Quote:
2nd January 2011, 01:14 AM#1006
Murali Srinivas
Moderator Seasoned Hubber
--------------------------------------------------------------------------------
Join Date: Mar 2006Posts: 1,979
லட்சுமி கல்யாணம் - Part III
ஏ.எல்.ஸ்ரீனிவாசனை பொறுத்தவரை படத்தயாரிப்பாளர் என்ற பெயர் மட்டுமே. ஒரு படத்தை எப்படி திட்டமிட்டு தயாரிப்பது, அதை குறிப்பிட்ட காலத்தில் எப்படி வெளியிடுவது போன்றவை அவருக்கு கை வராத கலை. ஜெமினி, சிவகுமார் ஆகியோரை வைத்து ஏ.பி.என் இயக்கத்தில் கந்த லீலா என்ற பெயரில் படம் தயாரித்தார். அது இடையில் வைத்து நின்று போனது. அந்நேரம் வெளியான திருவிளையாடல் படத்தின் இமாலய வெற்றியை பார்த்த விநியோகஸ்தர்கள் நடிகர் திலகத்தை இந்தப் படத்தில் கொண்டு வர வேண்டும் என்று பிரஷர் கொடுத்தனர். ஏ.எல்.எஸ் மற்றும் ஏ.பி.என். இருவரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் வீரபாகு ரோலை ஏற்றதும் படம் கந்தன் கருணை என்று பெயர் மாற்றப்பட்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்றதும் நமக்கு தெரிந்ததே. அது 1967 ஜனவரியில் வெளியானது. அப்போதே ஆரம்பிக்கப்பட்ட படம்தான் லட்சுமி கல்யாணம். பிசியான ஆர்டிஸ்ட்களை வைத்து படம் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அவர்களின் கால்ஷீட் கிளாஷ் ஆக வழக்கம் போல் வெளியிட தாமதமானது.
கதை வசனம் பாடல்கள் கண்ணதாசன். சிவாஜி வி.கோபாலகிருஷ்ணனிடம் அவர் தங்கையை திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று சொல்லும் இடத்திலும், நம்பியாரை வெட்டுவதற்காக அரிவாளுடன் கிளம்பும் சிவாஜியை நிர்மலா தடுக்கும் காட்சியிலும் மட்டும் இடம் பெறும் தூய தமிழ் வசன பாணியை தவிர்த்து விட்டால் வசனங்கள் இயல்பான தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும். கிழவங்கதானே இப்போதெல்லாம் லவ் பண்றாங்க போன்ற சில கிண்டல் வசனங்களும் உண்டு.
ஒளிப்பதிவு இயக்கம் GOr நாதன். ஒளிப்பதிவு ஓகே. ஆனால இயக்குனர் பொறுப்பை அவரிடம் ஏன் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. படத்தில் குறை என்று சொன்னால் படத்தின் மையப் பகுதியான மேஜர் எதற்காக தலைமறைவு வாழ்க்கை நடத்துகிறார் ஏன் அவரை போலீஸ் தேடுகிறது, அவர் யாரை எதற்காக கொலை செய்தார் என்பதை இன்னும் கொஞ்சம் தெளிவாக அனைவருக்கும் புரியும்படியாக சொல்லியிருக்கலாம். திரைக்கதையில் ஏற்பட்ட பிழையா இல்லை கால்ஷீட் பிரச்சனைகளினால் எடுக்க முடியாமல் போய் விட்டதா என்று தெரியவில்லை. அது போல நம்பியாரின் ஆட்களுடன் நடிகர் திலகம் போடும் சிலம்பு சண்டை காட்சியையும் இன்னும் சற்று நன்றாக எடுத்திருக்கலாம்.
கவியரசரின் சொந்தப் படம் எனும் போது மெல்லிசை மன்னர் விட்டு விடுவாரா?
