‘ஏற்றத்தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா...’
வாசு சார்,
உங்கள் எத்தனையோ பதிவுகளை படித்து ரசித்திருக்கிறேன். இருந்தாலும் எனக்குள் தீவிர பாதிப்பை ஏற்படுத்திய உங்கள் பதிவு.. ‘பூ முடிப்பாள் பூங்குழலி’ கலங்க வைத்து விட்டது. தங்களின் தாயார் நல்ல ஆரோக்கியத்தோடும் மகிழ்ச்சியோடும் ஆண்டு பல நீண்டு வாழ இறைஞ்சுகிறேன்.
தங்கள் நிறுவனத்தில் பிரச்சினை தீவிரமடைந்து வருவது வருத்தமளிக்கிறது. திமுகவின் தொழிற்சங்க அமைப்பின் தலைவர் நீக்கப்பட்டதை கண்டித்து நேற்று இரவு முதல் ஒப்பந்த தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்களாம். காலையில் நாளிதழ்களில் பார்த்தேன். தீவிரமடைந்தால்தான் பிரச்சினை முடிவுக்கு வரும். விரைவில் சுமூக தீர்வு ஏற்பட்டு ஊருக்கு ஒளி கொடுக்கும் தொழிலாளர் வாழ்வு ஒளி பெற வாழ்த்துக்கள்.
------------
ஏற்றத் தாழ்வும் எளியோரை வலியோர் ஏமாற்றி சுரண்டும் சமூக அமைப்பும்தான் இந்தக் கொடுமைகளுக்கு காரணம். இப்படி சொன்னால் பணக்காரர்களுக்கு எதிராக பேசுவதாக கூறுவார்கள். நாடோடி மன்னன் படத்தில் மக்கள் திலகம் கூறுவது போல ‘பணக்காரர்கள் இருக்கக் கூடாது என்பது எங்கள் கொள்கையல்ல, ஏழைகள் இருக்கக் கூடாது என்பதே எங்கள் கொள்கை’. இதை ஊருக்கு எடுத்துச் சொல்லும் வகையில் அமைந்த இனிமையான பாடல்.... வண்ணக்கிளி படத்தில் மதுரக் கவிஞர் மருதகாசியின் வரிகளில்....
‘ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்
இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா
இதை எல்லார்க்கும் நீ எடுத்து சொல்லம்மா..’
திரை இசைத் திலகத்தின் கிராமிய இசையில், இசைப் பேரறிஞரின் வெண்கலக் குரலில் திரு.பிரேம் நசீர் அவர்களின் நடிப்பில் சிறந்த பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். தாய்மொழி மலையாளமாக இருந்தாலும் மிகச் சரியாக வாயசைப்பார் திரு.நசீர்.
‘நன்னானே நானே நானே நானேனன்னானே....’ கோரஸ் பாடலை மட்டுமல்ல, நம்மையும் தூக்கிச் செல்லும்.
ஊருக்கு சோறுபோடும் விவசாயி பட்டினி.
எல்லாருக்கும் ஒளி கொடுக்கும் தொழிலாளி வாழ்வில் இருள்.
மக்களின் மானம் காக்கும் நெசவாளி கட்டிக் கொள்ள நல்ல துணி இல்லை.
இதை விளக்கும் ஆழ்ந்து சிந்திக்க தூண்டும் வரிகள்..
‘பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமா நூல்நூற்று
நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா
இங்கு கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா..’
அற்புதமான பாடல்.
இதில் இன்னொன்று, இப்போதைய சூழலை விளக்குவது போல...
மது விலக்கு கொள்கையை பாமக தலைவர் திரு. ராமதாஸ் அவர்கள் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகிறார். ஆனால், திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திடீரென மதுவிலக்குக்கு ஆதரவு தெரிவித்ததும் நிலைமையே மாறி விட்டது. மதுவிலக்குக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் குரல்கள். (எல்லாருமே மதுவிலக்கை ஆதரிக்கும்போது இத்தனை நாட்களாக குடித்தது யாரென்று தெரியவில்லை.) சமீபத்தில் இறந்த திரு.சசி பெருமாள் அவர்கள் கூட கலைஞர் கருணாநிதியின் வீடு தேடிச் சென்று அவருக்கு நன்றி தெரிவித்தார். ஆனால், திரு. ராமதாசுக்கு அவர் நன்றி தெரிவித்ததில்லை. தனக்கே உரிய ராஜதந்திரத்தால் பெயரை தட்டிக் கொண்டு சென்று விட்டார் திரு.கருணாநிதி. அதனால் இந்த விவகாரத்தில் திரு. கருணாநிதி அவர்களை கடுமையாக சாடுகிறார் திரு.ராமதாஸ்.
இதைத்தான்......
ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன்பிடிக்க
காத்திருந்த கொக்கு அதை கவ்விக் கொண்டு
போவதும் ஏன் கண்ணம்மா?
அதைப் பார்த்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா?...
.........என்பதோ?
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்