நினைவு நாடாக்கள் ஒரு Rewind...வாலி
நல்லதோர் வீணையை...
ஏப்ரல் மாதம் இருபத்தெட்டாம் தேதி, இரவு பத்தரை மணியளவில் என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது.
''அண்ணா! நாளைக்குக் காலேல, ஒன்பது மணிக்கு - ஏவி.எம் ஸ்டூடியோ பிள்ளையார் கோவில்ல - 'ராணா’ பட பூஜை; நீங்க அவசியம் வரணும்!''
- ரஜினிதான் பேசியது.
'அவ்ளோ சீக்கிரம் காலேல - என்னால ரெடியாக முடியாதே... மருந்து மாத்திரைஎல்லாம் சாப்டணும்... நான் வரணும்னு - நீர் ஆசைப்படறீரா?’
- இப்படி நான் கேட்டவுடன், ''நீங்க வராம எப்படி? நியாயமா, நான் நேர்ல வந்துதான் கூப்டிருக்கணும்; அதுதான் மரியாதே! But உடம்பு கொஞ்சம் சரி யில்லேண்ணா எனக்கு... அதான்!''
- என்று ரஜினி சொல்லும்போதே, வழக்கமாக அவர் குரலில் உள்ள குதூகலம் - missing!
விழாவிற்கு, மறுநாள் சென்றேன்; என்னை ஆரத்தழுவி வரவேற்றார்.
அப்பொழுதும் கவனித்தேன் - ரஜினி, ரஜினியாக இல்லை; ஏதோ ஓர் உபாதை, பாதாதிகேசம் படர்ந்து அவரது இயல்பு நிலையைப் பாதித்திருப்பதாக என் உள் மனம் உணர்த்தியது.
'ஹஹ்ஹஹ்ஹா’ என்று - 'மாயா பஜார்’ எஸ்.வி.ரங்கராவைப்போல் ஓர் அவுட்டுச் சிரிப்பும் -
'அண்ணா! அண்ணா!’ என்று என்னை அடிக்கொருதரம் அழைத்து அளவளாவுகையில், துரிதகதியில் உதடுகள் துப்பும் தமிழ்ச் சொற்கள் தலைபோகிற அவசரத்தில் வந்து விழுகின்ற அழகும் -
சற்றே புருவங்களைச் சுருக்கி, நம் கருத்துகளுக்குச் செவிசாய்க்கும் சிரத்தையும் -
இரு இமைகளுக்கிடையே, இரண்டு தணற் துண்டுகளைப் பொருத்தினாற்போல் - சதா கனன்றுகொண்டிருக்கும் கருவிழிகளின் தகிப்பும் -
காஞ்சி மஹாப் பெரியவாளை நமக்கு நினைவூட்டுகிறாற்போல், ஓர் ஆன்மிக வெளிச்சத்தைப் பிலிற்றும், அருளார்ந்த அறிவுசார்ந்த கூர்த்த நோக்கும் -
இத்யாதி; இத்யாதி... அன்றைய ரஜினியிடம் - அவர் ஒப்பனையில் வந்தபோதும், காணக் கிடைக்காதுபோய் - அவரைப் புகைபடிந்த ஓவியமாய்க் காண நேர்ந்தது!
எனது எண்ண ஓட்டம் - அநேகமாக அந்த விழாவிற்கு வந்திருந்த எல்லோரது எண்ண ஓட்டமாகவும் இருந்திருக்கக்கூடும்; ஆதலால்தான் - களிப்பும் கலகலப்புமாக இருக்க வேண்டிய நேரத்தில், ஓர் இறுக்கம் -
நாம் வாயால் ஊதினால், நிலைக் கண்ணாடியின் மேல் ஒரு mist படர்ந்திருக்குமே - அப்படிப் படர்ந்திருந்தது பலர் பார்வையில்!
இவ் விழாவிற்கு ஓரிரு மாதங்கள் முன்புதான் -
ரஜினி வீட்டிலிருந்து எனக்கோர் அழைப்பு வந்தது; திருமதி லதா ரஜினிகாந்த்தான் பேசினார் தொலைபேசியில்.
''வாலி சார்! நம்ம சாருக்கு - பாலசந்தர் சார் 'ரஜினிகாந்த்’னு பேர் வெச்சு, இன்றோடு முப்பத்தஞ்சு வருஷமாகிறது... இன்று அந்தப் பேருக்கான birth day. நீங்க அவசியம் சாப்பிட வரணும்... வந்தா - i will feel as if i have been highly blessed!'
நான் அவ் விருந்துக்குப் போனேன். அற்புதமான சாப்பாடு; ஆத்மார்த்தமான விருந்தோம்பல்!
நூறு விழுக்காடு - ரஜினி ரஜினியாக இருந்தார் அன்று - so cute; so cheerful; with ecstasy and energy!
- இப்படி இருந்த ஒருவர், இத்துணை குறுகிய காலத்திற்குள், எப்படி இப்படிப் பொலிவிழந்து வலுவிழந்துபோனார் என்று எண்ணுங்கால் - விந்தை ஒரு புறமும் விசனம் ஒரு புறமும் மேலிட்டு நின்றாலும் -
நான் என் நெஞ்ச அலமாரியில் அடுக்கிவைத்திருக்கும் நினைவு ஏடுகளை இப்போது, தூசி தட்டிப் பார்க்கத் தோன்றுகிறது!
ஒருநாள் இரவு பத்து மணிக்கு எனக்கொரு phone வந்தது.
''அண்ணா! Music academy ல உங்க நாடகம் பாத்தேன்; ப்ரமாதம்; என்னெ என்னவோ பண்ணிருச்சு உங்க dialogue எல்லாம்! இந்த நாடகத்துல நான் பாரதியாரா நடிக்கணும்... என்ன சொல்றீங்க?''
- இப்படி ரஜினி கேட்டதும் - நான் திகைத்துப்போனேன்.
அப்போதே அவர் சூப்பர் ஸ்டார். 'அன்னை ஓர் ஆலய’த்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
அவர் வீட்டுக்கு என்னை வரவழைத்து - ''நாடகத்துக்குத் தகுந்த மாதிரி - என் பட வேலைகளை நான் தள்ளிவெச்சுக்கறேன்; நான் பாரதியாரா நடிக்கணும்; தமிழை - தினம் பிழையில்லாம உங்ககிட்ட பேசிக்காட்டறேன்!'' என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.
அடுத்தவர்; உணர்வுகளை அணுவளவும் ஊனப்படுத்தாத உத்தமர் திரு.ரஜினிகாந்த்!
அவர் படத்தைப் பார்க்க -
ஜப்பானிலும்; கொரியாவிலும்; தைவானிலும் 'க்யூ’ நிற்கிறது; இனியும் அதுபோல் நிற்கும்; விரைவில் நலம்பெற்று வந்து, அவர் வெள்ளித்திரையை ஆளுவார்!
ஏனெனில் -
'நல்லதோர் வீணையை - இறைவன்
நலங்கெடப் புழுதியில் எறிவதில்லை!’