-
பரம பதம் அடைவ தற்கு என்ன வேண்டும்
...பாழும் மனம் அலையும் செய்கை தடுக்க வேண்டும்
நரனாய்ப் பிறந்த பின்பு கூட ஏன் தான் ஏக்கம்
.. நல்ல நல்ல எண்ணங் கொண்டால் நலமே பூக்கும்
கரத்தை நன்கு இணைத்துத் தோளின் மேலெ தூக்கிக்
..காக்க வென்றே சிவனை நெஞ்சில் கூவி அழைத்தால்
வரத்தைக் கையில் பற்றி வேகம் எடுத்தே வருவான்
..வந்தே உனக்கு சொர்க்க வாசல் தந்தே செல்வான்..
-
செல்வான் சந்திரன்
மூடும் அல்லி முகம்
வருவான் சூரியன்
விரியும் செந்தாமரை
தூரத்துக் காதல்தான்
தீராத மோகந்தான்
மாறாத மறையாத
மயக்குகின்ற நியதி
-
நியதி இது தான்
என்று சொல்லியிருந்தாலும்
செய்வதேயில்லை
வருடாந்திர்க் காரியங்கள்
பெற்றோர்களுக்கு..
அவர்கள் மறைந்த
சில் வருடங்களில்
வருடா வருடம் சோகமான சிந்தனைகள்
படிப் படியாகக்குறைந்து
இப்போது
ஓ அப்பா நாள்
ஓ அம்மா நாள் எனத் தான்
நினைக்க முடிகிறது...
நியதி ம்ம்
ஒரு சில வருடங்கள்
கோவிலுக்கு அன்னதானத்திற்கு
அனுப்பியது தான்
அது தவிர வேறேதும்
செய்யவில்லை
பெற்று வளர்த்து
படிக்க வைத்து ஆளாக்கியவருக்கு..
ம்ம்
அன்னிய தேசத்தில்
என்ன செய்ய முடியும் என
மனதை சமாதானப் படுத்திக் கொண்டாலும்..
ஒரு வேளை
என் காலம் முடிந்து
அவர்களைப் பார்க்க முடிந்தால்..
எப்படியும் குழ்ந்தை தானே
மன்னிச்சுடலாம் எனச் சொல்ல்வார்கள்
என்ற எண்ணம் தான்
காரணமா என்ன..
-
என்ன விளையும் என்று தெரியாதா விதைத்தவனுக்கு
எப்போது பயிர் முதிருமென தெரியாதா விவசாயிக்கு
என்ன ஆவார் பிள்ளைகள் தெரியாதே பெற்றவருக்கு
எதிர்பாராத அதிரடி புரட்சிகள் உலகினில் அரங்கேறுது
-
அரங்கேறுது வர்ற் 26ம் தேதி
குழந்தைய ஆசீர்வாதம் பண்ண வாங்க..
மேலும் வளரணுமின்னு..
அழைப்பிதழ் அட்டையில்
அதீத மேக்கப்புடன்
பாவம் காட்டாமலேயே
பயந்த மருண்ட விழிகளுடன்
பத்து வயதுச் சிறுமி..
முழுப் புகைப்படத்தில்
சிவந்த கால்களுடன்
செம்பஞ்சுக் குழம்பா
இல்லை ஆடிச் சிவந்ததா..
சரி வருகிறேன்
என்று சொன்னாலும்
நான் செல்லவில்லை..
-
செல்லவில்லை கோவிலுக்கு
செய்யவில்லை பூசைகள்
சொல்லவில்லை மந்திரங்கள்
சலனமில்லை மனதில்
சறுக்கவில்லை நெறிகளில்
சொர்க்கமில்லை புறவெளியில்
-
புறவெளியில் எண்ணங்கள் மயங்குகின்ற போது
..புலன்களும்தான் சிச்சிறிதாய் துடிப்படங்கும் நேரம்
உறவுகளை, உணர்வினிலே உறைந்திருக்கும் நட்பை..
..உளத்துள்ளே திரைப்படமாய் ஓட்டுகின்ற வேளை
சிரத்துள்ளே நினைவலையை ஒருமித்தே வைத்து
..சிந்தையுளே இறையருளைத் துதிக்கின்ற போது
பரபரக்கும் பூவுலகின் வாழ்வுபோது மென்று
..பக்குவ்த்தை அடையுமனம் அமைதிபெறும் நன்றாய்..
