-
தவிக்காமல் இருக்க முடியுமா என்ன
சின்னப் பெண்ணின் செல்ஃபோன்
எடுக்கவே மாட்டேன் என்கிறது..
ஆறுமணிக்கு வருபவள் ஏழாகியும்
காணோம்
வாசலுக்கும் கொல்லைப்புறத்துக்கும்
நடந்து கால்கள் தேய்கிறது.
ம்ம்
காலிங்க் பெல் அடிக்கிறது
அவள தானா..
விள்ம்பர இடைவேளைக்கு அப்புறமாம்
உருப்படுவார்களா சண்டாளர்க்ள்
என்னடி இவ்வள்வு நேரம்
வ்ர்றச்சே பஸ்ஸ்டாப்புலருந்து
ஒருத்தன் பின்னாலேயே வ்ந்தாம்மா..
ஓடி வ்ந்துட்டேன்..
வந்துட்டியோன்னோ ..சரி சரி
உள்ள இட்லி வெச்சுருக்கேன்
காலலம்பிட்டு சாப்பிடு
மறுபடி பார்த்தால்
இன்னும் ஆரம்பிக்கலை
என்ன விளம்பரங்களோ
என்ன ஜென்மங்களோ..
-
ஜென்மங்களோ பல கோடி இருக்கும்
ஆதாமுக்கு ஏவாளைப் பிடிக்கும்
மீண்டும் மீண்டும் பிறக்கும் பந்தம்
மாறவே மாறாத இனிய சொந்தம்
-
சொந்தம்னு தான்
பொண்ணு கொடுத்தேன்
அதுக்காக இப்படியா
கொடுமைப் படுத்துவான் என் பெண்ணை..
அந்தக் காலத்தில்
பக்கத்து வீட்டு மாமி
அம்மாவிடம் சொல்லி
அழுதது நினைவிருக்கிறது..
நேற்று
என் அலுவலக நண்பர்
சொல்லிக்கொண்டிருந்தார்..
சொந்த அக்கா பொண்ணுங்க
பையனுக்குக் கட்டிக் கொடுத்தேன்..
கல்யாணம் ஆனதுலருந்து
ஒரே சண்டை..
பையன் பாவம்
மூணு மாசத்துல
துரும்பா இளைச்சுட்டான்..
அக்காவக் கேட்டா
எல்லாம் ஒம் பையனக் கேளு
இல்லன்னா
நாம ஒண்ணும் தலையிட வேணாம்கறா..
என்ன செய்ய..
என்ன செய்ய முடியும்
சிரிப்பதைத் தவிர.
-
சிரிப்பதைத் தவிர வாழ்வில்
வேறெதுவுமில்லா பருவத்தில்
அவள் நின்றாள் அழகாக
வசந்தத்தின் வாயிலில்
கண்ணிறைந்த கணவன்
கை நிறைய வருமானம்
வயது ஐந்தும் மூன்றுமாய்
குருத்திரண்டு வளரும் காலை
கொடும் புயல் வீசத் துவங்க
மங்கைக்கு புற்று நோய் வர
காலன் வாசலில் நின்றிருக்க
கண் முன்னே கரையும் ஓவியம்
நலிந்து நொந்து எண்பதை தொட்டு
தொண்ணூறை தாண்டி காலனை
வருந்தி அழைக்கும் எண்ணற்றோரிருக்க
வாடி வதங்கி அவரெல்லாம் கிடக்க
வாழ வேண்டிய ஒரு தலைவியை
அச்சாணியை ஆணிவேரை அவசரமாய்
கவர்ந்து செல்லும் காலனுமொரு
கிறுக்கனா கல்நெஞ்சக்காரனா
உடையாளியின் உத்தரவை மீறாத
கடமைக்காரனா என்ன கணக்கிது
-
என்ன கணக்கிது
எப்படிக் கூட்டிக் கழித்தாலும்
வரவில்லை விடை..
பின் சீட்டில் உட்கார்ந்து
ஸ்கூட்டியில் சென்ற
பக்கத்து வீட்டுத்தாத்தா
மோதிய மோதலில்
கீறலுடன் எழுந்திருக்க
ஓட்டிச் சென்ற பேத்திக்கோ
முழங்கால் விரிசல்
மூன்று மாதம் பெட்ரெஸ்ட்டாம்..
ம்ம்
அந்தக்கால மனுஷாள்ளாம்
இப்படித் தான்
என
முணுமுணுக்கிறார்
தாத்தாவின் நண்பர்..
