-
தொழில் பாட்டுக்கள் 9 - பகுதி நான்கு..
கேட்ட பழிச்சொல்.. சக்கி எதிர்பார்த்துப் பயந்த சொல்.. கறுத்தம்மாவை பார்த்து நடந்துக்கோடி எனச் சொல்லிச் சொல்லி வளர்த்தும் எங்கிருந்தோ வந்தவன் ஏகடியமாகச் சொன்ன சொல். சக்கி அப்படியே மயங்கி விழ வைத்தியரைக் கூப்பிட ஆள் போகிறது.
செம்பன் குஞ்சுவோ பழனியைத்தனியாகக் கூப்பிட்டு தன் பணம் 75 ரூபாயைக் கொடுத்து துறை அரையனிடம் கட்டச் சொல்ல கல்யாணம் நடக்க பின் தான் குழப்பமே.
“மாப்பிள்ளை..கொஞ்சம் இங்க தங்கிட்டு அப்புறம் உங்க குன்றத்துக்குப் போங்களே.ன் என் பொண்டாட்டிக்கு உடல் சரியில்லை..கறுத்தம்மா கொஞ்ச நாள் தங்கினா பார்த்துக்குவா”
உள்ளே சக்கிக்கோ மகள் பற்றிய கவலை..மகளிடம் “கறுத்தம்மா என்னைப் பத்திக் கவலைப் படாதே.. இங்க இருந்தால் இன்னும் ஊர் பேசும்.. உனக்கும் மனசு மாறினாலும் ஆகும்..நீ புருஷனோட போய்டு”
“அம்மா”
“இப்ப நீ கல்யாணங்கட்டின மரக்காத்தி. ஒனக்கு நெனப்பு கொஞ்சம் அங்கிட்டு இங்கிட்டு போனாலும் ஒன் புருஷன் உனக்கு இல்லை
” நா அப்படில்லாம் இல்லைம்மா”
“எனக்குத் தெரியும் ஆனா..போய்டேன்..”
பழனி செம்பன் குஞ்சுவிடம்.. “ நான் கூட்டிக்கிட்டே போய்டறேன்.என்னோட ஆட்கள நீங்க என்னபேச்சு பேசினீங்க”
செம்பன் குஞ்சு கெஞ்ச, துறை அரையர் அந்தப் பொண்ணிடமே கேட்கலாம் எனச் சொல்ல கறுத்தம்மாவிடம் கேட்டால் க்றுத்தம்மா “ நான் அவர் கூடவே போறேம்பா”
செம்பன் குஞ்சுவிற்குக் கோபம்மிக அதிகமாகி “என் முகத்துலயே முழிக்காதே போ”
கறுத்தம்மா பிறந்து வளர்ந்து பழகிய கடற்கரையைப் பார்த்தாள் அம்மாவை மறுப்டியும் ஒருமுறை பார்த்தாள்..பின் புறப்பட்டுவிட்டாள் பழனியின் நீர்க்குன்றத்திற்கு..
**
பழனி நல்ல கணவன் தான். சமர்த்தாய் வெள்ளென தோணியோட்டி மீன்பிடித்து மாலை நேரம் வந்துசம்பாதித்ததை கறுத்தம்மாவிடம் கொடுத்து இணக்கமாகத்தான் இருந்தான்.. கறுத்தம்மாவிற்குப் பிடித்த் வண்ணம் எல்லா விதங்களிலும் இருந்தாலும் ஒன்றே ஒன்று மட்டும் அவன் மனதில் வெகு ஆழமாய். கறுத்தம்மா அவள் வீட்டிற்குப் போகக் கூடாது.
கறுத்தம்மாவும் நல்ல மரக்காத்தியாகத் தான் இருந்தாள்..விருப்பத்துடன் தன்னைக் கொடுத்தாள் அவனுக்கு.
அவள் நினைவில் பரீக்குட்டி மங்கிவிட்டான் என்றே சொல்லவேண்டும்..ஆனால் ஊரார் நினைவில். அப்படி இல்லை.
