L.R.ESWARI - maalaimalar write up
http://antrukandamugam.files.wordpre.../lr-eswari.jpg
கூட்டத்தோடு கூட்டமாக 'கோரஸ்' பாடத்தொடங்கிய எல்.ஆர்.ஈஸ்வரி வெகு விரைவிலேயே சிறந்த பின்னணி பாடகியாக உயர்ந்தார்.
எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒருவித வசிய சக்தி இருக்கும், பாடும் முறையில் 'கிக்' இருக்கும். எனவே, லட்சக்கணக்கான ரசிகர்களை அவர் பெற்றார்.
'இது எனக்கு இறைவன் கொடுத்த வரம்' என்று கூறிய ஈஸ்வரி, தொடர்ந்து சொன்னார்:
'ஏழ்மையில் பிறந்த நான், இந்த அளவு உயர்ந்திருக்கிறேன் என்றால், அதற்காக நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம். எனக்குப் பெற்றோர்கள் வைத்த பெயர் டி.எல்.ராஜேஸ்வரி. பரமக்குடிதான் எங்களுடைய பூர்வீகம். ஆனால், நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை புதுப்பேட்டைதான்.
எழும்பூரில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில்தான் நான் பிறந்தேன். எனது தந்தை பெயர் அந்தோணி தேவராஜ். தாயார் ரெஜினா மேரி நிர்மலா. எனக்கு அமல்ராஜ் என்ற தம்பியும், எல்.ஆர்.அஞ்சலி என்ற தங்கையும் உண்டு.
எனது தந்தை இளம் வயதிலேயே (36 வயது) இறந்து விட்டார். அப்போது எனக்கு வயது 6. வறுமையின் பிடியில் சிக்கி தவித்த எங்களது குடும்பத்தை எனது தாயார் சினிமாவில் கோரஸ் பாடி, அதில் கிடைத்த மிக சொற்ப வருமானத்தைக் கொண்டு காப்பாற்றி வந்தார்.
எப்படியோ கஷ்டப்பட்டு என் தாயார் என்னைப் பள்ளி இறுதி வகுப்பு வரை படிக்க வைத்தார். அதற்கு மேல் கல்லூரிக்கு என்னை அனுப்பி படிக்க வைக்க முடியாத சூழ்நிலை எனது தாயாருக்கு. ஆகவே, எனது தாயாருக்கு உதவி செய்ய நான் உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டேன்.
அப்போது எனக்கு வயது 16. என் தாயார் சினிமாவில் கோரஸ் பாடச் செல்லும்போது, அவருடன் செல்வேன். அவர்கள் பாடுவதை கேட்டு அதே மாதிரி நானும் பாடுவேன்.
ஒரு நாள் ஏ.பி.நாகராஜன் தயாரித்த 'வடிவுக்கு வளைகாப்பு' என்ற படத்திற்கு கோரஸ் பாட எனது தாயார் சென்றபோது, நானும் அவருடன் சென்றேன். பாடலின் இடையே 'ஹம்மிங்' கொடுக்க வேண்டிய பெண் அன்று வராததால், தற்செயலாக நான் அந்தப் பாட்டுக்கு 'ஹம்மிங்' கொடுத்தேன். இதுதான் நான் முதன் முதலில் சினிமாவிற்கு கொடுத்த குரல்.
இதைக்கேட்ட அங்கிருந்த ஏ.பி.நாகராஜனும், இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனும் 'உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. நீ எதிர்காலத்தில் பெரிய பாடகியாக வருவாய், பார்!' என்று மிகவும் பாராட்டினார்கள்.
இதைக்கேட்டவுடன் அந்த நிமிடமே எங்களது குடும்ப கஷ்டமெல்லாம் பறந்து விட்டதுபோல் உணர்ந்தேன். இது எனக்கு வாழ்க்கையில் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது.
'வடிவுக்கு வளைகாப்பு' படத்தை அடுத்து ஏ.பி.நாகராஜனும், வி.கே.ராமசாமியும் சேர்ந்து 'லட்சுமி பிக்சர்ஸ்' என்ற படக்கம்பெனியைத் தொடங்கி, 'நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்தைத் தயாரித்தனர். அதில் கே.வி.மகாதேவன் இசை அமைப்பில் எனக்கு பாட வாய்ப்பு கிடைத்தது.
'புதுப்பெண்ணே புதுப்பெண்ணே நிமிர்ந்து பாரு; உன் பிறந்த இடத்தை மறந்து விடாதே நினைத்துப்பாரு.'
'பொண்ணு மாப்பிள்ளை ஒன்னா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே.'
'இவரேதான் அவரு அவரேதான் இவரு'
'துக்கத்திலும் சிரிக்கணும்; துணிவுடனே இருக்கணும்' என்ற 4 பாடல்கள் பாடுமë வாய்ப்பை எனக்கு ஏ.பி.நாகராஜன் வழங்கினார்.
எனது பெயர் டி.எல்.ராஜேஸ்வரி என்று இருந்ததை சுருக்கமாக 'எல்.ஆர்.ஈஸ்வரி' என்று மாற்றி வைத்தவரும் ஏ.பி.நாகராஜன்தான்.
அப்போதெல்லாம் ஒரு பாடல் பாடினால் 100 ரூபாய் சம்பளம் கிடைக்கும். அக்காலத்தில் அது பெரிய தொகை. வறுமையில் வாடிக்கொண்டிருந்த என் குடும்பத்தை, வசதியாக வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது' என்றார் எல்.ஆர்.ஈஸ்வரி.