-
தன்னுரையை வீரிட்டுத் துவங்கும் குழந்தை அறியாது
தனக்குக் கொடுக்கப்பட்ட மணித்துளிகள் எத்தனையென
முன்னுரையை துவங்கியதும் முடிந்துவிடுமா பேச்சு
அருமையான உச்ச கட்டத்தில் அணைந்துவிடுமா மூச்சு
கொட்டாவிகளை ஏளனப் பார்வைகளைக் சந்திக்கணுமா
வீரனாய் சூரனாய் சாதனையாளனாய் இறுமாந்து திரிந்து
கோபுரத்தைத் தாங்கும் பதுமையாய் தன்னை பாவித்து
இம்மேடையில் முழங்குவதுதானே என்றும் வாடிக்கை
-
வாடிக்கைக் கடையோரம்
சைக்கிளை நிறுத்தி
பையில் துழாவி
சின்னஞ்சில்லறைகளைக்
கொடுத்து
ஒரே ஒரு சிகரெட் வாங்கி
கடை மூலையில்
ஒய்யாரமாய் இளம்பெண்போல்
நெளிந்து
அவள் உதட்டுச் சிவப்பு போல்
தன் உதட்டிலும் சிவந்து கனன்ற
முறுக்குக் கயிறைப் பற்றி
வஸ்துவுடன் முத்தமிட்டு
ப்ஹா எனப் புகையை உறிஞ்சி
உடன் அக்கம்பக்கம்
தெரிந்தவர்களா என நோட்டமிட்டு
கொஞ்சம் கடை பின்னால் மறைந்து
சில நிமிஷங்களையும் சிகரட்டையும்கரைத்து
கடலைமிட்டாய்
பாக்கு
சூடமிட்டாய்
வாயில் போட்டு மென்று
போதாக்குறைக்குத்தண்ணீர் குடித்து
வீட்டுக்குச் சென்றது
அந்தக் காலம்..
முழுப்பாக்கெட்டாய்
வைத்து
இஷ்டம் போல்
குடிக்க முடிந்தாலும்
அது கடனே, இடியட்டே
விடமுடியவில்லையே என
விரக்தியில் செய்வது தானேயன்றி
இல்லை
அந்த சுவை, சுகம், த்ரில்..
-
சுவை சுகம் த்ரில் யாருக்குப் பிடிக்காது
பல்லும் சொல்லும் போனாலும் விடாது
திரையும் நரையும் வந்தாலும் குறையாது
பட்டையும் கொட்டையும் அதை அறுக்காது
நாடி நரம்பை சூடேற்ற காரணிக்கள் பலப்பல
ஐம்புலன் அனுபவிக்க ஆயிரம் இன்பமிருக்க
ஆழ்ந்து ஆராய்ந்து கவனித்துப் பார்க்கையிலே
விடாது மக்கட்சேவை செய்வதும் போதையே
-
போதையில்தான் தவழ்ந்த கூடு
உபாதையில்நின் விழுந்த சுற்றம்
நீளுமேஅழிவு பாதை பாடை
பாருமேநான் தரும் அகங்காரம்
-
அகங்காரம் அறியாது
அழகான அன்னப்பறவை
வண்ணத்தோகை மயில்
காட்டுக் கொம்பானை
பிடறி சிலிர்க்கும் சிங்கம்
இயல்பாய் வாழும் அவை
ஆறறிவு அற்பனுக்கு
அநாவசிய தலைக்கனம்
-
தலைக்கனம் நிரம்பியவள் தான் அவள்..
அழகு அப்படி..
பக்கத்து வீட்டு மாமியின் பெண்..
பார்வை கூர்க்கத்தியாய்ப் பாய்வதில்
உறைந்தவர்கள் ஏராளம்..
நடையில் ஒரு அசாத்தியத் திமிர்..
தெருப் பையன்களுக்கு
வெளியே தேவதை..உள்ளே ராட்சசி..
நடுத்தரப் பெண்மணிகளுக்கு
’யார்கிட்ட மாட்டப் போறாளோ” எனக் கவலை..
