-
வியட்நாம் வீடு -விகடன் விமரிசனம்
புகழ்பெற்ற நாடகம் ஒன்று திரைப்படமாகும்போதெல்லாம், ஒரு கேள்வி எழுந்துதான் தீரும்: 'நாடகம் மாதிரி படம் இருக்கிறதா?'
'வியட்நாம் வீடு' திரைப்படம், நாடகம் மாதிரி இல்லை. நாடகத்தில் புலனாகாத சில விஷயங்கள் படத்தில் ஜொலிக்கின்றன. ஒன்றிரண்டு அம்சங்கள் சோபிக்கத் தவறியுமிருக்கின்றன.
நெருக்கக் காட்சிகளில் காணக் கிடைத்த 'பிரெஸ்டீஜ்' கணேசனின் முக பாவங்கள், திரையில் கிடைத்த அபூர்வ விருந்து. ஆடி ஓய்ந்து முதுமை எய்திவிட்ட தம்பதியரின் பிணைப் பையும் இழைவையும் பத்மனாபன் தம்பதியர் (சிவாஜி-பத்மினி) சித் திரித்திருக்கும் நேர்த்தி, திரையுல கிலேயே ஒரு புதிய சாதனை.
''சாமி பேரை ஏம்பா வச்சுக்கிறீங்க! வையக் கூட முடியலை!'' என்று வேலைக்காரனிடம் அலுத்துக் கொள்ளும் இடத்திலும் சரி, 'வெற்று மிஷினில் டைப் அடிக்கக் கூடாது!' என்று டைப்பிஸ்டை நாசூக்காகக் குத்திக் காட்டும் காட்சியிலும் சரி, 'நீ முந்தினால் உனக்கு, நான் முந்தினால் எனக்கு' என்று அத்தையிடம் விடைபெறும் காட்சியிலும் சரி... சிவாஜியின் நடிப்பில் நயம், முதிர்ச்சி, முழுமை அத்தனையும் பொலிகின்றன.
முழுக்க முழுக்க ஒரு வயோதிகரைக் கதாநாயகனாகக் கொண்டே, துளியும் சுவை குன்றாமல் குடும்ப மணம் கமழ ஒரு திரைப்படத்தைத் தயாரித்த சாமர்த்தியத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
பிரெஸ்டீஜ் தம்பதியருக்கு இரண்டு டூயட்! முதலிரவு காட்சியில் (பிளாஷ்பேக்) பாடலைவிட சிவாஜி-பத்மினி அபிநயம் பிரமாதம்.
'உன் கண்ணில் நீர் வழிந் தால்...' பாடல் இசையமைப்பாலும், படமாக்கியிருக்கும் விதத்தாலும் நன்கு சோபிக்கிறது.
பத்மினியின் தோற்றத்துக்கு முதுமையின் கம்பீரமும், அமைதியும் அவ்வளவாகப் பொருந்தவில்லை. இருந்தாலும் தாம்பத்திய இனிமை இழையோடும் பகுதிகளில் அவர் மின்னுகிறார்.
ஹிப்பியாக அறிமுகமாகும் நாகேஷ், நிறைய எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிவிடுகிறார். காந்த் அழகாக மனைவிக்குப் பயப்படுகிறார்.
ரமாபிரபாவுக்கு இப்படி மிரட்டி உருட்டவும் தெரியுமா என்று வியக்கிறோம். 'வில்லி' பாத்திரத்தைச் சாமர்த்தியமாகச் செய்கிறார்.
ரிட்டயராகக் கூடிய காலத்தை ஒரு ஜெனரல் மானேஜர் தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஆச்சர்யம் தான். அதைப் போலவே, வசதியான ஒரு பதவியிலிருந்து ரிட்டயராகும் அதிகாரி, அளவுக்கு அதிகமாக அலட்டிக்கொள்வது அந்தப் பாத்திரத்தின் 'பிரெஸ்டீஜு'க்குப் பொருத்தமாக இல்லை. மூலக் கதையிலுள்ள இந்த பலவீனமான அம்சம் திரையில் பெரிதாகத் தெரிகிறது.
படத்துக்கு 'பிரெஸ் டீஜ்' (கௌரவம்) சிவாஜி யின் நடிப்பு; அவருடைய நடிப்பின் பிரெஸ்டீஜ்... அப்பப்பா!
-
Courtesy: Mr Joe
முதல் மரியாதை - விகடன் விமரிசனம்
எஸ்.ராமானுஜம், கோவை-2
'சிவாஜியின் சகாப்தம் முடிந்துவிட்டது' என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்க, சிவாஜிக்கேற்ற அழுத்தமான கதாபாத்திரத்தைக் கொடுத்து அவருடைய சகாப்தம் முடிய வில்லை என்று நிரூபித்திருக் கிறார் அல்லவா பாரதிராஜா?
நடிப்பில் சிவாஜி இமயம் என்பது உலகறிந்த விஷயம். அவர் ஏற்காத பாத்தி ரங்கள் இல்லை. வெளிப்படுத்தாத உணர்ச்சி கள் இல்லை. இதுவரையில் அவருடைய அற்புதமான நடிப்பாற்றலைப் பாராட்டி எழுதப்பட்ட வர்ணனைகளுக்கும், புகழ்ந்து எழுதப்பட்ட வார்த்தைகளுக்கும் மீறிய திறமை அவரிடம் இருப்பதால், இனி அவர் நடிப்பைப் பற்றிப் பாராட்டுவதில் அர்த்த மில்லை.
கற்பனையில் டைரக்டர் காண்பதை காமிராவுக்கு முன் வெளிப்படுத்துவதுதான் நடிப்பு. அந்த இலக்கணம் சிவாஜியிடம் பிசகியதே இல்லை. ராஜா சாண்டோ காலத்தில் நடித்திருந்தால், அவர் கேட்டதையும் கொடுத்திருப்பார். இன்று பாரதிராஜா கேட் பதையும் கொடுக்கிறார். அந்த அளவுக்கு தேவைக்கேற்பவும் காலத்துக்கேற்பவும் தன்னை மாற்றிக் கொள்ளக்கூடியவரைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது டைரக்டர்களின் கையில்தான் உள்ளது!
இந்தக் கதையில், பஞ்சத்தால் அடி பட்டு அடைக்கலம் தேடி வரும் ராதா விடம் தூய்மையான உள்ளத்தோடு பழகுவ தாகட்டும், தாய்மாமனுக்குக் கொடுக்கப் பட்ட வாக்கு காப்பாற்றப்பட வேண்டும் என்கிற நிர்பந்தத்தின் காரணமாய், மனைவி வடிவுக்கரசியின் ஏச்சுக்கும் பேச்சுக் கும் கட்டுப்பட்டுப் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போவதாகட்டும், மனைவி யைச் சார்ந்தவர்கள் ராதாவோடு தன்னைச் சம்பந்தப்படுத்தி எள்ளி நகையாடும்போது சீறி எழுவதாகட் டும்... எந்த இடத்திலும் அளவுக்கதிக மாக உணர்ச்சிவசப்படாமல் சிவாஜி அடக்கமாக நடித்ததிலும், அவரை பாரதிராஜா அப்படி நடிக்க வைத்ததி லும் இருவருமே சம அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
கே.எம்.இளங்கோ, கு.பாளையம்.
பாரதிராஜா எந்தெந்தக் காட்சிகளின்போது நமக்குத் தெரிகிறார்?
எந்தக் காட்சியின்போது தெரிய வில்லை என்று கேட்பதே பொருத்தம்.கலப்படம் செய்யாமல் கிராமத்து மண் வாசனையைப் படம் நெடுக நறுமணக் கச் செய்திருக்கிறார் பாரதிராஜா.
கதாநாயகிக்கு வெள்ளை ஆடை உடுத்தி ஸ்லோமோஷனில் காற்றில் நீச்சலடிக்க வைப்பது, திருவிழாக் காட்சியை வலுக்கட்டாயமாகப் புகுத்தி வண்ண வண்ணத் துணிக ளைச் சலசலக்க வைப்பது, கையில் தீப்பந்தத்தோடு கிராமத்து மொத்த ஜனங்களும் ஒருவித ஆக்ரோஷமான வெறியில் ஓடிவருவது போன்ற தன் பலவீனங்களைத் தவிர்த்து, கொஞ்ச மும் குழப்பமில்லாமல் திரைக்கதை அமைக்கும் தன் பலத்தை மட்டுமே இம்முறை பயன்படுத்தியிருக்கிறார்!
படத்தில் டைரக்டருக்கு வலக்கரம் ஒளிப்பதிவாளர் கண்ணன். 'நான் படப்பிடிப்புக்குச் செல்லும்போது காமிராவை எடுத்துச் செல்வதில்லை.என் கண்ணனின் இரண்டு கண்களைக் கொண்டு செல்கிறேன். அந்தக் கண்க ளுக்கு மட்டும்தான் ஆகாயத்தின் மறு பக்கத்தையும் பார்க்கத் தெரியும்' என்ற பாரதிராஜாவின் பாராட்டுக்குத் தன்னை உரியவராக் கிக்கொண்டுவிட்டார் கண்ணன்.
ஜி.ஜோதிமணி, கோவை-1.
நீண்ட நாட்களுக்குப் பிறகு ராதாவின் அபார நடிப்பு அசத்திவிட்டதே?
'வெறும் ஷோ கேஸ் பொம் மையாக வந்து போகிறார்' என்று ராதா மீது எல்லோராலும் (எங்களையும் சேர்த்து) ஏகமனதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு இந்தப் படத்தில் தவிடுபொடியாகிவிட்டது. மலையோடு மோதியிருந்தாலும், நடிப்பில் மலைக்க வைத்துவிட்டார்!
