http://tamil.gizbot.com/news/technol...n-kochadaiyaan
கோச்சடையானின் மறுபக்கம்..
உலகளவில் இருக்கும் அத்தனை மக்களின் அடுத்த எதிர்பார்ப்பு சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான். இந்த அனிமேஷன் திரைபடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் உயர்ந்த தொழில் நுட்பம் பற்றி இங்கே ஒரு சிறிய கண்ணோட்டம் பார்க்கலாம்.
ஜேம்ஸ் கேமரூனின் அவதார், தி அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டின்டின் போன்ற வெளிநாட்டு படங்களில் பயன்படுத்தப்படுள்ள தொழில் நுட்பங்கள் கோச்சடையானில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் 80 கேமராக்கள் கொண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் ஒவ்வொரு அசைவுகளும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
எதற்காக 80 கேமரா? என்ன அந்த உயர்ந்த தொழில் நுட்பம்? இந்த படத்தில் என்ன புதுமை? என்ற சரமாரியான கேள்விகளுக்கும் இங்கு பதில் உள்ளது. மிக முக்கியமாக சொல்லபோனால் கோச்சடையானில் பெர்ஃபாமென்ஸ் கேப்சர் தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒருவருடைய அசைவுகளை பதிவு செய்து அதை அனிமேஷன் மூலம் காட்டுவது என்று சொல்லலாம். உதாரணத்திற்கு அவதார் திரைப்படத்தில் வரும் காதாப்பாத்திரங்கள் 10 அடிக்கு உருவம் கொண்டது போல் காட்டப்பட்டு பிரம்மிப்பை ஏற்படுத்தியது. இது எப்படி சாத்தியமானது என்றால், இந்த பர்ஃபாமென்ஸ் கேப்சர் மூலம் தான்.இதை பயன்படுத்தி ஒருவரது அசைவுகளை பதிவு செய்த பின், பர்ஃபாமென்ஸ் கேப்சரினால் அதை அனிமேஷன் இஃபக்ட்டில் காட்டலாம்.
இந்த கோச்சடையான் 3டி அனிமேஷன் திரைப்படம் ஃபைன்வுட் ஸ்டூடியோவில் எடுக்கப்படுகிறது. இந்த ஸ்டூடியோவில் தான், ஜேம்ஸ் பான்டின் திரைப்பட காட்சிகள் படமாக்கபடுகிறது என்பது இன்னொரு தகவல்.
அதுவும் இது போன்ற ஹை-டெக் 3டி அனிமேஷன் திரைப்படங்கள் பொதுவாக வெளிநாடுகளில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவில் பர்ஃபாமென்ஸ் கேப்சர் போன்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்தி எடுக்கப்படும் முதல் 3டி அனிமேஷன் திரைப்படம் என்ற பெருமை கோச்சடையானுக்கு உண்டு.
இத்தகைய முயற்சியினை மேற்கொண்டு இத்திரைப்படத்தினை இயக்கும் சவுந்தர்யாவுக்கும் ஒரு பெரிய கைத்தட்டல் காத்திருக்கிறது. தொழில் நுட்பத்தின் மூலம் மறைந்தவர்களையும் மீட்டு கொண்டு வரலாம் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு பெரிய உதாரணமாக இருக்கும்.
ஆம்! இதில் மறைந்தும் நினைவில் இருக்கும் நடிகர் நாகேஷ் அவர்களும் காட்சியளிப்பார் என்பது மற்றுமொரு கூடுதல் தகவல். மோஷன் கேப்சர் போன்ற இன்னும் பல தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், அதிரடியான சண்டை காட்சிகள் மிக தத்ரூபமாக இருக்கும். அனிமேஷன் மூலம் இதில் சூப்பர் ஸ்டார் 8 பேக்கில் வருவதாகவும் கூறப்படுகிறது.
சாதாரணாக 6 பேக்கில் நடிகர்கள் உலா வருகின்றனர். ஆனால் இவர் சூப்பர் ஸ்டார் என்பதனால் அதிலும் ஒரு வித்தியாசம் காட்டி, அனிமேஷனில் இவரை 8 பேக்கில் காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் இந்த கோச்சடையான் திரைப்படம் எப்படி இருக்கும் என்பதை விட, இதில் உள்ள ஹை-டெக் தொழில் நுட்பத்திற்காக கேமராக்கள் என்னென்ன சாகசங்கள் செய்திருக்கும் என்பது இன்னும் ஒரு ஸ்வாரசியமான எதிர்பார்ப்பு.
பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு புதிய இலக்கணம் சொன்ன இயக்குனர் ஷங்கருக்கு அடுத்தபடியாக பிரம்மாண்ட இலக்கணம் சொல்ல வரும் ரஜினியின் மகள் சவுந்தரியாவின் முயற்சி சிறந்த படைப்பை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.