‘கவிகளும் கண்பாடுதே...’
திரு.வாசு சார், திரு.கிருஷ்ணா சார், திரு.ராகவேந்திரா சார், திரு. ரவி சார், திரு.சின்னக்கண்ணன் சார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். பணி காரணமாக அடிக்கடி வரமுடியவில்லை என்றாலும் எல்லா பதிவுகளையும் படிக்கிறேன். 3,4 நாட்கள் பார்க்க முடியாவிட்டாலும் பின்னர், மொத்தமாக படித்து விடுகிறேன்.
திரு.வாசு சார், முள்ளும் மலரும் படத்தை அலசி முடித்து விட்டீர்கள் என்று பார்த்தால் பாடல்களையும் விடமாட்டேன் என்கிறீர்களே. இனி அந்தப் படத்தை வேறுயாரும் திறனாய்வு செய்ய எதையும் விட்டு வைக்கவில்லை நீங்கள். இந்தப் படத்தின் ஆய்வு மற்றும் தரவேற்றலுக்கு மட்டும் உங்கள் உழைப்பை நினைத்தால் பிரமிப்பு ஏற்படுகிறது. நான் இன்னும் உழைக்க கற்க வேண்டும்.
திரு.ரவிசார், உங்கள் காணிக்கை கட்டுரை அற்புதம். தனது திருப்பணியையும் நிறைவேற்றிக் கொண்டு, அர்ச்சகரின் மகனின் கல்விச் செலவையும் கொடுக்க வைத்த, பெருமாளின் பெருமையை நீங்கள் விவரித்த விதம் சிறப்பு.
திரு.கிருஷ்ணா சார், கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம் என்பது போல தேடித்தேடி அரிய பதிவுகளை இடுகிறீர்கள். நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிகிறது. பாராட்டுக்கள், நன்றிகள். அமரர் பாலச்சந்தர் அவர்களின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பேட்டிக்கு பின் வெளியாகியிருக்கும் தகவல்களில் எனக்கு இரண்டு சந்தேகங்கள்.
1. அவள் ஒரு தொடர்கதைக்கு முன்பே, பொண்ணுக்கு தங்க மனசு படத்தில் விஜயகுமார் நடித்ததாக ஞாபகம்.
2. பட்டினப் பிரவேசத்தில் திரு.காத்தாடி ராமமூர்த்தியை பாலச்சந்தர் அறிமுகப்படுத்தியதாக இருக்கிறது. பட்டிக்காடா பட்டணமா படத்திலேயே, ரிக்க்ஷாக்காரராக வந்து மனோரமாவிடம் அடிவாங்குவாரே?
எனது சந்தேகங்கள் சரிதானா?
-------------
இனி, பாடலுக்கு வருகிறேன்.
அடுத்த வீட்டுப் பெண் படத்தில் திரு.சீர்காழி கோவிந்தராஜன் அவர்களும் திரு.திருச்சி லோகநாதன் அவர்களும் இணைந்து பாடிய அற்புதமான பாடல். ‘கண்களும் கவிபாடுதே...’ பாடகர்கள் பாடுவதற்கு மிகவும் கடினமான பாடல். இருவருமே இசையில் மேதைகள்.
இந்தப் பாடலை பார்ப்பவர்கள் நிச்சயம் சிரிக்காமல் இருக்க முடியாது. திரு.டி.ஆர்.ராமச்சந்திரன், திரு.தங்கவேலு, திரு.பக்கிரிசாமி, திரு.ஏ.கருணாநிதி, திரு.சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன், திரு.பிரண்ட் ராமசாமி, திருமதி. அஞ்சலி தேவி அனைவரும் சேர்ந்து கலக்கியிருக்கும் பாடல். ‘விண்மணி போலே மண்மேலே...’ என்று சீர்காழி குரலில் தங்கவேலு பாடியதும், அடுத்து லோகநாதன் குரலில் பாட்டு வாத்தியாராக வரும் பக்கிரிசாமி, பதற்றத்தில் பாடலை மாற்றி ‘கவிகளும் கண்பாடுதே..’ என்று மாற்றிப் பாடுவது வேடிக்கை. அவர் சுரம் பாடி முடித்ததும் இதற்கு என்ன பதில் என்று கேட்பது போல, பெருமிதம் கலந்த முகத்தை நிமிர்த்தி சவால் விடுவது போல அஞ்சலி தேவி அவர்களின் நடிப்பு ரசிக்கத்தக்கது.
