அறையில் தனியாக இருக்கும்போது, பாஸ்கர், அபியைப்பற்றி சொல்லும் விஷயங்களைக்கேட்டு அவன் முழுசாக திரும்பி (திருந்தி..?) விட்டான் என்றே சங்கீதா நினைக்கிறாள். (நமக்கும் கூட அப்படி ஒரு எண்ணம் வரத்தோன்றுகிறது). அபியைப்பார்க்க தன்னை அழைத்துப்போகும்படி சொல்ல பாஸ்கரும் அதற்கு சம்மதிக்கிறான்.
உஷாவின் பத்திரிகை பேட்டியைப் படித்து மனம் உடைந்துபோன ஆதி 'பாரில்' நேரம் போவது தெரியாமல் மதுவருந்திக்கொண்டு இருக்கிறான். அதிலும் உஷா கொடுத்ததாக சொல்லப்பட்ட அந்த பேட்டி அவனை ரொம்பவே அப்ஸெட் ஆக்கிவிட்டது. "அந்த ஆதி பெண்களைப்பற்றிய உணர்வோ உணர்ச்சியோ இல்லாதவர்" என்று பேப்பரில் போட்டிருந்ததை ரேகா அவனிடம் படித்துச்சொல்லும்போது... 'என்ன சொல்லியிருக்கா பாத்தீங்களா?. உணர்வு இல்லாதவர்னா நீங்க ஒரு மேல் ஷாவனிஸ்ட்னு அர்த்தம். உணர்ச்சியில்லாதவர்னா... (சென்ஸார்ட்) அர்த்தம்". என்று ரேகா சொன்ன குதர்க்கமான விளக்கத்தை (நிச்சயமாக கணவனின் அண்ணனுடன் பேசும் விளக்கம் அல்ல) நினைக்க நினைக்க அவனுக்கு உஷாவின் மேல் கோபமும், ஆத்திரமும் தலைக்கேறியது.
இருட்டில் மதுவருந்திக்கொண்டிருக்கும் ஆதியைக் காணவரும் கிரி, அவன் ஓவராக குடித்திருப்பதை அறிந்து பதறிப்போய், "பாஸ் இன்னைக்கு ரொம்ப ஓவரா குடிச்சிட்டீங்க, போதும் பாஸ் வாங்க வீட்டுக்குப் போகலாம்" என்று அழைக்க அவன் மீதும் எரிந்து விழுகிறான்.
"ஏய் கிரி, அந்த உஷா என்ன சொல்லியிருக்கா பார்த்தியா?. அவளை என்னால் ஒண்ணும் பண்ண முடியலையேடா. சாதாரண குடும்பத்தில் பிறந்த மிகச்சாதாரணமான அவளுக்கு பத்திரிகைக்காரங்க பேட்டி எடுக்கும் அளவுக்கு அந்தஸ்து எப்படி யாரால் வந்தது?. இந்த ஆதிங்கற தொழிலதிபரின் மனைவி என்பதால்தானே. என்ன திமிரா பேசியிருக்கா பார்த்தியா?. கூட அந்த தொல்காப்பியனும் வேற இருக்கான்னு சொல்றே".
"ஆமா பாஸ், அவங்களை என்ன பண்ணனும்னு சொல்லுங்க. நான் செஞ்சு முடிச்சிடுறேன்".
"இபோ இல்லே கிரி, இப்போ வேண்டாம். நான் எப்போ சொல்றேனோ அப்போ செஞ்சா போதும்". மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்துபோகிறான்...
அபியின் அலுவகத்துக்கு வரும் டாக்டர் மகேஷ், மீண்டும் திருமணம் பற்றிப் பேச்சையெடுக்க அவள் பிடிகொடுக்காமல் பேசுகிறாள்...
"இதோ பாருங்க மகேஷ். என்னுடைய வாழ்க்கையில் திருமணம்ங்கிறது ஒரு தடவை வந்து போயிடுச்சு. மறுபடியும் அதைப்பற்றி நான் நினைக்கவேயில்லை. பெண்களுக்கு திருமணம் அவசியம்தான்னு ஏன் நினைக்கிறீண்க்க?"