-
நன்றாய் இருக்கிறதா சாப்பாடு
குறிப்பால் அறிவாள் சமைத்தவள்
முகம் சொல்லும் திரும்ப கேட்கும்
ஆவல் சொல்லும் கவனமாய் அமைதியாய்
ரசித்துப் புசிக்கின்ற பாங்கு சொல்லும்
வார்த்தையால் பாராட்டத் தேவையில்லை
-
தேவை யில்லை என்று சொல்லி திரும்பி நின்ற வேளையில்
பாவை யுந்தன் விழியில் கோபம் கனன்று அங்கே பார்க்கையில்
நாவை நன்றாய் உதட்டில் சுற்றி ஈரம் கொள்ள வைத்திட
கோவைப் பழத்தின் வண்ணம் மின்னும் இதழும் மேலும் சிவந்ததே
-
சிவந்ததே வானம்
அழகானதே புவனம்
மல்ர்ந்ததே வதனம்
பிறந்ததே கானம்
-
கானம் பாடும் குயிலேயுன்
..காதுக் கினிய பாடலிலே
மோனம் கலையும் மாமரங்கள்
..மேவி உயரே தான்பார்த்து
வானம் நோக்கி சலசலத்து
..வாகாய் உன்குரல் இனிமையிலே
நாண ந் துறந்த நங்கையைப்போல்
.. நன்றாய்க் கிளையை ஆட்டிடுதே
-
ஆட்டிடுதே பரம்பொருள்
படைத்த உலகினை
உலகின் உயிர்களை
நூலில் ஆடும் பொம்மைகளாய்
இயற்கை சக்திகளை
நிலத்தை நீரை காற்றை
கயிற்றில் சுற்றிய பம்பரமாய்
தீராத விளையாட்டுப் பிள்ளையாய்
-
பிள்ளையாய்ப் பிறந்து என்னைப்
…பித்தனாய் ஆக்கி விட்டு
மெள்ளவே சொல்லு கின்றாய்
…மேவியே பகைவன் நாமம்
அள்ளியே எடுத்து உன்னை
…அடிக்கவே தோன்றினாலும்
வெள்ளமாய்ப் பாசம் வந்து
…வேகமாய்த் தடுக்கு தப்பா
தள்ளாடும் வயதினிலே பிள்ளையென இங்கே
..தயங்காமல் பிறந்துவிட்ட பிரகலாதா கேட்பாய்
துள்ளிவரும் உன்னழகை துடிப்பான உந்தன்
…அள்ளிவரும் பேச்சுகளைக் கேட்பதற்கு வந்தால்
எள்ளிநகை தான்புரிந்து என்னிடமே நீயும்
..எல்லாரில் வல்லவர்தாம் திருமாலே என்றே
சொற்களிலும் சரம்தொடுத்து சுடுகின்றாய், உன்னை
…சொல்லாலும் அடிப்பதற்கும் மருகுதடா நெஞ்சம்..
-
நெஞ்சம் பதறுது
அங்கம் உதறுது
காதிலே விழுந்தது
கெட்ட கெட்ட சேதி
காடுகளை அழித்து
குரங்கினம் ஒழித்து
பல்லுயிர் தொலைத்து
தொழில்கள் வளர்த்து
முன்னேற்றமாயிது
மங்குது உன் அறிவு
மண்ணை தலையில் தானே
கொட்டிக்கொள்ளாதே மூடனே
-
மூடனே நானென் றாலும்
..முனிவரே பகரு வீர்தான்
கூடவே இளமைக் கோலம்
..கொண்டநான் வருகை யில்தான்
பூடகம் எதுவு மிலாமல்
..பெண்மணி தானும் கேட்க
கூடநீர் சுமந்தே கரையில்
..கொணர்ந்த துமேனோ சொல்வீர்..
அக்கரையில் சுமந்த பெண்ணை
..இக்கரையில் விட்ட போதே
பக்கெனவே மறந்து போனேன்
.. பாழ்பட்ட உந்தன் நெஞ்சம்
சொக்கவைக்கும் பாவை தன்னை
..சிந்தையிலே சுமந்து கொண்டு
அக்கறையாய்க் கேட்கி றாயே
..அடைவாயா பக்கு வத்தை..
