-
இரவின் மடியில்
எத்தனை கோணம் எத்தனை பார்வை... இளையராஜா இசை... உடனே டக்கென்று நினைவுக்கு வருவது அலைபாயுதே பாடல் தான்...
ஆனால் தீபன் சக்கரவர்த்தி சசிரேகா குரல்களில் இந்த இனிமையான பாடல் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்..
விதைத்த விதை தளிராய் எழுந்து அரும்பாய் வரும் பொழுது... அருமையான பாடல்..
நடுவே வீணை இசை .... அருமையாக இருக்கிறது... ரம்மியமாக இருக்கிறது..
அருமையான ராகமாலிகை...
கேளுங்கள்...
http://play.raaga.com/tamil/browse/m...arvai-T0002696
-
இரவின் மடியில்
ராமாயணத்தில் சீதையைப் பார்த்து விட்டு வந்த அனுமனிடம் ராமர் கேட்பதற்கு முன்பாகவே அனுமர் உரக்கக் குரல் கொடுத்தாராம்... கண்டேன் சீதையை...
அதைப் போல் கண்டேன் இப்பாடலை... உரக்கக் கூவ வேண்டும் போலுள்ளது இணையத்தில் இப்பாடலைக் கண்டபொழுது...
இனம் தெரியாத அல்லது அதிகம் அறிந்திராத கவிதை மலர் திரைப்படத்தில் இடம் பெற்ற அலைகளே வா... பாடலைக் கேட்கும் போதே மெய் சிலிர்க்கும் அற்புதமான படைப்பு...
எஸ்.பி.பாலாவின் உச்சஸ்தாயி குரலில் கூட இனிமை நம்மை மயக்க வைக்கிறது..
மழையே மழையே என அவர் கூவும் போது நாமும் கூட குரல் கொடுக்கலாம் போல உணர்வோம்...
இளையராஜா என்னும் சிறந்த இசை மேதையின் சிறந்த படைப்புகளில் குறிப்பாக டாப் 10ல் வரவேண்டிய பாடல்..
என்ன ஒரு சிம்ஃபோனி... என்ன ஒரு காம்போஸிஷன்...
முதல் முறையாக இப்பாடலைக் கேட்பவர்கள்... குறைந்தது 15 நாட்களாவது இப்பாடலின் Hangoverல் இருப்பார்கள்..
http://play.raaga.com/tamil/browse/m...Malar-T0002765
-
இரவின் மடியில்
பார்த்துப் பார்த்து செதுக்கிய சிற்பம் சிதிலமானால் மனம் என்ன பாடுபடும்... பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடு விற்க வேண்டி வந்தால் மனம் என்ன பாடுபடும்...
நினைத்து நினைத்து வரைந்த ஓவியம்...???
இந்த உணர்வை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா...
இசையரசியின் குரல் விடையளிக்கிறது...
இளையராஜாவின் இசையில் கேள்வியும் நானே பதிலும் நானே படத்திலிருந்து...
http://play.raaga.com/tamil/browse/m...Naane-T0002767
-
இரவின் மடியில்
இளையராஜா இசையில் மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரல்களில் மகனே மகனே படத்திலிருந்து மனதை மயக்கும் ஒரு மதுர கானம்...
மது மலர்களே தினம் மலர்ந்தது..
http://play.raaga.com/tamil/browse/m...agane-T0002785
-
இரவின் மடியில்
ஜேசுதாஸ் வாணி ஜெயராம் சங்கர் கணேஷ் கூட்டணி என்றால் இனிமைய உத்தரவாதமல்லவா...
படம் ராஜ்ஜியம் இல்லாத ராஜாக்கள்..
சுகம் தரும் பொன்மாலைக் காற்று வராமலா போய் விடும் இந்த இனிமையான பாடலைக் கேட்டால்...
http://play.raaga.com/tamil/browse/m...akkal-T0002336
-
இரவின் மடியில்
அழகே.. அழகே.. நெஞ்சம் முழுதும் நீ....
கவிஞர் புலமைப்பித்தனின் வரிகளில் இப்பாடலின் இலக்கியத் தரம் போற்ற வேண்டிய ஒன்று..
இசையரசி மற்றும் மலேசியா வாசுதேவன் குரல்களில் ....சொக்க வைக்கும் பாடல்..
