"நல்லவன் எனக்கு நானே நல்லவன்"; படம்:- படித்தால் மட்டும் போதுமா? (1962); இயக்கம்:- ஏ. பீம்சிங்
1952-க்குப் பிறகு, தமிழ்க் கலையுலகில், எடுக்கப்பட்ட பல புதிய முயற்சிகளில், நடிகர் திலகத்தின் பங்கு நான்கில் மூன்று பங்கு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இருக்காது. சினிமா என்கிற விஷுவல் மீடியத்தை எப்படி நடிகர் திலகம் புதிய கோணத்தில், விஷுவலாகக் கையாளத் துவங்கினார் என்பதைப் பற்றி ஏற்கனவே விரிவாக எழுதி இருக்கிறேன். நிற்கும் விதம் (posture), உடல் மொழி (கை கால்களை மனம் போன போக்கில் அசைக்காமல், அளவோடும், அழகாகவும்) மற்றும் மூவ்மென்ட். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். (இன்னமும் நிறைய பேர் பத்தாம் பசலித் தனமாக, சில படங்களில் வந்த வசனங்களைப் பற்றியும், ஓரங்க நாடகங்களைப் பற்றியும் மட்டுமே, (வேறு எதுவும் கிடைக்காததால்) பேசிக் கொண்டிருக்கின்றனர்!)
அந்த வகையில், இதோ நடிகர் திலகத்தின் இன்னுமொரு புதிய முயற்சி -
எப்போதும் டூயட்டுகளில், ஆணும் பெண்ணும் பாடியது போக, இரண்டு ஆண்கள் பாடும் புதுமை இந்தப் பாடலில் இதே படத்தில் மறுபடியும் இடம் பெற்றது. ("பொன்னொன்று கண்டேன்" பாடலை வேறொரு கட்டுரையில் எழுதி விட்டேன்!). இந்தப் பாடலை நடிகர் திலகம் அணுகிய விதம் முற்றிலும் வித்தியாசமாக இருக்கும்.
இது ஒரு நிறைய பேரின் பங்களிப்பு கொண்ட ஒரு குழுவின் பாடல் (குரூப் டான்ஸ்). இந்தப் பாடலில், பாடும் இரு கதாநாயகர்களும், அவர்களைப் பற்றியும், சில வாழ்க்கைத் தத்துவங்களைப் பற்றியும், அந்தக் குழுவினரோடு சேர்ந்து சந்தோஷமாகப் பாட வேண்டும்.
இந்தப் பாடலின் துவக்கத்திலேயே, ஒரு வித அசுர வேகம் தெரியும்.
இந்தப் பாடல் துவங்குவதற்கு முன்னர், படித்த அண்ணன் (பாலாஜி), படிக்காத எப்போதும் வேட்டையாடிக் கொண்டு பார்ப்பதற்கு முரடனாக இருந்தாலும் கள்ளமில்லா மனம் கொண்ட தம்பி (நடிகர் திலகம்) இருவருக்கும் திருமணம் நிகழ்ந்து, அதில் அண்ணன் மட்டும் நினைத்த மாதிரியே மனைவியை அடைந்து விடுவார். ஆனால், தம்பி, துரதிர்ஷ்டவசமாக, பொருத்தமில்லாத படித்த ஒருவரை மணம் புரிந்து, மனைவி, அவரைத் தன்னைப் படித்தவன் போல் நடித்து ஏமாற்றித் திருமணம் புரிந்து விட்டார் என்று வெறுப்புடன், பிறந்த வீட்டுக்குச் சென்று விடுவார். இந்த விஷயம், தம்பி தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது. இருப்பினும், எல்லோரும் சொந்த கிராமத்துக்கு (எஸ்டேட்) செல்ல, அங்குள்ளவர்கள், இவர்களை வாழ்த்தும் விதமாக கூட்டமாக நடனமாடி மகிழ்விக்கத் துவங்குகையில், அண்ணன் பாடத் துவங்குவார்.
அண்ணன் (பாலாஜி) பல்லவியைத் துவக்கி முடித்தவுடன், சற்றும் எதிர்பாராதவிதமாக, தம்பி (நடிகர் திலகம்) அனு பல்லவியைத் துவங்குவார். தன்னுடைய குணாதிசயத்தை அழகாகக் கூறுவார் - "உள்ளம் சொன்னதை மறைத்தவனில்லை - ஊருக்குத் தீமை செய்தவனில்லை - வல்லவன் ஆயினும் நல்லவன்" என்று பாலாஜியின் பின்னாலிருந்து முகத்தை மட்டும் காட்டும் போது அந்த முகத்திலும், அந்தக் கண்களிலும் தெரியும் அந்தக் குழந்தைத்தனம், மறுபடியும், அந்த வரிகளைப் பாடி அசாத்திய வேகத்துடன், பாலாஜியை நோக்கித் திரும்பி நிறுத்தும் ஸ்டைல்!