-
பக்குவத்தை நான் காணேனே
ஆடம்பரமான புது சொகுசுகளிலே
வெக்கைத் தொல்லை மறையவே
வந்த மின்விசிறியும் போதலியே
அறிவியல் ஒரு தந்திரம் தந்ததே
குளிரூட்டும் யந்திரமும் வந்ததே
வேர்வை சுரப்பிகளுக்கு ஓய்வே
கழிவுகளற்ற சிறுநீரகம் மட்டுமே
ஓயாது உழைத்து மூப்படையுதே
நாகரிக பவுசுக்கு விலையிதுவே
கண்ணை விற்று ஓவியம் வாங்கவே
விரைகின்றனர் இத்தலைமுறையினரே
-
இத்தலைமுறையினரே
நாட்டின் கண்கள்
நாட்டின் போர்வாள்கள்
நாட்டின் பயிர்கள்
நாட்டின் விடிவெள்ளிகள்
நாட்டின் சொத்துக்கள்..
நாட்டின் இன்னும் என்னவெல்லாமோ கள்..
அவர்களால் தான் இருக்கிறது
எதிர்காலம்
என மூச்சுவாங்கச் சொல்லி
இறங்கிய பேச்சாளர்
காரை அடைந்தால்
ஒரு சிறுவன்
ஐயா.. கார் க்ளீன் பண்ணட்டுமா..
ச்சீ போ அந்தாண்டை..
எங்கிருந்தோ வந்துட்டாங்க..
என விழுந்தார் எரிந்து..
-
எரிந்து தணிந்த காடுகள்
அடக்கி வைத்த பெண்மைகள்
இருண்டு கிடந்த வானங்கள்
வரண்டு கிடந்த பாலைகள்
அரிதாகி வரும் காட்சிகள்
ஒழிய வேண்டும் மிச்சங்கள்
-
மிச்சங்கள் கொஞ்சம் கூட இல்லை
காக்கைக்கு வைத்திருந்த சாதம்..
ம்ம்
முன்னோர்கள்
ஒட்டு மொத்தமாக வந்திருப்பார்களோ
இருக்கலாம்..
எனில் இன்று ஞாயிற்றுக் கிழமை
-
ஞாயிற்றுக் கிழமை சிறப்பை இழக்கும்
ஏழில் ஒன்றாய் சாதாரணமாய் நிற்கும்
மாறுதலின்றி விடிந்து முடிந்து போகும்
ஏனெனில் இது ஒரு இலையுதிர் காலம்
-
இலையுதிர் காலம் தான் இனி..
இருமாதங்களுக்கு முன்வந்தாய்.,,
கலக்கினாய் என்னையும்
என் குடும்பத்தையும்
பின் சின்னதாய் நேற்று
பை சொல்லி
கவலைப் படாதே
ஆறு மாசம் ஆறு நொடி தான்
என்று விட்டுப்போய் விட்டாய்..
படவா..
சீக்கிரம் வா..
நீ வந்தால் தான்
எனக்கு வசந்தம்
-
வசந்தம் வாசமானது
கண்ணுக்கு விருந்தாவது
காதில் பாயும் தேனாவது
ஒரு முறை தான் வருவது
துளித்துளியாய் அனுபவித்து
மீதி நாளெல்லாம் திளைப்பது
-
திளைப்பது என்றால்..
எண்ணுவது
என்றால்..
எப்படிச் சொல்றதுன்னு தெரிலைடா
காலைல ஸ்கூல் போறச்சே
நீ ஒரு முத்தா கொடுத்தியோன்னோ..
யா டாடி
அதுல தெரிஞ்ச உன் லவ்..அன்பு..
ஆஃபீஸ் போன பின்னும்
வேலைல கூட அதை நினச்சுக்கிட்டிருந்தேன்
ஓ..டாடி.. திளைப்பது என்றால்
எஞ்சாயிங்க் ஸ்வீட் மெமரீஸா..
கரெக்ட்தானே..தமிழ்ல்ல
வாஸ்தவம் தான்
-
வாஸ்தவம் தான்
போலி நாடகம்
பொய் வசனம்
ஒப்புக்கு சிரிப்பு
அடக்குபவர் அடங்கியவராய்
அடங்கியவர் அடக்குபவராய்
வெளியில் உலாவுதல்
வீட்டுக்கு வீடு வாசப்படி
-
வாசப்படியில் ஷீவைக் கழற்றி
உள்ளே நுழைந்தால்
செல்ஃபோன்..