1. போட்டாளே! போட்டாளே! உன்னையும் ஒருத்தி பெற்று போட்டாளே! - சோவின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் வரும் பாடல். சிவாஜி, சோ மற்றும் நிர்மலாவிற்கு முறையே டி.எம்.எஸ், ஏ.எல்.ராகவன் மற்றும் ஈஸ்வரி பாடியிருப்பார்கள். கேரக்டரின் தன்மையை நடிகர் திலகம் எந்த அளவிற்கு உள்வாங்குவார் என்பதற்கு இந்தப் பாடலில் வரும் ஒரு ஷாட் உதாரணம். நிர்மலாவை பார்த்ததும் பாலாஜிக்கு பிடித்து விடுகிறது. இதை நடிகர் திலகமும் உணர்ந்து விடுவார். அவருக்கு சந்தோஷம். அதே நேரத்தில் இந்தப் பாடலின் ஒரு சரணத்தின் இடையில் நிர்மலா அந்த ஹாலில் தனியாக ஒரு இடத்தில் போய் ஆட, ஆசையுடன் பாலாஜி அங்கே சென்று நிர்மலாவின் கைப்பற்ற முயற்சி செய்ய, இதை கவனித்து விடும் நடிகர் திலகம் இயல்பாக இருவருக்கு இடையில் நுழைந்து ஒரு அண்ணனின் நிலையிலிருந்து நிர்மலாவின் கையை தான் பற்றி பாலாஜியை ஒரு லுக் விட்டுக் கொண்டே ஸ்டெப் போட்டு போவார். இதை எந்த இயக்குனரும் அவருக்கு சொல்லித் தராத நுணுக்கம். இதே பாடலின் இன்னொரு சரணத்தில் முட்டாளின் மூளையிலே முந்நூறு பூ மலரும் என்ற வரியை கவனித்து கேளுங்கள், சிவாஜிதானே பாடியிருப்பார். டி.எம்.எஸ். என்று தவறுதலாக போட்டு விட்டார்களோ! படம் வெளி வருவதற்கு முன் இறுதி சரணத்தில் வரும்
கண்ணா உன் ஆட்சியிலே
கல்யாண சீசன் வரும்
என்ற வரியை பற்றி அது கண்ணாவா இல்லை அண்ணாவா என்று ரசிகர்கள் இடையில் ஒரு விவாதம் இருந்தது. காரணம் படம் வெளியாகும் போது அண்ணாவின் ஆட்சி நடந்துக் கொண்டிருந்த நேரம்.
2. ராமன் எத்தனை ராமனடி - படத்தின் மிகப் பிரபலமான பாடல்- சுசீலாவின் தேன் குரலில்.
பாலாஜி பெண் பார்க்க வரும்போது நிர்மலா சிதார் வாசித்துக் கொண்டே பாடுவதாக அமைந்திருக்கும் கண்ணதாசன் ராமன்களை வைத்து விளையாடியிருப்பார். பாடலின் நடுவில் திரையில் ஒரு பகுதியில் [வேறு சில நடிகர்களை வைத்து எடுத்த] ராமாயணக் காட்சிகள் இடம் பெறும். நிர்மலாவின் நடனமும் உண்டு. பாடல் முடிந்தது கூட தெரியாமல் அனைவரும் மெய்மறந்து இருப்பார்கள். அது பாடல் கேட்பவர்களுக்கும் பொருந்தும் என சொல்லலாம்.
3. யாரடா மனிதன் இங்கே - நடிகர் திலகத்தின் signature பாடல். டி.எம்.எஸ் உணர்வு பூர்வமாய் பாடியிருப்பார். ஒரு ஆதரவற்ற பெண்ணின் வாழ்க்கையில் விளையாடுகிறார்களே என்ற தார்மீக கோவம் கொப்பளிக்கும் பாடல். வரிகள் சாட்டையடியாய் விழும்.
நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே
பாயும் மிருகம் தூங்கும் தெய்வம் நடுவே மனிதனடா
எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குமடா!
[மகாத்மா நடந்தது வரும் காட்சி இடம் பெறும்]
இந்தப் பாடலைதான் தன் படத்தில் வரும் பாடலைப் போல் இருப்பதாக கேள்விப்பட்டு அதை தனக்கு போட்டுக் காட்ட வேண்டும் என்று மெல்லிசை மன்னர் நிர்பந்தம் செய்யப்பட்டார். அதற்கு கண்ணதாசன் மறுக்க, எம்.எஸ்,வி அவருக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு போய் போட்டு காண்பித்தார் என்று சொல்லுவார்கள்.
