-
மனதுக்கு சிறிதும் பிடிக்காதது
பலவும் சுற்றிலும் நடக்குது
பருவத்தில் மொட்டு மலரவில்லை
செந்நீராய் மழை மாறவில்லை
பேற்றின் பெருமை புரியவில்லை
அடங்கி ஆளும் கலை காணவில்லை
கரையும் இளமை கவலையில்லை
கணக்குப் போடத் தெரியவில்லை
அரிய எளிய இன்ப நேரங்களில்லை
ஆக மக்கள்தொகை பெருகவில்லை
-
பெருகவில்லை
பாலும் தேனும் சர்க்கரையும்
ஆறாக சாலைகளில்...
பெருகவில்லை
இன்பங்கள் எல்லா இடங்களிலும்..
பெருகவில்லை
உற்பத்தி விவசாயம் முன்னேற்றம்..
ஆனாலும்
சுதந்திரம் பெற்ற
உணர்வு மட்டும் இருக்கிறது மிஞ்சி..
-
மிஞ்சி நின்றது எத்தனை
ஒரு காக்காயை சுட்டபின்
சிறுவர் புதிர் இதுதானே
நிமிர்ந்து நேராய் நடந்தவர்
பட்ட துயர் பேசுகின்றன
காவியமும் சரித்திரமும்
மெத்த உணர்ந்தவர் நோகாமல்
நாசுக்காய் நயமாய் வளைந்திட
பறந்துவிட்ட காக்காயாயிருக்க
நெஞ்சை நிமிர்த்தும் தீரர்களோ
பிறப்பதும் சிறப்பதும் இன்றும்
தொடர்வதே அழகிய அனுபவம்
-
அனுபவம் என்று
ஆரம்பித்து எழுதப் பார்க்கையில்
ஏதோ காரியமாய்
சமையலறையில் இருந்த அவள்
எதிர்பாராமல் வந்து முத்தமிட
ம்ம்
கிடைத்தது இன்னொன்று!
-
இன்னொன்று இன்னொன்று இன்னொன்று
ஈன்று ஈன்று ஈன்று
முயன்று முயன்று முயன்று
வென்று வென்று வென்று
வாகை சூடும் வனிதாமணி
ஆண் வாரிசு ஆசையெனும் பிணி
-
பிணிக்கு மருந்தெனவே பக்குவமாய் வாயில்
இனிக்கா தொருபொருளை இட்டவரைத் தான்நோக்கிக்
கண்சுருங்கிக் கத்தும் குழந்தைக் குரலதுவும்
பண்ணில் ஒருவகை தான்
-
ஒரு வகைதான் ஆணினம்
அவ்வினம் அறியாத இலக்கணம்
பெருங்கடலான பெண்ணினம்
வர்ணிக்கத்தான் மானினம்
கற்பனைக்கெட்டா வல்லினம்
அடக்க முடியாததோர் இனம்
ஆதிக்க வெறி கொண்ட மேலினம்
வெல்ல முடியாத அற்புத தனம்
-
தனத்தை இன்னும் காணாமல்
...தவியாய்த் தவிக்குது அவள்மனது
கணக்காய் வருவாள் நேரத்தில்
..காரியம் தன்னை முடித்திடுவாள்
சுணக்கம் ஏதும் கொள்ளாமல்
..செய்வாள் சொன்ன வேலைகளை
பணத்தை முன்பாய் வாங்காமல்
..பார்ப்பாள் வேலை அவள்போல்யார்..
அக்கா ஸாரி லேட்டாச்சு..
..அஞ்சு மணிபஸ் போயாச்சு
பக்கா வாகச் செய்வேன்நான்
...பார்ப்பீர் நீங்கள் இப்பொழுது
விக்கல் தீர்க்கும் தண்ணீர்போல்
...விரைந்தே வந்த தனத்தாலே
அக்கா மனமும் நேராச்சு..
..அஞ்சரை சீரியல் பார்த்தாச்சு..!
-
பார்த்தாச்சு பல நூறு வேசம்
பாவிக்குப் பசியெடுத்தால் பாசம்
திமிரெடுத்தால் பறக்கும் சாட்டை
மனம் போல் ஆடுவான் வேட்டை
உபகாரத்துக்குப் எடுத்த அவதாரம்
யந்திரமாய் இயங்கவே ஒரு தாரம்
சிந்திக்கத் தெரியாத, கூடாத ஒருத்தி
கல்லை புல்லை பக்தியில் இருத்தி...