இந்தப் பாடல் காட்சியில் முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம், தமிழ் திரையுலகின் முதல் காமெடி கதாநாயகன் என்ற பெருமையை பெற்றவரான திரு.டி.ஆர்.ராமச்சந்திரன் அவர்களின் நடிப்பு. காட்சிப்படி திரு.தங்கவேலுதான் உண்மையில் பாடுவார். அஞ்சலியை மயக்க டி.ஆர்.ராமச்சந்திரன் தனக்கு பாடத் தெரியும் என்று காட்டுவதற்காக வாயசைப்பார். ஆனால், உள்ளூர பயம், பதற்றம், வெற்றி பெற வேண்டும் என்ற வேகம் எல்லாவற்றையும் திரு.ராமச்சந்திரன் காட்டியிருப்பார்.
திரு.தங்கவேலு எப்போது பாடலை ஆரம்பிப்பாரோ என்று எச்சரிக்கையுடன் ஓரக்கண்ணால் அவரை பார்த்தபடி, அவர் ஆரம்பித்ததும் ஒரு விநாடி கழித்து உதறிக் கொண்டே பாட ஆரம்பிப்பார். அவரை குளோசப்பில் காண்பித்து முகத்தில் முத்தாக வியர்வையை காண்பித்தால் காமெடிக்கு பதிலாக திகிலாகி விடும். அப்படியல்லாமல், பயம், பதற்றத்தால் முகத்தில் வழியும் வியர்வையை கையால் துடைத்தபடி பாடி தனது உணர்வுகளை உடல் மொழியால் காட்டியிருப்பார். வெற்றி பெறும் வேகத்தில் எழுந்து அஞ்சலி தேவியை நோக்கி ஓடுவார். அப்போது, அவர் இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் கயிறை தங்கவேலு இழுத்து, பின்னால் கொண்டு வருவது நிச்சயம் வயிற்றை பதம் பார்க்கும். எல்லாவற்றுக்கும் உச்சமாக, தங்கவேலு உச்ச ஸ்தாயியில் பாடும்போது சத்தம் தாங்க முடியாமல் இருகாதுகளையும் கைவிரல்களால் அடைத்துக் கொள்ளும் காட்சி நகைச்சுவையின் உச்சம்.
பாடி வாயசைக்க வேண்டும். ஆனால், பாடத் தெரியாதது போல, பாடல் ஆரம்பித்ததும் சற்றுத் தள்ளி பாடலைத் தொடங்கி பின்னர், சரியாகப் பாடுவது போல நடிப்பதற்கு என்ன டைமிங் சென்ஸ் வேண்டும்? அதை திரு.டி.ஆர்.ராமச்சந்திரன் அருமையாக செய்திருப்பார்.
30 ஆண்டுகளுக்கு முன் திரு.சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படத்தை திரையரங்கில் மறுவெளியீட்டில் பார்த்தேன். பின்னர், பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதிலும் இதேபோல, திரு.சிவாஜி கணேசன் அவர்கள் பாட திரு. டி.ஆர்.ராமச்சந்திரன் வாயசைப்பது போல காட்சி வரும். அந்த பாடலை வானொலியில் பலமுறை கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனால், சட்டென்று நினைவுக்கு வரவில்லை.
இந்த இரண்டு பாடல்களையும் பாடல் இரண்டு, பாணி ஒன்றுக்கு கூட பயன்படுத்திக் கொள்ளலாம் திரு.வாசு சார். நடிகரும் ஒன்று என்பது இன்னும் சிறப்பு.
நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்