ஒரு சுபயோக சுபதினத்தில்
திருமணம் நடந்து
வெளி நாடு போய்விட்டெல்லாம்
திரும்பி வந்த அந்தப் பெண்ணின்
பார்வையில்..
ஏதாவது மாற்றம் ம் ஹீம்..
என்ன
கூட ஒரு குட்டி ஜெராக்ஸ் சிறுமி..
அம்மாவின் குணம் அப்படியே வர..
கண்களில் அலட்சியம்..
பக்கத்து வீட்டுப் பாட்டி சொன்னாள்..
ம்ம்
இது தான் போலிருக்கு
வாழையடி வாழை..
-
வாழையடி வாழை இன்று
பழங்கதை ஆகிப்போனது
குழிப்பணியாரமும் அப்பமும்
வழக்கொழிந்து போனபின்
ஒரு இனத்தின் அடையாளம்
என்று எதுவும் மிஞ்சுமோ
-
மிஞ்சுமோ எதுவும் என்று
பிஞ்சுகளுக்கு அமுதூட்டும்
அம்மாக்கள் அஞ்சுவதுண்டோ!!!
-
அஞ்சுவதுண்டோ வெறி பிடித்த காமுகர் வன்புணர
புதிய மலரை பூக்காத மொட்டை காய்ந்த சருகை
பதறுது நெஞ்சம் துடிக்குது உடம்பின் அணு அனைத்தும்
எத்தனை கருடபுராண தண்டனைகள் போன்றவை கேட்டும்
எத்தனை கொதிக்கும் எண்ணெய் கொப்பரைகள் கேட்டும்
எரிக்கும் கொடிய நரகச் செந்தீயின் வர்ணனை கேட்டும்
பயமறியா பாவிகள் இவரை என்னவெலாம் செய்யலாம்
கொடுக்கும் சித்ரவதையில் நடுங்க வேண்டுமடுத்த பாவி
-
பாவியாய் போனேன் என்று..
..பலமுறைப் புலம்பும் பாட்டி
காவியில் துணியை இட்டு
..கண்களில் சோகம் காட்ட
ஆவியாய் இருக்கக் கூடும்
..அன்புடை தாத்தா என்று
கேவியே அம்மா சொல்ல..
..கூவினாள் இல்லை என்று..
ஏதோ என்னை விட்டுவிட்டு
..என்னமோ போனார் விட்டுவிடு
யாதோ புழுவாய் கொடிமரமாய்
..ய்வனியில் பலவாய் உருவ்த்தில்
தோதாய் அவரும் இருக்கட்டும்
..தொன்மை யாக வாழட்டும்
நாதன் அவரைத் தான் தேடி
...நாளில் நானும் சேர்ந்திடுவேன்..
..
-
சேர்ந்திடுவேன் நொடியில் நான்
காற்றினும் கடிதாய் விரைந்து
மசியில் எழுதி பசையால் ஒட்டி
முத்திரை இட்டு ஊர்தியில் ஊர்ந்து
கதவைத் தட்டாமல் கையில் பெறாமல்
கணத்தில் கிடைக்கும் மின்னஞ்சல்
-
மின்னஞ்சல் என்பது
உன் முகநூல் கண்களில்
நோக்கிய போது
என் இதயத்தில் புகுந்த
மின்னல்தானே..
-
மின்னல்தானே முன்னால் வரும்
இடி அதன் பின்னால் உருண்டு வரும்
ஆயத்தம் முடிந்து மழை தொடரும்
திட்டித் தீர்த்தவள் அசையாத கல்லாய்
கணவன் சாக்ரட்டீஸ் அமர்ந்திருக்கவும்
வாளி தண்ணீரை தலையில் கொட்டிவிட
இடிக்குப் பின் மழை இயல்பு என்றான் ஞானி
தத்துவம் அறிந்தான் தத்தை நெஞ்சை அல்ல
-
தத்தை நெஞ்சை அல்ல
...தாவும் கண்க ளாலே
பித்தம் கொண்ட அவனும்
...பேச்சி ழந்து போக
வித்தை ப்லவாய் செய்தே
... வேகம் கூட்டி ஆட
சித்தம் மாறி அவளும்
..சற்றே உள்ளம் தந்தாள்..
