Originally Posted by
suharaam63783
அணிந்துரை
எம்.ஜி.ஆரைப்பற்றி எழுதுவதும் பேசுவதும் மிகப் பிடித்தமான விஷயம். எம்.ஜி.ஆர் என்ற ஒரு மனிதர் நிறைய பலமும், குறைவான பலஹீனங்களும் கொண்ட ஒருவர்தான். ஆனால் பலஹீனங்களை பலமாக மாற்றத் தெரிந்த வித்தைக்காரர். வாழ்வின் தாழ்விலும் உயர்விலும் அவர் விடாது கடைபிடித்த மனிதநேயம்தான் அவரை வெற்றியின் உச்சத்துக்குக் கொண்டுசென்றது.
தன்னம்பிக்கை ஊட்டும் வாழ்க்கை அவருடையது. 1936-ம் ஆண்டு 'சதி லீலாவதி' திரைப்படத்தில் சாதாரண ஒரு காவலராக சிறுவேடத்தில் அறிமுகமான அவர், கதாநாயகனாக நடிப்பதென்ற தன் லட்சியைத்தை எட்ட 11 வருடங்கள் ஆனது. 'வாய்ப்பு எப்போது வரும் என்பதைக் கணிக்கமுடியாது. ஆனால் அது எப்போது வந்தாலும் அதைப் பயன்படுத்திக்கொள்ளும் தகுதியுடன் தயார் நிலையில் நம்மை வைத்திருக்கவேண்டும்' என்பது அவரது வாழ்வின் வெற்றியின் ரகசியம். அதற்கு அந்த 11 வருடங்களே சாட்சி. அதன் பின்னர், திரையுலகின் உச்சகட்ட புகழை எட்ட அவருக்கு மேலும் 10 வருடங்கள் ஆனது. கடும் உழைப்பினால் அதை அவர் சாதித்தார்.
ஒருவரின் வாழ்நாள் முழுவதுமான வாழ்க்கை ஒரு சினிமாப்படமாக ஆகிறபோது அதைச் சில மணிநேரங்களில் முடிக்கிற கட்டாயம் படைப்பாளிக்கு உண்டு. அப்படி ரத்தினச் சுருக்கமாக அந்த வாழ்க்கையை ரசிகர்களுக்குச் சொல்ல சம்பந்தப்பட்டவரின் வாழ்வில் நிகழ்ந்த திருப்புமுனைகளின் அடிப்படையில் அவரது வாழ்க்கைச் சம்பவங்களை அடுக்கிச் சொல்ல வேண்டியுள்ளது. சுமார் அரைநுாற்றாண்டுக்காலம் தமிழகத்தின் பேசுபொருளாக வாழ்ந்து மறைந்த அமரர் எம்.ஜி.ஆரின் வாழ்வும் அவரது திரைப்படங்களைப்போன்றே வெகு சுவாரஸ்யமான திருப்புமுனைச் சம்பவங்களை உள்ளடக்கியதுதான். கண்டியில் வசதியான குடும்பத்தில் பிறந்து பால்குடி மறக்காத வயதில் தந்தையை இழந்து தாய் மற்றும் ஒரு சகோதரன் சகோதரியுடன் சொந்த மண்ணான பாலக்காடு திரும்புகிறான் குழந்தை ராம்சந்தர். அங்கு உறவினர்களிடம் அவமானப்படும் அவரது தாய் சத்தியபாமா, உறவினர் என யாரும் இல்லாத கண்காணாத இடத்திற்கு குடிபெயர்ந்து பிள்ளைகளை வளர்க்கும் எண்ணத்தோடு தமிழகத்தில் கும்பகோணத்தில் தஞ்சமடைகிறார். எம்.ஜி.ஆர் வாழ்வில் முதல் திருப்புமுனை இதுதான். சிந்தித்துப்பார்த்தால் சினிமாவைப்போன்ற ஒரு திருப்பம் இங்கு இருக்கிறது.
உறவுகளற்ற, அதே நேரத்தில் உதவக் கூடிய ஒருவரை சத்தியபாமா தேடியபோது அவருக்கு உதவிபுரிய முன்வருகிறார் கேரளக்காரரும் கோபால மேனோனின் நீண்டநாள் நண்பருமான வேலுநாயர். குடும்பத்தின் வறுமை நிலையைக் கண்டு அவர்தான் பாலக்காட்டில் இருந்து சத்தியபாமாவையும் அவரது இரு குழந்தைகளையும் கும்பகோணத்துக்கு விடிந்தும் விடியாத ஒரு காலைப்பொழுதில் அழைத்து வந்தார்.