செக்கு மாட்டுத் தடத்தில் உழலும் மனிதா
அக்கினிக்குஞ்சு காட்டை எரிப்பது புதிதா
-
புதிதாகப் பார்ப்பதுபோல் இருக்கும் தன்மை
…புவனத்தில் உன்னுடைய அழகின் வன்மை
கதியென்றே இருந்திடுவர் கவிஞர் எல்லாம்
..கனிவான புன்னகையில் பூக்கும் பூவில்
விதியெல்லாம் மாற்றாது உந்தன் தோற்றம்
..விரந்தேதன் தோல்வியதை ஒப்புக் கொள்ளும்
பதியானேன் அதுஎந்தன் அதிர்ஷ்ட மன்றோ…
…பாவைநீயும் சிரிக்காதே உண்மை சொன்னேன்..
அழகாகப் பேசுகிறீர் ஆனால் நீரும்
…அன்பாலே மறந்துவிட்டீர் ஒன்றை ,மட்டும்
சலசலக்கும் அருவியெனத் தழுவிச் சென்றீர்
…சந்தர்ப்பம் பலநேரம் என்னை வென்றீர்
கலகலப்பாய்ப் பேசினீரே கால ந் தோறும்
..கதிகலக்கும் துன்பமது வந்த போதும்..
வளமாக இருக்கின்ற் எந்தன் தோற்றம்
..வந்ததற்கே காரணம்தான் நீரே அன்றோ
-
நீரே அன்றோ நேற்று
விதிகள் வகுத்தது
வேதம் எழுதியது
வினைகள் ஆற்றியது
வியாபித்து நின்றது
விலங்கை பூட்டியது
எங்கும் எதிலும் காண்
ஆணாதிக்க சிந்தனை
-
சிந்தனை செய்து பாருங்கள்
நாட்டில் பணத்தின் மதிப்பு குறைகிறது
தங்கம் விலை ஏறுகிறது
அக்கிரமங்கள் நிதம் அரங்கேறுகின்றன
நிலையான ஆட்சி...
அம்மா சமையலறையில்
வெண்டைக்காய் நறுக்க
தங்கை பூகோளப் பாடத்தை
உருப்போட்டுக் கொண்டிருக்க
அப்பா ஆங்கிலப் பேப்பரில்
ப்ரிட்ஜ் விளையாடிக்கொண்டிருக்க்
நான்
என்னறையில் மறு நாளுக்கு
உடை எடுத்து வைத்துக் கொண்டிருக்க
வியர்க்க விறுவிறுக்கப் பேசிய
அரசியல்வாதியின் பேச்சை
கேட்டுக் கொண்டிருந்தன
வரவேற்பறையில் இருந்த்
காலி சோஃபாக்கள்..
-
சோஃபாக்கள் அழகானவை
தேக்கில் செதுக்கியவை
பயன்படுத்த சுகமானவை
உயர்ரக பஞ்சடைத்தவை
வீட்டை அலங்கரிப்பவை
அந்தஸ்தை காட்டுபவை
பளிச்சென்று இருப்பவை
உற்சாகம் ஊட்டுபவை
சேவையில் சிறந்தவை
அவை பெண்களொத்தவை
-
பெண்களொத்தவை என்றால்…
ஸாரி டியர்..தமிழில் நான் கொஞ்சம் வீக்”
“பெண்களைப் போல் என்று அர்த்தம்..
சரி.. என்னைப் போல் ஒன்று சொல்லேன்”
“பூ”
“அப்புறம்..”
“ம்ம் தோணமாட்டேங்குது..
என் உணர்வுகளைத் தமிழில் சொல்லத் தெரியவில்லை”
“உங்களைப் போல் நான்
ஒன்று சொல்லட்டா”
ம்ம்
“தத்தி.!.!”
-
தத்திகள்தான் அதில் ஐயமென்ன
கோடு கிழிக்கும் லட்சுமணன்கள்
கதி கலக்கும் அல்லிராணிகள்
இவர்கள் இடைவிடா மோதல்கள்
பார்த்தயரா தலைமுறைகள்
பாடம் படிக்காத ஆண்மகன்கள்
-
ஆண்மகன்கள் பாவம்
அம்மாவின் பாசத்திற்கும்
காதலியின் கட்டாயத்திற்கும்
துணையின் கடிவாளத்திற்கும்
வாழ்நாளை விலை கொடுக்கும்
ஏழைகள்.
