Originally Posted by
chinnakkannan
***
நண்பர்கள் கொடுத்த உற்சாக போதையில் மனம் மயங்கி சற்றே மதியிழந்து
இங்கு எழுதப் போவது என்னவோ இரண்டு செளகார் ஜானகி படங்கள்! (என்னா தெகிரியம்)
அதாகப் பட்டது நல்ல உயர்ந்த ரக டர்க்கித் துண்டினை வாஷிங்க்மெஷினில் போட்டு நனைத்து அலசி
பின் பிழிந்து பின் உதறி கொடியில் காயப் போட்ட பிறகும் கூட அதிலிருந்து ஓரிரு துளிகள் கீழே சிந்தும்..
அப்படிப் பட்ட துளி போல அடியேனும் இழையோட்டத்திலிருந்து மாறாமல் எழுதப் போகும் முதல் படம்…..அதே தான்..
அரபு நாட்டில் இருப்பதால் மன ஒட்டகத்தைச் சற்றே பின்னுக்குத் தள்ள முயற்சித்து, முடியாமல்
கழுத்தை மட்டும் பின்னால் திருப்பி அழகான வாயால் அசைத்து எண்ணத்தைப் பின்னோக்கி ஓட வைத்தால்..
அட யாரந்தச் சிறுவன்.. மெரூன் கலர் டிராயாரும் வெள்ளை (ரின் சோப்) சட்டையுமாக என உற்றுப் பார்த்தால்
அட நான் தான்.(ஒன்பதாம் வகுப்பு).என்னருகில் இருந்தது வீடிருந்த தெருவில் மறு முனையில் இருந்த
வீட்டில் இருக்கும் பையன் சோமு(எட்டாம் கிளாஸ்) அவனருகில் அவனது அக்கா விம்மி என்றழைக்கப் பட்ட ஒல்லி நிர்மலா(?!) –
கேப்ரன் ஹால் பத்தாம் வகுப்பு என நினைவு..
இருவரும் என்னிடம் தீபாவளிக்கு ரீரன்னாக வந்த படமான புதிய பறவையைப் பற்றிக் கொஞ்சமாய்ச்
சொல்ல என் வயிற்றுக்குள் கொஞ்சம் மிளகாய்க் காந்தல்..அதில் சோமு வேறு ஒன்றைச்
சொல்லிப் படுத்தியும் விட்டான்..அதற்காக இரண்டு வருடங்கள் கழித்து
அவனைத் திட்டியிருக்கிறேன்..(அது கடைசியில் சொல்கிறேன்)
அந்த வருடம் இரு முறை முயன்றும் டிக்கட் கிடைக்கவில்லை என நினைவு..பின்
தொலை தூர அலங்காரில் ஒரு தடவை போட பார்க்க முடியவில்லை என வருத்தம்
..இரண்டு வருடம் கழித்து அப்பாவின் ராலே சைக்கிள் கிடைத்ததும் பளஸ் ஒன்னில்
ஊர் சுற்ற ஆரம்பித்ததும் அந்தப் படத்தை பரமேஸ்வரி தியேட்டரில் போட்டிருந்தார்கள்.
.
ஒரு நல்ல சனிக்கிழமையில் அம்மாவிடம் பர்மிஷன்+ இரண்டு ரூபாய் வாங்கி
மாலைக்காட்சி பார்க்கக் கிளம்பினால் மழை.. “அடடா மழைடா அடை மழைடா” என்ற பாடல் மட்டுமல்ல
அந்தப் பாடல் பாடும் கதாநாயகி கூடப் பிறந்திருக்காத வருடம் அது!
இருந்தும் விறு விறு என மிதித்து கர்டர் பாலம் கீழே அவ்வளவாக தண்ணீர் தேங்காததால்
இறங்கி ஏறி கேப்ரன் ஹாலைக் கடந்து ஆரப்பாளையம் கிராஸ் அடைந்து குறுக்குவாட்டில்
பயணித்து தியேட்ட்ர் அடைகையில் ஆள் முழுக்க தெப்பமாகியிருந்தேன்..ஹச்..