கோபாலமேனோன் என்ற கேரளக்காரரின் குடும்பத்தை வறுமை சூழாமல் போயிருந்தால்...?'என கற்பனை செய்து பார்த்தால் கடந்த அரைநுாற்றாண்டு சினிமா மற்றும் அரசியலில் கற்பனை செய்யமுடியாத ஒரு வெற்றிடம் ஏற்பட்டு இருக்கும். அதுதான் நிஜம். காரணம் தமிழகத்தின் கடந்த அரைநுாற்றாண்டு கால அரசியல், சினிமா, இரண்டிலும் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக ஆதிக்கம் செலுத்தினார்!
வறுமை தந்த முதல் திருப்புமுனைதான் எம்.ஜி.ஆரின் தமிழக விஜயத்தை முடிவுசெய்தது. இப்படி நுால் நெடுகிலும் எம்.ஜி.ஆர் வாழ்வின் திருப்புமுனைகளைப் பட்டியலிட்டு இதுவரை நாம் படித்திராத எம்.ஜி.ஆர் வாழ்வின் பல அரிய நிகழ்வுகளை நம்கண் முன் அடுக்கி ஆச்சர்யம் ஊட்டுகிறார் நுாலாசிரியர் திரு. கே. உமாதிபதி என்ற பாலசுப்பிரமணி.
மிக அரிதாக எம்.ஜி.ஆர் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சமபவம் இன்னொரு நபரின் வாழ்வின் திருப்புமுனைக்கு காரணமாகியிருக்கிறது. 50-களின் முற்பகுதியில் அண்ணா, சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம் என்ற நாடகத்தை எழுதி முடித்துவிட்டு அதில் சிவாஜி வேடத்தில் நடிக்க கட்டுடலும் கணீர் குரலில் வசனமும் பேசும் திறமையும் கொண்ட ஒரு நடிகரைத் தேடிக்கொண்டிருந்தார். அண்ணாவின் நண்பர் நடிகமணி டி.வி. நாராயணசாமி அந்த வேடத்துக்காக அன்றைக்கு சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான எம்.ஜி.ஆரை பரித்துரைத்ததோடு, ஒருநாள் கையோடு எம்.ஜி.ஆரை அழைத்து வந்து அண்ணாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அன்றைக்கு அந்த வீட்டின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு நடிகர் ஒருவர் அண்ணாவின் வசனத்தைப் பேசி நடிக்கமுடியாதா என ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.
அதேசமயம் அண்ணா கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்வதற்காக வாங்கிச்சென்ற எம்.ஜி.ஆருக்கு சில காரணங்களால் அந்த நாடகத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனாலும் அண்ணாவின் கதைவசனத்தைப் படித்த அவருக்கு அவர் மீது அளவிலா காதல் பிறந்தது.
எம்.ஜி.ஆருக்குப் பதில் சிவாஜியாக நடிக்கும் வாய்ப்பு,அன்று ஏக்கமாய் பார்த்துக்கொண்டிருந்த நாடக நடிகருக்குப் போனது. 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' நாடகத்துக்கு ஒருமுறை தலைமைத் தாங்க வந்த பெரியார். வி.சி கணேசன் என்கிற அந்த நடிகரின் நடிப்பைக் கண்டு வியந்துபோனார். “இந்த நாடகத்தில் எந்த இடத்திலும் கணேசனைக் காணமுடியவில்லை. சிவாஜியை மட்டுமே பார்த்தேன்” என உச்சி முகர்ந்தார். கணேசன் அன்றுமுதல், 'சிவாஜி' கணேசன் ஆனார். அது ஒரு வரலாற்று சம்பவம் கூட. இப்படி இன்னொருவர் வாழ்வில் எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய திருப்புமுனையையும் நுாலாசிரியர் அழகாகப் பதிவு செய்திருக்கிறார்.
எம்.ஜி.ஆர் மறைந்து 30 ஆண்டுகளாகியும் இன்னும் அவர் பெயரில் வரிந்துகட்டி புத்தகங்கள் வருகின்றன. பொருளாதார சிக்கல்களுக்கிடையிலும் பல மாத இதழ்கள் வெளிவருகின்றன. 60 களில் வெளியான அவரது ஒரு திரைப்படத்தின் இன்றைய வெளியீட்டுக்கும் அன்று போலவே ஆர்ப்பரிப்பான கூட்டம் வருகிறது. அன்று வந்தவர்களும் இளைஞர்கள் இன்று வந்துகொண்டிருப்பவர்களும் இளைஞர்கள். இதுதான் வியப்புக்குரிய விஷயம். அவருக்குப்பின் தமிழ்சினிமா பல சூப்பர் ஸ்டார்களை பார்த்துவிட்டது. ஆனால் இந்த அதிசயத்தை எம்.ஜி.ஆர் ஒருவரால்தான் நிகழ்த்த முடிகிறது.