உள்ளந்தந்த நங்கை
..உவகை கொண்டு பொங்கி
கள்ளப் பார்வை கூட்டி
..காத லோடு சற்றே
தள்ளிப் போகும் போக்கில்
..தழுவத் தானே செய்ய
மல்லுக் கட்டும் உணர்வில்
..மங்கை யைத்தான் அணைத்தான்
-
அணைத்தான் விளக்கை
அழைத்தான் நித்திரையை
ஊடல் கொண்ட உறக்கமோ
ஓடி ஒளிந்து விளையாட
எண்ணத் துவங்கினான்
ஒன்னு ரெண்டு மூனு என
முடிந்த நாளின் ஆயாசமும்
காத்திருக்கும் காலை அவதிகளும்
மத்தளமாய் இருபுறம் தட்ட
தவிப்பவன் பாவம் அப்பாவி
-
அப்பாவியாய்
நான் சொல்லும்
வர்ணனைகள் புரியாதது போல்
கொஞ்சம் நெற்றிச் சுருக்கி
கண்களில் கோபம் காட்டி
குட்டிக் கவிதையாய்
கேள்விக்குறி தெரிவிக்கும்
உன் செயல் என்னசொல்லத்
தோன்றுகிறது தெரியுமா..
அடிப்பாவி
-
"அடிப்பாவி மகளே
என்ன காரியம் சென்சுட்டே"
மாரில் அடித்துக்கொள்ளும் அன்னையும்..
இருதய ஓட்டம் நின்றவராய்
தந்தையும்..
"கொடுமா அருவால"
ஓடி பிடுங்கும் அண்ணனும்..
"இதை என்றோ செய்திருக்க வேண்டும்"
நினைத்து நிற்கின்றாள் காரிகை..
கெடுத்தவனே நித்தம் கூறுபோட
சமாதான கல்யாணம் செய்துவைத்த
சமூகத்தை உமிழ்ந்தவாறே..
கொய்த நீசன் தலை மீது..
-
தலை மீது வைத்துக் கொண்டாடப்பட
மாமேதையாய் பெரிய படிப்பாளியாய்
உயிர்கள் காக்கும் ஆதூரமுள்ளவனாய்
உன்னத நெறிகள் கொண்ட உத்தமனாய்
வய்யம் உய்ய வந்துதித்த அவதாரனாய்
இருக்க வேண்டாம் திரையில் உதடு கவ்வி
கொஞ்சி கையை காலை உதறி ஆடி பாடி
பொல்லாத போலி பசப்பு வசனங்கள் பேசி
பல கோடிகளில் புரளும் யோகம் போதும்
பாலாபிஷேகம் பீராபிஷேகம் வாய்க்கும்
-
வாய்க்குமா இந்த நேரம்
..வண்ணமாய்ச் சொல்லு நீயே
நோய்களும் பற்றி என்னை
.. நொடியினில் வீழ்த்த லாகும்
காய்த்திடும் விரல்கள் மீண்டும்
..கடிதென நாளை எண்ணி
தோய்ந்திடும் தாப எண்ணம்
..தோகையைக் கொல்லு மன்றோ..
வஞ்சி அவளும் கேட்டுவிட
..வாலிபன் சற்றே தான் தயங்கி
மிஞ்சிக் கால்கள் பார்த்தபடி
..மென்மை யாகச் சொல்லலுற்றான்
கொஞ்சும் கிளியே கலங்காதே
..கோவைப் பழமாய்ச் சிவக்காதே
விஞ்சிப் போனால் ஒருமாதம்
..விரைந்தே போகும் பொறுவென்றான்..