-
ஏழைகள் இல்லாத நாடாய்
நம் தலைவர் மாற்றுவார் என
மேடையில் ஒருவர் முழங்கிக் கொண்டிருக்க
சுடச் சுட பஜ்ஜி சுட்டபடி இருந்த
பாட்டி மய்ங்கிவிழ
இரண்டு ரூபாய்க்குத் தண்ணீர் வாங்கி தெளித்து
:”வாங்க பாட்டி பக்கத்துல தெரிஞ்ச டாக்டர்
இருககார் போகலாம்” என வேர்க்கடலைப் பையுடன்
ஆட்டோவில் ஏறி வேர்க்கடலைக்காரன் செல்ல
பாட்டி சுட்ட பஜ்ஜிகள்
கவனிப்பாரின்றி இருந்ததால் மாயமாக
முழங்கிக்கொண்டிருந்தார் மேடைப் பேச்சாளர்..
எமது ஆட்சியில் திருட்டு கொள்ளை
,குறைந்திருக்கின்றது் தெரியுமா..
-
தெரியுமா அர்த்தம்
நடந்ததும் நடப்பதும்
நடக்கப்போவதும் நன்று
கீதையில் கண்ணன் அன்று
சொன்னது போரில் நின்று
புதிராய் தோன்றும் இன்று
-
இன்று புதிதாய்ப் பிறந்தோம் எனநினைத்தால்
வென்று வரலாம் உலகு
-
உலகு உருண்டை
சுத்துது சுழது
சான்றோர் கற்றோர்
ஆராய்ந்து சொன்னது
சுலபமாய் புரியுது
நடுரோட்டில் நாறுது
தலைமுறைகள் தடுமாறுது
கல்லூரி மாணவியரும்
அவர்தம் நண்பர்களும்
நடைபாதையில் போதையில்
தலை சுற்றி நிற்கையில்
உலகு மட்டுமா சுத்துது
வாழ்க்கைப்படகு ஆடுது
அழிவின் விளிம்பிலினிலே
-
விளிம்பினிலே நின்று கொண்டிருந்தது
கண்ணீர்..
எந்த சமயத்திலும்
கன்னத்தில் உருளலாம்..
கண்களில் குறுகுறுப்புப் போய்
சோகம்..
வேணாம்..அழக்கூடாது..
பக்கத்து வீட்டு ஆண்ட்டி தாண்டா செல்லம்..
டபக்கென உன்னைத் தூக்கிட்டாளா..
நோ நோ அழப்படாது..
வா என்கிட்ட..
படக்கென தாவியது குழந்தை
என்னிடம்
அழுகையை முழுங்கி
திரும்பி அவளை முறைத்ததில்
நாங்கள் சிரிக்க
அதுவும் மறந்து சிரித்தது
புரியாமலேயே..
-
புரியாமலேயே சொல்வதை எழுதக்கூடாது
வியாசர் விநாயகருக்கிட்ட பதிலாணை
இடைவிடாமல் கதையைச் சொல்லச் சொன்ன
மூத்தவனின் உத்தரவிற்கு மறுமொழி
நிதானமாய் கதை தொடர கண்ட வழி
நின்று கிரகித்து பதித்தான் ஆனைமுகன்
ஆயிரமாயிரம் ஆண்டு வாழ்ந்தவரும்
அசுரரும் அந்தணரும் அரசரும் ஆரணங்குகளும்
அவர்தம் அளவில்லா ஆசாபாசங்களும்
யயாதிக்கு யௌவனம் ஈன்று மூப்படைந்த
ஐந்தாம் மகன் பாசமும் பெற்ற பரிசும்
வரிசையாய் தொடரும் மகாகாவியமும்
மனிதன் மாறாது சரித்திரம் மாறாது
தொடரக்காண்பது மாயையா உண்மையா
-
மாயையா உண்மையா என்று இங்கே
…மயக்காமல் சொல்லிவிடு செல்லக் கண்ணா
சாய்கின்ற பொழுதினிலே இங்கு வந்தாய்
.சலிக்காமல் பிடிமண்ணை இட்டுக் கொண்டாய்
வாயைத்தான் உலுக்கிவிட்டுத் திறக்க வைத்தால்
…வண்ணமான உலகமதும் சுற்றக் கண்டேன்
தாய்தானே கேட்கின்றேன் குட்டிக் கண்ணா
…தவிக்கின்றேன் சொல்லிவிடு சின்னக் கண்ணா.!
