நேற்று இரவு சன் டி.வி.யில், மறைந்த திரை இசை சக்ரவர்த்தி எம்எஸ்விக்கு அஞ்சலி செலுத்துவது போல அமைந்த ‘என்னுள்ளில் எம்எஸ்வி’ என்ற பெயரில் திரு. இளையராஜா அவர்கள் நடத்திய இசை நிகழ்ச்சியின் தொகுப்பை பார்த்தேன்.
எல்லாம் இனிய பாடல்கள்தான். இருந்தாலும் பாடப்பட்ட பாடல்களோடு என்னால் அவ்வளவாக ஒன்ற முடியவில்லை. பாடல்கள் நாம் கேட்பதை விடவும் ஒரு மாத்திரை இழுவையாக பாடப்பட்டது போல தோன்றியது. குலேபகாவலியில் ‘மயக்கும் மாலை பொழுதே..’ ரொம்ப ஸ்லோவாக பாடப்பட்டதைப் போல உணர்ந்தேன். சில பாடல்களில் பாடகரின் குரலை இசைக்கருவிகள் அமுக்கி விட்டதைப் போன்ற உணர்வு.
எனக்கு மிகவும் விருப்பமான பாடல்களில் ஒன்றான மாலையிட்ட மங்கை படத்தில் வரும் ‘நானன்றி யார் வருவார்...’ பாடல் எனக்கு திருப்திகரமாக இல்லை. ஒருவேளை வெண்கல கான மணி திரு.டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் குரலோடு ஒப்பிட்டு பார்த்ததாலோ என்னவோ தெரியவில்லை.
திரு.இளையராஜா அவர்களையோ, நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்களையோ, இசைக் கலைஞர்களையோ நான் குறை சொல்லவில்லை. நாம்தான் வேறுபாடு இல்லாமல் எல்லாக் கலைஞர்களையும் மதிப்பவர்களாயிற்றே. (இதை சொன்னதும் தலைவர் தொடர்புடைய சம்பவம் ஒன்று நினைவு வருகிறது. கடைசியில் சொல்கிறேன்) அப்படி அந்த இசைக் கலைஞர்களை குறைகூறும் அளவுக்கு எனக்கு தகுதி கிடையாது. நான் இசையில் விற்பன்னனும் அல்ல. அந்த இசை நிகழ்ச்சியை கேட்டபோது எனக்கு ஏற்பட்ட உணர்வைத்தான் சொல்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
‘சரி... இதையெல்லாம் எதற்கு இங்கே சொல்கிறாய்? தலைவருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? தலைவரைப் பற்றி ஏதாவது இருந்தால் சொல்’ என்று நீங்கள் கூறுவது கேட்கிறது. வரேன்... வரேன்.
திரு. இளையராஜா அவர்கள் குலேபகாவலி படத்தில் வரும் ‘மயக்கும் மாலை பொழுதே நீ போ போ ’ பாடலுக்கு முன்னுரையாக பேசும்போது சொன்னார். நம்மில் பலருக்கு ஏற்கனவே தெரிந்த தகவல்தான். அந்தப் பாடல் வேறொரு படத்துக்காக திரு.கே.வி. மகாதேவன் அவர்கள் இசையமைத்த பாடல் என்று சொன்னார். படத்தின் பெயரை அவர் சொல்லவில்லை. படத்தின் பெயர் கூண்டுக்கிளி. இதுபற்றி ஏற்கனவே திரியில் சொல்லப்பட்டதாக நினைவு. அந்தப் பாடலுக்கு மட்டும் இசையமைப்பு திரு.கே.வி. மகாதேவன் அவர்கள். ஆனால், டைட்டிலில் அவர் பெயர் இருக்காது.