ஒரு நாள்
சூழ்நிலையில் சக்கி மரிக்க செம்பன் குஞ்சுவுக்கு கறுத்தமமாவிடம் சொல்லியனுப்ப மனமில்லை..ஆனால் பரிக்குட்டிக்குத் தான் பொறுக்கவில்லை.
சொல்லலாம் என நீர்க்குன்றம் வர, அங்கு பார்த்தது பழனியுடன் தோணி தள்ளுபவன்..
என்ன திருக்குன்றங்காரவுகளே இந்தப் பக்கம்
கறுத்தம்மா…பழனி வீடு எங்க இருக்கு
எதுக்காம்.
இல்ல கறுத்தம்மா வோட அம்மா இறந்து போய்ட்டாங்க சொல்லலாம்னு தான்
அதுக்கு நீங்க எதுக்கு வந்தீங்க அதுவும் இவ்வளவு கருக்கல்ல இம்புட்டு தூரம் – ம்ம் ஊர்வாய்..அப்படித்தான் கேட்கும்
பரிக்குட்டி எதுவும் சொல்லாமல் விவரம் வாங்கி கறுத்தம்மா இருக்கும் குடிசைக்குச் சென்று தட்ட அவள் கதவைத் திறக்க மறுக்கிறாள்..ம்ஹூம்.. ம்ஹூம் கூடாது.. நான்மரக்காத்தி..என் காதலை, கனவை குழிதோண்டிப் புதைத்தவள். அவனைப் பார்க்கமாட்டேன்..
தூளியில் இருக்கும் இருமாதப் பெண்குழந்தையை ஆட்டியும் விடுகிறாள்…
கறுத்தம்மா
பரீக்குட்டியின் குரல்
கறுத்தம்மாவிற்கோ கையறு நிலை உள்ளே படுக்க விரித்திருந்த பாயில் அப்படியே கூனிக்குறுகி உட்காருகிறாள்
கறுத்தம்மா உன்னுடைய அம்மா சக்கி இறந்து போய்ட்டாங்க. சொல்லத்தான் வந்தேன் – பரீக்குட்டி தள்ளாடி த் திரும்பிச் செல்ல…
இவளுக்கோ காதை சுறா கவ்வியது போலப் பிரமை..ஓஹ்.. எண்ட அம்மே எனக் குரலெடுத்து அழலாம் என்றால் மறுபடி தட் தட்
(தொடரும்)
-
தொழில் பாட்டுக்கள் 9
பகுதி ஐந்து.
யாரு
நாந்தான் – பழனியின் குரல்
கதவைத்திறந்து உதடு கண் கன்னம் தலைமுடி எல்லாம் துடிக்க ஏங்க…
கண்சிவந்திருந்த பழனியோ “என்ன ஒஞ் சின்ன முதலாளி வந்தானா இங்கே”
அதெல்லாம் காதில் விழவில்லை..”ஏங்க எங்கம்மா இறந்து போய்ட்டாங்க நான் போகணும்..
ம்ம் முடியாது ஏன் சொல்லிவிட வேற ஆள் கிடைக்கலையா.. ஏன் இந்த ஆள் வரணும் இன்னும் அவனை நெனச்சுக்கிட்டிருக்கியா
சுருக்..
கறுத்தம்மா பார்த்தாள்..”ஹச்சோ நாந்தான் எல்லாத்தையும் ஒங்ககிட்ட வந்த மொத நாள்ளே சொல்லிட்டேனே. நா எதும் தப்புத் தண்டா செய்யலீன்னு..பேசினதுமட்டும் தான் குத்தம்.. அம்மாவப் பாக்கணுங்க”
‘ஒன்னப் பத்தித் தெரியும்..ஊர்ப்பேச்சு ஒண்ணு இருக்குல்ல..ஆனா ஒங்கம்மா சாவுக்கு நீ போக முடியாது போ” இறுதியான முடிவு பழனியிடமிருந்து.