இருக்குமோ உண்மை..
-
உண்மை என்பதென்ன
உரிக்கும் வெங்காயமா
பாலுக்குள் வெண்ணெய்யா
கண்டவர் விண்டிராத
விண்டவர் கண்டிராத
வள்ளுவர் வாக்கில்
தீதிலாதது சொல்லுதல்
புரிந்தவரை போதும்
-
புரிந்தவரை போதும்
எனப் பரீட்சைக்கு வந்து
பாடம் மற்ந்துவிடுவதைப்
போலத் தான் இருக்கிறது
அவள்
எதையாவது வாங்கிவரச் சொன்ன போது
ம்ம் சொல்லிவிட்டு
கடைக்கு வந்தால்
ம்ம் எவ்வளவு யோசித்தும்
வரவில்லை நினைவுக்கு..
என்ன பண்ண..
கிடைக்கப் போகிறது அடி..!
-
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி
உதவுவது இல்லை என்றும்
அடியாத மாடு படியாது என்றும்
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகருமென்றும்
பட்டிமன்றத்தின் ஓரணியினர் அடி பின்னிட
அன்பான அணுகுமுறையை அரவணைப்பை
சாத்வீகத்தின் அரிய சாதனையை
அடியின் எதிர்மறை தாக்கங்களை
மற்ற அணி பிரித்து அலசத் துவங்க
கவனம் கலைத்தனர் சண்டையிட்டு
அலறும் என் புத்திர செல்வங்கள்
விருட்டென எழுந்து தேடினேன் குச்சியை
-
குச்சியை வைத்து அடித்து
சிந்து சமவெளி நாகரீகம்
சொல்லித் தந்த சிவக்கண்ணு வாத்தியார்
இல்லை
பட்ட காயம் பின் வலி
எல்லாம் மாயம்..
நடத்திய பாடம் மட்டும்
இன்றும்
படிக்கிறாள் என் பேத்தி..
-
பேத்தி ஒரு பெரிய சாகசக்காரிதான்
பேரன் அம்மாவை வாலாய் தொடர்ந்து
விடாமல் அரைத்துக்கொண்டிருக்கிறான்
தான் வேண்டியதை பெற்றிட வேண்டி
சின்னப் பொண்ணு அப்பா மடியிலேறி
செல்லமாய் கொஞ்சிக் கொஞ்சி குழைந்து
சாதித்துவிடுகின்றாள் வெகு சுலபமாகவே
இன்று நேற்றல்ல நாளையுமிது தொடரும்
-
தொடரும் எனச் சொல்லிச்
சென்ற என் இனிய பாவி
ஒரு குறுஞ்செய்தி, மின்னஞ்சல்,
குட்டிப் பேச்சு என
ஒன்று கூட செய்யவில்லை..
ஒழுங்காய்ப் போய்ச் சேர்ந்திருப்பானோ
ஃப்ளைட் கரெக்ட் டய்த்துக்குப் போச்சா
எதுவும் பிரச்னை ஒன்றும் இல்லியே
ம்ம்
போய்ச் சேர்ந்து மூன்று மணி நேரம் ஆச்சே
காத்திருப்பாளே ஒருத்தி..
என்ன ஜென்மமோ..
இரவு நேரம் தான்..
நிலவு கூட தூங்குவதற்காக்
மேகந்த்தின் பின்னால்..
எனக்கும் தூக்கம் வருகிறது..
ஆனால் இவன்..
இர்ரெஸ்பான்ஸிபிள்..
பொறுப்பில்லாதவன்..
சொன்னால்
நீ என்ன மேஜரா என்பான்..
கொய்ங்க் கொய்ங்க் என்றசத்தம்
செல்ஃபோனா.. ஆமாம்..ஆனால் என்னதில்லை..
சாலையில் யாரோ..
ர்ரும் என்று ஆட்டோ போகும் ஓசை
டிவியில் மெளனமாகப் பாடலுக்காகக்
குதித்துக் கொண்டிருப்பவர்களின் மேல்
அசுவாரஸ்யப் பார்வை..
கையிலிருக்கும் பத்திரிகையில்
மனம் எப்படிப் போகும்..
இடியட்.. நீ பண்ணு..
அப்ப திட்டுவேன்..
கொஞ்சம் கொஞ்சமாய்க்
கண்ணசர்ந்து
தூக்கம் கண்ணைக் கொஞ்ச வருகையில்
கொய்ங்க் கொய்ங்க்..
