காற்றுதான் குளிர்ந்தது
மனமோ கொதித்தது
நிலைகெட்ட மாந்தரை
வீணரை நினைந்து
Printable View
காற்றுதான் குளிர்ந்தது
மனமோ கொதித்தது
நிலைகெட்ட மாந்தரை
வீணரை நினைந்து
நினைந்து நடக்கையிலே நேசமுடன் வந்தே
இணையாய் நடக்கும் நிலவாய் – இணையேவுன்
பொன்னைப் பழித்திடும் பூமுகம் நெஞ்சினில்
பின்னி வருகுது பார்
பார் பார் என்று இன்று
மூடி மூடி வைத்த அழகு
ஏன் ஏன் இந்த வக்கிரம்
எது எது இங்கு இன்பம்
இன்பம் மிகப்பொங்கு முன்விழிகள் இன்றைக்குத்
துன்பத்தின் தாலாட்டைப் பாடுவதேன் – மென்மை
மனத்துள் உறைந்திருந்த மன்னன் தொலைவில்
பணமீட்டச் செல்வதால் தான்
பணமீட்ட செல்வதால் தான்
பொறுப்பு வந்தது ஒருவனுக்கு
புரிய முடிந்தது உலகின் போக்கை
பெருமை மனதில் பிறந்தது
பக்குவம் அடையும் பொழுதே
பொழுதும் போகின்றது நல்லபடியாய்
நல்லபடி யாய்க்கவிதை நெய்ய வேண்டும்
..நாவினிலே கலைமகளும் சொல்ல வேண்டும்
கல்லென்றே இருந்தமனம் கனிந்து இங்கே
..கனிவான சிற்பமென மாற வேண்டும்
வில்லினிலே சீறிவரும் அம்பைப் போல
…வெற்றிதரும் கற்பனைகள் மிளிர வேண்டும்
சொல்லரசி நாமகள்நீ என்னை வாழ்த்தி
..சோர்விலாமல் நற்கவிதை அருள வேண்டும்
அருளவேண்டும் ஆலாலகண்டன் அறிவுடன் வாழ
பள்ளிக்குப் படிக்க பஸ்ஸில் பயணம் செய்யும்
கள்ளிக்கு வருமாம் காதலும் கத்திரிக்காயும்
சாதி கடந்து வயது மறந்து மாலை மாற்றி
வாழ விடாத வினை வந்தால் பஞ்சாயத்து
தாய் வீட்டுக்கு விரட்டுவான் தாணாக்காரன்
தாணாக் கார ரிடம்சொன்னால்
...தயங்கா மல்தான் தண்டிப்பார்
வீணாய் எதுவும் பேசாமல்
...வீட்டைக் காலி செயுமென்றார்
ஆனால் என்ற குடித்தனத்தை
...அலட்சியம் செய்தே நோக்குகையில்
தேனாய்க் கேட்டது ஒருகுரலும்
...தெளிவாய்ச் சொன்னது அம்மழலை
வாங்க அங்க்கிள் குட்மார்னிங்க்
..குரலைக் கேட்டேன் வந்தேன்நான்
போங்க நீங்கள் என்மார்க்*ஷீட்
..பார்த்தால் வெரிகுட் சொல்வீர்தான்..
பாங்காய்க் காட்டிய பேப்பரினை
..வீட்டுக் காரர் பார்க்கையிலே
தேங்கிய கோபம் தான்மறந்து
..குட்பாய் சொல்லிச் சென்றுவிட்டார்..
சென்றுவிட்டார் நிலவுக்கு
வென்றுவிட்டார் விண்ணை
அறியார் அடுத்த வீட்டாரை
மதியார் ஊர் வழக்கத்தை
தீவாய் வாழ்ந்திருப்பார்
தனிச் சட்டங்களுடனே
சட்டங்களுடனே அழகாய்
மாட்டியிருந்த தாத்தாவின்
சான்றிதழ்கள் எல்லாம்
அப்பாவின் காலத்தில் பரணில்..
பேரனின் காலத்தில்
சட்டம் பிரிக்கப் பட்டு
அவை குப்பையில்
போடப் படுவதை
தொங்கிக் கொண்டிருந்த
சட்டமணிந்த
பேரனின் சான்றிதழ்
பார்த்துக் கொண்டிருந்தது
திகைத்தபடி
திகைத்தபடி நிற்கிறாள்
சுழித்தோடுது காட்டாறு
மிரட்டும் அதிவேகம்
தினமொரு நவீனம்
புதுப் புது சாதனம்
எத்தனை மென்பொருள்
கையளவு மணலுடன்
கலங்கிடும் கிழவி
கிழவி படும் அவஸ்தை சொல்லி மாளாது
கிழவன் ஒரேயடியாய் போய்ச் சேர்ந்த பின்
அம்போன்னு நட்டாத்துல விட்டுப் போயிட்டியேனு
அப்போக் கூட கிழவனைத் திட்டித் தீர்ப்பாள்
திட்டித் தீர்ப்பாள் அம்மா..
ஹோம் ஒர்க் பண்ணியா
டிவி பார்க்காதே
ஏன் இத்தனை விளையாட்டு..
எப்பப் பார்த்தாலும்
குண்டு குண்டா கதைப்புத்தகம்
ஒழுங்கா சாப்பிடேண்டா..
கோபம் கோபமாக வரும்..
மனதுக்குள்
டிவியிலும் கதைகளிலும் வரும்
ராட்சசி,பூதம் என
நினைத்திருக்கிறேன்..
இப்போது
கெஞ்சுகிறேன்..
அம்மா
டிவி பார்..
ரிலாக்ஸா இரு..
புக்ஸ் கொஞ்சம் உட்கார்ந்து கொண்டு படி..