*
ஊர் பேச்சு எனச் சொன்னது வாஸ்தவம் தான்.. ஒரு நாள் பழனி தோணியில் மீன்பிடிக்கச் செல்லும் போது சுக்கான் பிடித்த படி ஏதோ சிந்தனையில் ஆழ்கடலுக்குள் சென்று விட உடனிருந்த்வர்களுக்கு பயம்.பழனி பழனி என உலுக்கியபிறகு தான் அவனுக்கு நினைவே வந்தது.
கரை திரும்பியதும் சக தோணிஓட்டுபவர்கள் கலந்தாலோசித்து “அவஞ்சம்சாரம் தான் மாறிப்போனது ஊரே சிரிக்கே.. மரக்காத்தி மாறிப்போனா கடல் காவுகொள்ளும்லா..அவம் போறது பத்தாதுன்னு நாமும் சாகணுமா என்ன” எனப் பேசி மறு நாள் அதற்கு மறு நாள் என பழனிகடற்கரைக்கு வரும்முன்னமேயே தோணி எடுத்துச் சென்றுவிட பழனிக்குக் கோபம் வருகிறது.. நான் நல்லவன் என் பொஞ்சாதியும் தான்..
பின் முடிவெடுத்து யாருக்கும் தெரியாமல் இருட்டிலேயே இருக்கும் ஊரார் தோணியில் மீன் பிடித்துக் கொண்டு வந்து வீட்டில் உலை பொங்கக் கொடுக்க ஆரம்பித்தான்.
கறுத்தம்மாவிற்கோ வாழ்க்கையே சோகம்..அதில் பழனியின் வார்த்தைகள் வேறு.. இன்னும் நினைச்சுக்கிட்டிருக்கியா.பரீக்குட்டியை.. தன்னைத் தானே கேட்டுக் கேட்டு க் கேட்டு..கடைசியில் ஆம்.. நேசம் இருப்பது பரீக்குட்டியிடம் தான்..அவன் தான் தனக்காக எல்லாம் தியாகம் செய்தான்.. அவனை உதறிவிட்டு விட்டேன்..அவன் மேல ஆசையா..இல்லை இல்லை ஆமாம்..அவனுக்கும் தான்..ஆனா தப்பா ஒரு பார்வை பார்த்ததில்லயே.. நான் செஞ்சது தப்பு தான் …என மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கையில்….
…
அங்கே நீர்க்குன்றத்தில் செம்பன்குஞ்சு இரண்டாம் கல்யாணம் செய்து கொண்டும் நிம்மதியற்ற நிலையில் இருக்க கருத்தம்மாவின் தங்கை பஞ்சமி அக்கா ஊருக்கு வருகிறாள்.
குழந்த செவேல்னு ஒன்ன மாதிரி இருக்குக்கா
கறுத்தம்மாவிற்கோ ஏக சந்தோஷம் அவ்வளவுதுக்கத்திலும்.. பஞ்ச்சமீயின் கையைப் பிடித்து கட்டிப்பிடிக்க பஞ்சமி எல்லாவற்றையும் சொல்கிறாள்
“அப்பா தோணிய வித்துடுச்சு. அவர் கல்யாணங்கட்டிக்கிட்ட பொம்பளை அவ பையனுக்கு அப்பா பணத்த எடுத்துக் கொடுத்திச்சா அப்பா அவளை வெரட்டி விட்டுட்டார்.. திரும்பவும் கூட்டிக்கிட்டார்.. ஆனா பித்துப்பிடிச்சுடுச்சு அப்பாக்கு
அப்புறம் சின்ன மொதலாளி பரிக்குட்டிய ப் பார்த்தேன் வரவழில்ல.. ரொம்ப மாறிட்டாக..எதையோ பறிகொடுத்தாப்புல.. அவரோட கிட்டங்கியும் போச்சு தெரியும்லா”
எல்லாப் பேச்சும் கறுத்தம்மாவின் காதில் விழவில்லை.கடைசியில் பரீக்குட்டி என்று சொன்னது மட்டும் காதில் விழ.”சின்ன முதலாளியப் பார்த்தியா.எப்படி இருக்காக”
அவள் கேட்டது இன்னொருவன் காதிலும் விழுகிறது..பழனி. உள்ளே வந்து பஞ்சமியை வெறுப்பாய் ஒரு பார்வை பார்த்து பின் “ நா அன்னிக்கு கேட்டது சரி தான் நீ இன்னும் மறக்கல அவனை”
கறுத்தம்மா விழி சுருங்கி ஏதும் பேசாமல் மெளனிக்க அதுவே அவனுக்கு எதையோ உணர்த்த கோபமாய் வெளியில் கடற்கரைக்குச் சென்று இருந்த தோணியைக் கடலில் தள்ளி வேக வேகமாக கடலுக்குள் செல்கிறான்..
