டியர் ராகுல் ராம்,
ராஜ ராஜ சோழன் - நடிகர் திலகத்தின் புகழ்க் கிரீடத்தில் மேலும் ஒரு வைரக் கல். ஒரு சில அம்சங்கள் சரியாகக் கையாளப் படாததாலும், ராஜ ராஜ சோழன் என்கிற மன்னனின் குடும்ப வாழ்க்கையைச் சுற்றிக் கதை பின்னப் பட்டதாலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கும் கதைக்கும் இருந்த இடைவெளியின் காரணத்தாலுமே படம் தோல்வியைத் தழுவியது.
ஒரு சின்ன flashback
1973 மார்ச் மாதம் 31ம் தேதி காலை சென்னை திருவொற்றியூருக்கு சென்ற மாநகர பஸ்கள் அனைத்துமே ஓடியன் மணி திரையரங்கத்திற்கான நிறுத்தத்தில் காலியாகி விட்டன. அங்கிருந்து திரையரங்கு கிட்டத்தட்ட 500 மீட்டருக்கு மேல் இருக்கும். அத்தனை தூரமும் சாலை முழுக்க மனிதத் தலைகள். படம் வெளியாகும் இடத்துக்கு முன்புறம் புகழ் பெற்ற கோவில் உள்ளது. அந்த கோவிலில் ஏதேனும் திருவிழாவாக இருக்குமோ என்ற ஐயத்துடன், சட்டைப் பையில் இருந்த டிக்கெட்டை ஒரு முறை எடுத்துப் பார்த்து நாம் இறங்கிய நிறுத்தமும் போகிற பாதையும் சரிதானா என உறுதி செய்து கொள்வதற்காக பக்கத்தில் நடந்து செல்பவரிடம் கேட்டது தான் என்னுடைய உள்ளத்தில் உள்ளதை உறுதி செய்தது.
ஆம் அன்று அந்தக் கூட்டத்தில் ஒருவர் கூட கோவிலுக்குப் போகவில்லை.. பின்னே எங்கு செல்கின்றார்கள் ... கோவிலுக்கு பின்புறம் உள்ள திரையரங்கிற்கு செல்கிறார்கள்... டிக்கெட் உள்ளவர்கள் வேகமாக நடக்க, இல்லாதவர்கள் ஏதாவது கிடைக்காதா என அதை விட வேகமாக நடக்க ....
எல்லா சாலைகளும் ரோம் நோக்கி செல்கின்றன என்ற கூற்று அன்று உண்மையானது ...
ஆம் அன்று வந்த அத்தனை பேரும் உலக நடிகராம் நடிகர் திலகத்தின் ராஜ ராஜ சோழனை தரிசிக்க வந்தவர்கள் தான்... உள்ளே அரங்கின் கொள்ளளவை விட கிட்டத்தட்ட ஐந்து மடங்கிற்கும் மேல் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தது எந்த அளவிற்கு மக்கள் மனதில் நடிகர் திலகம் என்கிற மாபெரும் கலைஞன் குடி கொண்டிருக்கிறான் என்பதை ஊர்ஜிதம் செய்தது.
படம் ....
இன்றைய கால கட்டத்தில் ராஜ ராஜ சோழன் இளைஞர்களுடைய வரவேற்பைப் பெரும் அளவில் பெறும் என்பதில் ஐயமில்லை. ஆனால் அன்று மக்கள் கர்ணனைப் போன்ற பிரம்மாண்டத்தை போர்க் காட்சிகளை மிரட்டும் பின்னணி இசையை எதிர்பார்த்தனர்.
ஆனால் படமோ ராஜ ராஜ சோழன் என்ற மன்னனின் குடும்பச் சித்திரமாக அவர்களிடம் சித்தரிக்கப் பட்டதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அது மட்டுமின்றி பின்னணி இசையில் மேற்கத்திய இசைக் கருவிகளின் துணையுடன் ஐட்டம் பாட்டுப்போன்ற பாடலும் இடம் பெற்றது ஜீரணிக்க முடியாத தாகிவிட்டது.
நடிகர் திலகம், எஸ்.வரலட்சுமி, டி.ஆர்.மஹாலிங்கம், சீர்காழி கோவிந்த ராஜன் இந்த மேதைகளின் இணையில்லா பங்களிப்பு, ஏ.பி.என். அவர்களின் அற்புதமான சிலேடை கலந்த உரையாடல் இவையனைத்தையும் மக்கள் ஒதுக்கி விட்டனர். போதாக்குறைக்கு சில திரையரங்குகளில் சினிமாஸ்கோப் பற்றிய சரியான தொழில் நுட்ப நெறிகாட்டுதல்கள் இல்லாததால் ஒளியமைப்பில் பாதிப்பு ஏற்பட்டதும் காரணமாகி விட்டது.
நடிகர் திலகத்தின் மிகச் சிறந்த நடிப்பிற்கோர் படம் ராஜ ராஜ சோழன்.
காலமெல்லாம் நிலைத்து விட்ட அற்புத வரிகள் ... ராஜ ராஜ சோழன் புகழ் பாடும் இப்பாடல் குன்னக்குடியின் புகழையும் பாடும் என்பதில் ஐயமில்லை...
அந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் அற்புதமான கலைஞரைப் பாருங்கள் ...
http://youtu.be/V5Vd-rmlivA