4. பிருந்தாவனத்திற்கு வருகின்றேன் - மீண்டும் சுசீலாவின் தேன் குரல்.
இரண்டாவது முறையும் திருமணம் தடைபட, சௌகார் கையாகலாத கோவத்தில் நிர்மலாவை ராசியற்றவள் என்ற அர்த்தத்தில் திட்டி விட, கண்ணனிடம் சென்று நிர்மலா நியாயம் கேட்கும் பாடல். கண்ணதாசனின் பேனாவிற்கு சரியான தீனி.
5. வெட்டவெளி பொட்டலிலே பட்ட மரம் ஒன்று - டி.எம்.எஸ்.
நடிகர் திலகம் விரக்தியில் பாடும் பாடல். இங்கேயும் சமுதாய சாடல்கள் இருக்கும். கோவிலின் முன்னால் நின்று நடிகர் திலகம் பாடுவதாக வரும் வரிகள் பளீரென்று இருக்கும்.
தெய்வம் ஆளவில்லையென்றால்
பேய்கள் ஆட்சி செய்யும்ம்மா!
என்ற வரிகளின் போது 42 வருடங்களுக்கு முன்பு கேட்ட கைதட்டல் இன்றும் காதில் ஒலிக்கிறது.[ஆனால் தமிழகத்தின் நிலைதான் மாறவில்லை]
6. தங்க தேரோடும் வீதியிலே ஊர்கோலம் போகுதடா- டி.எம்.எஸ்-சீர்காழியார்.
கல்யாண மாப்பிள்ளையாக வி. கோபாலகிருஷ்ணனை வைத்து ஊர்வலம் வரும்போது நம்பியாரையும், சி.கே.சரஸ்வதியையும் கிண்டல் செய்து பாடும் பாடல். நடிகர் திலகமும் வி.கே.ஆரும் மிகுந்த உற்சாகத்துடன் ஆடிப் பாட அது நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
இப்போது பட ரிலீசிற்கு வருவோம். முதலில் சொன்னது போல படம் எப்போதெல்லாம் combination கால்ஷீட் கிடைத்ததோ அப்போதெல்லாம் எடுத்த படம். ஆகவே இன்ன தேதியில் ரிலீஸ் ஆகும் என்று சொல்ல முடியாத சூழல் [ஒழுங்காய் எடுத்த படம் மட்டும் பார்த்து ரிலீஸ் பண்ணினார்களா என்ற கேள்வி எழுவது காதில் விழுகிறது]. 1968 தீபாவளிக்கு [அக்டோபர் 21] வெளியிட முயற்சி செய்தனர். ஆனால் எங்க ஊர் ராஜா ஏற்கனவே தீபாவளிக்கு கமிட் ஆகியிருந்தது. ஏ.விஎம் வேறு உயர்ந்த மனிதன் நவம்பர் 29 ரிலீஸ் என்று அறிவித்து விட்டார்கள்.இனியும் காத்திருந்தால் பொங்கல் ஆகி விடும். அப்போதும் படங்கள் ரிலீசிற்கு இருக்கின்றன. சரி பரவாயில்லை என்று துணிந்து நவம்பர் 15 அன்று ரிலீஸ் செய்து விட்டார்கள். இங்கேதான் கவனிக்க வேண்டும்.