பஞ்சமி குழந்தையைப்பார்த்துக்கோ
கறுத்தம்மா கொஞ்சம் நடக்க சற்றுத்தொலைவில் அந்த மாலை வெளையில் வருவது யார்… தளர்வாய்..பரீக்குட்டி
கறுத்தம்மாவின் கண்கள் அவன் கண்களுடன் பேசுகின்றன
நிறைய ஆசை
நிறைய பாசம்
நிறையக் காதல்
நிறைய ஏக்கம்
நிறைய துக்கம்
துக்கம் விழிகளில் முட்ட சின்ன மொதலாளி இப்படி மாறிட்டீங்களே என்ற வார்த்தைகள் காற்றுடன் சிக்கி ஒலியிழக்க
பரீக்குட்டி – கறுத்தம்மா இன்னும் என்னை விரும்பறயா…
என்ன கேள்வி இது சின்ன மொதலாளி நா எங்க ஒங்களை வெறுத்திருக்கேன்..
விம்மல் அழுகை துடிப்பு ஏக்கம் தடுமாற்றம் – தூண்டிவிடும் காற்று..வெகுதொலைவில் கேட்கும் அலையோசை
கறுத்தம்மா
மறுபடி பரீக்குட்டி விளிக்க அவள் அப்படியே சாய்கிறாள் அவன் மார்பில்.. பரிக்குட்டியும் அணைக்க காற்றுகொஞ்சம் வேகமாய் சுழன்றடிக்கிறது..
*
கடலுள் தோணியைச் செலுத்திய பழனிக்கும் அப்படித்தான். எண்ணங்கள். இப்படி ஒருத்தி இருப்பாளா.. முதலிலேயே சொல்லியிருக்கலாமே. ஏன் காற்று இப்படி அடிக்கிறது அலைகளும் வேகமாகக் கூவுகின்றன.. இதோ இது என்ன…
கன்னங்கரேலெனச் சுறா ஒன்று மேலெழும்புகிறது.. பழனியின் தூண்டிலில் வாய் மாட்ட்டிக்கொண்டிருக்க வேண்டும்..உயிர் போகக்கூடாது எனக்கு.. என்னையா எடுக்கப் பார்க்கிறே என உயிராசையால் மறுபடியும் மோதி அலைபாய..
பழனி வேகமாக இழுக்கிறான்..எங்கிருந்தோ மேகங்கள் சுழற்காற்று..தோணியும் சுழல்கிறது.. இது என்ன எங்கிருந்து வந்தது இந்தக் காற்று.. இத்தனை நாள் கடலாடினேனே எனக்கு நிகழ்ந்ததில்லையே. இது போல்…ஒரு வேளை ஒருவேளை என்வீட்டு மரக்காத்தி தவறிழைக்கிறாளா..இருக்காது.அவள் என்னிடம் தவறேதும் செய்யவில்லை எனச் சொன்னவளாயிற்றே….இருந்தும் அவளைக் குத்திக் காட்டியது தவறோ..என்ன இது இந்தத் தோணி சுற்றுகிறது..இந்தச் சுறாவேறு ஆட்டங்கண்டு இருக்கிறது.. கடலம்மா என்னைக் காவு வாங்கப்போகிறாளா..என்னைக்காப்பது கறுத்தம்மாவின் கையிலல்லவா இருக்கிறது…
கறுத்தம்மா. அடிவயிற்றிலிருந்து உயிரின் ஓசையாய் பழனியின் குரல் இடி மின்னல் காற்றலைகளில் கலந்து அமுங்கிப்போக அவன் தோணி கவிழ்ந்து சுழலில் சிக்கிக் கொள்ள அவனும் சுழன்று சுழன்று சுழன்று அதலபாதாளத்தில்…..