-
சின்னக் கண்ணா யதுகுலக் கள்ளா
சிருங்கார மன்னா மாதவச் செல்வா
சலனமில்லா குளத்தில் எறிந்தாய் கல்லை
எழும்புதே இன்னும் ஓயாத சிற்றலைகள்
-
சிற்றலைகள் கொஞ்சம் பேரலைகள் கொஞ்சம்
என
காலருகில் வந்து
தொட்டுவிட்டு ஏதும்
பேசாமல் உள்வாங்குவதைப் பார்க்கையில்
கடலில் தெரிகிறது
அவளது பிரதிபிம்பம்
-
பிரதிபிம்பம் இதுவோ
சொர்க்கத்தின் ருசியோ
தேவலோக இன்பநிலையோ
உள்ளுடும் உணர்வென்ன
பின் மாலை மழையில்
முன்னிரவு குளிர்ந்திட
சட்டென்று பூத்து
குப்பென்று மணந்து
தென்றலில் மரமல்லி
ஜன்னலருகில் குலுங்க
கைவிரல் அசைவில் விரியும்
கணிணி விளையாட்டினிலே
மனம் கிறங்கும் காலம்
சொர்க்கத்தின் நகல் கோலம்
-
கோலமாவேய் கோலமாவேய்
கூவி வரும் வயசாளியிடம்
பாட்டி கூடையிறக்கச் சொல்லி
தொட்டுப் பார்த்து
என்னடா நறநறப்பு பத்தாதே
ம்ம் இவ்ளோதான் தருவேன்..
பேரம் பேசுவாள்
அவனும் பாதியாய்க் குறைத்தாலும்
வாங்கிச் செல்வான்..
இப்போது எனது பேத்தி
ஆனை விலைக்கு
ப்ளாஸ்டிக் கவரில்
வாங்கி வருகையில்
கோலமாவு விற்பவனின்
அழுக்கு உருவம்
நிழலாடுகிறது கண்ணில்
-
கண்ணில் தூசியென கசக்கிக் கொண்டே
விருப்பமில்லாமல் விளையாடியப் பொழுதில்
ஓடுவதை நிறுத்தி எங்கே காட்டென
எதிர் வீட்டுப்பெண் தன்பிஞ்சு கைகளினால்
எந்தன் இமைவிரித்து ஊதிவிட்ட சுடுகாற்றால்
கண்வலியோடு தானும் பறந்துபோனதொரு உணர்வு
-
உணர்வு முழு ஆணின் உணர்வு
அதனோடு விளையாடும் பெண்ணே
அறிந்து செய்கிறாயா வில்லியே
அறியாது செய்கிறாயா வெகுளியே
ஆண் பெண் இரு சாதியின் உடற்கூறு
பனியும் நெருப்புமாய் வெவ்வேறு
தொட்டுத் தொட்டுப் பழகும் கள்ளியே
நீயும் பாலையில் வளரும் கள்ளியே
புது நாகரிகமிது ரொம்ப போலியடி
மானிட வாழ்விதனால் மணக்காதடி
-
மணக்காதடி இதெல்லாம்
போகன் வில்லாப் பூக்கள்
பார்க்க நன்னா இருக்கும்
சூட மாட்டார் யாரும்
என்னை மாதிரி..
கையில் காத்ரேஜ் வண்ணச் சாயமும்
வாயில் சிரிப்புமாக
என் நாற்பது ப்ளஸ் அக்கா சொல்ல
எனக்கு வந்தது அழுகை.
-
அழுகை போல் மொழியுண்டா
கழுவி விடும் மருந்துண்டா
மின்னாமல் முழங்காமல் மழை
சொல்லாமல் போய்விடும் கவலை
-
கவலை என எழுதவேண்டுமாம்..
எழுதலாமா.. என நினைக்கையில்
காலருகே ஏதோ ஊற
பார்த்தால் கிடுகிடுகென்று
ஓடி ஒளிந்தது அந்த ஜந்து..
உடன் பாட்டும் வந்தது..
சவலைக் குழந்தையாய்ச் சலிக்கவே வைக்கும்
கவலைக் கரப்பை அடி..!
-
அடி மேல் அடி வைத்தால் நகரும் அம்மியா
ஓட்டுக்குள் ஐந்தடக்கும் நல்ல ஆமையா
காடு கொள்ளாமல் மிரண்டுவிட்ட சாதுவா
நிமிர்ந்த நடை கொண்ட ஞானச்செருக்கா
பெண்ணே பெரும் சக்தியே உன் நிறமென்ன
முகம் வெளுக்காதே கண் சிவந்து எழுந்து வா
-
எழுந்து வா வா ம்ம்
சமர்த்தோல்லியோ
மிக இறுக்கமாய்
முகத்தை வைத்துச் சுவற்றைப்
பற்றி
எழப்பார்த்த குழந்தை
தொப்பென விழ..