-
பொறுவென்றான் கடன் வாங்கியவன்
நொந்துபோனான் பணம் கொடுத்தவன்
காந்தி கணக்கோவென கலங்கினான்
ஆழம் தெரியாமல் காலை விட்டவன்
-
காலை விட்டவன்
கொஞ்சம் முறைத்தான்..
வலியில்லை என்றால்
ஏன் சொல்கிறாய்..
குறுஞ்சிரிப்பு அவள் முகத்தில்
உன் கவலை எனக்காக்ப்படும்போது
உன் முகம் அழகாகிறது மேலும்..
ஒருகணம் கோபவிழி பார்த்து
மறுகணம் சிரித்துச் சொன்னான்
‘வெவ்வெவ்வெவே”
-
வெவ்வெவ்வெவ்வே சொல்லும் சின்ன கண்ணு
உன் பாதம் கொஞ்ச மண்ணில் ஆடு கண்ணு..
இந்த தம்பட்டியான் தப்பும் தார தப்ப
உன் கலை கொஞ்சும் ஆட்டத்த காணத்தானே..
நாரோடு பூகோர்த்து மாலை சென்சு
உன் கழுத்துக்கு ஆரணம் போட்டுவிட்டேன்..
மஞ்சளும் குங்குமம் பிடிக்குமென்று
உன் நெற்றியில் நிலவாக இட்டுவிட்டேன்..
யாராரோ அவர் குறைகூற நித்தம் நித்தம்
உன் தலை மீது ஏற்றிடுவார் பாரம் மொத்தம்..
பாரிப்போ பார் எவரும் போர்வைக்குள்ளே
நித்திரை கொள்வதை உன்னை பனியில் தள்ளி..
உன் தம்பட்டியான் நான் தட்டும் தாளம் கண்ணு
வந்து மனம் குளிர ஆட்டத்த போடு கண்ணு..
கண்ணாத்தா பொன்னாத்தா மாரியாத்தா
வித விதமா பேர்வெச்சு அழைக்கிறாங்க..
படையலும் வேண்டுதலும் கோடி கோடி
உள்ளே எத்தனை சுயநலம் பாரு கண்ணு..
குறை தீர்க்கும் வேலையை ஒத்திவை நீ
மனம் குளிரும் வேளையில் பாதம் வை நீ..
திசை எங்கும் சந்தோசம் சிரிபலைகள்
ஆடிட ஆடிட ஆடு கண்ணு..
தப்பன் தாரை தப்பை கண்டு உருகிடவே
கணம் ஆடிட ஆடிட ஆடு கண்ணு..
-
கண்ணு கட்டிய தேவதை
கண்ணை திறந்தால்தான் புரியும்
வழக்குகளுக்கு வழங்குவது
நியாய தராசின் தீர்ப்பல்ல
அநியாய பரிசின் தீர்ப்பு...
-
கிறுக்கன்
-
தீர்ப்பு சொல்லவோ
கலங்கினான்
நடுங்கினான்
தண்டனை அவனுக்கே
வாதியிடம் சிக்கவா
பிரதிவாதியிடம் மோதவா
பிராது கொணர்ந்தது
தாய் தாரம் என்றால்
பாவம் என் செய்வான்
அப்பாவி ஆண்மகன்
-
ஆண்மகன் பிறந்து என்ன
..அளவிலா ஆசை கொண்டு
வான்மழை போல நன்றாய்
...வண்ணமாய் அன்பு கூட்டி
நான்பல செய்து என்ன
...நலமுடன் வேலை பெற்று
காண்பவர் வியக்கும் மாதைக்
..கண்டபின் சென்று விட்டான்..
-
சென்றுவிட்டான் காளை
வென்றுவிட்டான் காதலை
கொன்றுவிட்டான் பாசத்தை
பாவம் அந்த அறியாப் பேதை
புத்தன் அணைத்த கோதை
திணிக்கப்பட்டத் துறவுப் பாதை
-
துறவுப் பாதை நாடிச் செல்லும்
...தூய்மை எனக்கு இல்லைதான்
புறக்கண் காட்டும் காட்சி எல்லாம்
..புரிந்து உள்ளம் மயங்குவேன்
அறமா அழகா அமுதா கொடிதா
..அதுவும் நானும் அறிகிலேன்
உறவுப் பார்வை ஒன்று தாராய்
..ஒயிலில் மிளிரும் பாவையே
-
பாவையே
கொல்லிப்பாவையே
உயிர்க்கொல்லிப்பாவையே
உனக்கிரக்கமேயில்லையா
-
உனக்கிரக்கமில்லையா..