இடம் பெற்ற திரைப்படம் வாலிபமே வா வா...
இப்பாடலில் இசையரசியின் குரல்களில் வா வா என்ற வார்த்தைகளின் உச்சரிப்பு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
http://play.raaga.com/tamil/browse/m...-Vava-T0002432
-
வாசு சார்,
நீங்கள் இன்று தரவேற்றிய சபதம் படம், அந்த பாடல் ஆகியவை என்னை எங்கேயோ இட்டு சென்று விட்டது. 1971 ஏப்ரல் மாதம் வெளியான் படம். மதுரையில் தங்கத்தில் வெளியானது. அங்கே பார்த்தேன். இந்தப் பாடல் பல நாட்கள் நான் முணுமுணுத்த பாடல். படம் சுவாரஸ்யமாகவே போகும். ஆனால் அதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு வந்த அக்கா தங்கை படத்தின் கதைக்கும் இதற்கும் நிறைய similarities இருக்கும்.
1971 ஏப்ரல் இறுதியில் ஸ்கூல் கோடை விடுமுறை காலத்தில் சென்னைக்கு குடும்பத்துடன் சென்றோம். அதற்கு சில காலங்களுக்கு முன்தான் மதுரையிலிருந்து சென்னைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட ஆரம்பித்திருந்தது. எனக்கு தெரிந்தவரை அதற்கு முன்பு ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில்தான் சென்னைக்கு ஓடிக் கொண்டிருந்தது. அதுவும் தஞ்சாவூர் கும்பகோணம், மாயவரம் வழியாக ஓடிக் கொண்டிருந்தது. திண்டுக்கல் திருச்சி வழியாக பாண்டியன் அதுவும் இரவில் ஏறினால் காலையில் சென்னை சென்று விடலாம் என்ற சௌகரியம். அந்தக் காலத்தில் அனைத்து ரயில்களும் செங்கல் சிவப்பு அல்லது மரூன் கலரில் இருக்க பாண்டியன் எக்ஸ்பிரஸ் கோச்கள் மட்டும் பச்சை கலரில் [olive green] அமைந்திருக்கும். அந்த ரயிலே ஒரு prestigious train-ஆக பேசப்பட்டுக் கொண்டிருந்த காலம். அந்த லீவில் சென்னை செல்லும்போது பாண்டியனில்தான் சென்றோம் அதுவே ஒரு சாதனையாக தோன்றியது. ரயில்வேயில் வேலை பார்த்த என் தாய் மாமன் எங்களை வழியனுப்ப வந்ததும் அவர் அடித்த கமன்ட்டும் நினைவில் இருக்கிறது.
எங்கள் மதுரை மாநகரம் அப்போது நகராட்சியாக இருந்தது. அது நிலை உயர்த்தப்பட்டு மாநகராட்சியாக 1971 மே 1 முதல் மாற்றம் பெறுவதாக இருந்தது. சென்னைக்கு பிறகு தமிழகத்தில் இரண்டாவது மாநகராட்சியாக உயர்வு பெற்றது எங்கள் மதுரை. நகராட்சி சேர்மன் ஆக இருந்த மதுரை முத்து மதுரையின் முதல் மேயர் ஆக பதவி ஏற்க இருந்தார். அந்த சுட்டிக்காட்டித்தான் என் மாமன் என்ன சொன்னார் என்றால் அன்று [அதாவது 1971 மே 1 அன்று மதுரை மக்கள் அனைவருக்கும் சிறப்பு பரிசு கொடுக்கிறார்கள் என்றும் அதை வாங்காமல் நீங்கள் சென்னை போகிறீர்களே என்று கிண்டல் அடித்தார்.
சென்னை வந்து நான்கு நாட்கள் ஒரு உறவினர் வீட்டில் தங்கினோம். அங்கே என் வயதையொத்த இரு பையன்கள் இருந்தார்கள். ஆகவே சினிமா பீச் என்று பல இடங்களுக்கு சென்றோம். முதல் நாள் ஸ்டார் திரையரங்கில் மனோஜ் குமார் நடித்த பூரப் அவுர் பச்சிம் [கிழக்கும் மேற்கும்] படம் பார்த்தோம். உங்களுக்கு தெரிந்திருக்கும் உப்கார் படத்திற்கு பின் மனோஜ் குமார் படத்தில் தன் கேரக்டர் பெயர் பாரத் என்றுதான் வைத்துக் கொள்வார். ஆனால் நமக்கு என்றும் ஒரே "பாரத்"தானே.