செல்ஃபோன் தான்..
எடுத்தால்..
ஹாய் சாரிம்மா
தூங்கிட்டியா.. நானும்
வந்தவுடன் கொஞ்சம் கண்ணசந்தேன்..
இப்பத் தான் எழுந்தேன்..அகெய்ன் ஸாரி டியர்..
முகத்தில் புன்முறுவல் வர,
திட்ட நினைத்தது மறந்து போய்
தூக்கமெல்லாம் போயே போச்சு..
-
போயே போச்சு பழந்தமிழர் போற்றிய
பழைய பழக்கமெல்லாம் புதைந்து போச்சு
பல் துலக்கிய உடன் பருகியதோ நீராகாரம்
பகல் வேலைக்கு பலமளித்தது பழைய சாதம்
பல்கி பெருகிய நுண்ணுயிர் அதிலிருந்து காத்திட
நோயும் நொடியும் பல காதம் பறந்து சென்றிட
புத்தொளியாய் வாழ்வில் ஆரோக்கியம் பொலிந்திட
புது அலையாய் பயமுறுத்தும் பகையாய் புகுந்திட்ட
பொருந்தாத பழக்கமில்லா பலகாரங்கள் நமக்கெதற்கு
பாட்டி செய்த பண்டங்கள் மேல் வேண்டாம் வெறுப்பு
-
வெறுப்பு முகத்தில் தெரிய
அப்பா சொன்னார்
எதுக்குடி வந்தே..
அண்ணன் முகத்திலும் அதே தொடர்ச்சி..
வரட்டுமா
என்பதுபோல் அவள் கண்களில்
நீர் எட்டிப் பார்க்க
அம்மாவின் கண்களிலும்
அது தொடர
நிலவியது மெளனம்..
பின்
மெல்லச் சொன்னாள்..
நான் நல்லாயிருக்கேன்
உங்களால் அன்றும் இன்றும்..
அவரும் நலம்..
கொஞ்சம் விரிசலைச் சரி செய்யலாம் என..
முடிக்குமுன் வெடித்தது எரிமைல்..
நாங்களும் நலம் தான்..
இல்லை எனில் சொல்லி அனுப்புவோம்
அப்போது வா..
அம்மாவைப் பார்த்தால்
பதில் பார்வை வரவில்லை..
அண்ணன் முகம் திருப்ப
அப்பா எங்கோ பார்க்க..
தலை குனிந்து வெளி நடக்கையில்
ஓடி வந்தது ஜிம்மி..
காலை முட்டி தொற்றி ஏறப் பார்க்க
ஆசையுடன் அணைக்கப் பார்த்தால்..
அதைத் தொடாதே..
ஜிம்மி இங்கே வா
அண்ணன் இழுத்து எடுத்துக் கொள்ள..
மெலிதாய் வள் என வந்த ஓசையில்
தெரிந்தது பாசம்..
-
பாசம் பக்கத்தில் பார்வையில் ஒரு காலம்
குரலாய் குறுஞ்செய்தியாய் கணிணித் திரையில்
குறுகிவிட்ட கலிகாலம் கண் முன்னே காண்பது
முதுமையில் தனிமை அக்கரையில் சொந்தங்கள்
அக்கறையை அருகிருந்து காட்ட இயலாமை
எதிர் வீட்டு முதியவர் புற்று நோய் முற்றி
ஐந்தாறு மாதமென கெடு சொன்ன பின்னே
இரவும் பகலும் குடித்தழிகிறார் அதிக வலி
தனிமையா முதுமையா பொல்லாத நோயா
ஆண்டவன் கணக்கும் மனிதன் போக்கும் புதிரோ
-
பாசம் பார் பணம் மீது - தரும்
நோயை பார் குணம் மீது !
ஆத்தாலும் அப்பனும் தெய்வமென்பான் - பெரிதென்பான்
தன் பாசம் உடன் பிறந்த மக்கள் விட!
விழுந்துழைப்பான் விருந்தளிப்பான் - பணம்
கைக்கு வந்த பின் உதைப்பான்!
பணம் தரும் பாசம் - வெறும் வேசம்!
-
புதிரோ வேஷமோ
எனத் தெரியவில்லை
காதலைச் சொன்ன பின்
அவளின் பார்வை..
எனினும்
பிடித்திருக்கிறது...
-
பிடித்திருக்கிறது,
"என்னை பிடித்திருக்கிறது" என்று
நீ சொன்ன விதம்!