ஜி.ராஜகோபாலன், சென்னை -24
அறிமுகமாகியுள்ள இளஞ்ஜோடி தீபன் - ரஞ்சனியைப் பற்றி...
பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டுச் சோடை போன முதல் ஜோடி என்ற பெருமை(?) இவர்களைச் சாரும்!
- விகடன் விமர்சனக் குழு
பெரும்பான்மையான வாசகர்களுக்குப் பிடித்த அம்சம்:
சிவாஜி, ராதா நடிப்பு; பாரதிராஜாவின் இயக்கம்.
பிடிக்காத அம்சம்:
ஜனகராஜின் பாத்திரம்.
Today Mudal Mariyadhai shown in Jaya TV.
-
Courtesy: Mr Murali Srinivas old post
இந்த வார ஆனந்த விகடன் இதழில் (22.07.2009) பொக்கிஷம் பகுதியில் [பழைய ஆ.வி. இதழ்களிலிருந்து மறு பிரசுரம் செய்யும் பகுதி] கீழ்க்கண்ட செய்திகள் வந்திருக்கின்றன.
நான் சிவாஜி ரசிகன் -பிரித்வி ராஜ்கபூர்
நானும் நண்பர்களும் பம்பாய் சென்றிருந்தபோது, பிருதிவி ராஜ் கபூரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரோடு உரையாடும்போது 'நடிப்புத் திறமை' பற்றிப் பேச்சு வந்தது. அப்போது அவர் கூறினார்...
''சினிமாவைப் பொறுத்தவரை சிறந்த நடிகனாவது சுலபம். நடை, உடை, பாவனைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏற்ற பாத்திரத்தின் உணர்ச்சிகளை முகபாவத்தில் காட்டி, அலட்டிக் கொள்ளாமல் அநாயாசமாக நடித்துப் பெயர் வாங்கிவிடலாம். மேலை நாட்டு நடிகர்களும் இப்படித்தான் செய்கிறார்கள். நடை, உடை, பேச்சு முதலியன நிஜ வாழ்வில் எப்படியோ அப்படியேதான் இருக்கும். முகபாவம் மட்டும் பாத்திரத்தின் தன்மையைக் காட்டும். ஆனால், நமது சிவாஜி இருக்கிறாரே, அவர் தனது ஒவ்வொரு அங்க அசைவிலும் பாத்திரத்தின் தன்மையைக் காட்டிவிட வேண்டும் என்று பாடுபட்டு நடிக்கிறார். அந்த முயற்சியில் வெற்றியும் பெறுகிறார். அவரைப் பெற்ற நாம் பாக்கியசாலிகள்! மற்ற நடிகர்கள் அவரிடமிருந்து கற்க வேண்டிய நுணுக்கங்கள் பல உள்ளன. எந்த நாட்டில் பிறந்திருந்தாலும், 'சிறந்த நடிகர்' என்ற பாராட்டைப் பெறக்கூடிய திறமை அவரிடம் உள்ளது. பம்பாயில் இவரது நாடகங்கள் நடந்தால், உடல்நலத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் போய்ப் பார்த்துவிடுவேன். நான் ஒரு சிவாஜி ரசிகன்.''
வட இந்திய திரையுலகத் தந்தை எனப் போற்றப்படும் பிருத்விராஜ் கபூரைப் பற்றி சிவாஜி முன்பொருதரம் கூறியதென்ன தெரியுமா?
''அவரா? அவர் எங்களுக்கெல்லாம் வழிகாட்டியாயிற்றே! இந்தியாவில் சிறந்த நடிகர்கள் மட்டுமல்ல, மேல் நாட்டு நடிகர்களுக்கும் ஈடு கொடுக்கும் நடிகர்கள்கூட இங்கு இருக்கிறார்கள் என்பதை நிரூபித்தவராயிற்றே!அவரிடமிருந்து கற்க வேண்டியது எவ்வளவோ! அதற்கு நீண்ட ஆயுள் வேண்டும். அவர் ஒரு நடிப்புக் கடல். அவர் காலில் விழுந்து கும்பிட்டதன் பலன்தான் இன்று நான் உயர்ந்த நிலையில் இருக்கிறேன்! இந்திய நடிகர்களின் தந்தை அவர்!''
- பி.ஆர்.விசுவநாதன்.
மேற்சொன்ன செய்தி 31.10.1965 ஆ.வி. இதழில் வெளியானது.
பண்டைத் தமிழ்நாட்டிலே அரசர்களும், பிரபுக்களும் கலைஞர்களுக்கு வாரி வழங்கு வதுதான் வழக்கமாக இருந்தது. இப்போது காலம் மாறிவிட்டது. மக்கள் மன்னர்களாக மாறிவிட்டனர்! அதனால், கலைஞர்கள் வள்ளல்களாக மாற முடிந்திருக்கிறது.
சென்ற வாரம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நகரத்தில் ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு இலவச உணவளிக்கும் திட்டத் துக்கு இதுவரை யாருமே கொடுத்தறியாத பெருந் தொகையாக ஒரு லட்சம் ரூபாய் கொடுக்க முன் வந்துள்ளார். கட்டபொம்மன் நாடகத்தின் நூறாவது தின விழாக் கொண் டாட்டத்தை ஒட்டி, இந்த நூறாயிரம் ரூபாய் இப் பெரும் பணிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய செயலைக் கண்டு வீரபாண்டிய கட்டபொம்மனின் ஆன்மா ஆனந்தமடைகிறது.
தமிழ்நாட்டில் இத்தகைய ஈகையுள்ளம் படைத்த கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பது நமது பாரதப் பிரதமருக்குத் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு, நமது முதன்மந்திரி, சமீபத்தில் சென்னைக்கு விஜயம் செய்யவிருக்கும் பிரதம மந்திரி நேருஜி கையாலேயே அதை நகரசபைக்கு அளிக்கவேண்டும் என்று யோசனை கூறினார்.
நல்ல காரியங்களுக்கு உதவி புரிவதில் எப்போதுமே முன்னணியில் நின்று வருகிறார்கள் நம் தமிழ்நாட்டு நட்சத்திரங்கள். புயலடித்தாலும், வெள்ளம் வந்தாலும் அவர்கள் நெஞ்சம் நெகிழ்ந்துவிடும். ஏழை மாணவர்களுக்கு இலவச உணவு அளிக்கும் அரிய லட்சியத்துக்கு லட்சம் ரூபாய் கொடுத்த சிவாஜி கணேசன் அவர்களைக் குழந்தைகள் கொண்டாடும்; தெய்வம் வாழ்த்தும்; தமிழ்த் தாய் பெருமைப் படுவாள்!
மேற்சொன்ன செய்தி 12.04.1959 ஆ.வி. இதழில் வெளியானது.
இது தவிர 27.02.1966 தேதியிட்ட இதழில் வெளியான நடிகர் திலகம் சம்பந்தப்பட்ட ஒரு செய்தியையும் மறு பிரசுரம் செய்திருக்கிறார்கள். 1966 வருடம் ஜனவரி மாதம் குடியரசு தினத்தன்று நடிகர் திலகம் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற போது பானுமதி அவர்களுக்கும் பத்மஸ்ரீ கிடைத்தது. இதற்காக பிலிம் வர்த்தக சபை நடத்திய பாராட்டு விழாவில் நன்றி தெரிவித்து இருவரும் ஒரே நேரத்தில் மேடையில் பேசியிருக்கிறார்கள். நடிகர் திலகம் தமிழில் என்ன சொன்னாரோ அதையே அப்படியே தெலுங்கில் பானுமதி பேசியிருக்கிறார். தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி வந்த நன்றியை கேட்டு கூட்டத்தினர் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர் என்று குறிப்பிட்டுளார்கள்.
இதோடு சேர்ந்து நடிகர் திலகம் வொயிட் & வொயிட்டில் பாடம் செய்த புலியின் மீது கை வைத்து நிற்கும் அமர்க்களமான போஃஸ் முழுப்பக்கத்தில் வந்திருக்கிறது.
அன்புடன்
-
Courtesy: Saradha Madam old post
வசந்த் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் 'சிங்கத்தமிழன் சிவாஜி' தொடரில், நேற்றைய எபிசோட்டில் திரு. ராம்குமார் சொன்ன தகவல்கள் ரொம்ப 'டச்சிங்'காகவும், மனதை நெகிழச்செய்வதாகவும் இருந்தன. முதலில், உலகநாயகன், கலைஞானி டாக்டர் கமல், தனது திரையுலக பாதையில் ஐம்பது வருடங்களைத் தொட்டதற்கு வாழ்த்துச்சொன்னவர், கமலுக்கும் சிவாஜிக்கும் இடையேயான பரஸ்பர உறவு பற்றியும் விவரித்துச்சொன்னார். களத்தூர் கண்ணம்மாவைத்தொடர்ந்து, பார்த்தால் பசிதீரும் படத்தில் சிவாஜியுடன் நடித்த அனுபவத்தைச் சொல்லும்போது, அதில் சிவாஜியின் பெர்ஃபாமென்ஸ் பற்றியும் சொன்னார். முன்னாள் ராணுவ வீரரான இவர் ஒருகால் ஊனமுற்ற நிலையில் 'காலை நொண்டிக்கொண்டே டூயட் பாடியவர் இவர் ஒருவராகத்தான் இருக்கும்' என்றுபெருமையுடன் குறிப்பிட்டார். (அதே மாதிரி கமல் நடந்து காட்டுவாராம்). கூடவே தேவர் மகன் கதை டிஸ்கஷன் பற்றிக்குறிப்பிட்ட ராம்குமார், பாதிக்கதையை மட்டும் எழுதிய நிலையில், நடிகர்திலகத்திடம் கதை சொன்ன கமல், நீங்கள் நடிப்பதாக இருந்தால் மீதிக்கதையையும் எழுதுகிறேன் என்று சொன்னாராம். முதலில் மறுத்த நடிகர்திலகம், பின்னர் சிறிதுநேரம் கழித்து கன்வின்ஸ் ஆகி, 'சரி நடிக்கிறேன், போய் மீதிக்கதையை ரெடி பண்ணு' என்றாராம்.