ஏரி திறக்கும் நல்லையா!
கண்ணை திறந்து பாரைய்யா..
கருகும் பயிர்விவ சாய்யையா..
அடிக்கும் வாழ்க்கை தானைய்யா..
போகும் உயிர்விரச மாயையா..
ஒட்டுவேனும் சீட்டும்வேனும் தற்கு
ஓரவஞ்சனை காட்ட வேண்டும்..
பகிர்ந்து மகிழும் பழக்கமெல்லாம்
மண்ணாகி போக வேண்டும்..
செய்தவனும் மண்ணுக்கே போகவேண்டும்!
பகிர்ந்து கொள்ள பாரையா..
நாட்டின் சுபிட்சம்கண்டு மகிழைய்யா!
-
மகிழைய்யா சின்னப் பைய்யா
மழலை பேசும் பொன்னைய்யா
மாந்தர் கபடறியா நல்லய்யா
மறுபடியும் வராது இப்பருவம்
-
இப்பருவம் போகாமல் இருக்கா தப்பா
..தப்பெதுவும் செய்யாமல் இருக்கும் போதும்
முப்பொழுதும் விரைவாக ஓடிச் சென்று
..முதுமையெனும் தன்மையுனை வந்தே தீரும்
அப்பொழுது அரனைத்தான் பற்றி னாலும்
..அருகுமோ நீசெய்த பாவ மெல்லாம்
.இப்பொழுதே சிந்தையிலே சிவனைக் கொண்டால்
...ஏற்றமும்பின் வந்துசேரும் மோட்ச முந்தான்...
-
மோட்சமுந்தான் இங்கு மலிவாய் கிடைக்குதாம்
நுரைத்த கோப்பையிலே வழுக்கும் வளைவுகளிலே
போதையிலே காமத்திலே பிறழ்ந்த நெறிகளிலே
உருளுது புரளுது உலகம் பொல்லாத மாயையிலே
-
மாயையிலே மதிமயங்கும் மனமே கொஞ்சம்
...மாதவனை நினைத்துவிடு சுகமே மிஞ்சும்
பேயைப்போல் பலவெண்ணம் பாய்ந்தால் கூட
..பிறழாமல் சிந்தையினை ஒன்றாய் வைத்து
தாயைத்தான் பிரியாமல் தாவும் சேய்போல்
.. தயங்காமல் நாரணனின் பாதம் பற்ற
பாயைத்தான் படுக்கையாகக் கொண்டி ருக்கும்
...பரந்தாமன் கருணைமழை பொழியும் பாராய்..
-
பாராய் என்னை
ஓரக்கண்ணால்
ஒற்றைக்கண்ணால்
பம்பரக்கண்ணால்
வட்டக் கரு விழியில்
விழுந்துவிட்டேன் என்றோ
-
என்றோ நெஞ்சில் பதிந்திருந்த
..எழிலின் உய்ரம் அவள்முகமோ
கன்றாய் நெஞ்சுள் துள்ளிடுமே..
..கவிதை ஊற்றாய் பொங்கிடுமே
இன்றோ என்ன ஆனதென்று
..ஏக்கத் துடன்நான் கேட்டிடவும்
தண்மைச் சிரிப்பில் தாமரையாய்ச்
..சொன்னாள் வயது போனதென்று..
