Originally Posted by
boominathanandavar
ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரித்த 'புதிய வானம்' படத்தை ஆர்.வி.உதயகுமார் டைரக்ட் செய்தார்.
ஆர்.வி.உதயகுமார், தனது படங்களுக்கு பாடல்களும் எழுதுவது உண்டு.
'புதிய வானம்' படத்திலும் அவர் பாடல் எழுதினார். அதில், 'எளிமையும், பொறுமையும் புரட்சித் தலைவனாக்கும் உன்னை' என்ற வரிகள் வருகின்றன.
அதாவது, எம்.ஜி.ஆரை புகழும் பாடல்! அதை சிவாஜிகணேசன் பாடவேண்டும்!
பாடலைப் படித்துப் பார்த்த ஆர்.எம்.வீரப்பன், 'இதை சிவாஜி பாடுவாரா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஏதாவது நினைத்துக் கொள்வாரோ என்று பயமாகவும் இருக்கிறது!' என்றார்.
'ஒருவேளை சிவாஜி இந்தப் பாடல் வரிகளை விரும்பாவிட்டால், அதற்கு மாற்றாக வேறு பாடலும் வைத்திருக்கிறேன்' என்று உதயகுமார் கூறினார்.
பாடலை கொண்டு போய் சிவாஜிக்குப் போட்டுக் காட்டினார்.
அதன்பின் நடந்தது பற்றி உதயகுமார் கூறியதாவது:-
'எம்.ஜி.ஆர். பற்றிய வரிகள் வரும்போது, சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.
பாடல் முழுவதும் முடிந்ததும், 'புரட்சித் தலைவனாக்கும் உன்னை என்று எழுதியிருக்கிறாயே! அப்படி எழுதும்படி வீரப்பன் சொன்னாரா?' என்று கேட்டார்.
'இல்லை. நானாகத்தான் எழுதினேன்' என்று நான் பதில் அளித்தேன். 'இந்தப் பாடலை நான் பாடவேண்டும். அவ்வளவுதானே? தாராளமாகப் பாடுகிறேன். அண்ணன் மறைந்து விட்டார். அவர் புகழைப் பாடுவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்' என்று சிவாஜி கூறினார்.
அந்தப்பாடல் காட்சி படப்பிடிப்பின்போது, எம்.ஜி.ஆர். ஸ்டைலில் விரலைக் காட்டி நடிக்க வேண்டும் என்றேன். அதேபோல நடித்தார். நான் நெகிழ்ந்து போய்விட்டேன்.'
இவ்வாறு உதயகுமார் கூறினார்.
'புதிய வானம்' வெற்றிப்படமாக அமைந்தது.