அந்த நாள் ஞாபகம்
அதன் பிறகு ஒவ்வொரு காட்சிக்கும் விசில் பறக்கிறது. ஒவ்வொரு ஸ்டைல் போஸிற்கும் ஆரவாரம். ஹோட்டல் ரூமில் டென்னிஸ் ராக்கெட்-ஐ கொடுக்க செல்லும் போது வரும் கிண்டல், நீ வர வேண்டும் பாடலில் வரும் விளையாட்டுகள், ஏர்போர்ட்-ல் போலீஸ் அழைத்து செல்ல அங்கே வைத்து தான் சிவாஜி ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி என்பது தெரிய வரும் அழகான ட்விஸ்ட் இவை எல்லாமே ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டன. மேஜர் கொடுக்கும் சிகரெட் லைட்டர் கேமரா, மைக்ரோபோன் போன்றவை அன்று ஒரு புதுமையாக இருந்தது.
விமானத்தில் கொச்சி செல்லும் போது வருவார் இரண்டாவது சந்திரபாபு. அவர் பேசும் ஒரு வசனத்திற்கு மட்டும் பலத்த எதிர்ப்பு கூக்குரல்கள் எழுந்தன [நீரும் நெருப்பும்]. கொச்சி ஏர்போர்டில் போலீஸ், டைரியை சோதனையிட அதில் இருக்கும் நீளமான சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே நடிகர் திலகம் போலீசிற்கு ஆஃபர் செய்யும் இடம் செம கிளாப்ஸ்.
நான் முன்பே சொன்னது போல படம் விறு விறு. ஆகவே சிவாஜியை கட்டி வைத்து பாலாஜி கேள்வி கேட்கும் இடம், மயிலாப்பூரில் சென்று செக் பண்ணுவது என்று படம் படு ஸ்பீட். இந்த நேரத்தில் பின்னணி இசை பற்றி குறிப்பிட வேண்டும். அதுவரை தமிழ் சினிமாவில் வராத முறையில் கார்கள் செல்லும் போது இசை+ பின்னணி குரல் ஒலித்த விதம் ரசிகர்ளை வெகுவாகவே கவர்ந்தது. மெல்லிசை மன்னர் பிரமாதப்படுத்தியிருந்தார்
ஆனால் தியேட்டரே எழுந்து ஆடியது ரந்தாவா சண்டைக்காட்சியின் போதுதான். அதிலும் நடிகர் திலகம் கதவில் சாய்ந்து நின்று கொண்டு சிகரெட்டை கடைசி பப் எடுத்துவிட்டு கீழே போட்டு நசுக்கி விட்டு "நான் எப்பவும் கடன் வச்சுகிறதிலே" என்று ஆரம்பிக்கும் போது சேரில் எழுந்து நிற்க ஆரம்பித்த மக்கள் சண்டை முடிந்து தான் கீழே இறங்கினார்கள்.
அதன் பிறகு சிவாஜி ரங்கராவ் சந்திப்பு பிறகு பத்மா கண்ணாவின் கண்களை கொண்டு வா டான்ஸ் எல்லாம் கொஞ்சம் அமைதி. மறுபடியும் கவர்ச்சி வில்லன் கண்ணனோடு சண்டை காட்சி வர சூடு பிடித்தது. அதிலும் கண்ணன் மாற்று முகாமை சேர்ந்தவர் என்பதால் சூடு + கோஷங்கள் அதிகமாகவே ஒலித்தது. அது முடிந்து கல்யாண பொண்ணு பாடல். மறுபடியும் ஸ்டாண்ட் அப் ஆன் த பெஞ்ச். பெரியவர்களுக்கே மறைக்கும். எனக்கு சுத்தம். நான் என் கஸினிடம் "என்ன இது ஆ ஊ -ன்னா சேர் மேல ஏறிறாங்க" என்று கேட்க அவன் ரொம்ப சிம்பிளா "ஓபனிங் ஷோ-ன்னா அப்படிதான் இருக்கும்" என்றான். பாட்டோடு இன்டெர்வல். வெளியில் வருகிறோம். அடுத்த ஷோவிற்கு அப்போதே வரிசை நிற்கிறது. படம் ஓஹோ என்று இங்கிருந்து சொல்ல வெளியே சர வெடிகள் தெருவையே ஒரு வழி ஆக்கியது.