கன்னியின் இளமையது காலஞ் சென்றால்
,..கட்டழகு குறைவதுவும் கண்ட வுண்மை
நுண்ணிய மாற்றங்கள் நோயோ வேறோ
...நொடியினில் தோலினிலே வந்து சேரும்
வண்ணமாய் வயணமாய் அழகு சேர்ந்த
..வஞ்சியின் வாழ்க்கையில் சுழன்ற காற்றால்
எண்ணுதற் கிலாமலே சோகம் கொண்டு
..ஏந்திழையின் முகமுந்தான் வாட லாச்சே
மெல்லச் சிரித்தே நான்சொன்னேன்
..மென்மைப் பெண்ணே வருந்தாதே
கள்ளச் சிரிப்பு சிரிக்கின்ற
..கண்கள் மாற்றம் கொளவில்லை
உள்ளந்தன்னில் கண்டிருந்த
..உந்தன் உருவம் மாறாது
அள்ளும் கவிதை போலிருக்கும்
..அழகில் முதுமை வாராதே..
-
வாராதோ அந்த பொன்னான நாளும்
பாட்டி வீட்டில் கோடை வெயிலில்
செட்டுப் பிள்ளைகள் சேர்ந்து
களித்து ஆடிய ஆட்டமென்ன
கூட்டாஞ்சோறு மொட்டை மாடியிலே
கோடி வித்தை கூடிப் பழகி மகிழ
கைவேலை கூட்டு வேலை கதை நேரம்
கனவாய் இன்று காணாமல் போனதே
-
(ப்ளஸ்டூ படிப்பில் மார்க் குறைவாய்ப் போனது என
ஒரு பையன் புலம்ப் அவனுக்கு அவன் நண்பன் ஆறுதல் சொல்கிறான்)
போனதே என்று புலம்பாமல்
...பொழுதைத் தள்ளி இருக்காமல்
ஆனது பார்ப்போம் எனச்சொல்லி
..அகத்தினில் பொங்கு என் தோழா
கானகம் போல வாழ்க்கையில்லை
...கல்வியில் தோல்வி கஷ்டம்தான்
வானதைப் போல உயர்ந்திடலாம்
...வீழ்ந்ததை நினைத்தே இருக்காதே..
அவன் :
விழுந்து விழுந்து படித்தேன்நான்
..விஷயம் புரிந்தே படித்தவன்நான்
பழுதா சரியா என்றேதான்
..பலரிடம் கேட்டுக் கற்றவன்தான்
கழுகாய்க் கண்கள் முழித்திருந்தே
..கணிதம் மற்றும் படித்திருந்தேன்
வழுக்கித் தந்தார் சிலமதிப்பெண்..
..வானம் போனது என்னாசை..
நண்பன்:
போடா போடா என் தோழா
..போன மதிப்பெண் சிலதானே
வாடா உள்ளம் கொண்டுவிடு
..வேறாய்ப் படிப்பு எடுத்துவிடு
பாடா வதியாய்த் தந்தாலும்
..பரவா யில்லை வெற்றிபெறு..
தாடா உழைப்பு எனச்சொல்லி
..தாவி வேலை கொடுத்திடுவர்..
-
கொடுத்திடுவர் பல வாக்குறுதி
எண்ணற்ற இலவசம் வெகுமதி
அப்பாவி மக்களை ஏமாற்றி
எப்படியோ அரசுக் கட்டிலேறி
தன் குடும்பத்தைச் செழிப்பாக்கி
நாட்டை சின்னாபின்னமாக்கி
குரங்கின் கை பூமாலையாக்கி
வரலாறு படைப்பது நம் விதி
-
விதி என்றாலும்
வேதனைகள் வேட்கைகள் தொட்ர்ந்தாலும்
எனக்கு
மிகவும் பிடித்திருக்கிறது
நம் கண்க்ள் சந்தித்த தருணம்
-
தருணம் தப்புத் தப்பாய் போகுதே
உப்பு விற்கையிலே மழையடிக்குதே
உமி விற்கையிலே காற்றடிக்குதே
தங்கம் வாங்கினால் விலை குறையுதே
ஏறுக்கு மாறாய் ஏணியும் பாம்பும்
இயங்கினால் அடைவேனா பரமபதம்