தேவர் மகனுக்காக 'சிறந்த நடிகர்' என்ற தேசிய விருது வழங்கப்பட்டபோது, நடிகர்திலகம் அதைப்பெற்றுக்கொள்ள டெல்லிக்கு செல்ல மறுத்துவிட்டார் என்றும், நடிகர்திலகம் மறுத்ததால், சிறந்த படத்துக்காக தேவர்மகனுக்கு வழங்கப்பட்ட விருதைப்பெற கமலும் டெல்லி செல்லவில்லை என்றும் சொன்னார். (மத்தியில் இருப்பவர்களுக்கு இது உறைத்ததால்தான், 'தாதாசாகேப் பால்கே' விருது நடிகர்திலகத்தைத் தேடி வந்தது போலும்).
பின்னர், எகிப்து அதிபர் கமால் அப்துல் நாஸர், இந்தியா வந்திருந்தபோது நடிகர்திலகம் அளித்த விருந்தில் கலந்துகொண்டு பெருமைப்படுத்தியதையும், அப்போது நடிகர்திலகம் நினைவுப்பரிசாக வழங்கிய பெரிய தஞ்சாவூர் தட்டை மகிழ்ச்சியுடன் நாஸர் ஏற்றுக்கொண்டதையும் நினைவுகூர்ந்தார். (தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் நடிகர்திலகம் பெருமை சேர்த்த தருணங்கள்).
இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கரும் அவரது குடும்பத்தினரும், தங்கள் குடும்ப நண்பர்களாக ஆன நிகழ்ச்சியையும் ராம்குமார் சொன்னார். பம்பாயில் 'பாவமன்னிப்பு' படம் பார்த்த லதாவும் அவரது குடும்பத்தாரும், நடிகர்திலகத்தைப் பார்த்தபோது, தங்களின் தந்தை நினைவு வந்ததாகவும், உடனே விமானத்தைப்பிடித்து சென்னை வந்து நேராக நடிகர்திலகத்தின் வீட்டுக்கு வந்தவர்கள் அவர் காலில் விழுந்து ஆசிபெற்று, அவர் கையில் ராக்கியைக் கட்டி தங்களின் அண்ணனாக ஏற்றுக்கொண்டார்களாம். முன் அறிமுகம் இல்லாத இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் இந்த அன்பில் நடிகர்திலகம் திகைத்துப்போனாராம். அன்றிலிருந்து இன்று வரை தங்கள் குடும்ப நிகழ்ச்சிகள் எதுவும் லதா மங்கேஷ்கர் இல்லாமல் நடந்ததில்லையென்றும், அதுபோலவே லதாவின் குடும்ப நிகழ்வுகளும் நடிகர்திலகம் மறையும் வரை அவரில்லாமல் நடந்ததில்லை என்று நெகிழ்வுடன் குறிப்பிட்டார். (லதா மங்கேஷ்கர் ராக்கி கட்டிய அந்தக்கைகளில் நானும் ராக்கி கட்டியிருக்கிறேன் (இதை முன்பே நான் குறிப்பிட்டுள்ளேன்) என்பதை நினைத்தபோது என் கண்கள் பனித்தன
'வசந்தகாலக்கோலங்கள், வானில் விழுந்த கோடுகள்
கலைந்திடும் கனவுகள், கண்ணீர் சிந்தும் நினைவுகள்').
ஒவ்வொரு ஆண்டும், நடிகர்திலகம் பிறந்த நாளான அக்டோபர் 1-ம்தேதி, நடிகர்திலகத்துடன் பணியாற்றிய கலைஞர்களில் நான்கு அல்லது ஐந்து பேருக்கு ஆண்டுதோறும் தலா ஐம்பதாயிரம் செக்கும், சிவாஜி விருதும் வழங்கும் திட்டம், லதா மங்கேஷ்கர் சொன்ன யோசனைதான் என்றும், அதன்படி கடந்த ஏழு ஆண்டுகளாக தானும் பிரபுவும் அதைத் தொடர்ந்து செய்து வருவதாகவும் இவ்வருடமும் வரும் அக்டோபர் 1 அன்று செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டார்,
ஆரம்பத்தில் குடும்பத்திற்காக நேரம் செலவிடாமல், படப்பிடிப்புகளிலேயே இருந்த நடிகர்திலகம், 1970-க்குப்பின்னர், குடும்பத்துக்காக ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாய ஓய்வெடுத்துக்கொள்வாராம். 'அதன்பின்னர்தான் நாங்களெல்லாம் அப்பாவுடன் அதிக நேரம் இருக்க முடிந்தது' என்ற ராம்குமார் ஒரு மகனாக தன் ஆதங்கத்தை வெளியிட்டபோது நம் கண்களில் நீர் கட்டியது. 'அப்பா தன் வாழ்நாளில் ஒருமுறைகூட தன்னையோ பிரபுவையோ கட்டியணைத்துக் கொண்டதில்லை, சித்தப்பா பசங்களையெல்லாம் அணைத்துக்கொள்வார். கேட்டால் அவங்க முன்னால் உங்களை அணைத்துக்கொண்டால் பெரியப்பா தன் பிள்ளைகளை மட்டும் அணைத்துக்கொள்கிறார் என்று நினைப்பார்கள் என்ற எண்ணத்தினால் விலகியே இருப்பாராம். (அதனால்தான் கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு தமிழ்நாட்டிலேயே ஒரு எடுத்துக்காட்டாக விளங்கும் குடும்பமாக திகழ்கிறது). அவர் மறைந்த பிறகு, அவர் உடலைக்கட்டிக்கொண்டு அழும் பாக்கியம்தான் தனக்கு கிடைத்தது என்று அவர் சொன்னபோது, பாசத்துக்கு ஏங்கிய அந்த முகத்தைப்பார்த்து நம் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் அவர் மனம் உடைந்துவிடாமல் பேசினார். ராம்குமார் கூலிங்கிளாஸ் அணிந்திருந்ததால், அவர் கண்கலங்கியதை நாம் பார்க்க முடியவில்லை.
-
Courtesy: Mr joe
சினிமா விமர்சனம்: தங்கப் பதக்கம் -விகடன்
'தங்கம் என்றால் இதுதான் மாற்றுக் குறையாத தங்கம்' என்று கையில் எடுத்துக்காட்டுவது போல, போலீஸ் அதிகாரி என்றால் தன்னைப் போல்தான் இருக்கவேண்டும் என்று சொல்லாமல் சொல்லும் சிவாஜி கணேசனின் நடிப்பும் தோற்றமும் தங்கமா, வைரமா என்று வியக்கிறோம்!
காட்சிக்குக் காட்சி சிவாஜியின் கம்பீரத்தையும், கண்டிப்பையும், கடமை உணர்ச்சியையும், கனிவையும் பார்க்கும்போது எந்த இடத்தில் உயர்ந்து நிற்கிறார் என்று இனம் கண்டு கொள்ளப்பார்க்கிறோம். முடியவில்லை.
கடமையே உருவமான போலீஸ் அதிகாரிக்கு 'என் னைப் போல் கண்ணியமான ஒரு பெண்தான் மனைவியாக இருக்கமுடியும்' என்று சொல் வதுபோல் லட்சிய மனைவியாக நடித்திருக்கும் கே.ஆர்.விஜயா வின் நிறைவை எப்படிச் சொல் வது? தங்கப் பதக்கத்தைத் தட்டிக் கொள்கிறார்!
ஸ்ரீகாந்திடம் நல்ல முன்னேற்றம். அப்பாவின் கண்டிப்பைத் தவறாகப் புரிந்துகொண்டு அவரை அவமானப்படுத்தும் சந்தர்ப்பங்களைச் சாமர்த்திய மாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
சோவுக்குக் கான்ஸ்டபிள் பாத்திரம் ஒன்று போதாதா? கவுன்சிலர் களேபரம் கதைக் குத் தேவையில்லாத கூத்து!
மைனர் மனோகரை அங்கவஸ்திரத்தால் கட்டி இழுத்துப்போகும் போலீஸ் அதிகாரி, வழியில் மடக்குகிற அத்தனை பேரையும் கைத்தடியாலேயே அடித்து நொறுக்குவது இயற்கையாக இல்லை.
மகன் மீது போலீஸ் அதிகாரி காட்டும் கண்டிப்புக்குக் கதையில் கொடுக்கப்பட்டுள்ள அழுத் தம், அவன் தந்தையைப் பழி வாங்கத் துடிக்கும் அளவுக்கு எதிரியாக மாறுவதற்கும், தேசத் துரோகியாகக்கூடிய அளவுக்கு மாறுவதற்கும் கனம் சேர்ப்ப தாக இல்லை.
ஜீப் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த கதை, யுத்தம்-ராணுவ ரகசியம் என்று வரும்போது தடுமாறுகிறது.
இத்தனை இருந்தும், எதையும் கண்டுகொள்ளவிடாதபடி திசை திருப்பிவிடுகிறார் சிவாஜி.
தங்கப்பதக்கம்... சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஒரு தங்கப்பதக்கம்.