முக்கியமாக இன்னொரு விஷயம் சொன்னார். ‘அப்பேர்பட்ட இனிய மெலடியான பாடலை அன்றைய ‘சூப்பர் ஸ்டார் எம்ஜிஆருக்கு’ போட்டார்கள்’ என்று திரு.இளையராஜா சொன்னார். எத்தனை பேர் நிகழ்ச்சியை பார்த்தீர்களோ தெரியாது. பார்த்தவர்களுக்குத் தெரியும். ‘ஆனால், இப்போதைய சூப்பர் ஸ்டாருக்கு அதுபோன்ற பாடலை போட முடியாது’ என்று மேடைக்கு எதிரே அமர்ந்திருந்த திரு.ரஜினிகாந்த் அவர்களை பார்த்து சொன்னார்.
இதில் இன்னொரு பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால், அப்போதே, அதாவது குலேபகாவலி வந்த காலத்திலேயே சூப்பர் ஸ்டாராக இருந்த தலைவரை திரு.இளையராஜா அவர்கள், ‘சூப்பர் ஸ்டார்’ என்று சொன்னதை சன் டி.வி. நிறுவனம் எடிட் செய்யாமல் விட்டது. சன்.டி.விக்கு நன்றி.
‘நாம்தான் எல்லாக் கலைஞர்களையும் வேறுபாடு இல்லாமல் மதிப்பவர்களாயிற்றே’ என்று மேலே சொல்லும்போது, தலைவர் தொடர்புடைய சம்பவம் நினைவுக்கு வருகிறது, கடைசியில் சொல்வதாக சொன்னேனே. சொல்கிறேன்.
நடிகர் திரு. டெல்லி கணேஷ் அவர்கள் சிறந்த நடிகர். ஒரு பேட்டியில் அவர் கூறியிருந்ததை சொல்கிறேன். பசி என்ற படத்தில் அவர் நடித்திருந்தார். அந்தப் படத்தின் 100வது நாள் விழாவில் முதல்வராக இருந்த தலைவர் கலந்து கொண்டு கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கினார். திரு.டெல்லி கணேஷ் அவர்கள் பின்னாளில் பிரபலமான குணச்சித்திர நடிகராக விளங்கினாலும், ‘பசி’ படம் வந்தபோது அவ்வளவு பிரபலம் இல்லை.
ஒவ்வொரு கலைஞராக தலைவர் விருது வழங்கி வந்தார். புகைப்படக்காரர்கள் தொடர்ந்து புகைப்படங்கள் எடுத்துத் தள்ளினர். திரு.டெல்லி கணேஷ் அவர்களின் முறையும் வந்தது. அவருக்கும் தலைவர் விருது வழங்கினார். திரு.டெல்லி கணேஷ் நன்றி தெரிவித்துவிட்டு போக முற்படுகையில், தலைவர் மேடைக்கு கீழே இருக்கும் புகைப்படக்காரர்களை பார்த்து ‘இவரையும் நிறைய புகைப்படம் எடுங்கள். கலைஞர்களுக்குள் சிறிய கலைஞர்கள், பெரிய கலைஞர்கள் என்ற வேறுபாடு இருக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டிருக்கிறார். அப்புறம் என்ன? ப்ளாஷ் மழைதான்.
அப்படி... பிரபலமாக இல்லாத கலைஞர்களையும் வேறுபாடு இல்லாமல் மதிக்கக் கூடியவர் தலைவர். இதில், திரு.டெல்லி கணேஷை எல்லாரும் போட்டோ எடுத்தால் என்ன? எடுக்காவிட்டால் என்ன? என்று இல்லாமல் அவருக்கும் அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று கூறிய தலைவரின் உயரிய பண்போடு, அவரின் விழிப்புணர்வை பார்த்தீர்களா?
டெல்லி கணேஷ் அவர்களுக்கு விருது வழங்கிக் கொண்டிருக்கும்போதே, புகைப்படக்காரர்கள் அதிகமாக அவரை புகைப்படம் எடுக்காததை கவனித்திருக்கிறார். டெல்லி கணேஷ் அவர்களை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, ப்ளாஷ் லைட்டுகள் குறைவாக மினுங்கியதை வைத்தே கண்டுபிடித்திருக்கிறார். எந்த வேலையில் நாம் ஈடுபட்டிருந்தாலும் அதில் முழுகவனம் இருப்பதோடு, நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வும் வேண்டும் என்பதும் தலைவரிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களில் ஒன்று. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்