ஈஸிசேர் தாத்தா
மறுபடி ட்ரை பண்ணுடா..
மறுபடி முயற்சி பண்ணி
மறுபடி விழுந்து
வாய் கோணி
ஆ..
தாத்தா பதறி எழுந்து
அருகில் ஓட
குழந்தை சிரித்தது..
எனில்..
ஆ என்பது
எழுந்துவா தாத்தா என
அதன்மொழீயில்
இருக்கலாம் அர்த்தம்..
-
அர்த்தம் இருக்கிறதா வாழ்வில்
குறையில்லாக் குடும்பமாய்
கணவனும் குழந்தையுமாய்
நாகரிக நகரில் சுதந்திரமாய்
பணியுமுண்டு மனநிறைவாய்
ஆடம்பரமாய் செல்வச்செழிப்பாய்
உல்லாசமாய் பயணிக்கையில்
வார இறுதியில் விருந்துண்டு
முழுதாய் இருநாள் கழியுமுன்
ஒரு காலை கயிற்றில் தொங்குகிறாள்
காரணம் தெரியவேயில்லை
கல்வி கூட வரவில்லை போராட
பாசம் இழுக்கவில்லை விடைபெறுமுன்
பொறுப்பில்லாமல் தப்பித்த சுயநலமி
பொறுமையில்லாமல் ஓடும் கோழை
எங்கு சென்றிருப்பாள் புத்திசாலி
சொர்க்கத்திற்கா நரகத்திற்கா
எங்கு போய் என்ன சாதிப்பாள்
-
சாதிப்பாளாக்கும்
இந்த ஷணமே இது வேணும்னு
பிடிவாதம் ஜாஸ்தி
சின்ன வயசுலருந்தே
இப்படித் தான் இருந்தா..
பார்த்தா
கல்யாணம் ஆகி
ஒரு மாசம் தான் ஆறது
எத்தனை மாற்றம்..
அப்படியே மாறிட்டா மாமி
வேலை பண்ற நறுவிசென்ன
அடக்க ஒடுக்கமாப் பேசறது என்ன..
எங்க இருந்து இதுக பெறதுகள்..
அம்மா
பக்கத்து வீட்டு மாமியுடன் பேச
மாமி சொன்னாள்
”உங்களுக்குத் தெரியாதா
மாறவே மாறாதது மாற்றம் தான்
உலகத்திலே
-
உலகத்திலே அழகாக பூத்திருக்கு மொழிப்பற்று
மக்கள் குழாம் உரையாடுவது அவரவர் மொழியிலே
தனி மணம் தனி குணம் கொண்ட தமிழினம் ஏனோ
இதிலே இணையாமல் ஆங்கிலத்தைப் பற்றிடலாமோ
அருமை மகன் உதவியுடன் தமிழ் மென்பொருள்
தரவிறக்கம் செய்தேனே சுற்றத்தை நட்பை
இணையத்திலே தமிழை மணக்கச்செய்ய
வாரீரென அன்பாய் விட்டேன் அறைகூவல்
-
அரைகூவல் செய்தேன் அமைச்சரிடம்
நாளைய பிரசுரிப்பில் நீ யாரென
நாடு முழுதும் தெரியப்போகிறதேன
அடுத்த நாள் தினசரிகளில் தலைப்புச் செய்தி
பிரபல பத்திரிக்கை அச்சகம் தீப்பிடிப்பு
-
தீப்பிடிப்பு ஆச்சரியமில்லை
பக்குவமில்லா பருவத்தில்
பஞ்சும் நெருப்பும் அருகிருந்தால்
தகுதியறியா காதல் தடுக்க
வழி தவறிய மகளை காக்க
கதறியழுத பெற்றோர் கண்டோம்
ஊடகங்களில் தினசரி சூடான தீனி
திரும்பிய மகள் மீறுவாளா இனி
-
இனியும் நடந்து கொண்டு
தான் இருக்கப் போகிறது..
பிறப்பு இறப்பு பூத்தல் காய்த்தல்
மடிதல் மறுபடி
பிறத்தல்..
எல்லாரையும்
தொட்டுக் கொள்ளும்
அதிர்ஷ்டம் கொண்டது
காற்று தான்..