Thanks : Vikatan.com
-
Courtesy: Mr Joe
'பராசக்தி' முதல் 'உயர்ந்த மனிதன்' வரை..! - பஞ்சு
பதினாறு ஆண்டுகளுக்கு முன், முதன்முதலாக 'பராசக்தி' படத்தில் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 125-வது படமாக 'உயர்ந்த மனிதன்' வெளிவருகிறது. 'பராசக்தி' பட மாக்கப்பட்ட ஏவி.எம். ஸ்டுடி யோவில்தான் 'உயர்ந்த மனித னும்' உருவாகி இருக்கிறது. பராசக்தியை டைரக்ட் செய்த இரட்டையர்கள் கிருஷ்ணன் - பஞ்சுதான் இந்தப் படத்தையும் டைரக்ட் செய்திருக்கிறார்கள். திரு.பஞ்சு, சிவாஜி கணேசனைப் பற்றி இங்கே சொல்கிறார்:
''முதன்முதலாக நாங்கள் சிவாஜி கணேசனைப் பார்த்தது 1948-ம் வருஷத்தில். அதற்கு முன்பே 'சிவாஜி'யாக நடித்து விட்டபோதிலும், அப்போது அவர் வெறும் வி.சி. கணேசன் தான். என்.எஸ்.கே. நாடக சபா வில் மனோகரா நாடகத்தில் 'விஜயாள்' வேஷம் போடுவார். அந்த நாடகத்தில்தான் அவரைப் பார்த்தோம். அவரது நடிப்பில் அப்போதே ஓர் அலாதித் தன்மை பளிச்சிட்டது. பிற்கா லத்தில் அவர் திரை உலகில் ஒரு சிறந்த நடிகராக வருவார் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதற்கான அறிகுறிகள் அவரது நடிப்பில் இருந்தன. அப்போதே அவரைச் சினிமா உலகுக்குக் கொண்டுவர விரும்பினோம். ஆனால், அதற்குச் சந்தர்ப்பம் சரியாக இல்லை. 1950-ல்தான் எங்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைத்தது - பராசக்தி படம் மூலமாக.
'பாவலர்' பாலசுந்தரம் எழுதி, நாடகமாக நடிக்கப்பட்டு வந்த பராசக்தியைத் திரைப் படமாக்க நினைத்தபோது, யாரைக் கதா நாயகனாகப் போடுவது என்ற பிரச்னை எழுந்தது. எங்களுக்கு கணேசனைப் போட வேண்டும் என்ற எண்ணம். தயாரிப்பாளர் களுக்கும் அப்படித்தான். ஆனால், ஒரு சிலர் வேறு நடிகர்களைப் பற்றிச் சொன்னார்கள். கே.ஆர்.ராமசாமியின் பெயரும் அடிபட்டது. கடைசியில் 'அண்ணா'விடம் போய், அவரு டைய யோசனையைக் கேட்டோம். 'உங்கள் எண்ணம்தான் சரி! கணேசனையே போடுங் கள். அவர் நன்றாக நடிப்பார். தமிழ் சினிமா உலகுக்கு ஒரு புதிய நடிகர் கிடைத்த மாதிரியும் இருக்கும்' என்றார் அண்ணா.
அப்போது கணேசன் பெரிய குளத்தில் 'சக்தி நாடக சபா' நாடகங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். தினசரி நாடகம். 'டெஸ்ட்'டுக்கு ரயிலில் வந்து போவதென்றால் நாடகங்கள் பாதிக்கப்படும். எனவே, பெரிய குளத்திலிருந்து திருச்சி வரை காரிலும், அங்கிருந்து சென் னைக்கு விமானத்திலும் அழைத்து வந்து, மறுபடியும் விமானத்திலேயே அனுப்பி வைத்தோம். உயரப் பறந்து வந்து, சினிமா உலகுக்குள் நுழைந்து, உயர்ந்த இடத்தைப் பிடித்துவிட்ட நடிகர் அவர்'' என்றார் பஞ்சு.
சிவாஜியின் நடிப்பு, கிருஷ் ணன்-பஞ்சுவின் டைரக்ஷன், கலைஞர் கருணாநிதியின் அரு மையான வசனங்கள் எல்லாம் சேர்ந்ததால், பராசக்தி படம் 'ஓஹோ'வென்று ஓடியது. சினிமாவில் வரும் பண்டரிபாய் வேஷம் நாடகத்தில் இல்லை. கருணாநிதியின் புதிய படைப்பு அது. நாடகத்தின் கதைப் போக்கில் இருந்த குறைகளைச் சரி செய்வதற்காக, மற்றவர்க ளின் சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்வதற்காக, கருணாநிதி அந்தப் பாத்திரத்தைச் சிருஷ் டித்தாராம்.
''இப்போது சிவாஜி நடிப்பில் அலாதியான மெருகு ஏற்பட் டிருக்கிறது. ஒன்றைக் கவனிக்க வேண்டும். பராசக்தியைப் போல் 'டயலாக்' படங்களுக்கு அப்பொழுதும் சரி, இப்பொழு தும் சரி, அப்படித்தான் நடிக்க வேண்டும். இப்போது 'டயலாக்' பாணிதான் மாறிவிட்டதே! ஆனால், இந்தப் பாணியில் கூட சிவாஜிக்குத்தான் வெற்றி. ஏனெனில் எந்தெந்த வசனத்தை எப்படியெப்படி பேசவேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். உலகில் எந்த நடிகரை எடுத்துக்கொண்டாலும், சிவா ஜியைப் போல் யாரும் இவ்வ ளவு 'வெரைட்டி'கள் செய்த தில்லை. 'வெரைட்டி' மட்டு மல்ல, ஒரே வேஷத்தைப் பல கோணங்களில், பலவிதமாகச் செய்யக்கூடியவர் சிவாஜி. உயர்ந்த மனிதன் படத்தில் இளைஞராகவும், அப்பாவாக வும் வருகிறார் கணேசன். அப்பா வேஷம் அவருக்குப் புதிதல்ல. மோட்டார் சுந்தரம் பிள்ளை, எங்க ஊர் ராஜா ஆகிய படங்களிலும் அப்பா வேஷம் போட்டிருக்கிறார். ஆனால், இந்த மூன்று அப்பா வேஷங்களிலும் மூன்று வித மான 'அப்பா'க்களைக் காட்டி யிருக்கிறார். சிவாஜியைத் தவிர வேறு யாராலும் அதைச் செய் திருக்கமுடியாது.
உயர்ந்த மனிதனில் தீப் பிடித்து எரிகிற ஒரு வீட்டுக்குள் போக வேண்டும். தயங்காமல் போயே விட்டார். கை கால்களி லிருந்த ரோமங்கள் எல்லாம் அனலில் கருகிவிட்டன. 'இந்த இடத்தில் உங்கள் முகத்தில் கொஞ்சம் கரி இருக்கவேண் டும்' என்றால், 'அவ்வளவு தானே!' என்று, அணைந்தும் அணையாமலும் இருக்கும் ஒரு கொள்ளியிலிருந்து கரியை எடுத்துப் பூசிக் கொள்வார். வேஷத்தில் அவருக்கு அவ்வ ளவு ஈடுபாடு!'' என்றார் பஞ்சு.
நன்றி : விகடன்
-
a recap of Mr Murali Srinivas old post
கோடீஸ்வரன் - Part I
தயாரிப்பு: கணேஷ் மூவி டோன்
இயக்கம்: சுந்தர்ராவ் நட்கர்னி
வெளியான நாள்: 13.11.1955
ஊரில் பெரிய மனிதர் ராவ் பகதூர் ராமசாமி. அவருக்கு ஒரு மகன் கண்ணன். ஒரு மகள் நீலா. கண்ணன் சென்னையில் எம்.ஏ. படித்துவிட்டு ஊருக்கு வருகிறான். மகள் நீலா வீட்டில் இருக்கிறாள். பணத்தாசை பிடித்த ராமசாமி தன் மகனுக்கு பெரிய அளவிலான வரதட்சணை எதிர்பார்க்கிறார்.
பக்கத்து வீட்டில் வசிப்பவர் சிதம்பரம். வசதிக் குறைவானவர். அவர் மகள் கமலா கல்யாணத்திற்காக காத்திருக்கிறாள். ஆனால் வரும் மாப்பிள்ளைகள் எல்லோரும் வரதட்சணை அதிகமாக கேட்க அவளின் கல்யாணம் தள்ளிப் போகிறது. ஒரு டாக்டர் அவளை பெண் பார்க்க வந்து விட்டு ஏராளமான கேள்விகள் கேட்டு ஏராளமான வரதட்சணையும் கேட்க அந்த வரனும் தட்டிப் போகிறது. கமலாவும் கண்ணனும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.
சிதம்பரத்தின் அண்ணன் மகன் சந்தர். சென்னையில் மருத்துவப் படிப்பு படித்து கொண்டிருக்கும் சந்தர் கண்ணனோடு ஊருக்கு வருகிறான். அது மட்டுமல்ல, ஆனந்தன் என்ற புனைப் பெயரில் கவிதை எழுதுபவன். ஊருக்கு வரும் சந்தர் பரமசிவத்தின் பண மோகத்தையும் கண்ணனும் கமலாவும் ஒருவரை ஒருவர்
விரும்புவதையும் தெரிந்துக் கொள்கிறான். கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் கண்ணனின் தங்கை நீலாவிற்கு சந்தர் மேல் ஒரு ஈர்ப்பு உருவாகுகிறது.
ஏற்கனவே பெண் பார்க்க வந்து வரதட்சனை கேட்டு தங்களை அவமானப்படுத்திய டாக்டர் பசுபதியை பழி வாங்க அவரை மீண்டும் வரவழைக்கிறார்கள் சந்தரும் நீலாவும். இப்போது கல்யாண பெண் இடத்தில் நீலா இருந்து டாக்டரை பாட தெரியுமா, ஆடத் தெரியுமா என்றெல்லாம் கேள்வி கேட்டு அவமானப்படுத்த, டாக்டர் அவர்கள் மேல் வன்மம் கொள்கிறார்.
