Originally Posted by
KALAIVENTHAN
கொடூரமான விலை
சிரித்து வாழ வேண்டும் படத்தில் கடத்தல் லாரியை ஓட்டி வரும் மனோகரை தடுத்து நிறுத்த செக்போஸ்டில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் தலைவர் காத்திருப்பார். ஆனால், தடுப்பு கட்டையை உடைத்துக் கொண்டு புயல் வேகத்தில் செல்லும் லாரி, எதிரே வரிசையாக சாலையை கடந்து செல்லும் பள்ளிக் குழந்தைகள் மீது மோதும். குழந்தைகள் என்று தெரிந்தும் லாரியை நிறுத்தாமல் செல்வார் மனோகர். பள்ளிக் குழந்தைகள் ரத்தச் சேற்றில் இறக்கும்.
இந்தக் காட்சியை சாணை பிடிப்பவரான லதா பார்த்துக் கொண்டிருப்பார். ஆனால், சாட்சி சொல்ல மாட்டார். லதாவை மனம் மாறச் செய்ய அவரை தலைவர் இழுத்துச் சென்று, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் லாரி மோதி இறந்த குழந்தைகளின் உடல்களைக் காட்டுவார்.
‘இதில் எத்தனை குழந்தைகள் எதிர்காலத்தில் டாக்டராக, மருத்துவராக இருந்தார்களோ. இந்த குழந்தைகளில் நான் அறிஞர் அண்ணாவை பார்க்கிறேன், அய்யா பெரியாரை பார்க்கிறேன், மூதறிஞர் ராஜாஜியை பார்க்கிறேன்..’ என்று குமுறுவார்.
இந்தக் காட்சிதான் எனக்கு நினைவு வந்தது,நேற்றிரவு நீண்ட நேரம் தூக்கத்தை தொலைத்தபோது. பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் ராணுவம் நடத்தி வரும் பள்ளியில் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய வெறியாட்டத்தில் 132 பள்ளிக் குழந்தைகள் பலியாகியுள்ளனர். 118 குழந்தைகளுக்கு காயம். ரத்த சகதியில் சிதைந்த மலர்களாய் பள்ளிக் குழந்தைகள் அள்ளிச் செல்லப்பட்ட காட்சிகளே நான் தூக்கத்தை தொலைக்கக் காரணம். எந்த நாடாய் இருந்தால் என்ன? குழந்தைகள், குழந்தைகள்தானே?
இதயமே இல்லாமல் வெறித்தாண்டவமாடியிருக்கும் தீவிரவாதிகளை என்ன பெயரிட்டு அழைப்பது? வன்முறை என்பது இருபுறமும் கூரான கத்தி. அது தாக்கியவர்களையே திருப்பித் தாக்கும் என்றார் பேரறிஞர் அண்ணா. வன்முறையை, தீவிரவாதத்தை ஊக்குவித்த பாகிஸ்தான் இன்று அதற்கான விலையை கொடுக்கிறது. கள்ளமில்லா அந்த பிஞ்சுகள் கொல்லப்பட்டது கொடூரமான விலை. தீவிரவாதத்துக்கு எதிராக உலகம் ஒன்று திரள கொடுக்கப்பட்ட விலையாகவும் இந்த கொடூரம் இருக்கட்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்