என் காதல் வீட்டை
மதி கெட்டான் சாலைக்கு மாற்றிய பிறகு..
எல்லாமே பிடித்திருக்கிறது!
-
பிடித்திருக்கிறது
என
படத்தையோ, நாடகத்தையோ
கதையையோ சொன்னால்
மறுத்துத் தான் பேசுவான் கோபி..
ஒரு தலைப்பு என்றால்
அரை மணி நேரமாவது போகும்..
கடைசியில்
சொன்னவரையே அந்த விஷயம்
பிடிக்காமல் செய்துவிடுவான்..
கடந்த சில மாதங்களாகத்
தான் மாற்றம்..
ம்..சரி என
ஓரெழுத்து ஈரெழுத்து பதில்கள்..
ஏன் எனக் கேட்டதில்
பதில்வந்தது..
அவனுக்கு ஆகிவிட்டதாம்
கல்யாணம்...!
-
கல்யாணம்..
தனியாய் திரிந்த காலம்,
ஏதோ பட்டாளத்தை பெற்றது போல்
களிப்பிலேயே கிடந்த மனம்
என்னை பார்த்தே கொக்கரித்தது..
"இது தான்டா சந்தோசம்", எகத்தாலமாய்!
நீ வந்தாய்..
என் மனத்தை பார்த்து,
"போயும்.. போயும்..
சந்தோச குட்டைக்குள் தவழ்கிறாயே.." என பரிகசித்து
அள்ளி
சுக கடலில் இட்டுவிட்டாய்!
-
இட்டுவிட்டாய் கடைசியாய்
கன்னத்தில் கருப்புப் பொட்டு
இடுப்பில் தூக்கி வைத்து
கிளம்பினாய் கரிச்சான்குஞ்சுடன்
-
கரிச்சான் குஞ்சுடன்
கோழிக்குஞ்சு ஒன்று
நட்பானது..
மரத்தின் மேலிருந்து
அம்மா இல்லாதசமயம்
கரிச்சான்
தத்தித் தத்திக் கீழே வர
கோழிக்குஞ்சு ஆவெனப்பார்க்கும்..
இரண்டும் பேசிக் கொள்ளும்..
எங்க அம்மா
ஒய்யாரமா நடப்பாங்களே
எங்க அம்மா
புயலாப் பறப்பாங்களே
எங்க அம்மா ஒசரம்
எங்க அம்மாவுக்கு வால்
அழகா நீளமா இருக்கும்..
வளர்ந்ததுக்கப்புறம்
நீ என்ன ஆவே கரிச்சான் கேட்க
கொஞ்சம் இரு
எனத் தன்னைப் பார்த்துக்கொண்டு
அம்மா மாதிரி ஆவேன்
எனப் பெருமையாய்ச் சொல்ல
க்ரிச்சான் நா பறப்பேனே
ஒலகம் முழுக்க..
ஆனா நீ பாவம்..
ஏன்..
எங்க அம்மா சொன்னாங்க
முழுக்கப்புரியலை..
ஆனா
உங்க அம்மாவக் கொன்னுடுவாங்களாம்
உன்னையும் தானாம்..
அதுக்குத் தான் இந்த நெல் மணி..உணவு எல்லாம்..
நாங்க அலஞ்சு திரிஞ்சு
சாப்பிடறது
ஒங்களுக்கு
நடக்கற இடத்திலேயே கிடைக்கிறகாரணம்..
ச்சீ போ
பொய் சொல்ற
என் கூடப் பேசாத போ
எனக்கோபம் காட்டி
குட்டிக் குட்டியாய்ப்
பாதம் வைத்து
திரும்பி நடந்தது கோழிக்குஞ்சு
விசுக்விசுக்கென..
-
விசுக்விசுக்கென முகத்தைத் திருப்பிக் கொண்டு
உம்மென்று பதில் சொல்லாமல் போனபோதே
விபரீதம் புரிந்துவிட்டது அவள் ஆத்திரம்
வீசிய முந்தானை வரும் புயலின் சின்னம்
வருடம் பல ஆனாலும் புரியவில்லையெனக்கு
வஞ்சியிவள் வெகுண்டெழத் தூண்டும் காரணிகள்
-
காரணிகள் கண்ட
"கை குத்து" சுவாமி
கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருக்க..
கல் தூக்கி கேட்கிறான்,
"ஏன் சுவாமி இந்த மௌனம்.."
"சுவாமியின் கை குத்து
ராசியோ ராசி..