கண்ணன் கல்யாணம் நடைபெற சந்தர் ஒரு யுக்தி செய்கிறான். முதலில் தயங்கினாலும் கண்ணன் ஒத்துக் கொள்கிறான். இதற்கு நீலாவின் ஆதரவும் இருக்கிறது. அதன்படி கண்ணன் வீட்டிற்கு பெண் கேட்க செல்லும் சிதம்பரத்துடன் உடன் செல்லும் சந்தர் தன் பணக்கார மாமா ஒருவர் இறந்து விட்டதாகவும் வாரிசில்லாத அவரது உயில்படி சொத்தெல்லாம் தன் பெயருக்கு வருவதாகவும் அதனால் தான் ஒரு கோடீஸ்வரன் என்றும் சொல்கிறான். அண்ணன் என்ற முறையில் தங்கை கல்யாணத்தை நடத்தி வைப்பதாக கூறும் சந்தர் வரதட்சனை பணத்தையும் சேர்த்து முப்பதாயிரம் ரூபாய் தருவதாக சொல்கிறான்.
இந்த பணத்தை கொடுப்பதற்காக ஒரு தந்திரம் செய்யும் சந்தர் கண்ணனிடம் அவனது தந்தையின் இரும்புப் பெட்டியில் இருக்கும் பணத்தை அவருக்கு தெரியாமல் எடுத்து வந்து கொடுக்கும்படி சொல்கிறான். நீலாவிடமும் இந்த திட்டத்தை சந்தர் ரகசியமாக சொல்வதை தங்கையான சிறுமியும் கேட்டு விடுகிறாள்.
தந்தையின் படுக்கைக்கு அடியில் இருக்கும் இரும்பு பெட்டி சாவியை எடுத்து பணத்தை எடுக்க சிரமப்படும் கண்ணனுக்கு நீலாவும் உதவுகிறாள். கல்யாணம் நல்லப்படியாக நடந்து முடிகிறது. தன் மகள் நீலாவை சந்தர் கல்யாணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று ராவ் பகதூர் கேட்க நீலா இப்போது வேண்டாம் என்று மறுத்து விடுகிறாள்.
இந்த நிலையில் சந்தருக்கு பணம் எப்படி கிடைத்தது என்பது பற்றி சிதம்பரம் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருக்க சந்தரின் தங்கை தன் வயதையொத்த தன் கஸினிடம் கோவிலில் வைத்து [அவள் ஏற்கனவே சந்தர் நீலாவிடம் ரகசியமாக சொன்னதை கேட்டிருந்ததால்] உண்மையை சொல்கிறாள். இதை கோவிலுக்கு வந்திருக்கும் டாக்டர் பசுபதி தற்செயலாய் கேட்டு விட, அப்போதே ராவ் பகதூர் வீட்டிற்கு சென்று அவரிடம் சொல்லி விடுகிறார்.
தன்னிடம் வரும் நோட்டுக் கட்டுகளின் எங்களை எழுதி வைக்கும் வழக்கமுடைய ராவ் பகதூர் தன்னிடமிருந்த நோட்டுகளின் எண்களையும் சந்தர் கொடுத்த நோட்டுகளின் எண்களையும் ஒப்பிட்டு பார்க்க, குட்டு வெளிப்படுகிறது. கோவமுறும் ராவ் பகதூர் கண்ணனையும் கமலாவையும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். சந்தரையும் சிதம்பரத்தையும் கேவலமாகவும் பேசி விடுகிறார். தன் சொத்தையெல்லாம் விற்று பணமாக்கி ஒரு வங்கியில் வைப்பு நிதியாக வைத்து விடுகிறார்.
நடந்த தவறுகளுகெல்லாம் பொறுப்பேற்று கொள்ளும் சந்தர் மீண்டும் கண்ணனையும் அவனது தந்தையுடன் சேர்த்து வைக்க சபதம் எடுக்கிறான். ஆனால் இப்போதும் சந்தரை ராவ் பகதூர் ஒரு கோடிஸ்வரனாக நினைத்துக் கொண்டிருக்கிறார். தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க முயற்சி எடுக்க, அவர் மகள் நீலாவோ தன் தந்தை வற்புறுத்தியதால் தன் மனம் சந்தரை நாட தொடங்கி விட்டது என கூறுகிறாள்.
இந்நிலையில் டாக்டர் பசுபதி நீலாவை மணந்து கொள்வதாக மீண்டும் வருகிறார். ராவ் பகதூர் வீட்டிற்கு வரும் சந்தர் தான் நீலாவை திருமணம் செய்துக் கொள்ள தயார் என்றும் ஆனால் அதற்கு ஒரு லட்சத்து ஐம்பதினாயிரம் ருபாய் செலவு செய்ய வேண்டுமென்று நிபந்தனை விதிக்கிறான். அதை கேட்டு விக்கித்துப் போகும் ராவ் பகதூருக்கு அடுத்த அடியாக ஒரு தந்தி வருகிறது. அவர் பணம் முதலீடு செய்திருந்த வங்கி திவாலாகி விட்டது என்பதே அந்த செய்தி. இதை கேட்டவுடன் டாக்டர் பசுபதி கல்யாணம் வேண்டாம் என்று ஓடி விட ராவ் பகதூர் கதறி அழுகிறார்.
தன் சம்பந்தி, மகன், மருமகளை எல்லாம் அழைத்து மன்னிப்பு கேட்கும் அவரிடம் வங்கி திவாலாகவில்லை என்றும் அவரது குணத்தை திருத்தவே இப்படி ஒரு நாடகமாடியதாக சந்தர் உண்மையை வெளிப்படுத்துகிறான். தான் கோடீஸ்வரன் அல்ல என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறான்.
ராமசாமி மனம் மாறி அனைவரையும் ஏற்றுக் கொள்ள சந்தர் நீலா இணைகிறார்கள்.
-
கோடீஸ்வரன் - Part II
ஒரு மராத்தி நாடகத்தை தழுவி எடுக்கப்பட்ட படமே கோடிஸ்வரன். வரதட்சனைக்கு எதிரான ஒரு கதை களத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படம் என்றே தோன்றுகிறது. நம்முடைய விமர்சனங்களில் 50- களில் அதிலும் குறிப்பாக நடிகர் திலகத்தின் முதல் 25 படங்களில் இங்கே எழுதப்பட்டவை ஒரு சில மட்டுமே. என் சிறு வயதில் நான் நடிகர் திலகத்தின் ரசிகனாக மாற ஆரம்பித்த நேரத்தில் இந்த படம்தான் அவரின் 25-வது படமாக எனக்கு சொல்லப்பட்டது. பின்னாளில் கள்வனின் காதலி 25-வது படம் என்று சொன்னார்கள். குழப்பத்திற்கு காரணம் இவை இரண்டுமே ஒரே நாளில் 13.11.1955 தீபாவளியன்று வெளியானது.
50- களில் வெளியான படம் என்றாலே இரண்டு விஷயங்கள் நம்மை சிறிது தயங்க வைக்கும். ஒன்று தூய தமிழ். ஆனால் படத்தின் முதல் காட்சியிலே பேச்சு தமிழ் இடம் பெற மனதில் ஒரு மகிழ்ச்சி. ஒரு சில இடங்களை தவிர படம் முழுக்க பேச்சு தமிழே இடம் பெறுவது குறிப்பிட வேண்டிய விஷயம்.
இரண்டாவது அந்த காலப்படங்களில் நொடிக்கொரு முறை இடம் பெறும் பாடல்கள். இந்த விஷயத்திலும் கோடிஸ்வரன் நமது பொறுமையை சோதிக்காமல் குறைந்த பாடல்களுடன் இருப்பது இன்னொரு சந்தோஷம்.
நடிப்பை பற்றி சொல்வதென்றால் நடிகர் திலகம் எவ்வளவு இயல்பாக பண்ணக் கூடியவர் என்பதற்கு இந்த படம் மேலும் ஒரு உதாரணம். அந்த டாக்டர் சந்தர் ரோல் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல். ஊதி தள்ளி விடுகிறார். ராவ் பகதூரின் காரியதரசியிடம் நக்கலாக பதில் கொடுப்பது முதல் பெண் பார்க்க வந்து பந்தா காட்டும் டாக்டர் பசுபதியை வஞ்ச புகழ்ச்சி செய்வது, கல்யாணத்திற்கு அதை செய்ய வேண்டும் இதை செய்ய வேண்டும் என்று பட்டியலிட்டு விட்டு ஒவ்வொன்றும் இறந்து போன தன் மனைவியின் ஆசை என்று அள்ளி விடும் ராவ் பகதூரை கிண்டல் செய்வது, பத்மினியுடனான கவிதை பற்றிய காதல் பேச்சு, கல்யாணத்தை நடத்த திட்டம் போடும் போது ஒரே வாசகத்தை [அப்படின்னு நான் நினைக்கிறேன்] மாறி மாறி பேசுவது, கோடிஸ்வரனாக வந்து ராவ் பகதூர் முன்பு பேசியது போல அவர் மகளை மணக்க ஒவ்வொரு செலவாக சொல்லி விட்டு இதெல்லாம் என் மாமாவின் ஆசை என்று திருப்புவது இப்படி சர்வ அலட்சியமாக செய்திருப்பார்.