**
மறு நாள் விடிகாலை பஞ்சமி கடற்கரையில் கொஞ்சம் குழந்தையுடன் வெகு தூரம் நடந்த போது தெரிந்தது…வெகு தொலைவில் கடலலைகளுடன் அணைத்தபடி உயிர் விட்டிருந்த கறுத்தம்மாவும் பரீக்குட்டியு.ம்
சில மைல் தொலைவில் உள்ள இன்னொரு கடற்கரையில் தூண்டிலை முழுங்கிய சுறா ஒன்று ஒதுங்கியது..
பழனியின் உடல் மட்டும் கிடைக்கவேயில்லை..
**
இது தகழி சிவசங்கரன் பிள்ளை எழுதிய செம்மீன் மலையாள நாவலின் மிகச் சுருங்கிய சுருக்கம்.. (தமிழில் மொழிபெயர்த்தவர் சுந்தர ராமசாமி)
**
(தொடரும்)
-
தொழில்பாட்டுக்கள் - 9
பகுதி ஆறு..
*****
**
கடல் பாட்டுக்காக கடல் மேல் பிறக்கவைத்தான் எழுதலாம் என இருந்தேன்.பின் இந்தப் படம் செம்மீன் (ஆம் முதலில் நாவலாய் வந்து பின் மலையாளத்தில் திரைப்படமாய் வந்தது) பத்தி எழுதலாம் என்று இருந்தால் படம் பார்த்ததில்லை.. நாவலும் படித்ததில்லை.
பின் வாங்கி வைத்திருந்த நாவல் முழுவதும் படித்த பின் உடனே படம் பார்க்க முடியவில்லை..காரணம் நாவல் அப்படி.அப்படியே கண்முன்னே விரிகின்ற கடற்கரைகள், மீனவ வாழ்க்கை, அவர்களின் சோகம் சந்தோஷம் துக்கம் வருத்தம்..சோர்வு உழைப்பு சுறுசுறுப்பு.. “மரக்காத்தன் கிட்ட துட்டு எப்படி ச் சேரும் தெனம் துள்ளத் துடிக்க ஆயிரம் ஜீவன்க தோணியில அவன முறச்சு பாத்துத் தானே செத்துப் போகுதுங்க.எங்கோ கடலடில நீஞ்சிக்கிட்டிருந்தோமேடா.எங்களக் கொல்றீகளேன்னு எவ்ளோ கதறியிருக்கும்” வசனங்கள்
பின் சில நாட்சென்று தான் படம் பார்த்தேன் போன மாதம் தான்..வாசுசார் முள்ளும் மலரும் ஆரம்பித்திருந்த நேரம்
..சே இவ்ளோ நாள்மிஸ் பண்ணிவிட்டேனே என நொந்து கொண்டது அப்போது தான்....(பாடல்க்ள் கேட்டிருந்தாலும் படமாய்ப் பார்த்ததில்லை)
செம்பன்குஞ்சு – கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர் கறுத்தம்மா – ஷீலா சத்யன் பழனி ஆடூர் பவானி – சக்கி.. பரீக்குட்டி மது. என நடிக நடிகையர்கள் பாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்கள்.