வாங்கினால் வாழ்க்கை முழுதும்
ஆசியோ ஆசி.."
எவனோ சொன்னதை கேட்டு
வந்து நிற்கும் மடையனை பார்த்து
சுவாமிக்கு கவலை வந்து விட்டது..
கை குத்தி அமர்வதற்க்கு
கட்டிவிடப்பட்ட கதையை கண்டு..
-
கண்டு ஒரு கணிப்பு
காணாமல் ஒரு ஊகம்
காட்சியில் கொஞ்சம் உண்மை
கற்பனையில் மீதி சேதி
கடைசியில் கிடைத்தது
கடைந்தெடுத்த வதந்தி
-
”வதந்தி எல்லாம்
இருந்ததே ரொம்ப
உனக்கும்
ரெட்டைத் தெரு கோபிக்கும்
அந்தக் காலத்தில்..”
நரைத்த தலை நிம்மியை
கோவில் கடைத்தெருவில்
பலவருடங்களுக்குப் பின்னால்
பார்த்த போது
கொஞ்சம் பேச்சுக்கப்புறம்
தயங்கிய படி கேட்டதில்..
சிரித்தாள்..
இன்னும் நினைவு வச்சுருக்கியா
அந்த லூஸீ தான்
என்னைச் சுத்திச்சு..
நானும் டைம்பாஸீக்காக
கொஞ்சம் விளையாடினேன்..
ம்ம் தப்பிச்சு
அமெரிக்கா போய்
இப்ப பேரன் பேத்தி
எடுக்கிற ஸ்டேஜ்..
ஒரு நாள் வீட்டுக்கு
வீட்டுக்காரியக் கூட்டிக்கிட்டு வா
அடுத்த மாசம் மிடில் வரை இருப்பேன்..”
சொல்லிப் போனவளிடம்
இவள் திருமணம் நடந்த
சில மாதங்களிலேயே
இவள் நினைவிலேயே இருந்த
அந்த லூசு
விபத்தொன்றில் மரித்த விஷயம்
சொல்ல நினைத்தும்
ஏனோ சொல்லவில்லை..
--
-
சொல்லவில்லை
சந்திப்பின் கடைசிக் கணம் வரையிலும்
எப்போது கொடுக்கப் போகிறேன் என அவர்
எப்போது கொடுக்கப் போகிறாய் என நான்
மறந்தே போய்விட்டேன் நானென்ற
சந்தோஷத்தில் அவரும்
மறந்தே போய்விட்டாரோ அவரென்ற
குழப்பத்தில் நானும்
திரிசங்காய் இருவரது மனத்திலும்
நிறைந்திருந்த கடன்.
-
கடனாய் நினைக்க முடியாதது கருவறை வாடகை
கடனாய் தீர்க்க முடியாதது திருமண ஒப்பந்தம்
கடனே என பணி புரிந்தால் கிடைக்காது திருப்தி
கடனில் வாங்காத வசதி ஏதும் இன்று இருக்கிறதா
-
இருக்கிறதா என்றால் இல்லை தான்..
கருகரு முடிகள்
துள்ளும் இளமை
கவலையில்லா வாழ்க்கை..
இருந்தாலும் ஒன்று
இருக்கிறதே..
அனுபவம்..
-
அனுபவம் ஆகிறது இன்றொரு கேலிக்கூத்து
ஐம்புலனின் விளிம்பிலோர் தற்காலிக அதிர்வு
ஆழமும் அடர்த்தியும் தொலைந்து போனது
ஆவியை உருக்கி கரையாத உறவாய் ஆனது
ஆயுளுக்கும் நினைவில் இனிக்கும் கல்கண்டு
மூடி மூடி வைத்து பாதுகாத்த மர்ம விருந்து
விரட்டி விரட்டி வென்ற ஆண்மை நிமிர்வு
தவிர்த்துத் தவிர்த்து பெண்மை பெற்ற களிப்பு
கலையாய் கரும்பை ருசித்து மகிழ்ந்த காலமது
ஊகத்திற்கு இடமில்லை திறந்து கிடக்கு அழகு
இன்ப விளையாட்டிற்கு நேரமில்லை இருவருக்கு
பொறுமையில்லா நுகர்வில் சுவை என்ன இருக்கு
-
என்ன இருக்கு
எதற்காகக் கொண்டாடவேண்டும்
எனக் கேட்டான்
அலுவலக நண்பன்..
அவன் வரையில்
பிறந்த நாள் கொண்டாட்ட்ம கிடையாதாம்..