நடிகர் திலகத்தின் தோற்றத்தைப் பொறுத்த வரை மிக இளமையாக இருப்பார். அவர் அணிந்து வரும் சில தொப்பிகள் அழகாக இருக்கும். ஆரம்பத்தில் பீக் cap வைத்து வரும் அவர் வேறு சில காட்சிகளில் ஷெர்வானி குர்தா அணிந்து இஸ்லாமியர் அணியும் தொப்பியை போன்று [பாவ மன்னிப்பு ரஹீம் போன்று] அணிந்து வருவார். கிளைமாக்ஸ்-ல் ஆந்திர பாணி வேட்டி உடுத்தி நெற்றியில் திலகம் இட்டு வருவார். கழுத்தில் தொங்கும் கயிற்றில் கண்ணாடி, அதுவும் சைடு பிரேம் இல்லாமல் மூக்கில் மட்டும் பிடிமானம் உள்ள லென்ஸ் வைத்திருப்பார். ராவ் பகதூர் கண்ணனை வீட்டை விட்டு வெளியேற்றும் போது மட்டுமே அவருக்கு உணர்ச்சி வசப்படும் காட்சி. அதை அமைதியாக செய்திருப்பார்.
பாடல் காட்சிகளில் அவர் ஸ்டைல் ஆரம்பித்தது உத்தம புத்திரனுக்கு பிறகுதான் என்று நினைத்தால் இந்த படத்திலேயே அசத்தியிருப்பார். டூயட் பாடலில் பிரமாதப்படுத்தியிருப்பார். அவர் எழுதிய வசந்த கானம் என்ற கவிதை தொகுப்பை தானே தன் அண்ணனிடம் கொடுப்பதாக வாங்கிக் கொள்ளும் பத்மினி வீட்டு வாசலுக்கு சென்று நின்று சற்றே திரும்பி ஒரு காதல் பார்வை வீசி விட்டு போக இடது கையில் பிடித்திருக்கும் வாக்கிங் ஸ்டிக்கை தூக்கி போட்டு வலது கையில் பிடித்து ஒரு நடை நடப்பார் - சூப்பர் [இந்த ஸ்டைலை கூட அப்போதே செய்து விட்டார்]. அது போல் கல்யாணத்திற்கு பிறகு தங்கையின் வீட்டிற்கு வருபவர் தங்கையும் அவள் கணவனும் பாடி மகிழ்வதைப் பார்த்துவிட்டு கேட் அருகே நின்று ஒரு போஸ், பின் சிறிது வெட்கத்துடன் பக்கவாட்டில் திரும்பி அந்த முகத்தை மட்டும் சிறிது உயர்த்தி ஒரு புன்னகை புரிவார். பிரமாதமாக இருக்கும். இந்த படத்தில் கிட்டத்தட்ட செயின் ஸ்மோக்கர் மாதிரி. பார்க்கில் நண்பனோடு பேசும் போது பத்மினி வந்து விட அப்போது அந்த சிகரட்டோடு காட்டும் ஸ்டைல், பத்மினியை பெண் பார்க்க வந்து எஸ்.பாலச்சந்தர் டான்ஸ் ஆடுவதை வாயில் புகையும் சிகரெட்டோடு சேரில் கம்பீரமாக அமர்ந்து பார்ப்பது - பெரிய கோடிஸ்வரன் என்று சொன்னதற்கேற்ப ஒயிட் கோட் சூட் போட்டு கூலிங் கிளாசோடு வாக்கிங் ஸ்டிக்கோடு சிகரட்டோடு தங்கவேலு வீட்டிற்கு வந்து நிற்பது -எப்பவுமே தான் ஸ்டைல் சக்கரவர்த்தி என்பதை நிரூபிப்பார்.
டாக்டர் பசுபதியாக வரும் வீணை எஸ்.பாலச்சந்தர் கலக்கியிருப்பார். ஒரு செமி லூஸ் செமி வில்லன் ரோலை நேர்த்தியாக பண்ணியிருப்பார். கட்டிக்கோ தாலி கட்டிக்கோ பாடலில் இங்கிலீஷ்,இந்தி, தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் வரும் வரிகளுக்கேற்ப அவர் நடனம் ஆடுவார். பாராட்டப்படவேண்டிய முயற்சி.
ராவ் பகதூர் ராமசாமியாக தங்கவேலு. சரளமாக வசனம் பேசும் முறை அவரது பிளஸ் பாய்ன்ட். இந்த படத்தின் வசனங்கள் பேச்சு தமிழில் அமைந்திருப்பது அதற்கு பெரிதும் உதவி செய்கிறது. எதுக்கும் இது வேணும் என்று அடிக்கடி மூளையை தொட்டுக் காட்டி பேசுவது அவரது ட்ரேட் மார்க் என்றால் பண விஷயத்தில் அவர் ஏமாந்ததை அதே வசனத்தின் மூலமாக அவரது உதவியாளார் சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் சுட்டிக்காட்டுவது ரசிக்கும்படியாக இருக்கும்.
கண்ணனாக வரும் ஸ்ரீராமுக்கு நடிப்பில் பெரிய வேலை ஒன்றுமில்லை. இரண்டு டான்சை தவிர்த்து விட்டு பார்த்தால் பத்மினி ராகினியும் அதே ரகத்தில் சேர்த்து விடலாம். நடிகர் திலகத்தின் தங்கையாக வரும் பேபி சச்சு துரு துறுவென்று இருப்பார்.
தஞ்சை ராமையாதாஸ், காங்கேயன் வசனங்கள் வெகு இயல்பு. இன்றைக்கும் பயன்படுத்தப்படும் சில வசனங்கள் [சம்மன் இல்லாமலே ஏன் ஆஜர் ஆகுறீங்க] அன்றைக்கே படத்தில் இருப்பது ஆச்சரியம். ராகினி கொடுக்கும் டீயை குடித்துவிட்டு அடிக்கும் கமென்ட் [குட்டி - சாரி good டி] இவை எல்லாம் ரசிக்கும்படி இருக்கும் [1955 என்று நினைக்கும் போது].
இசை - S V வெங்கட்ராமன்.
எனது உடலும் உள்ள காதலும்- கர்னாடிக் ராக பின்னணியில் எம்.எல்.வி பாடியிருப்பார். எஸ்.பாலச்சந்தர் பெண் பார்க்க வரும் போது ராகினி ஆடும் பாடல்.
கானத்தாலே காதலாகி போனேன் - பத்மினியை எஸ்.பாலச்சந்தர் பெண் பார்க்க வரும்போது பத்மினி பாடும் பாடல். ஜிக்கி என்று தோன்றுகிறது.
கட்டிக்கோ தாலி கட்டிக்கோ - அன்றைய காலக்கட்டத்தின் வழக்கத்திலிருந்து மாறி பேச்சு தமிழில் மட்டுமல்ல ஏற்கனவே சொன்னது மாதிரி அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வரும் இந்த பாடலை இசையமைப்பாளார் S V வெங்கட்ராமனே பாடியிருப்பார். நன்றாக பண்ணியிருப்பார்.
உலாவும் தென்றல் நிலாவைக் கண்டு - நடிகர் திலகத்திற்கு படத்தில் இந்த ஒரே பாடல்தான். அது மட்டுமல்ல ஏ எம் ராஜா பாடியிருப்பார். பத்மினிக்கு சுசீலா. நடிகர் திலகம் நாட்டியப் பேரொளி கெமிஸ்ட்ரி பிரமாதமாக இருக்கும். கொஞ்சம், கனவின் மாயலோகத்திலே பாடல் காட்சியை நினைவுப்படுத்தினாலும் [ஆனால் அன்னையின் ஆணை இந்த படத்திற்கு பின்தான் வெளியானது] அந்த ஸ்டைல் போஸ் அண்ட் நடைக்கே பார்க்கலாம்.
யாழும் குழலும் உன்னுடன் தானோ - ஸ்ரீராம் ராகினி டூயட் - ராஜா சுசீலா பாடியிருப்பார்கள்.
பகவானே கேளய்யா பச்சோந்தி உலகிலே - தன் தந்தை தங்கவேலுவின் பணத்தாசையை கிண்டல் செய்து பத்மினி பாடும் பாடல்.
சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கம். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி படமும் அதன் வெற்றியும் இயக்குனரை நடிகர் திலகத்தை வைத்து இந்த படத்தை எடுக்க தூண்டியிருக்கக் கூடும். குறை சொல்ல முடியாதபடி போரடிக்காமல் படத்தை கொண்டு போன முறைக்கு இயக்குனர் பாராட்டப்பட வேண்டியவரே.
நடிகர் திலகத்தின் சீரியஸ் படங்களுக்கு கிடைத்த மாபெரும் வரவேற்பு இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. ஒரு ஆவரேஜ் வெற்றியை மட்டுமே இந்த படம் பெற முடிந்தது. சரியான முறையில் மறு வெளியீடு செய்யப்பட்டிருந்தால் படம் நிச்சயமாக ரசிக்கப்பட்டிருக்கும். ஆனால் நடிகர் திலகத்தின் சாதனை படங்களுக்கு நடுவே மாட்டிக் கொண்டதால் அந்த வாய்ப்பும் அமையவில்லை.
அன்புடன்
-
Courtesy: Mr Pammal Swaminathan
நடிகர் திலகமும் பாகவதரும்
தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராகத் திகழும் திரு.எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் நூற்றாண்டு, சமீபத்தில் 1.3.2010 அன்று நிறைவடைந்துள்ளது. தமது ஈடு, இணையற்ற கந்தர்வக் குரலாலும், வசீகரிக்கும் தோற்றப் பொலிவாலும், மக்கள் மனங்களில் நிரந்தர இடம் பிடித்தவர் பாகவதர் என்றால் அது மிகையன்று. எத்தனையோ பாகவதர்கள், "பாகவதர்" என்ற அடைமொழியுடன் இருந்தாலும், பாகவதர் என்று சொன்னால் அது திருவாளர் மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதரையே குறிக்கும். பாகவதர் 14 படங்களே நடித்தார். ஆனால், 100 படங்களில் நடித்த புகழைப் பெற்றார். வெள்ளித்திரையில் அவரது முதல் இன்னிங்ஸ்(1934-1944) சாதனைகளின் சிகரம். இரண்டாவது இன்னிங்ஸ்(1948-1959) சோதனைகளின் உச்சம். திரையிசையில் அமரத்துவ படைப்புகளை அளித்த பாகவதர் 1.11.1959 அன்று அமரத்துவம் அடைந்தார்.