இடைவேளை முடிந்து மீண்டும் படம் ஆரம்பித்தது. நடிகர் திலகத்தை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று ஜெஜெ சொல்வதற்கு ஏற்ப பாலாஜி செயல்படுவார். பிறகு அந்த கோவில் நகைகளை கொள்ளை அடிக்கும் திட்டத்தை பாலாஜி போடுவார். சிறிது நேரத்திற்கு சிவாஜி இல்லாமலே காட்சிகள் ஓடும். கங்கையிலே ஒடமில்லையோ பாடல் காட்சியில் எல்லாம் தியேட்டர் அமைதியாகவே இருந்தது. அந்த காட்சியின் முடிவில் போலீஸ் யூனிபார்ம் அணிந்து நடிகர் திலகம் தோன்றிய போது மறுபடியும் தியேட்டரில் பயங்கர ஆரவாரம்.
இதன் பிறகு தான் கதையின் முக்கிய திருப்பமாக மனோகர் வந்து பாலாஜியை சந்திக்கும் காட்சி. உண்மைகளை ஒவ்வொன்றாக மனோகர் உடைத்து கடைசியாக "பாபு, இந்திய மாப்-லே தெற்கு கூர்மையா இருக்கு. தெற்கே இருக்கும் போலிஸாருக்கும் அறிவு கூர்மை" என்று சொல்லும் காட்சியில் பலத்த கைதட்டல். சிவாஜி - பாலாஜி சண்டை, பிறகு பாலாஜியை மேஜரிடம் கூட்டிக் கொண்டு போய் நம்ம சந்தர் என்று அறிமுகப்படுத்துவது, ரங்கராவ் போட்டோவை பார்த்து விட்டு ராஜா இவன்கிட்டே தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒண்ணு இருக்கு" என்று மேஜர் சொன்னவுடன் நடிகர் திலகம் போட்டோவை குத்தும் காட்சிக்கும் ஒரே அப்ளாஸ்.
இதற்கு பிறகு படம் பயங்கர ஸ்பீட். இரண்டில் ஒன்று பாட்டில் ஒவ்வொரு கதவு, ஒவ்வொரு ஜன்னல் வழியாகவும் நடிகர் திலகம் உள்ளே நுழைய பார்க்க அது ஆரவாரமாக வரவேற்கப்பட்டது. அடுத்து கிளைமாக்ஸ். தமிழ் பட வரலாற்றிலே ராஜாவில் வந்தது போல அவ்வளவு நீண்ட கிளைமாக்ஸ் (கிட்டத்தட்ட 20- 25 நிமிடங்கள்) இடம் பெற்ற படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் கொஞ்சம் கூட தொய்வு இல்லாமல் (இன்று பார்த்தால் கூட) இருக்கும். பணடரிபாயை மனோகர் சாட்டையால் அடிக்க நடிகர் திலகம் கர்சிஃபை பல்லில் கடித்தபடி தொடர்ந்து சிரிப்பார். கண்களில் கண்ணீர் கட்டி நிற்கும். அதை அடக்கி கொண்டு அவர் சிரிக்க சிரிக்க இங்கே தியேட்டரில் ரசிகர்களின் உணர்ச்சி அணை உடைத்து பாய்ந்தது.
படம் முடிய ரசிகர்களுக்கு பயங்கர சந்தோஷம். ஒரே சுரத்தில் அனைவரும் படம் பிடித்திருப்பதாக சொல்ல, வெளியே வருகிறோம். பின் பக்க கேட் வழியாக வர வேண்டும். அந்த இடத்தில் சர வெடிகளை தொடர்ந்து கொளுத்த, நடிகர் திலகத்தை வாழ்த்தி கோஷங்கள், கைதட்டல், டான்ஸ், ஆரவாரம் என்று கூட்டம் மேலமாசி வீதி முழுக்க ஆடிப்பாடிக்கொண்டே போனது. ஒரு பகுதியினர் முன்பக்க கேட் பக்கம் வந்து அதே போல கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். அந்த மூன்று மணி நேர நினைவுகளை அசை போட்டுக்கொண்டே நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.
என்னைப் பொருத்த வரை நான் முதலில் சொன்னது போல என்றென்றும் மனதில் சேகரித்து வைத்திருக்கும் சில சிறு வயது சந்தோஷங்களில் ஒன்று இந்த அனுபவம். நண்பர் tacinema மூலமாக அதை மீண்டும் இங்கே நினைவு கூற ஒரு வாய்ப்பு கிடைத்தது. இது போல மனதில் உள்ள வேறு சில அனுபவங்களை சந்தர்ப்பம் வரும் போது பகிர்ந்து கொள்கிறேன்.
அன்புடன்