Quote:
தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் டார்லிங் சூர்யாவை புத்தாண்டு அன்று மும்பையில் சந்தித்தோம்.நாளுக்கு நாள் சூர்யாவின் பேச்சில் டீடெய்ல்கள் அதிகமாகிக் கொண்டே போவதை உணரமுடிகிறது. தனது குடும்பத்துடன் ஜாலி ட்ரிப்பில் இருந்த சூர்யாவின் நியூ இயர் பேட்டி இது.
‘ஏழாம் அறிவு’ மூலமாக மீண்டும் எதிர்பார்ப்பை இப்போதே கிளப்பியிருக்கீங்களே. படம் எப்படி?
‘‘ஒவ்வோரு முறையும் நம்ம படங்களோட வெற்றியும், சினிமாவுல நமக்கான இடமும் எல்லாமும் பத்தாது பத்தாதுன்னு தோணும். அடுத்த கட்டத்துக்குப் போகணும்னு தோணும். இதுதான் நம்ம எல்லோருக்குமே உந்துதலா இருக்கு. பெரிய சவாலா இருக்கு. யாருமே பெர்ஃபெக்ட்டான நடிகர் கிடையாது. யாருக்கும் பெர்ஃபெக்ட்டான உடம்பு கிடையாது.
எல்லா அறிவும் எல்லோருக்கும் இருக்குறது இல்ல.இது எல்லாமும் வாழ்க்கையில ஒரு தேடலாகத்தான் போயிட்டு இருக்கு. இந்த மாதிரி ஒரு தேடல்தான் ‘ஏழாம் அறிவு’. விஷுவல் எஃபெக்ட்ஸ் மட்டுமில்லாம, உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கும்.’’
இன்னைக்கு இருக்குற சக்ஸஸ்ஃபுல் சூர்யாவுக்குப் பின்னால இருக்குற உந்து சக்தி எது அல்லது அது யாரு?
“சினிமாவை சும்மா பிளாஸ்டிக் மாதிரி எடுத்துட்டுப் போகாம, இப்படியொரு அழகான சினிமா பண்ணணும், நாம நினைக்கிற வடிவத்தை சினிமாவுல கொண்டு வரணும்னு நினைக்கிற இயக்குநர்கள் எனக்கு வரிசையாக அமைஞ்சாங்க.என்னோட அதிர்ஷ்டம் அது. ஆத்மார்த்தமாக படம் எடுக்கணும்னு நினைக்கிற பாலா, கே.வி. ஆனந்த், ஏ.ஆர். முருகதாஸ்,கௌதம் மேனன்,ஹரினு நல்ல இயக்குநர்கள் கிடைச்சாங்க.
என்னோட முதல் படத்துலேயே விஜய்க்கு சரிசமமாக எனக்கும் பாட்டு, ஃபைட்,எமோஷனல் காட்சின்னு வஸந்த் முக்கியத்துவம் கொடுத்திருந்தார். அதுக்கு அடுத்ததாக வஸந்த் மாதிரி எனக்கு தெம்பு கொடுக்குற இயக்குநர்கள் அமையல.அதனால என்கிட்ட இல்லாத திறமைகளையும் வளர்த்துகிட்டு, எல்லா இயக்குநர்களுக்கும் பொருந்துற நடிகனாகணும்னு தோணுச்சு. என்னன்னே தெரியாம ஏதோ கும்பலோடு கும்பலாக படம் பண்ணின மாதிரி தோணுச்சு. அந்த சமயத்துல பாலா சார் படம் பண்ணினப்பதான் எனக்கு ஒரு தெளிவு கிடைச்சது.இந்த இடைப்பட்ட காலத்துல நாம தோத்துப் போயிடுவோம்,காணாமப் போயிடுவோம் என்ற பயம் சூறாவளியாக புரட்டிப் போட்டுடுச்சு.என்னை நானே தனியாக நின்னு வளர்த்துக்கணும் என்ற பயம் வந்துச்சு. அதனாலதான் பட த்துக்குப்படம் கத்துக்கிட்டே இருக்கேன்.’’
இந்தப் புத்தாண்டுல இருந்து என்னென்ன பண்றதா புதுப் பட்டியல் போட்டிருக்கீங்க?
“‘அகரம்’ அறக்கட்டளையை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுப் போகணும். இப்போ நூத்தியம்பது பேரோட படிப்புச் செலவை கவனிக்க முடிஞ்சுதுன்னா அடுத்த வருஷம் அது முந்நூறாகணும். அது அப்படியே டபுள் ஆகணும்.இந்த அகரம் என்னோடது மட்டும் இல்லைன்னு சொல்லிட்டேன். என் ஒருத்தனால இவ்வளவு பண்ணியிருக்க முடியாது. நண்பர்களாக சேர்ந்து சுமார் இருநூத்தியம்பது பேரோட பங்களிப்பு இதுல இருக்கு.தானாக வந்து சேர்ந்த இவர்களலதான் அகரம் இன்னும் இயங்கிட்டு இருக்கு.இவங்க கஷ்டப்படுற முந்நூறு குழந்தைகளை மனதார அரவணைச்சு கல்வி கொடுத்திருக்காங்க. கல்வியோட சேர்த்து வேலையையும் வாங்கிக் கொடுக்குற முயற்சியில இருக்கோம்.இது பலமடங்கு பெருகணும்.
அடுத்ததா,இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டுல மட்டும் நமக்கு அடுத்த தலைமுறை வாழ ஐம்பது கோடி மரங்கள் தேவைப்படுதாம்.ஒருத் தர் பத்து மரமாவது நட்டு வளர்க்கவேண்டிய நிலையில இருக்கோம். அதனால மரத்தை நட்டு, அதை நம்ம வாரிசைப் போல வளர்க்கணும். இந்த வருஷத்துல இருந்து என்னால முடிஞ்சளவு பூமி மாசுப்படுறதை குறைக்கிறதுக்கான முயற்சிகள்ல இறங்கப்-போறேன்.’’