"அபி பெண்களுக்கு மட்டுமில்ல, ஆண்களுக்கும் திருமணம் அவசியம்னு நினைக்கிறவன் நான்".
அப்போது பாஸ்கரும் சங்கீதாவும் உள்ளே நுழைகின்றனர்...
"ஸாரி அபி, ரொம்ப பெர்ஸனலா பேசிக்கிட்டு இருந்தீங்க போலிருக்கு. டிஸ்டர்ப் பண்ணிட்டோம்". (அதான் தெரிஞ்சே டிஸ்டர்ப் பண்ணியாச்சே, அதை சொல்லி வேறு காட்டணுமா?).
மகேஷ், பாஸ்கரை ஒரு மாதிரியாகப்பார்க்கிறான், 'முன்பு இந்த பாஸ்கர் அபி விஷயமா நம்மிடம் தகராறு பண்ணிய ஆள் இல்லே'.
"அப்படியெல்லாம் இல்லே சங்கீதா, சும்மாதான் பேசிக்கிட்டு இருந்தோம்".
"அபி, இப்போ பாஸ்கர் முன்ன மாதிரி இல்லே ரொம்ப திருந்திட்டார். என்னை ரொம்ப அன்பா பார்த்துக்கிறார். உன்மீதும் உன் வாழ்க்கை பற்றியும் ரொம்ப அக்கறையோடு பேசுகிறார்".
"ஆமா அபி, நான் உன்னை கடந்த காலத்தில் ரொம்பவே கஷ்ட்டப்படுத்திட்டேன். அதுக்காக ரொம்ப வருத்தப்படுறேன். நீயும் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இப்படியே மத்தவங்களுக்காக உன்னை வருத்திக்கிட்டு இருப்பே. கூடிய சீக்கிரமே (மகேஷைக் கைகாட்டி) இவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இரு அபி".
('வேலை செஞ்சு களைச்சுப்போய் இளைப்பாறுகிறீர்களா? எல்லோருக்கும் பாயாசம் கொண்டு வரச்சொல்லட்டுமா?' என்று கேட்கும் ராமதாஸைப்பார்த்து, 'என்னப்பா இது, பட்ட மரத்துல பால் வடியுது?'ன்னு நாகேஷ் கேட்பது ஞாபம் வருகிறதா?)
"ஸாரி மிஸ்ட்டர் மகேஷ், நான் கூட உங்க கிட்டே முன்பு அபி விஷயமா தகராறு பண்ணியிருக்கேன். அதெல்லாம் மனசுல வச்சிக்காதின்ங்க".
"நோ. நோ.. அதெல்லாம் இப்போ எதுக்கு?"
"சரி அபி நாங்க புறப்படுறோம், நீங்க உங்க பேச்சை கண்டினியூ பண்ணுங்க" இருவரும் போய்விட்டார்கள். ஆனால் அபி இன்னும் ஆச்சரியத்தில் இருந்து மீளவில்லை "பாஸ்கரா இப்படி?'.
"என்ன அபி, நம்ம கல்யாணத்தைப்பத்தி உங்களைத்தவிர எல்லோரும் ஏத்துக்கிட்டாங்க. உங்ககிட்டேயிருந்துதான் ஒண்ணும் வரக்காணோம்"
"என் கிட்டேயிருந்து என்ன வரணும் மகேஷ்?"
"'சம்மதம்'ங்கிற வார்த்தை வரணும், அதுக்காகத்தான் எல்லோரும் காத்திருக்கோம்".
"அது நாமாக வற்புறுத்தி வரவைக்க முடியாது, மனசில இருந்து தானாக வரவேண்டும்" என்று சிரித்துக்கொண்டே அறையைவிட்டு வெள்யே செல்ல, 'என்ன பெண் இவள்? புரியாத புதிராக இருக்காளே' என்ற குழப்பமான முகத்துடன் டாக்டர் மகேஷ்...