http://i1110.photobucket.com/albums/...ar/129PV-1.jpg
Printable View
http://i60.tinypic.com/okampf.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i58.tinypic.com/14keidk.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
படம் வெளியானபோது விகடனில் வந்த விமர்சனம் (16-11-1975) நன்றி, விகடன்!
பன்னிரண்டு கைகள் – இரண்டு கண்கள்.
கருணையும் காந்த சக்தியும் கொண்ட இரண்டு கண்கள், கொலைக்கு அஞ்சாத பன்னிரண்டு கைகளைக் கருணைக் கரங்களாக மாற்றுகின்றன.
கொலைக் குற்றவாளிகளான ஆறு பயங்கரக் கைதிகளைச் சீர்திருத்த முன்வருகிறார் ஜெயிலர். போலீஸ் இலாகாவின் அனுமதியுடன் அவர்களைத் திறந்தவெளிக்கு அழைத்துச் செல்கிறார். கொலை வெறியும் குற்ற உணர்ச்சியும் அவ்வப்போது அவர்களிடம் குமுறி வெடிக்கின்றன. அதற்கெல்லாம் வடிகால் அமைத்துத் தந்து, தனது கருணையாலும் பார்வையாலும் பணிய வைக்கிறார் ஜெயிலர்.
கைதிகளைத் திருத்தும் முயற்சியில் ஜெயில் அதிகாரிக்கு ஏற்படும் சோதனைகளும், மனம் திருந்திப் புதிய மனிதர்களாக அவர்கள் உருவெடுக்கும் நிகழ்ச்சிகளும் சுவையாகவும் விறுவிறுப்பாகவும் கதையை வளர்த்துச் செல்கின்றன.
ஜெயில் அதிகாரி ஓர் இலட்சிய பாத்திரம். ஆரவாரமோ, பதற்றமோ இல்லாமல் கைதிகளை அன்பினால் வசப்படுத்தும் பாத்திரம். இந்த வித்தியாசமான பாத்திரத்தை ஏற்று எம்.ஜி.ஆர். நடிக்கவில்லை. முன்மாதிரியான ஓர் இலட்சிய அதிகாரியாகவே மாறியிருக்கிறார். கைதிகள் தன்னை எதிர்க்கும் சமயங்களில் அந்த எதிர்ப்புகளைப் பலப் பரீட்சையாக எடுத்துக் கொள்ளாமல், ஆத்திரம் தணியும் வரை மோதவிட்டு அமைதிப்படுத்தும் காட்சிகள் நெஞ்சைத் தொடுகின்றன. வெகு இயற்கையாக அமைந்துள்ள இந்தக் கட்டங்கள் மறக்க முடியாதவை.
கதாநாயகியும் கூட (லதா) சற்று மாறுபட்ட பாத்திரம்தான். இலட்சிய வேகத்தில் கடமையிலேயே கண்ணாக இருக்கும் ஜெயிலரை அடையத் துடிக்கிறாள் அந்தப் பெண். அவளுடைய ஆசை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி? கனவாகவும், நினைவாகவும் அந்தக் காட்சிகள் நளினமாகவும் கவர்ச்சியாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இருவரும் ஆசை தீர ஆடிப் பாடுவதெல்லாம் கனவு, நினைவுக் காட்சிகளில்தான் என்றாலும், கண்ணைக் கவரத் தவறில்லை. இந்தக் கட்டங்களில் வெளிப்புறக் காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.
ஆறு கைதிகளும் – மனோகர், குண்டுமணி, தேங்காய் சீனிவாசன், வீரப்பா, நம்பியார், வி.கே.ராமசாமி - சிறு சிறு ஃபிளாஷ் பேக் காட்சிகளின் மூலம் அறிமுகப் படுத்தப்படுவது சிறப்பான உத்தி. அதே போன்று, அவர்களின் பெயர்களை ஜெயிலர் கேட்கும் போது, பெயரைச் சொல்லாமல் உள்ளங்கை அடையாளத்தைக் காகிதத்தில் பதிய வைப்பதும் ரசிக்கத்தக்கது.
குரூரத்தின் மறு வடிவங்களான அந்தக் கைதிகளைக் கொண்டே நகைச்சுவைக் காட்சிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. தேங்காய் சீனிவாசனின் விளையாட்டுக்கள் முதல் மார்க் பெறுகின்றன.
குடிவெறியில் ஆறு கைதிகளும் லதாவை அணுகுவதும், ஜெயிலர் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதும் பரபரப்பான காட்சியாக இருந்தாலும், அந்தத் தவற்றை அவர்கள் உணர்ந்து வெட்கப்படும்போது ஒரு முத்திரையான காட்சிக்குரிய சிறப்பைப் பெற்று விடுகிறது. காய்கறி வியாபாரத்துக்குப் போன கைதிகள், ஜெயிலரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, தம்மைத் தாக்குகின்றவர்களை எதிர்த்து நிற்காமல் அடிபட்டுத் திரும்புவதும் அப்படியே! இது எம்.ஜி.ஆர் படமா என்ற கேள்வியை விட, இது அவருடைய லட்சியப் படம் என்று பதில் கூறும் அளவுக்குக் கருத்துச் சித்திரமாக அமைந்திருக்கிறது பல்லாண்டு வாழ்க!
அரசியல் பொடியோ, நெடியோ இல்லாமல் முழுக்க முழுக்க மனிதாபிமானம், லட்சியம் ஆகியவற்றின் வார்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் அடி நாதமாக சாந்தாராம் நிற்கிறார். அவருடைய தோ ஆங்கேன் பாரா ஹாத் இந்திப் பட மூலக் கதையின் வலுவும், சுவையும் சற்றும் குறையாமல் படமாக்குவதில் டைரக்டர் கே.சங்கரும், உதயம் புரொடக்ஷன்ஸ் கதை இலாகாவினரும் ஆழ்ந்த கவனம் செலுத்தியிருக்கின்றனர். வசனங்களில் கருத்துச் செறிவும் அழுத்தமும் இருப்பது போலவே, இசையும் பாடல்களும் தரமாக அமைந்திருக்கின்றன.
எம்.ஜி.ஆர். ரசிகர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே பல்லாண்டு வாழ்க ஓர் இனிய சித்திரம்.