http://i62.tinypic.com/10fp4s3.jpg
Printable View
1964ஆம் ஆண்டு வெளிவந்த "தாயின் மடியில்" படத்தில் எம்.ஜி.ஆர். - சரோஜாதேவி இணையுடன் பண்டரிபாய், எம்.ஆர். ராதா, டி.எஸ். முத்தையா, எம்.என். நம்பியார், ஜி. சகுந்தலா, நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். வெற்றி அடையத் துடிக்கும் ஒரு பந்தயக் குதிரையை ஓட்டும் "ஜாக்கி"யாக எம்.ஜி. ஆர். நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் - பி. சுசீலா இணைந்து பாடிய "என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும் எதுவும் நானாகும்" என்ற டூயட் பாடல் எம்.ஜி. ஆர் அவர்களின் வெற்றிப்பாடல்கள் வரிசையில் இடம்பிடித்து இன்றும் செவிகளை நிறைக்கும் பாடல்.
"ராஜாத்தி காத்திருந்தா ரோஜாப்போலே பூத்திருந்தா" - டி.எம்.எஸ். - சுசீலா பாடிய இந்தப் பாடல் ஒரு பொய்க்கால் குதிரை ஆட்டப் பாடல். எஸ்.எம். சுப்பையா நாயுடு தனது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு அமைத்திருந்த இந்தப் பாடலும் செவிகளுக்கு இனிமையையும், கிராமிய மணத்தையும் கொண்டு வந்து சேர்க்கத் தவறவில்லை.
அடுத்து பி. சுசீலாவின் தேன்குரலில் "பார்வையிலே பந்தல் கட்டி" என்று ஒரு சோக கீதம். சோகப் பாடல் என்றாலும் கேட்பதற்கு சுகமான பாடல்.
இவற்றை எல்லாம் விட இன்று வரை நிலையான இடத்தைப் பிடித்திருக்கும் பாடல் டி.எம்.எஸ். தனித்துப் பாடியிருக்கும் "தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை" என்ற பாடல் தான். பாடலின் இணைப்பிசையில் தனது முத்திரையைப் பதித்து காட்சியின் விறுவிறுப்பையும் சோகத்தையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார் இசை அமைப்பாளர் எஸ்.எம். சுப்பையா நாயுடு அவர்கள்.