இப்போது, சரணம் -
பள்ளம் மேடு கண்டால் பார்த்துச் செல்லும் பிள்ளை .... சேர்த்துக் கட்டிய முல்லை" எனும்போது ஒரு வித ஸ்டைல்.
"இல்லை இல்லை என்று என்றும் சொன்னவர் இல்லை" என்று பாலாஜி பாடும் போது, இவரது ரியேக்க்ஷன்!
அடுத்து, இரண்டாவது சரணம் -
"சிட்டு போல வானில் துள்ளிச் செல்ல வேண்டும்" - அந்த ஆர்ப்பரிப்பைக் கவனியுங்கள் - கைகளை வானத்தை நோக்கி அசாத்திய வேகத்துடன் உயர்த்தும் விதம்! "கீரிப்பிள்ளை போலே ஊர்ந்து செல்ல வேண்டும்" எனும் போது காட்டும் பாவனை! பாலாஜி பதிலுக்கு, "தொல்லை என்ற பாம்பைக் கவ்விக் கொல்ல வேண்டும்; தூய உள்ளம் வேண்டும், என்றும் சேவை செய்ய வேண்டும்" எனும்போது, நடிகர் திலகம், இரண்டு கைகளையும் ரொம்பவே லூசாக வைத்துக் கொண்டு இலேசாக ஆடுவது -அவருடைய ஸ்டைலையும் சேர்த்து! குறும்பு கொப்பளிக்கும்!!
இந்தப் பாடல், இந்தப் படத்தின் அந்தச் சூழலுக்குத் தேவையில்லை என்றே தோன்றினாலும், அதற்கு முன்னர் ஏற்படும் ஒரு விதமான இறுக்கமான சூழலை மக்களை மறக்க வைத்து, வேறு ஒரு சூழலை, மக்களுக்கும், ஏன் அந்தப் பாத்திரங்களில் நடிப்பவர்களுக்குமே கூடத் தரும்.
பாடல் நெடுகிலும், நடிகர் திலகத்திடம் காணும் அசுர வேகமும், ஸ்டைலும், அதன் மூலம், அவருடைய பாத்திரத்தின் குண நலன் என்ன, பாங்கு என்ன என்பதையும் அவர் காட்டியிருக்கும் விதமும், அற்புதமாக இருக்கும். அவரது குடும்பத்தில் இவர் ஒருவர் தான் காட்டிற்கு அடிக்கடி வேட்டையாடச் செல்வதாலும், அவர் எல்லோருடனும் கள்ளம் கபடமின்றி பழகுவதாலும், அவர் மட்டும் பந்தா இல்லாமல் எல்லோரையும் போல் தன்னை மறந்து ஆடி இருப்பார்!
உத்தம புத்திரன் படத்தில் "யாரடி நீ மோகினி" பாடலில், எப்படி பார்வையாளர்களாக நின்ற கொடிய வில்லன்கள் நம்பியார் மற்றும் ஓஎகே தேவர் ஆகியோரையும் சேர்த்து கைத் தட்ட வைத்தாரோ, அதே போல், இந்தப் பாடல் முடிவில், பார்வையாளர்களான, எம்.ஆர்.ராதா மற்றும் ஏ.கருணாநிதி அவர்களையும் சேர்த்து ரசிக்க வைத்து விடுவார். அந்த அளவிற்கு, பாடலும், நடிகர் திலகத்தின் பிரத்யேக வேகமும், நடிப்பும், துடிப்பும், ஸ்டைலும், அந்த இடத்தையும், பார்ப்பவர்களையும் சேர்த்து மயிர்க் கூச்செறிய வைத்து விடும். பாடல் முடிந்து, சில கணங்கள், அந்த பாதிப்பு நீங்காமலேயே இருக்கும்!
குழுவினர் ஆடிக் கொண்டிருக்கும்போது, நடிகர் திலகமும், பாலாஜியும் நின்று பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட, நடிகர் திலகம் மட்டும் ஒரு வித தயார் நிலையில் நின்று கொண்டிருப்பதை கவனிக்கலாம்.
என்னடா புதிதாக ஏதேதோ செய்யப் போகிறோமே, மக்கள் ரசிப்பதற்குப் பதில், சிரித்து விடுவார்களோ என்று நினைக்காமல், துணிந்து வித்தியாசமாக நடித்த விதம் தான், அவரை மற்ற நடிகர்களிடமிருந்து வேறு படுத்திக் காண்பிக்கிறது. எவ்வளவு தான், புதிதாகச் செய்தாலும், பாத்திரத்தை விட்டு விலகாமல், மாறாக, அந்தப் பாத்திரத்தையும், அந்த கணத்தையும், அந்தப் படத்தையும், மேலும் மெருகேற்ற இவர் ஒருவரால் தான் முடியும் போலும்!
இரா. பார்த்தசாரதி