அதுவும் கறுத்தம்மாவாக ஷீலா கனப்பொருத்தம்.. ரவிக்கை பாவாடையில் இருந்தாலும் விரசமாக இல்லை.. காதலும் நயமாகத் தான் வெளிப்படுத்தியிருந்தார்..புருஷனிடம் கொண்டாடும் அழகென்ன.. பிற மரக்காத்திகள் ஏகடியம் பேசும் போது நடிப்பு வெகு நன்று ( மலையாளத்தில் அரயாத்தி அரயன்..என்பார்கள்)
செம்பன்குஞ்சுவாக நடித்தவர் நாவலில் நான் பார்த்த அதே ஆள்..பரீக்குட்டி மது பழனி எனப் பொருந்திய பாத்திரங்கள்..ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் பெற்றதில் வியப்பேதுமில்லை.. ரிலீஸான நாள் 19.08.1966. தகழியின் நாவலும் கேந்திர சாகித்ய அகாதமி அவார்ட் 1957ல் பெற்ற ஒன்று..
அதுவும் வண்ணப் படத்தின் ஒளிப்பதிவு. மார்கஸ்பார்ட்லி அண்ட் யு ராஜகோபால்.. காட்சிகள்கண்ணில் ஒத்திக்கொள்ள வைக்கின்றன. கடல் கிராமம் அப்படியே கண்முன் காட்சிப்படுத்திய பெருமை இவர்களைச் சாரும்
பாடல்கள் கடலினக்கர போனோரே, மானஸ் மைன வரூ..பெண்ணாளே பெண்ணாளே சலீல் செளத்ரியின் இனிய இசை..மன்னாடேயின் மானஸ் மைன வரூபாட்டு..வசனம் புரம் சந்தனா.இயக்கம் ராமுகரியத்
முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதாம்.. ஒரு நாவலை அப்படியே வார்த்துத்திரையிலிட்டிருப்பது வெகு அழகு.. ரொம்ப நாள் மனதில் நிலைத்து இருக்கும்..
http://www.youtube.com/watch?feature...&v=Qv5p8OwwbYE
வாசு சார் முள்ளும் மலரும் முடிக்கட்டும் என்று காத்திருந்து பின்னும் கொஞ்சம் கொஞ்சமாய் எழுதி எழுதி..இதோ ஒருவழியாய் முடித்துவிட்டேன்.. சுவாரஸ்யக் குறைவின் அது நான் தான் காரணம்..படம் பாடல்கள் நன்றாகவே இருக்கும்
**
(முற்றும்)
-
CK: Good writeup! :) You are right; காட்சிகள் கண்ணில் ஒத்திக்கொள்ள வைக்கின்றன! The movie was/is indeed a visual treat, thanks to cinematography by Marcus Bartley (assisted by U. Rajagopal) as well as editing by Hrishikesh Mukherjee (assisted by K.D. George). By the way, வசனம் was by S.L. Puram Sadanandan.
If anyone is interested, here is the full movie: youtube.com/watch?v=bGJrCK0y7Bw
-
ராகதேவன்.. நன்றி. :) நாவலைப் படித்துப் பாருங்கள் ..(ஏற்கெனவே படித்திருக்கிறீர்களா) அப்படியே சிதைக்காமல் கொண்டுவருவது என்பது வெகு கஷ்டம்..இவர்களுக்கு வெகு சுலபமாய் வந்திருக்கிறது..
-
வந்துட்டேங்ணா, வந்துட்டேன்.
சி. க., உங்க தொழில் பாட்டுக்கள் தொடரை படித்துவிட்டுசொல்கிறேன்.
மற்றவர்கள் இன்னும் வரவில்லையா? கலந்துகொண்ட ராகதேவனுக்கு நன்றி.
-
வாங்கோ வாங்கோ..கல் நாயக்..ஹாலிடே எப்படிப் போச்சு..மற்றவர்கள் கண்டிப்பாக வருவார்கள்.. நம்பிக்கை தான்வாழ்க்கையே..
-
[QUOTE=chinnakkannan;1203104]கலைவேந்தன் உங்கள் சிந்தனையை ஒட்டியே சில நாட்களுக்கு முன் நானே எழுதியிருக்கிறேன்..
