ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார் ஜீவா.
ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். அதற்காக ஜீவாவைக் கைதுசெய்து, கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.
பாரதிதாசன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, என்,எஸ்.கிருஷ்ணன், ம.பொ.சி என கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அன்புடனும் நட்புடனும் நேசித்தவர் ஜீவா.
உலகத் தமிழ் மாநாட்டு மலரில் எழுதும் போது "பொதுவுடைமைப் பெருந்தகை தோழர் ஜீவாவை கலைவாணர் என்,எஸ்.கிருஷ்ணன் மூலமாக ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்துகொள்ளும் பேறு பெற்றேன்" என்று பெருமையாகக் குறிப்பிட்டார் எம்.ஜி.ஆர்.
ஜீவா என்கின்ற மாமனிதனின் உயிரற்ற சடலத்தைத் தூக்கிச் செல்கிறபோது, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அந்த ஊர்வலத்தில் நடந்து வருகிறார். ம.பொ.சி. வருகிறார். டி.கே.சண்முகம் வருகிறார். கம்யூனிஸ்ட் தலைவர்கள் வருகிறார்கள். இறுதிச்சடங்குகள் நிறைவேற்றப்படுகிற வேளையில் தான் டி.கே.சண்முகம் அங்கே பாடுகிறார்.
சரித்திரப் பிரசித்திப் பெற்ற ஜீவாவின் சரித்திரத்தில் இடம்பெற்ற பாடலைப் பாடுகிறார்.
காலுக்குச் செருப்பு மில்லை
கால்வயிற்றுக் கூழுமில்லை
பாழுக் குழைத்தோ மடா - என் தோழனே
பசையற்றுப் போனோ மடா
நோய்நொடிகள் வெம்புலிபோல்
நூறுவிதம் சீறு வதால்
தாய்தந்தையர் பெண்டுபிள்ளை - என் தோழனே
சாய்ந்து விழக் கண்டோமடா
பாலின்றிப் பிள்ளை அழும்
பட்டினியால் தாயழுவாள்
வேலையின்றி நாம் அழுவோம் - தோழனே
வீடுமுச் சூடும் அழும்
என்று டி.கே.சண்முகம் பாடிக்கொண்டே அழுகிறார், அழுதுகொண்டே பாடுகிறார். ஜீவாவின் உடலுக்கு முன்னே திரண்டு இருந்த அனைவரும் அழுதார்கள்.
எளிமையான தலைவராகவே கடைசி வரை வாழ்ந்த தோழர் ஜீவாவை மனதில் வைத்து போற்றுவோம்.
------------
ஜீவாவுக்கு சிலை எழுப்ப வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு கருத்து வந்தபோது, அப்படி சிலைவைக்கும் பழக்கம் நமது இயக்கத்தில் இல்லை, அது தனிமனித வழிபாடு போன்றது என்று ஒரு கருத்தை ஒருசிலர் சொல்லலாம். கருத்துச் சுதந்திரம் எல்லாக் கட்சியிலும் உண்டு. ஆனால், தோழர் பாலதண்டாயுதம் மறுக்கிறார். ஏன் நீங்கள் பல நாடுகளுக்குச் சென்றுவிட்டுத் திரும்புகிறபோது மார்க்ஸ் சிலையையும், லெனின் சிலையையும் நீங்கள் தூக்கிவரவில்லையா? ஏன் ஜீவாவுக்குச் சிலை வைக்கக்கூடாது? என்று கேட்கிறார்.
அப்படியானால், ஜீவா சிலைக்கு நிதி திரட்ட வேண்டும் என்றபோது, காலில் கிடந்த கொலுசுகளைக் கழற்றித் தருகிறார்கள் மாதர்கள், பொது உடைமை இயக்கச் சகோதரிகள். தங்களுடைய கைகளில் அணிந்து இருக்கின்ற நகைகளைக்கூடத் தருகிறார்கள். சரி பெருந்தொகை வேண்டுமே? மக்கள் திலகம் அள்ளித் தருகின்றவர் எம்.ஜி.ஆரிடத்தில் போகலாம் என்றபோது முதலில் பாலதண்டாயுதம் மறுக்கிறார். தொடக்கத்தில் அவரைப்பற்றி உயர்ந்த அபிப்பிராயம் வைத்து இருக்கவில்லை. அதெல்லாம் சொல்வார், செய்யமாட்டார் என்று கருதினார்.
ஆனால், தோழர் தா.பாண்டியன் அவர்கள், நாம் அவசியம் அணுகுவோம். அதில் என்ன தவறு? என்கிறார். அப்போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் படப்பிடிப்பில் இருக்கிறார். தொடர்பு கொள்கிறார்கள். நாளைக்கு ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு வந்து விடுங்கள் என்கிறார்.
ஸ்டூடியோ வாசலிலேயே சைக்கிளில் ஒரு தோழன் தயாராகக் காத்துக் கொண்டு இருக்கிறான். ஐயா நீங்கள் இன்னாரா? என்று கேட்கிறான். பாலதண்டாயுதமும் தா.பாண்டியனும் செல்கிறார்கள். பின்னாலேயே கார்வரட்டும் என்று சைக்கிளில் போகிறான். அவனைப் பார்த்துவிட்டு, எம்.ஜி.ஆர். சூட்டிங் நடந்து கொண்டு இருந்த இடத்தில் இருந்து ஓடிவருகிறார்.
“பாலன், உங்களைச் சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி, எனக்கு ரொம்பப் பெருமை” என்று அழைத்து அமரவைத்து, அவரே சிற்றுண்டி எல்லாம் பரிமாறுகிறார். மற்ற பணியாளர்களை எல்லாம் வெளியே போகச் சொல்லிவிட்டு அவரே பரிமாறுகிறார்.
சூட்டிங்குக்குக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்என்ற தகவல் வந்தபோது, கோபப்பட்டு அதட்டுகிறார். ‘நான் யாரிடம் பேசுகிறேன் என்று தெரியும் அல்லவா? நான் வருகிறபோது வருவேன்’ என்கிறார்.
‘ஜீவாவுக்குச் சிலை வைக்க வேண்டும்’ என்று இவர்கள் கேட்டவுடன், துள்ளிக்குதித்துக் கட்டி அணைத்துக் கொண்டாராம். “ஒரு மாபெரும் தலைவர். நன்றாகச் செய்யுங்கள் என்று சொன்னதுடன், இவர்கள் கேட்காமலேயே, அந்தச் சிலைக்கு எவ்வளவு செலவு ஆகிறதோ, அதை நானே தருகிறேன்; பீடம் அமைப்பது மற்றும் விழாச் செலவுகளை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்றாராம். அப்படிச் சொன்னது மட்டுமல்ல, 5000 ரூபாய் பணத்தையும் தருகிறார் எம்.ஜி.ஆர்.
courtesy net