சார்..இந்த பிரச்னை..அந்தப் பிரச்னை
ஷ்.. எதுவானாலும் காலையில்
அலுவலகத்தில் பேசலாம்..
என்று வைத்து அமர்ந்தேன்...
பின்ன என்ன
வயிற்றுக்கு அலுவகம்
மனசுக்கு வீடு..
இரனடையும் கலந்தால்
மிஞ்சும் அஜீரணம்..
-
அஜீரணம் வருவது நிச்சயம்
யானையைப் போல் பூனை தின்றால்
பசிக்கின்றி ருசிக்காக அரைத்தால்
பொருந்தாத வகைகளை வெட்டினால்
பழகாத பண்டங்கள் உணவில் மிகுந்தால்
வாயும் உனது வயிறும் உனது புரிந்துகொள்
-
புரிந்து கொள்
என்ற தலைப்பில்
தாங்கள் எழுதிய
கவிதை பல பரிமாணங்களில்
வெளிப்படுகிறது என்ற
காரணத்தினால்
பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்
-
வருந்துகிறோம் முதியவர்கள்
மூத்த நரைத்த தலைமுறையினர்
மூடர்கள் முதிர்ந்த சுள்ளிகள்
பெண்பிள்ளைகளின் பெரிய புரட்சி
பூ வைக்க பொட்டு வைக்க கசப்பு
நடையுடை பாவனை அனைத்தும் புதுசு
முள்ளாய் கண்ணில் குத்த புண்ணானது
பழமைவாத பாட்டி தாத்தா மனம்
வளர்ந்த செடி வளராத பிஞ்சு ரெண்டும்
மதிக்க மறுக்குது வீம்பு மிகுந்து திரியுது
என்ன ரசாயன மாற்றம் மூளையிலே
புரியாமல் முழிக்குது கிழட்டுக் கூட்டம்
-
கூட்டமாய்க் கூடி நின்ற
..கும்பலுள் புகுந்து சென்றால்
நீட்டமாய்க் கம்பைக் கையில்
..நெடுவென வைத்த வாறே
வாட்டமாய்க் கயிற்றில் வஞ்சி
..வலிவுடன் நடக்கக் கண்ணுள்
வாட்டமும் கண்டு நெஞ்சில்
..வருத்தமும் கூட லாச்சு
-
கூடலாச்சு கணிணி விளையாட்டு நேரம்
குறையலாச்சு அக்கம்பக்கதோடு சிநேகம்
கூடியமர்ந்து வம்பளந்தது பழைய காலம்
முகம் பார்த்துப் பேச முயலாத நாகரிகம்
ஆப்த நண்பர்களோ முகநூலில் அதிகம்
சோழன் பிசிராந்தையார் போலொரு வட்டம்
உலகத்தோடொத்து ஒழுகும் நல்ல பழக்கம்
நடுவிலே கொஞ்சம் நிஜ உறவைக் காணோம்
-
உறவைக் காணோம் பேச்சினிலே
..உணர்வுகள் இல்லை கண்களிலே
அறத்தினை அகத்தில் தான்வைத்து
..அழகினை மனையைப் புறந்தள்ளி
புறத்தினில் காவி ஆடையினை
..புதிதென அணிந்தே நெடுந்தூரம்
துறவியாம் புத்தன் நடக்கின்றான்
..துன்பமும் நெஞ்சில் ஏதுமின்றி..
-
ஏதுமின்றி எது சாத்தியம்
நெருப்பின்றி புகையா
நீரின்றி நிலமா
கடலின்றி கரையா
வேரின்றி மரமா
பூவின்றி காயா
உடலின்றி உயிரா
ஊடலின்றி காதலா
நிஜமின்றி நிழலா
ஐயமின்றி தெளிவா
-
தெளிவாய் இருக்கும் அவள்முகத்தில்
...தெறிக்கும் விழிகள் சிரிப்பினிலே
வலிவாய் சின்னப் பார்வையதை
..வாகாய் கொஞ்சம் தொடுத்தாலும்
நெளியும் கூந்தல் சரிசெய்து
..நேராய்ப் பார்ப்பாள் பொய்யில்லை
களிக்கும் மனம்தான் அவளழகில்
..கரைந்தே செல்லும் தினம்தினம்தான்..