அவலங்கள் எல்லாமே அடியோடுதான்
..அவனியிலே எப்போதும் ஒழிந்திட வேண்டும்
புவனமிது பூலோகம் சொர்க்க மென்றே
…புவியதுவும் சீக்கிரமாய் மாறவேண்டும்
அவதிமிகும் கொடியநோய்ப் பேய்களெல்லாம்
…ஆர்ப்பட்ட மிட்டலறி ஓட வேண்டும்
நவதான்யம் மற்றுபல செல்வமெல்லாம்
..நரருக்கு அருள்புரிவாய் சக்தி யம்மா
சரி தானுங்களே :)
அருமையாக எழுதியிருக்கிறீர்கள் சின்னக் கண்ணன். சரிதானுங்களே என்று கேட்கிறீர்களே. உங்கள் தமிழை எடைபோடும் தகுதி எனக்கில்லை. புரட்சித் தலைவர் சொல்வார், ‘‘நான் படித்தவன் அல்ல, பொருளாதார புள்ளி விவரங்கள் தெரியாது. ஆனால், ஏழையின் பசி தெரியும்’’ என்பார். அதுபோல எனக்கு கவிதை இலக்கணம் தெரியாது. ஆனால், கருத்து புரியும். உயரிய கருத்தை சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
உங்கள் தொழில் பாட்டுக்கள் அற்புதம். அடேயப்பா! எவ்வளவு நேரம் சிந்தனையும் உழைப்பும் தேவைப்பட்டிருக்கும் என்று நினைத்தால் மலைப்பு ஏற்படுகிறது. பழனியின் முடிவு கலங்கச் செய்தது. என்றாலும், இடையிடையே, உங்களுக்கே உரிய பாணியில்,
(யோவ் என்ன தான்யா சொல்ல வர்றே நீ..
வெய்ட் வெய்ட்)
(எப்படிச் சுருக்கிக்கூப்பிடலாம் மையூ..ம்ஹூம் செல்லூ!)
அழகாக உங்கள் எழுத்தோடு பயணிக்க வைக்கிறீர்கள். நன்றி
கல்நாயக், லீவு முடிஞ்சதா? 3 நாட்கள் கழித்து எட்டிப் பார்த்தால் இன்னும் ஏமாற்றமே.
சரி, எல்லாரும் பணிகள் முடிந்து வரட்டும்.
-----------------
புகழ் பெற்ற கார்டூனிஸ்ட் திரு.ஆர்.கே.லஷ்மண் அவர்கள் அமரராகி விட்டார். சாதாரண மனிதனை (common man) மையமாக வைத்து அவர் வரைந்த கேலிச் சித்திரங்கள் உலகப் புகழ் பெற்றவை.
கவியரசர் கண்ணதாசன் தயாரித்த சிவகெங்கைச் சீமை படத்தில் மருது பாண்டிய மன்னர்களின் தளபதி முத்தழகுத் தேவராக லட்சிய நடிகர் திரு.எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்கள் வாழ்ந்திருப்பார். என்னை பாதித்த சமீபத்திய மரணங்களில் அவரது மரணமும் ஒன்று. ஆங்கிலேயரால் மருது பாண்டியர் தூக்கிலிடப்பட்ட அதே தேதியில் (அக்டோபர் 24) அவர்களது தளபதியாக திரைப்படத்தில் நடித்த திரு.எஸ்.எஸ்.ஆரும் அமரரானது வியப்புக்குரியதே.
அந்தப் படத்தில் எல்லா பாடல்களுமே தேனாறு. எனக்கு மிகவும் பிடித்த பாடல்,
‘கனவு கண்டேன், நான் கனவு கண்டேன்.....’ கவியரசரின் வரிகளும் மெல்லிசை மன்னர்களின் இசையும் நம்மைத் தாலாட்டும். அமரர் எஸ்.எஸ்.ஆர். அவர்களோடு குமாரி கமலா நடித்திருப்பார்.