இருந்தும் கூட்டம்..கியூவில் நின்று மேல்வரிசை 1.45ரூ டிக்கட் வாங்கி உள்சென்று
அமர்கையில் மனமெல்லாம் மத்தாப்பூ..(அதைப் பார்த்த யாரோ தான் பிற்காலத்தில் படத்தலைப்பாக்கினார்கள்!)…
பின் இளமை பூரிக்கும் மாலா வந்து கோல்கேட் பற்பசை வாங்கச் சொல்லிச் சிரிக்க,
ஆரோக்கிய வாழ்வைக் காப்பது லைப்பாய் எல்லாம் வந்து, அரங்கம் நிறைந்திருந்தும்
ஏதோ கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பீகாரில் வெள்ளம்
என மத்திய அரசு செய்திப்படம் ஓட, எனக்குள் எரிமலை பொங்கிக் குமுறி வெடிக்கும் நேரத்தில்
சென் ட்ரல் போர்ட் ஃபில்ம் சென்சார் போட எனக்கு இன்ப அதிர்ச்சி..
இந்த இரண்டு வருட காலகட்டத்தில் புதிய பறவை பாடல்கள் அனைத்தையும்
இலங்கை வானொலியில் கேட்டு ருசித்திருக்கிறேன், மறந்திருக்கிறேன் என்னை, ரசித்திருக்கிறேன்..
இன்னும் என்னவென்னமோ ..கிறேன்..!அதுவும் சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து பாடல்,
மெல்ல நட மெல்ல நட பாடல் எல்லாம் மனத்திரையில்(மன்னிக்க பழைய உவமை)
நடிகர் திலகம் கறுப்பு வெள்ளையில் க்ரேபாண்ட் வொயிட் ஷர்ட்டிலும் சரோஜா தேவி
டார்க் கறுப்பு புடவையிலும் நடப்பதாக ஓட்டிப் பார்த்திருந்த் எனக்கு படம் ஈஸ்ட்மென்கலர்
எனப் பார்த்ததும் சர்க்கரைப் பொங்கலை வாயிலிட்டால்
கூடவே முந்திரிப்பருப்பும் நிரடினால் என்னவொரு மகிழ்ச்சி பொங்குமோ அது போல ஆனது.
.
வைத்த கண் வாங்காமல் காரோட்டும் நடிகர் திலகக் கண்கள், ஓடும்பெண் என டைட்டில் பார்த்து
கப்பலில் ந.தி தெரியாமல் சரோஜா நதியுடன் மோதித் திரைப்படம் தொடர அதில் மூழ்கிவிட்டேன்..
சுவாரஸ்யமான த்ரில்லர்.. நடிகர் திலகத்தின் அற்புதமான முகபாவங்கள்:
சரோஜாதேவி தனது எண்ணத்தை சிட்டுக்குருவியிடம் பார்த்துத் தெரிந்து கொண்டது
போலச் சொல்லும் பாடல்- ஒரு பொழுது மலராகக் கொடியில் இருந்தேனா…இரவினிலே
நிலவினிலே என்னை மறந்தேனா, இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா-
என செக்கச் செவேல் மேக்கப் போட்டகன்னத்தைக் காட்டி வெட்கப் படும்போது முத்தெடுத்துக் காட்டும் முகபாவம்,
சடசடத்து ரயில் செல்ல படபடத்த இதயத்தை முகத்திலே காட்டுவது,
எம் ஆர் ராதாவின் டெலிஃபோன் உரையாடலைக் கேட்கும் போது யோசனையில் நெளியும் நெற்றிச் சுருக்கங்கள்,
பின் இரண்டாவது தடவை ரயிலில் வரும்போது சொல்லும் ஃப்ளாஷ் பேக்..