இனி தலைப்பிற்கேற்ற தகவல்களைக் காண்போம்.
பாகவதரின் இரண்டாவது திரைப்படமான நவீன சாரங்கதரா(1936)வும், நடிகர் திலகத்தின் 50வது திரைப்படமான சாரங்கதரா(1958) திரைப்படமும் ஒரே கதைக்களங்களைக் கொண்டவை. சிந்தாமணி(1937) திரைப்படத்தில், பாபநாசம் சிவன் இயற்றி, அவரே செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்து உருவாக்கிய 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்கின்ற பாடல் பாகவதரின் பிரசித்தி பெற்ற பாடல்களில் ஒன்று. இதையே நடிகர் திலகத்தின் குலமகள் ராதை(1963) திரைப்படத்தில், திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் அவர்கள் மிக அழகாக, மிகுந்த நேர்த்தியோடு, ஒரிஜினலையே மிஞ்சும் வண்ணம் ரீ-மிக்ஸ் செய்திருப்பார். கதைக்கும், காலத்துக்கும் ஏற்றாற் போல, கவிஞர் அ. மருதகாசி அவர்கள் பாடல் வரிகளை பாங்குற மாற்றியமைத்திருப்பார். பாகவதரின் பிம்பமான பாடகர் திலகம் டி.எம்.எஸ். பாட, நடிகர் திலகம் தமது நடையழகாலும், ரொமான்ஸாலும் பாடலை எங்கோ கொண்டு சென்று விடுவார். சரோஜாதேவியின் ரியாக்ஷ்ன்களும் இப்பாடலில் நன்றாகவே இருக்கும். பாடல் முடிந்ததும் சரோஜாதேவி நடிகர் திலகத்திடம், "முடிஞ்சுதா?" என்பார். "பெரிய பாகவதரோட பாட்ட இத்தன நேரமா மூச்ச புடிச்சுகிட்டு பாடிருக்கேன். இப்படிக் கேக்குறையே?" என்பார் நடிகர் திலகம். ரசிக்கத்தக்க அம்சங்கள். பாகவதருக்கு வான்புகழை அளித்த ஹரிதாஸ்(1944) திரைப்படத்தில் இடம்பெற்ற சூப்பர்ஹிட் பாடல், 'மன்மத லீலையை வென்றார் உண்டோ'. பாபநாசம் சிவனின் வைர வரிகளுக்கு, சாருகேசியை பழச்சாறாக பிழிந்து கொடுத்திருப்பார் திரை இசை மாமேதை ஜி.ராமநாதன். பாகவதர் குரலில் இப்பாடல், தமிழ்த் திரைப்பாட்டின் உச்சம். இதே 'மன்மத லீலையை' வார்த்தெடுத்தது போல், இதே சாருகேசி ராகத்தில், ஜி. ராமநாதன் அவர்கள் இசைமணம் பரப்பிய பாடல் தான், 'வசந்த முல்லை போலே வந்து'. சாரங்கதரா(1958)வில் இடம்பெற்ற இப்பாடலை இயற்றியவர் கவிஞர் அ.மருதகாசி. பாடலைப் பாடிய டி.எம்.எஸ்சை சௌந்தரராஜ பாகவதர் என்றே சொல்ல வேணடும். அந்த அளவுக்கு பாகவதரின் குரலை குளோனிங் எடுத்திருப்பார். தமது சிருங்கார காதல் நடிப்பால், இவையனைத்தையும் வென்று, முதலாவதாக நிற்பார் ஒருவர். அவர் தான் நடிகர் திலகம்.
1954-ல் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் சீரும், சிறப்புமாக நடைபெற்ற நடிகர் திலகத்தின் ஒரே தங்கை பத்மாவதி அவர்களின் திருமண (பத்மாவதி-வேணுகோபால் திருமணம் தான்) வைபவத்திற்கு வந்தவர்களை வரவேற்று உபசரித்தவர் எம்.கே.டி.பாகவதர்.
1954-ல் வெளிவந்த மனோகரா திரைப்படத்தைக் திரையரங்கில் கண்டு களித்த பாகவதர், நடிகர் திலகத்தின் நடிப்பை இப்படிப் புகழ்ந்தார். "அம்மா என்ற ஒரு வார்த்தையை உணர்ச்சிப்பிழம்பாகச் சொல்லி கைத்தட்டல் பெற்ற ஒரே நடிகர் சிவாஜி தான்." நடிகர் திலகத்தின் நடிப்பில் மயங்கிய பாகவதருக்கு, நடிகர் திலகத்துடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் வந்தது. 1937-ல் சேலம் சங்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், அமெரிக்கர் எல்லிஸ்.ஆர்.டங்கன் அவர்களின் டைரக்ஷ்னில் வெளிவந்த அம்பிகாபதி திரைப்படத்தில் கதாநாயகன் அம்பிகாபதியாக பாடி நடித்தார் பாகவதர். படம் பொன்விழாக் கண்டது. 1957-ல் இதே அம்பிகாபதிக் கதையை ஏ.எல்.எஸ் புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்க, ப.நீலகண்டன் இயக்கினார். கதாநாயகன் அம்பிகாபதியாக நடிகர் திலகம் நடித்தார். அம்பிகாபதியின் தந்தை கவிச்சக்கரவர்த்தி கம்பராக யாரை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் யோசித்த பொழுது, பாகவதரே பளிச்சிட்டார். அவரை படக்குழுவினர் அணுகிய போது 'கம்பராக நான் நடித்தால் சரி வராது' எனக் கூறி விட்டார். பின்னர் கம்பர் கதாபாத்திரத்தில் எம்.கே.ராதா நடித்தார். சிவாஜியுடன் நடிக்க பாகவதர் மறுத்து விட்டார் என சினிமாவுலகில் சிற்சில சர்ச்சைகள் கிளம்பின. அவைகளை பாகவதர், தமது சொல்லாலும், செயலாலும் ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். "சிவாஜியுடன் நடிக்க எல்லோரையும் போல் எனக்கும் விருப்பமே. ஆனால் அம்பிகாபதியின் தந்தை கம்பராக நடிக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால், ஏற்கனவே நான் அம்பிகாபதியாகவே நடித்திருக்கிறேன். அதனால் கம்பராக நடிக்க மனமில்லை." என அறிவித்தார். இதோடு நில்லாமல், தனது சொந்தத் தயாரிப்பில், நடிகர் திலகத்தைக் கதாநாயகனாகக் கொண்டு, தானும் நடிகர் திலகத்துக்கு தந்தையாக நடிக்க முடிவு செய்து ஒரு படத்தைத் துவக்கினார் பாகவதர். அந்தப் படத்தின் பெயர் "பாக்கிய சக்கரம்". இது நிகழ்ந்த ஆண்டு 1958. இந்த சமயத்தில், பாகவதரின் உடல்நிலை மோசமடைய, பாக்கிய சக்கரத்தின் படப்பிடிப்பு நடத்த முடியாமலே நின்று போனது. பின்னர் 1959-ல் பாகவதர் இயற்கை எய்தினார். "திரை, இசை உலகின் இமயம் வீழ்ந்தது" என நடிகர் திலகம் இரங்கல் விடுத்தார்.
சமீபத்தில், சிவாஜி-பிரபு அறக்கட்டளையின் பெருமுயற்சியில், திரையுலக முன்னோடிகளை கௌரவிக்கும் விதமாக, நடிகர் திலகத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தன்று(21.7.2003), சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், தபால் துறை, பாகவதருக்கு சிறப்பு தபால் உறை வெளியிட்டு கௌரவித்தது. (இதே நிகழ்ச்சியில், நடிகர் பி.யூ.சின்னப்பா அவர்களுக்கும், கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களுக்கும் சிறப்பு தபால் உறை, அவர்களை கௌரவிக்கும் விதமாக வெளியிடப்பட்டதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.)
அன்புடன்,
பம்மலார்.
-
Courtesy: Saradha Madam old post
வசந்த் தொலைக்காட்சியில் புதன் தோறும் ஒளிபரப்பாகும் 'சிங்கத்தமிழன் சிவாஜி' தொடர் நிகழ்ச்சியின் நேற்றைய (23.03.2010) எபிசோட்டில் கலந்துகொண்டு நடிகர்திலகத்தைப்பற்றிய அரிய பல விஷயங்களை வழங்கியவர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் பாராளுமன்ற் உறுப்பினருமான திரு இரா. அன்பரசு அவர்கள். காங்கிரஸ் தலைவராதலால், அவருடைய உரை நடிகர்திலகத்தின் திரைப்படங்களைபற்றியல்லாது, காங்கிரஸ் பேரியக்கத்தில் அவருடைய பங்களிப்பின் அரிய தொகுப்பாக அமைந்தது. அவருடைய உரையிலிருந்து சில துளிகள்.....