ஆர்.கே.லஷ்மண் மரணம் குறித்து அறிந்ததும் குமாரி கமலா அவர்கள் நடித்த இந்த அருமையான பாடல் நினைவுக்கு வந்தது. அதைத்தான் பகிர்ந்து கொண்டேன். ஆர்.கே.லஷ்மண் அவர்களின் முதல் மனைவி குமாரி கமலா.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
கல் நாயக் பொறுமையாய்ப் படித்து லைக் இட்டமைக்கு நன்றி
கலைவேந்தன் விரிவான பாராட்டுதலுக்கு நன்றி..செம்மீன் பார்க்க வில்லை எனில் நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.. நல்ல படம்.(வேறு விரிவாக எந்தக் கட்டுரையையும் எழுத விடவில்லை இந்தப் படம்..இடையில் இடையில் சில இடைகளைப் பற்றி எழுதியிருந்தாலும் கூட :) நேற்று எழுதி முடித்தபின் ஒரு ரிலீஃப் பள்ஸ் சற்றே பயம் ஒழுங்காக வந்திருக்கிறதா என) பின்னூட்டங்கள் பார்த்த பின் கொஞ்சம் மன நிம்மதி..இன்னும் நன்றாய் எழுதவேண்டும்
ஓ குமாரி கமலா ஆர்.கே லஷ்மணின் மனைவியா.. நினைவிலில்லை.. நினைவூட்டியதற்கு நன்றி..ஆர்கே லஷ்மன் நல்ல கார்ட்டூனிஸ்ட்.
எனக்கும் எஸ்.எஸ்.ஆரின் மரணம் வருத்தம் தான்..நல்ல நடிகர். சிவகங்கை ச் சீமை ஏனோ பார்க்க விட்டுப் போய்விட்டது..ஆனால் கவிஞரின் கதை வசன நூல் என்னிடம்..படித்து மகிழ்ந்திருக்கிறேன்..
இந்தாருங்கள் உங்கள் கனவு கண்டேன் நான் கனவு கண்டேன்..பாடல்..எனக்கும் பிடிக்கும்..
http://www.youtube.com/watch?v=CRjgpyJSZmw
-
சி.க.,
செம்மீன் படத்தை நான் முழுமையாக பார்த்ததில்லை. அதன் கதையும் எனக்குத் தெரியாது. ஆனால் நல்ல படம் என்றும் , பாடல்கள் அருமை என்றும் விருது பெற்றது என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்.
நீங்கள் எழுதியததை கண்டதும் அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்திருக்கிறது. நீங்களும் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். வாசுதேவன் முள்ளும் மலரும் எழுதிக் கொண்டிருந்தபோது நீங்கள் சற்று காத்திருந்தது நல்லதே. ஆனால் ஒரு சின்ன சந்தேகம். தொழிற்முறை பாட்டு என்று கதையை முழுதும் கொடுத்து, பாட்டையும் கொடுத்து *இருக்கிறீர்கள். இதில் ஏதோ ஒன்று குறைந்தது போல் எனக்கு தோன்றுகிறது. சட்டென்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. இல்லை இன்னும் ஒரு அல்லது இருமுறை படித்தால்தான்எனக்கு தெரியுமா அல்லது எனது பார்வையில்தான் குறையா என்று தெரியவில்லை.
கலைவேந்தன்,
சிவகங்கை சீமை படம் பார்க்க ஒரு முறை முயன்றும் முடியவில்லை. இதற்கும் இப்போது ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. முயற்ச்சிக்கிறேன். குமரி கமலா R.K. லக்ஷ்மன் அவர்களின் முதல் மனைவி என்று படித்து இருக்கிறேன். அமெரிக்காவில் settle ஆகி விட்டார் என்று நினைக்கிறேன்.R.K. லக்ஷ்மன் மறைந்த பின்பு* நினைவு படுத்தியதற்கு நன்றி. தொடருங்கள்.