வு. திரையில் நடிகர்திலகத்தின் தரிசனம் தோன்றாதது காரணமோ?).
உங்களது அபாரமான இந்த பேனரைப்பார்த்து 'மாப்பிள்ளை' (திரு.வேணுகோபால்) அவர்களும் மற்ற ஊழியர்களும் என்ன சொன்னார்கள்?. முதல் வகுப்புக்கு டிக்கட் வழங்கும் (பிரபல நடிகர்) 'சாந்தி குமார்' இப்போதும் அங்கே இருக்கிறாரா?. அல்லது ஓய்வெடுத்து விட்டாரா?. உங்களது இந்த அபார உழைப்புக்கு, 'சாந்தி பொன்விழா'வின்போது நிர்வாகத்தினரால் நீங்கள் சிறந்த முறையில் கௌரவிக்கப்பட வேண்டும். இது சாந்தி நிர்வாகத்தினருக்கு நான் வைக்கும் வேண்டுகோள்.
பெருந்தலைவர் அவர்கள் திறந்து வைத்த பழைய கல்வெட்டு, பல உண்மைகளை பறைசாற்றுகிறது. அதாவது 'காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் 'மந்திரி' என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டது. கழக ஆட்சி வந்த பிறகுதான் 'அமைச்சர்' என்ற சொல வழக்கில் வந்தது' என்ற ஒரு தவறான பிரச்சாரத்தை முறியடிக்கும் விதமாக, 1961-ல் அமைக்கப்பட்ட திறப்புவிழா கல்வெட்டில் முதலமைச்சர், நிதியமைச்சர் என்று இடம்பெற்றுள்ளன. அதுபோலவே 'சென்னை மாகாண' என்றில்லாமல் 'தமிழக' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வகையில் சாந்தி திறப்பு விழா கல்வெட்டு, சரித்திரத்தைப் பறைசாற்றும் கல்வெட்டாகவும் திகழ்கிறது. சென்னையிலுள்ள மக்கள், அதிலும் குறிப்பிட்ட ஏரியாவிலுள்ள மக்கள், அதிலும் சாந்த்யில் முதல் வகுப்பு டிக்கட்டில் படம் பார்த்த மக்கள் மட்டுமே கண்டு வந்த அந்த கல்வெட்டை, இன்று தமிழ் கூறும் நல்லுலகின் பார்வைக்கு அளித்த நீங்கள் வாழ்க.
நடிகர்திலகத்தின் புகழ் பரப்பும் ஒரே காரணத்துக்காகவே ஆண்டவன் உங்களை நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ வைக்கட்டும். (அப்போதும்கூட, கையில் கைத்தடி ஊன்றிக்கொண்டு சாந்தி வளாகத்தில்தான் சுற்றிக்கொண்டிருப்பீர்கள்).