அதற்கு ஒரு வருடம் முன்னர்தான் தேவி மற்றும் தேவி பாரடைஸ் திரையரங்குகள் திறக்கப்பட்டன. அந்த வளாகத்தைப் பற்றியும் அந்த இரு தியேட்டர்களைப் பற்றியும் பல்வேறு விஷயங்கள் சொல்வார்கள். குறிப்பாக தேவி திரையரங்கில் திரையிடப்பட்ட The Airport என்ற திரைப்படத்திற்கு டிக்கெட்டுகள் flight ticket போலவே அடித்துக் கொடுக்கப்பட்ட விஷயம் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆகவே அந்த திரையரங்கத்தையும் காண வேண்டும் என்ற ஆவல். போதாதற்கு நமது சொர்க்கம் வேறு அங்கு வெளியாகி சாதனை புரிந்திருந்ததனால் ஆவல் அதிகமானது. தேவியில் ஓடிய ஆங்கிலப் படத்திற்கு டிக்கெட் கிடைக்காமல் தேவி பாரடைஸில் அப்போது ஓடிக் கொண்டிருந்த பர்தே கே பீச்சே [திரைக்கு பின்னால்?] என்ற வினோத் மெஹ்ரா நடித்த படத்திற்கு சென்றோம். பாரடைஸ் அரங்கிற்கு செல்ல வளைந்து வளைந்து செல்லும் அந்த சரிவான ramp-ல் ஏறி சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது.
இவ்வளவும் பார்த்த பின் நமது மெக்காவிற்கு போகாமல் இருக்க மனம் இடம் கொடுக்குமா? சென்னைக்கு வரும்போதே நமது திரையரங்கில் படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் பேராவலாக மாறியது. 1971 பிப்ரவரி 6 அன்று வெளியான தங்கைக்காக சாந்தியில் ஓடிக் கொண்டிருந்த விவரம் தெரியும். ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டையும் தாண்டி படம் 75 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்கின்ற போது அதையும் பார்த்துவிட துடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் என் துரதிர்ஷ்டம் நாங்கள் சென்னை வந்து இறங்கவும் தங்கைக்காக 83 நாட்களை நிறைவு செய்து சாந்தியிலிருந்து மாற்றப்படுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்றது. நம்மை குறை சொல்ல வேண்டுமென்று நினைப்பவர்கள் சாந்தியில்தானே ஓடியது என்பார்கள். ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் சாந்தி நமது பல படங்களுக்கு பாதகமாகவேதான் செயல்பட்டிருக்கிறது.
சரி நமது படம் பார்க்க முடியவில்லை. அரங்கையாவது பார்ப்போம் என்று அப்போது ஓடிக் கொண்டிருந்த ஒரு இந்திப் படத்திற்கு சென்றோம். பால்கனியில் இருந்து படம் பார்த்தோம். படம் பெயர் இப்போது சட்டென்று நினைவிற்கு வரவில்லை. மசாலா படம். படத்தில் பெண்கள் கூட சண்டை போடுவார்கள். ஒரு வேளை ராகவேந்தர் சாருக்கு நினைவிருக்கலாம். நமது சாந்தி திரையரங்கில் படம் பார்த்ததும் ஒரு சாதனையாக தோன்றியது.
திரும்ப ஊருக்கு கிளம்பும் நாள். அன்றுதான் பாரகன் திரையரங்கம் சென்றோம். சபதம் படத்தை நான் ஏற்கனவே பார்த்து விட்டேன் என்று சொல்லியும் என்னை கூட்டிக் கொண்டு போனார்கள். ஓரளவிற்கு விவரம் தெரிந்து சினிமா பார்க்க தொடங்கியவுடன் என்னை நடிகர் திலகம் முழுமையாக ஆட்கொண்டார். அதற்கு பிறகு அடுத்த தலைமுறையை சேர்ந்த ஜெய், ரவி ஆகிய இருவரில் ரவி மீது ஈர்ப்பு வராதது மட்டுமல்ல பிடிக்காமலும் போனது. அதற்கு முக்கிய காரணம் தனக்கு என்று ஒரு சொந்த பாணியை கடைபிடிக்காமல் நடிகர் திலகத்தை ஜெராக்ஸ் எடுப்பார்.