-
தினம்தினம்தான் சூரியன் உதிக்கிறது
உலகினில் இறப்பும் பிறப்பும் நடக்கிறது
பூவாய் மலர்ந்து பொலிவாய் திகழ்ந்து
காற்றெங்கும் நறுமணத்தை நிறைத்து
நோகாமல் நொறுங்காமல் வதங்காமல்
உதிர்கின்ற பேர் ஆசீர்வதிக்கப்பட்டவரன்றோ
காந்தியத்தில் ஊறி கதருடுத்தி உழைத்து
நேர்மையும் நன்னெறியும் உயிர்மூச்சாகி
அடக்கமும் அமைதியும் அணிகலனாகி
பேரவா பொறாமை வன்முறையறியா
நோயென்றும் நொடியென்றும் என்றும்
படாமல் படுத்தாமல் பாசமலர்கள்
முகம் பார்த்து உறவாடிப் படுத்து
விடியும் நேரம் துயில் கலையாமல்
பெருவெளியில் பறந்து சென்றுவிட்டார்
பெரியவர் தொன்னூற்றியொன்று வயதினர்
என் துணைவரை ஈன்றவர் பாக்கியவான்
அந்த வரம் வாரிசெங்களுக்கும் வாய்க்கட்டும்
-
வாய்க்கட்டும்
சகல செளபாக்கியங்களும் உனக்கு
ஆசி செய்த அப்பாவும்
ஆசி பெற்ற மகளும் கண்கலங்க
உடனிருந்த மாப்பிள்ளையும் கலங்கினான்..
என்ன ஆச்சு..
ஒண்ணுமில்லை புகை..
-
Pugai Pidikaathey, Athu
Udal nalathirku kaedu endru
Vilambara palagai eluthubavan
Vaai pugainthu kondirunthathu.
-
புகைந்து கொண்டிருந்தது
பல நாளாய் வஞ்சமொன்று
பனிப்போராய் நடந்தது
பங்காளிகளின் வெறுப்பு
பத்தி எரியுமிந்த நெருப்பு
பிறக்கட்டும் சாம்பலிலிருந்து
பரிசுத்தமான புதிய உறவு
புதைந்து மறையும் பழையது
-
பழையது என்ன பழையது
வறுமையில் பழையதும் புதியது..
இரவும் பகலும் அல்லலே
இங்கே தரையும் இலையாய் மாறுதே..
அசந்தால் விழுங்கும் காலத்தில்,
கந்தல் துணியில் தேடினால்
உதையே வேளையாய் கிடைக்குது..
உதவச் சென்றால் சாலையில்
என் தோற்றம் பலரை விரட்டுது..
எவரை என்ன சொல்வது
இப்பிறப்பில் இவைதான் என் தோழனா?
காடும் மலையும் திரிகிறேன்
கனிகளை உணவாய் மாற்றினேன்
விலங்குகள் உறவாய் செய்கிறேன்
ஞானிகளோடு பழகினேன்
உடலில் பாம்பை உயர்த்தினேன்
சித்திகள் பல அடக்கினேன்
இறைவனின் வரத்தை உணர்கிறேன்
சித்தனாக அமர்கிறேன்!
-
அமர்கிறேன் கணினி முன்
அது போதி மரத்தடி தவம்
ஒரு குட்டிச்சுவர் கழுதைக்கு
கிட்டுமா புத்தனின் ஞானம்
-
ஞானம் பெறுவதற்காகக் கை நீட்டினால்
இல்லை என்கிறது மெளனச் சாமி..
க்ண்ணால் பேசுது
ஒண்ணும் புரியலை..
அது பேசாது
வாய் விட்டு க் கேளுங்க தரும்..
பின்னாலிருந்தவர் கூற
பேசாமல் மறுபடி கை நீட்ட
தள்ளி விட்டது..
சாமிக்கு சாமி வந்துடுச்சு
மற்றவர்கள் கன்னதில் போட்டுக்கொள்ள
மெல்ல தீப்பார்வை பார்த்து
வா எனக் கூப்பிட்டது..
தயங்கி எழுந்து அருகில்
சென்றால்
நெஞ்சில் நெஞ்சில் அடித்து
கண்ணால் சிறிது முறைத்து
மறுபடி கீழே தள்ள..
ஞானம் எட்டியது மனதுக்கு