1968 ஜூலை 27 அன்று வெளியான தில்லானா அப்போதும் பிரமாதமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 1968 அக்டோபர் 21 தீபாவளியன்று எங்க ஊர் ராஜா வெளியாகி வெற்றிக் கொடி கட்டுகிறது. அந்த படம் வெளியான 24 நாட்களில் லட்சுமி கல்யாணம் நவம்பர் 15 அன்று வெளியாகிறது. அது வெளியான 14 நாட்களில் உயர்ந்த மனிதன் வெளியாகிறது, ஒரே நேரத்தில் நான்கு நடிகர் திலகத்தின் படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. எங்கள் மதுரையை எடுத்துக் கொண்டால் சிந்தாமணியில் தில்லானா, நியூசினிமாவில் எங்க ஊர் ராஜா, தேவியில் லட்சுமி கல்யாணம், சென்ட்ரலில் உயர்ந்த மனிதன் என ஓடிக் கொண்டிருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை சாந்தியில் தில்லானா, சித்ராவில் எங்க ஊர் ராஜா[சித்ரா தவிரவும் இரண்டு அரங்குகள்], கிரௌன், புவனேஸ்வரியில் லட்சுமி கல்யாணம் (மற்ற இரண்டு தியேட்டர்கள் கிருஷ்ணவேணி காமதேனு? மவுண்ட் ரோடு தியேட்டர் இல்லை என்று நினைவு], வெலிங்டன்-ல் உயர்ந்த மனிதன் [வெலிங்டன் தவிரவும் இரண்டு அரங்குகள்] ஓடிக் கொண்டிருக்கின்றன. மெயின் தியட்டர்களிலிருந்து தில்லானா மாறினாலும் கூட ஷிப்டிங் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. மதுரையில் சிந்தாமணியில் வெற்றிகரமாக 132 நாட்கள் ஓடிய பிறகு வெள்ளைக்கண்ணு அரங்கத்திற்கு மாற்றப்பட்டு சக்கைப் போடு போட்டது. இவை எல்லாம் போதாதென்று உயர்ந்த மனிதன் ஒரு மாதத்தை நிறைவு செய்யும் போது அடுத்த வெளியீடாக 1969 ஜனவரி 1 அன்று அன்பளிப்பு வெளியாகிறது.
லட்சுமி கல்யாணம் கமர்ஷியல் படம் இல்லை. பொழுது போக்கு படம் இல்லை. கலர் இல்லை. கருப்பு வெள்ளை படம். டூயட் இல்லை. ஏன், ஜோடியே இல்லை. சராசரி ரசிகனை தியேட்டருக்கு வரவழைக்கும் எந்த அம்சங்களும் இல்லை. இத்தனை இல்லைகளையும் தாண்டி, போட்டிக்கு நின்ற நடிகர் திலகத்தின் படங்களையும் சமாளித்து இந்த படம் பெற்ற வெற்றி இருக்கிறதே, அது சாதனை. அதுதான் சாதனை.
தில்லானா -132 நாட்கள்
எங்க ஊர் ராஜா - 85 நாட்கள்
உயர்ந்த மனிதன் - 105 நாட்கள்
லட்சுமி கல்யாணம் - 60 நாட்கள்.
ஆம் மதுரை ஸ்ரீதேவியிலும், கோவையிலும் 60 நாட்கள். இந்தப்படமே எதிர்பாராமல் வெளியானதால் பல ஊர்களிலும் தியேட்டர்கள் பொங்கலுக்கு புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தன. ஆகவே மதுரையில் பொங்கலுக்கு வேறு படத்திற்கு மாறிக் கொடுக்க வேண்டிய சூழல்.
ஆறு மாதங்களுக்கு ஒரு படம் வெளியிட்டு ஒட்டப்பட்டவை அல்ல சிவாஜி படங்கள். இது போன்ற எதிர்மறையான சூழலிலும் தனது படங்களே தனது படங்களுக்கு போட்டியாக வரும் நேரத்திலும் வெற்றிகளை அடைந்தவர் நடிகர் திலகம்.
சிவாஜி ரசிகர்கள் எப்போதும் தலை நிமிர்த்தி நெஞ்சுயர்த்தி சொல்வோம். 80 வருட தமிழ் சினிமா சரித்திரத்தில் நடிப்புக் கலையிலும் சரி, பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளிலும் சரி வரலாறு படைத்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் ஒருவரே.
இந்தப்படத்தைப் பற்றி நடிகர் திலகமே தனது ஒரு வரி விமர்சனத்தில் "இவ்வளவு பெரிய ரசிப்பை நானே எதிர்பார்க்கவில்லை" என்று சொல்லியிருக்கிறார் என்றால் படத்திற்கு கிடைத்த வரவேற்பை நாம் புரிந்துக் கொள்ளலாம்.
அன்புடன்
This is a film close to Raakesh and this is being written to make him visit here often rather than the occasional peep ins. Thanks to Radhakrishnan and Senthil also for bringing this movie for discussion. And Thanks to Swami for providing accurate data.
நடிகர் திலகம் பாகம்..7 ..பக்கம்..101
லட்சுமி கல்யாணம் கொழும்பு...ஜெஸிமா ..ஓடிய நாட்கள்...81