நடக்கும் நடையில் கூட ஏன் வலது கையில் வாட்ச் கட்டும் ஸ்டைலில் கூட அப்படியே சிவாஜி. அதனாலேயே பெரிதாக ஒன்றுமில்லாவிட்டாலும் யாரையும் காப்பியடிக்காமல் சுறுசுறுப்பாக திரையில் தோன்றிய தென்னகத்து ஜேம்ஸ்பாண்டை பிடித்துப் போனது. 1971 பொது தேர்தல் நேரத்தில் ரவி திமுகவிலும் சேர்ந்த தகவல் வரவும், தேர்தல் கூட்டங்களில் நடிகர் திலகத்தை தாக்கிப் பேசிய தகவல்களும் வரவே சுத்தமாக மனசிலிருந்து விலகிப் போனார். நாங்கள் போனபோது பாரகன் திரையரங்கில் ரவியின் கட் அவுட்டிற்கு கருப்பு சிவப்பு காகிதப்பூ மாலை வேறு போட்டிருந்தைப் பார்த்ததும் மனதில் செம வெறுப்பு.
அன்று மாலை லஸ் கார்னரில் போய் ஒரு கடையில் கிரிக்கெட் பேட் மற்றும் ball அடங்கிய செட் வாங்கிக் கொண்டு மதுரை திரும்பி சென்றேன். நான் வாங்கியது கிரிக்கெட் ball என்று நினைத்திருக்க மதுரை சென்று விளையாட ஆரம்பித்தவுடன்தான் தெரிந்தது அது cork ball என்று. தேவி பாரடைஸ் தியேட்டர் டிக்கெட்டை பத்திரமாக வைத்திருந்தேன். மதுரையில் நண்பர்களுக்கு காட்டுவதற்காக. ஆனால் கோடை விடுமுறை அதுவும் மே முதல் வாரம் போனதால் ஒரு மாத காலத்திற்கு டிக்கெட்டை பத்திரப்படுத்தி வைத்திருந்து ஜூன் முதல் வாரம் ஸ்கூல் திறந்தவுடன் அதை காட்டி மகிழ்ந்தது இப்போதும் பசுமையாக நெஞ்சில் நிற்கிறது.
ஒரு பாடல் நீங்கள் பதியப் போக எனக்குள் இத்துணை நினைவலைகளை அது கிளறி விட்டு விட்டது. பாடல் பற்றிய என் கருத்து சிறியதாகவும் அதோடு இணைந்திட்ட பல்வேறு நிகழ்வுகள் கூடுதலாகவும் அமைந்து விட்டன. மிக்க நன்றி வாசு சார். நிஜமாகவே நினைத்தாலே இனிக்கிறது!
அன்புடன்
-
முரளி சார்
சாந்தி வாசலிலேயே நின்று கொண்டிருந்தாலும் உள்ளே சென்று ஹிந்திப் படம் பார்த்ததில்லை அதிகம். தியேட்டருக்கு சென்று மற்ற மொழிப்படங்களை அதிகம் பார்த்ததில்லை. சில குறிப்பிட்ட மிக பிரபலமான படங்கள் விதிவிலக்கு, ஆராதனா, யாதோன் கி பாரத், ஹம் கிஸி ஸே கம் நஹின், பாபி, மேரா நாம் ஜோக்கர், போன்றவை. எனவே தாங்கள் குறிப்பிட்ட படம் எனக்கும் நினைவில் இல்லை.
-
மதுர கானம் திரிக்கு நட்சத்திர அந்தஸ்து..
இவ்வளவு விரைவில் அதுவும் தொடங்கிய சில நாட்களிலேயே நட்சத்திர அந்தஸ்து பெற்று விட்ட மனதைக் கவரும் மதுர கானம் திரிக்கும் பங்கேற்பாளர் ஒவ்வொருவருக்கும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
-
இன்றைய 'தி இந்து' தமிழ் நாளிதழில் வந்துள்ள அருமையான மானா பாஸ்கரன் அவர்கள் எழுதியுள்ள நடிகர் திலகத்தின் புகழ்பாடும் கட்டுரை.
'நான் சிவாஜி கட்சி'
http://i1087.photobucket.com/albums/...513565ba77.jpg
http://i1087.photobucket.com/albums/...MG_0001-10.jpg