ப்ளாஷ் பேக் வரும்போது அவருடன் சேர்ந்து நானும் வருத்தப் பட்டிருக்கிறேன்..
அவர் ஹோட்டலில் அமர்ந்து நடனத்தைப் பார்க்க ஆரம்பிக்க- என்னா அருமையான பாட்டுங்க அது- அந்த நீல
நதிக்கரையோரம் நீ நின்றிருந்தாய் அந்தி நேரம் – எனப் பாடும் செளகார் ஜானகியைப் பார்த்ததும் சற்றே ஏமாற்ற்ம் தான்.
.
என்ன தான் சொல்லுங்கள்..” என் கனவுக் கன்னி செளகார் ஜானகி தான்..என்ன ஒரு நிறம்..
என்ன ஒரு அழகு என்ன ஒரு நடிப்பு, என்ன ஒரு அழுகை..எப்பொழுதும் வந்து என்னிடம் டூயட் பாடுகிறார் அவர்” என
எந்தத் தாத்தாவும் சொல்லியிருக்க மாட்டார்.. இதற்காக செளகாரை நான் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று எண்ண வேண்டாம்..
இந்த குறிப்பிட்ட படத்தில என்ன தான் வித்யாச நடிப்பைத் தந்திருந்தாலும்
கொஞ்சம் இளமைக் குறைவு அப்பட்டமாகத் தான் தெரிந்தது..
பின் ஃப்ளாஷ் பேக் முடிந்து சரோஜா தேவியைக் கல்யாணம் செய்து கொள்ள ஒப்புதல் வாங்குதல்
, நிச்சய தார்த்தத்தில் மறுபடி செளகார் ஜானகியைப் பார்க்கும் போது ஏற்படும் அதிர்ச்சி,
அவள் தன் மனைவியில்லை எனப்போராடும் தருணங்கள், இறுதியில் லதா நீயா இப்படிப் பண்ணே எனக் கேட்கும்
கையறு நிலை (ஏற்கெனவே கோபால் சார் புட்டுப் புட்டு வைத்ததால் நான் சுருக்கிவிட்டேன்)
என அபார நடிப்பு நடிகர் திலகத்தினுடையது....
சரோஜா தேவி முழுக்க முழுக்க ஆடையணிந்த மேக்க்ப் அணிந்த தேவதையாய் வந்தாலும்,
மேக்ஸியில் நடிகர் திலகத்துடன் கொஞ்சும் சமயத்தில் கொஞ்சம் கூடுதல் அழகாய்த் தெரிவார்..
நாகேஷின் முகபாவங்கள், எம்.ஆர்.ராதாவின் யதார்த்தமான வில்ல நடிப்பு
கதைக்குத்தேவை என்பதாலோ கொஞ்சம் பொம்மைத் தனமான இரண்டாம் செள.ஜா வின் நடிப்பு,
ராமதாஸ், ஓஏகே தேவர் என அனைவரும் தம் பங்கை ஒழுங்காய்ச் செய்திருந்தனர்..
இந்தப் படம் பார்த்துச் சிலமாதங்கள் கழித்துத் தான் சோமுவைப் பார்த்தேன்
மீனாட்சி அம்மன் கோவிலில்.. குட்டியாய் முதுகில் குத்தும் விட்டேன்.
.”பாவி இப்படிப் பண்ணிட்டயே” என..
அவன் அன்று சொன்னதாவது “ கடைசில தாண்டா சரோஜா தேவியும் போலீஸ் ஆஃபீசர்னு தெரியும்!”
எத்தனை முறை பார்த்தாலும் இந்தப் படம் எனக்கு அலுக்கவே இல்லை..
(அடுத்த படமும் எழுதப் போறியா..
இல்ல மனசாட்சி..மொதல்ல பர்மிஷன்கேட்டுக்கலாம்..
எது..அந்த காவியம் இயற்றுகிறவரைப் பற்றித் தானே..
ம்ம்)
//வாசக தோஷ சந்தவ்யஹ..//
**