எம்.ஜி.ஆர் நடித்து முடித்த ஒரு படத்துக்குப் பெயர் சூட்டுவது தொடர்பாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் ஒரு கூட்டத்தைக் கூட்டினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என்னென்னேவோ பெயர் சொன்னபோது, “பல லட்சம் செலவில் படம் எடுத்திருக்கிறோம். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து தயாரிக்கும் போஸ்டர்களை மக்கள் பார்வையில் படும்படி சந்துபொந்துகளில் ஒட்டப்போகிறோம். அப்படி ஒட்டப்படும் போஸ்டர்கள் மக்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட போஸ்டரில் அவனது வாழ்க்கைக்கு பயன்தரக்கூடிய ஒரு மெசேஜை சொன்னால் என்ன?அதுதான் நம்மை வாழவைக்கும் ரசிகனுக்கு நாம் காட்டுகிற நன்றியாக இருக்கும். அதனால் நல்லதொரு கருத்தை அவன் மனதில் விதைப்பதாக போஸ்டர்கள் இருக்கட்டும்” என்றாராம். திருடாதே என அந்தப் படத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது. அதுதான் எம்.ஜி.ஆர் என்ற திரைக்கலைஞனின் பொறுப்புணர்ச்சி.
உண்ண உணவின்றி வயிற்றில் ஈரத்துணியை வைத்து படுத்துறங்கிய நேரங்களிலும் பிள்ளைகள் பிச்சை எடுத்துவிடக்கூடாது என வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்கு சென்றவர் சத்தியபாமா. அம்மாவின் நேர்மையை மட்டுமல்ல; வறுமையின் விளிம்புக்குத் தள்ளிய அந்த வாழ்க்கையையும் எம்.ஜி.ஆர் மறக்கவில்லை. சத்துணவு பிறந்தது இப்படித்தான். சத்துணவுத்திட்டம் தமிழகத்தின் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவை அதிகப்படுத்தியதாக ஐ.நா பதிவு செய்துள்ளது. தன் சொத்து முழுவதையும் விற்று அவர் எடுத்த நாடோடி மன்னனில், “நீங்கள் மாளிகையிலிருந்து மக்களைப் பார்ப்பவர்கள். நான் மக்களிடமிருந்து மாளிகையை பார்ப்பவன்” என்று வசனம் பேசுவார். அவர் தந்த சத்துணவும் செருப்பும் அந்த வசனத்தை சாகாவரம்பெற்றதாக்கின. இப்படி வறுமையினால் தான் அடைந்த துயரை வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருந்ததால்தான் அந்தப்பெருந்தகையை தமிழ்க்கூறும் நல்லுலகம் இன்னமும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
சத்துணவுத்திட்டம் பிறந்த கதை தெரியும். எம்.ஜி.ஆர் மாணவர்களுக்கு செருப்பு தந்ததன் பின்னணி பலரும் அறியாதது. ஒருமுறை சேலத்துக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த எம்.ஜி.ஆர், நிகழ்ச்சி முடிந்ததும் எடப்பாடியில் கட்சிக்காரர் ஒருவரது வீட்டில் தங்கினார். அதே வீட்டின் மாடியில் அவருடன் வந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் தங்கினர். இரவு எம்.ஜி.ஆர் நெடுநேரமாகியும் உறங்கவில்லை. குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார். ஜானகி அம்மாள் கணவரின் குழப்பத்தைக் கவலையோடு பார்த்தபடி இருந்தார். கொஞ்சநேரத்தில் எம்.ஜி.ஆர் ஜானகியிடம் மாடியிலிருந்த கண்டமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ கண்ணனை அழைத்துவரச் சொன்னார். கண்ணன் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த எம்.எல்.ஏ-வான அவர் ஒரு இளைஞர்.
நள்ளிரவில் தலைவர் ஏன் அழைக்கிறார் எனக் குழப்பத்துடன் வந்த கண்ணனிடம் எம்.ஜி.ஆர், “சேலத்திலிருந்து எடப்பாடி வரும் வழியில் என்னவெல்லாம் நீ பார்த்தாய் எனக் கேட்டார். நள்ளிரவு நேரத்தில் தலைவரிடமிருந்து இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத கண்ணன், என்னன்னவோ சொன்னார். எம்.ஜி.ஆர், “அதில்லை, அதில்லை” என மறுத்தபடியே வந்தார்.