சரி..
மனிதப் பிறவியாய்ப்
பிறக்க வைத்தமைக்கு
கடவுளுக்கு நன்றி சொல்லும்
நாள் எனலாமா
என்றால்
சாதிக்கிறான் மெளனம்
-
மௌனம் நீ பிடிப்பதனால் போவதென்ன?
கண்டவன் நா ஏசலுக்கு
வீரம் பார்த்து
கௌரவம் பார்த்து
சரிக்கு சமம் பேசச்சொல்லும்
பொல்லாங்கு மனமே..
நீ கேளாய் புத்தி என் சொல்லை..
மௌனத்தில் அமைதி
ஆத்திரத்தில் அவதி..
பார்,
அவன் பைத்தியகாரன்!
-
பைத்தியக்காரன் என்றால் பிதற்றுபவன்
பாயைப் பிறாண்டுபவன் பரதேசியாய்
பரட்டைத் தலையுடன் திரியும் பித்தன்
என்றெல்லாம் அடையாளம் வைத்திருந்தேன்
போட்டி பொறாமையின்றி பெருந்தன்மையாய்
திரந்த புத்தகமாய் சூதுவாதின்றி வெகுளியாய்
திரிபவனே பைத்தியக்காரன் இக்கலிகாலத்தில்
காலங்கடந்து நான் பட்டுணர்ந்த உண்மையிது
-
உண்மையது தந்த வன்மம் பறித்தது
மதிப்பில் அடங்கா என் உயிர்..
மறுத்தும் பேச வைத்த காவலர்கள்
பார்த்தது ஒருக்கும் வேடிக்கையே..
சாட்சியாலன்!
-
சாட்சியாலன் அந்த அருளாளன் மத்தள வயிறன்
கரிமுகன் கணேசன் மூத்த மூஞ்சூறு வாகனன்
குமரிகள் கூடுமிடம் மேடையிட்டு அமர்ந்து
கண் குளிர அரசமர குளிர் நிழலில் தரிசிப்பான்
கல்யாண ஆசை நிறைவேற காத்திருக்கிறான்
கன்னியொருத்தியை அன்னையின் சாயலில் தேடி
-
தேடிக் கொண்டே தான்
இருக்கிறோம் வாழ்க்கையில்
தேடல்கள் முடிவது போல்
தோன்றினாலும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது
அடுத்த தலைமுறைகளில்
-
தலைமுறைகளில் இழையோடும்
சில பல அங்க அடையாளமும்
பூர்வீக சொத்தாய் நோய்களும்
தவிர்க்க முடியாத இப்பரிசுகளை
தடுத்திட வழிகள் ஆய்வு நிலையில்
கூசாமல் உதிர்த்துவிட முடிந்தவை
குணநலன்களும் குலப் பழக்கங்களும்
மரபணு இழக்கின்றது மரியாதையை
-
மரியாதையைக் கைவிட்டுத்
தான் சொன்னாள்
ச்ச் போடா..
கூடவே கொஞ்சம் கொஞ்சலுமாய்..!
வார்த்தைகள் பூரித்துப் போய்
மரியாதையுடன்
காதுகளில் சொல்லின வணக்கம்..
-
வணக்கம் வணக்கம் வணக்கம்
காலை நேரம் களைகட்டுகிறது
இருள் மறைய விரியும் வெளிச்சம்
காதை வருடும் புள்ளின கானம்
புல்லில் பனித்துளி மின்னி உருகும்
வண்ண மலர்கள் பூத்து மணக்கும்
இதமாய் இளந்தென்றல் தவழ்ந்திடும்
வாசலில் கிடக்கும் செய்தித்தாள்
வாசனை மிகுந்த முதல் காப்பி
வீதியில் கூடைக்காரிகள் கூவல்
விறுவிறுப்பான பண்பலை ரேடியோ
குறையின்றி முடியப் பிறந்த புது நாள்
-
புது நாள்
என
சிரித்தது பூமி
சிரித்தது சூரியன்
சிரித்தது புள்கள்
சிரித்தது இயற்கை
இன்னும்
சிரித்தன சருகுகள்
அவை நினைவில்
மறுஜன்மம்..
-
மறுஜன்மம் உண்டு பல பொருட்களுக்கு
மறுசுழற்ச்சி செய்து பயன் நீட்டிப்பு
மண்ணுக்கு போகும் மனித உறுப்பு
மறு வாழ்வு தரட்டும் இன்னொருவருக்கு