"நடிகர்திலகத்தின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ஆயிரக்கணக்கில் தொண்டர்களும் ரசிகர்களும் அன்னை இல்லத்தில் காலைமுதல் இரவு வரை அவருக்கு வாழ்த்துச்சொல்லிச் சென்றவண்னம் இருப்பார்கள். அனைவரும் சென்ற பின்னர் அவர்கள் விட்டுச்சென்ற செருப்புக்கள் இரவில் ஒரு லாரியில் ஏற்றி வெளியேற்றப்படும். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவர் இல்லத்தில் விருந்துக்கழக்கப்படுவோரில் நானும் கண்டிப்பாக இருப்பேன். பிறந்தநாளின்போது அவருக்கு அளிக்கப்படும் பல்வேறு பரிசுப்பொருட்களை அவர் தனக்கென்று வைத்துக்கொள்ளமாட்டார். அங்கு வந்திருக்கும் ரசிகர்களுக்கு அளித்துவிடுவார்.
எப்போதுமே மிகவும் வெளிப்படையாக மனதில் இருப்பதை அப்படியே பேசும் வழக்கமுள்ளவராக இருந்தார். மனதில் ஒன்றை மறைத்துக்கொண்டு வெளியில் வேறொன்றைப்பேசி நிஜவாழ்க்கையில் நடிக்கத்தெரியாதவராக இருந்தார். அதனாலேயே அரசியலில் பலரால் ஏமாற்றத்துக்குள்ளானார்.
ஒவ்வொரு தேர்தலின்போதும் அவருக்கான சுற்றுப்பயணம் தனியாக தயாரிக்கப்படும். சிவாஜி அவர்கள் இருந்தவரையில் அவர் எந்த தேர்தல் பிரச்சாரத்திலும் பங்கேற்காமல் இருந்ததில்லை. அதிலும் குறிப்பாக அப்போது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு பெரிய தொண்டர் பாசறையாக செயல்பட்டதே அவரது ரசிகர் மன்றங்கள்தான். (இதை மிகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்). ஒவ்வொரு தேர்தலின்போதும் சிவாஜி ரசிகர்களின் உழைப்பு, காங்கிரஸுக்கு பெரிய பலமாக அமைந்தது.
சிவாஜி அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என இந்திராகாந்தியிடம் அப்போது ராணுவ அமைச்சராக இருந்த ஆர்.வெங்கட்ராமன் தெரிவித்திருந்தார். அதை ஏற்று அது தொடர்பாக நேர்முக பேட்டிக்கு வருமாறு டெல்லிக்கு இந்திகாந்தி அம்மையார் அழைத்தார். சிவாஜி அவர்களுடன் நானும் டெல்லி சென்றிருந்தேன். வழக்கமாக இந்திரா அம்மையாரை சந்திக்க யார் சென்றாலும் அவர் அலுவலக அறையில் இருப்பார், போகின்றவர்கள்தான் வணக்கம் செய்துவிட்டு உள்ளே செல்வார்கள். ஆனால் சிவாஜி அவர்கள் சென்றபோது, இந்திரா அம்மையார் வாசல் வரை எழுந்துவந்து வரவேற்று அழைத்துச்சென்றார். கிட்டத்தட்ட அப்போது அவரையே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்க முடிவு செய்தபோதிலும் அது நடைபெறவில்லை. அதற்கு கட்சியில் நிலவிய உட்கட்சிப்பூசல்தான் காரணம் என்று நான் அடித்துச்சொல்வேன். அப்போதுமட்டும் அவர் தலைவராகியிருந்தால், அப்போதே தமிழ்நாட்டில், இப்போது நாம் சொல்லிவரும் 'காமராஜ் ஆட்சி' ஏற்பட்டிருக்கும். அப்படி நடக்காமல் போனதால்தான் இன்னும் நாம் மாநிலக்கட்சிகளுக்கு மாறி மாறி பல்லக்குத் தூக்கிக்கொண்டிருக்கிறோம். (நெத்தியடி)
அவரது திரைப்படங்களில் எப்போதும் தேசியம் இடம்பெற்றிருக்கும். அவர் பங்குபெறும் காட்சிகளில் பின்னணியில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் படம் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அதுபோல அவரது படங்களின் பாடல்களில் பெருந்தலைவர் அவர்களைப்பற்றி புகழ்ந்து பாடும் வரிகளை சேர்க்கச்சொல்வார். தேசியம் அவரது ரத்தத்தில் ஊறியிருந்ததால்தான் யாருமே ஏற்றிராத பல்வேறு தேசியத்தலைவர்களின் பாத்திரமேற்று நடித்து மக்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கினார். (இந்த இடத்தில் பகவத்சிங், திருப்பூர் குமரன் கிளிப்பிங்குகள் காண்பிக்கப்பட்டன).
தமிழ்நாட்டில் அதிகமான இடங்களில் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் சிலை இடம்பெற்றுள்ள்தென்றால் அதற்கு முழுமுதற்காரணம் அண்ணன் சிவாஜி அவர்கள்தான். அதிகமான காமராஜ் சிலைகளின் பீடத்திலுள்ள கல்வெட்டைக் கவனித்தோமானால், அவற்றைத்திறந்து வைத்தவர் அண்னன் சிவாஜி அவர்கள்தான். தன்னை தங்கள் ஊருக்கு வரும்படி அழைக்க வரும் தொண்டர்கள்/ரசிகர்களிடம் 'உங்கள் ஊரில் பெருந்தலைவர் சிலையை நிறுவ ஏற்பாடு செய்யுங்கள், நான் வந்து திறந்து வைக்கிறேன்' என்று சொல்லியே ஊருக்கு ஊர் தலைவர் சிலை ஏற்படக் காரணமாயிருந்தவர் அண்னன் சிவாஜி அவர்கள். (அடுத்து அன்பரசு அவர்கள் சொன்ன விஷயம் சிலிர்க்க வைத்தது).
பெருந்தலைவர் ஆணைப்படி தமிழ்நாட்டில் விலைவாசி உயர்வுப்போராட்டத்தை முன்னின்று நடத்திய அண்னன் சிவாஜி அவர்கள், அந்தப்போராட்டத்தில் கலந்துகொள்வோர் பட்டியலை, தொண்டர்களின் முகவரிகளோடு சேகரிக்க அந்தந்த பகுதி மன்ற பொறுப்பாளர்களுக்கு உத்தரவிட்டார். முகவரி எதற்கென்றால், தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்க நேர்ந்தபோது அவர்களின் குடும்பங்களுக்கு பண உதவி செய்தார். தமிழ்நாட்டில் எந்த கட்சித்தலைவரும் செய்யாத அரிய செயல் இது.
அதுபோல கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரிய வெள்ளம் வந்தபோது, 16 பேரைக்காப்பாற்றிய சிவாஜி ரசிகருக்கு, அப்போதைய அரசு 'வீர இளைஞர்' பட்டம் வழங்கியது. 'நீங்கள் என்ன பட்டம் வழங்குவது?. நான் வழங்குகிறேன்' என்று அவ்விளைஞருக்கு சென்னையில் பாராட்டுவிழா நடத்தி 'வீர இளைஞர்' பட்டம் அளித்ததோடு நில்லாமல் பணமுடிப்பும் வழங்கி கௌரவித்தவர் அண்ணன் சிவாஜி அவர்கள்.
1975 அக்டோபர் முதல்தேதி அவரது பிறந்தநாள்விழாவுக்கு வழக்கம்போல் ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் , திரைப்பட நடிகர்களும் வந்து வாழ்த்துச்சொல்லி சென்றவண்ணம் இருந்தனர். ஆனாலும் அண்ணன் சிவாஜி அவர்களுக்கு பெருந்தலைவர் அவர்கள் இன்னும் வரவில்லையே என்று மனதில் ஒரு தவிப்பு இருந்தது. அதே நேரம் திருமலைப்பிள்ளை ரோட்டில் தனது இல்லத்தில் உடல்நலமின்றி இருந்த பெருந்தலைவர் அவர்களுக்கு, 'சிவாஜியின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தப்போக முடியவில்லையே' என்ற துடிப்பு இருந்தது. ஒரே நேரத்தில் இருவருக்கும் ஒரே மாதிரியான தவிப்பு. இறுதியில் அங்கிருந்த குமரி அனந்தன், மணிவர்மா ஆகியோரிடம் 'புறப்படுங்கள், சிவாஜி வீட்டுக்குப்போவோம்' என்று காரில் கிளம்பிவிட்டார். தலைவர் புறப்ப்ட்டு விட்டார் என்ற செய்தி கிடைத்ததுமே அண்ணன் சிவாஜி அவர்கள் வீட்டுக்குவெளியே வந்து தலைவரை எதிர்பார்த்து நின்றவர், அவர் காரிலிருந்து இறங்கியதும் அவரது கைகளிரண்டையும் பிடித்துக் கண்ணில் ஒற்றிக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டார். எல்லோரையும் வீட்டுக்குள் அழைத்துச்சென்றார். தலைவர் அண்னன் சிவாஜியை வாழ்த்திவிட்டு சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு புறப்பட்டார். பெருந்தலைவர் கலந்துகொண்ட கடைசி நிகழ்ச்சி அண்ணன் சிவாஜி அவர்களின் பிறந்த நாள்தான். மறுநாள் பெருந்தலைவர் மறைந்தார்.
அண்ணன் சிவாஜி அவர்களுடைய கனவெல்லாம் தமிழ்நாட்டில் மீண்டும் 'காமராஜ் ஆட்சி' அமைய வேண்டுமென்பதாகவே இருந்தது. எனவே அவர் கனவு கணடது போல தழகத்தில் 'காமராஜ் ஆட்சி' அமையச்செய்வதே அவருக்கு நாம் செய்யும் பெரிய கைம்மாறு ஆகும் என்று கூறி விடைபெறுகிறேன்".
(காங்கிரஸ் பேரியக்கத்தில் நடிகர்திலகத்தின் பங்களிப்பு பற்றிய அரிய பல தகவல்களைத்தந்த அன்பரசு ஐயா அவர்களுக்கு சிவாஜி ரசிக நெஞ்சங்களின் நன்றிகள்).