இறுதியாக அவரே, “வழியில் ஒரு கிராமத்தில் பள்ளி முடிந்த உடன் வெளியே வந்த மாணவர்களைப் பார்த்தாயா”என்று கேட்டார். தலைவரை குளிர்விப்பதற்காக கண்ணன், “ஆம் பார்த்தேன். முன்பெல்லாம் பள்ளிகளில் அத்தனை கூட்டம் இருக்காது. சத்துணவுக்குப்பின் பள்ளிகளுக்கு மாணவர் வருகை அதிகரித்துள்ளது” என்றார். உடனே எம்.ஜி.ஆர், கோபத்துடன் “ நான் அதைக் கேட்கவில்லை. அந்த மாணவர்களின் கால்களில் செருப்பு இருந்ததா” என்றார். கண்ணன் தன் நினைவைக்கிளறிப்பார்த்தார். தலைவர் எங்கு வருகிறார் என்பது புரிந்தது. ஆமாண்ணே ஒருசிலரைத்தவிர யார் காலிலும் செருப்பு இல்லை” என்றார். “ஏன் இல்லை“என எதிர்கேள்வி கேட்டார் எம்.ஜி.ஆர். “பெற்றோரின் வறுமைக் காரணமாக இருக்கலாம்” என்றார் கண்ணன். “நீ படித்த காலத்திலே செருப்பு போட்டிருந்தாயா? என்றார். அதற்கு கண்ணன், ”நான் இன்னும் சிலரும் போட்டிருந்தோம். ஆனால் பெரும்பாலானோர் போடவில்லை” என்றார். “ஏன் போடவில்லை என எம்.ஜி.ஆர். கேட்டதற்கு, “பெரும் பண்ணைக்காரர்கள், உயர் சாதிக்காரர்கள் இருக்கும் தெரு வழியே செருப்பு போட்டுச்சென்றால் பிரச்னை உருவாகும் என்பதால் பெற்றோர்கள் வாங்கித்தரமாட்டார்கள் என்றார். எம்.ஜி.ஆர் இப்போது நிமிர்ந்து உட்கார்ந்தார். “அதேதான் இப்போதும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்குச் செருப்பு வாங்கித்தராததற்கு வறுமை மட்டுமே காரணம் அல்ல; இந்தத் தீண்டாமையும் முக்கிய காரணம். பிள்ளைகள் ஆபத்தின்றி சென்று வருவதற்காக அவர்கள் வெயிலில் செருப்பின்றி நடப்பதையும் பொறுத்துக் கொள்கிறார்கள் பெற்றோர்கள்” என்று நிறுத்திய எம்.ஜி.ஆர், “அதனால் இந்தச் செருப்பை அரசாங்கமே கொடுத்தால் என்ன? பெற்றோர்கள் வாங்கித் தருகிறார்கள் என்றால்தானே அவர்கள் மீது வெறுப்பும் கோபமும் உயர்சாதி என்று சொல்லப் படுகிறவர்களுக்கு வருகிறது. அரசே கொடுக்கும்போது பெற்றோர்களுக்கும் சங்கடம் இருக்காது. யாருக்கும் அதை எதிர்க்கத் துணிச்சல் வராது, இல்லையா? என்று சொல்லி நிறுத்தியபோது, கண்ணன் கண்களில் முட்டிநின்றது கண்ணீர்.
கூத்தாடி, அட்டைக்கத்திவீரன், மலையாளத்தான் என காலம் முழுவதும் தன் அரசியல் எதிரிகளால் எள்ளி நகையாடப்பட்டவருக்குள் எத்தனை கூர்மையான ஓர் அரசியல் பார்வை. சட்டங்களால் கூடத் தடுக்கமுடியாத ஒரு சமூகக்குற்றத்துக்கு எத்தனை யதார்த்தமான தீர்வு. துரதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களில் எம்.ஜி.ஆர் மறைந்தார். அடுத்து வந்த ஜானகி ஆட்சியில் செருப்பு வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது. முதன்முதலாக இந்தத் திட்டத்தின்கீழ் செருப்பு வழங்கியது, அப்போது தாட்கோ சேர்மனாக இருந்த அதே கண்ணன்தான்.
எம்.ஜி.ஆர் என்ற பெயரை இன்னும் பல நுாற்றாண்டுகளுக்கு தமிழகம் கொண்டாட இந்த ஒரு காரணம் போதும். எம்.ஜி.ஆரின் புகழுக்கு அலங்காரம் சூட்டும் திருப்புமுனை நாயகன் எம்.ஜி.ஆர் என்ற இப்புத்தகத்தை எழுதியுள்ள விகடன் குழுமத்தின் தலைமை உதவி ஆசிரியர் திரு. கே.பாலசுப்பிரமணி அவர்களுக்கும், நுாலை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கும் எம்.ஜி.ஆரை நேசிக்கும் கோடிக்கணக்கான அன்பர்கள் சார்பாக என் நன்றிகள்.
அன்பன்
எஸ்.கிருபாகரன் , நன்றி திரு கிருபாகரன்...