மெல்ல நட
அப்பத் தான் கொஞ்சமாவது பசிக்கும்
சாப்பிடலாம்லயா..ப்ளீஸ்..
படுத்த படுக்கையாயிருக்கும்
அவளிடமிருந்து
வந்தது மெல்லிய புன்னகை..
புன்னகை பூக்கும் பெண்கள்
படிக்கவேண்டிய புத்தகங்கள்
புரியாத அதிசய புதிர்கள்
ஆச்சரியம் ஆமோதிப்பு ஆவல்
ஏளனம் எக்காளம் இறுமாப்பு
போலி மரியாதை கடமை
கபடம் காதல் களிப்பு
நஞ்சு கலந்த நயவஞ்சகம்
மறைத்த ஆழ் துயரம்
எதுவென்று எப்படி அறிவாய்
அறிவாய் அறிவால் அழகாகப் பாடம்
அரிவையே கற்றாய் எனக்கூற பாவையவள்
தெரிந்த கலையும் தெவிட்டாமல் தானுயர
பற்றினாள் குருபாதந் தான்..
குருபாதந் தான் என்பார்கள்
சனியா சுக்கிரனா சூரியனா
கட்டத்துக்குள் பயன்களை
கவனமாய் கணிப்பார்கள்
விண்ணில் மின்னிடும் கிரகம்
எத்தனை பேர் ரசிப்பார்கள்
ரசிப்பார்கள்..
கவலைப் படாதீர்கள்
நன்றாகத் தான் வந்திருக்கிறது..
இயக்குனர் உறுதி மொழிந்தும்
தயாரிப்பாளருக்கு உறுத்தல்..
பின்ன..
ஊரில் மஞ்சக் காணி முதல்
மனைவி,சின்ன வீட்டின் நகை வரை
விற்றாயிற்று..
படம் ஓடவேண்டும் தான்..
என்ன செய்வது..
கூப்பிடு சமீபத்திய பாடலாசிரியரை
எடு ஒரு பாட்டை..
படம் வெளியாகி
வெற்றி பெற
விமர்சனங்கள் வந்தன..
அந்தக் குத்துப்பாட்டைத் தவிர்த்திருக்கலாம்..
படத்துக்குக் கிடைத்திருக்கும் விருது..
மறுபடி மொழுமொழு முகமணிந்த
தயாரிப்பாளர் சிரித்தார்..
விருதுல்லாம் வேணாம்ப்பா
எனக்குப் பணம் வருது..போதும்..!
போதும் சாதாரண ஒப்பனை
பருவக் குமரிக்கு என்கிறேன்
புதுமலருக்கு கவர்ச்சியிருக்கு
பூச்சுக்கள் சாயங்கள் களிம்புகள்
பக்குவமான பராமரிப்புகள்
பேணுவர் பேரிளம்பெண்கள்
பேரிளம் பெண்கள்
நடுத்தர வயதுக்கும்
முதுமைக்கும் நடுவில்..
கொஞ்சம் எரிச்சல்
அவ்வப்போது படுவார்கள்
எதற்கெடுத்தாலும் குற்றம்
கணவனையும் குழந்தைகளையும்
சொல்வார்கள்..
இருந்தாலும் நல்லவர்கள்..”
”என்னடி செஞ்சுக்கிட்டிருக்க அங்க”
“உன்னப் பத்தித் தான்
எழுதிக்கிட்டிருக்கேம்மா..”
“சொல்றது காதில விழலை..
சரி சரி..வேகமாக் குளிச்சுட்டு
ஸ்கூலுக்குக் கிளமப்ற வழியப் பாரு
நிற்காதே மசமசன்னு.!.”
மசமசன்னு நிப்பான் ஆம்பள
மகுடம் சூட்டினதா நினைப்பு
தலைதான் அவன் ஐய்யமில்ல
கழுத்து சொல்றபடி அசையணும்
பொம்பளதான் கழுத்து புரியுதா
இணையத்துல படிச்ச முத்து
முத்தண்ணன் பக்கத்து வீடு
சிறு வயது முதலே பயம்..
நேரில் வந்தால் ஓடி ஒளிவோம்
அவர் தம்பி மட்டுமல்ல
தெரு நண்பர்கள் அனைவரும்..
கண்டிப்பு ஜாஸ்தி..
முப்பது வருடம் கழித்து
தளர்ந்திருந்த அவரைப்
பார்த்த போதும் பேசவில்லை..
முறுவலித்து நகரப் பார்க்க..
அவர் தான் இழுத்து நிறுத்தி..
எப்படி இருக்கே இருக்கீங்க தம்பி..
பார்த்து நாளாச்சு
ஒல்லியாப் பார்த்தது உஙகளை..
இப்போ அகலமாய்ட்டீங்க..
பதிலுக்கு அவர் தம்பியை
என் பழைய தோழனைக் கேட்டால்..
ஒன்றும் சொல்லாமல்
பெருமூச்சு விட்டு
சின்ன வயசு பயம்
உங்க கிட்ட இன்னும் இருக்கு..
அவன் நினைக்கலியே
கோவிச்சுக்கிட்டுப் போனவன் தான்..
பாத்துப் பேசியே பத்து வருசம் ஆச்சு
என்றவர் மறுபடி என்னை மேல் கீழாகப்
பார்த்து
தாங்க்ஸ்பா உன்னில்
என் தம்பியப் பார்த்துட்டேன்..
எனச்சொல்லி
திரும்பி நடந்தார் தளர்நடையில்
தளர்நடையில் தங்க மேனியில்
கொடியிடையில் கோவையிதழில்
சொக்குவான் அரசகுமாரன்
போகுமிடமெல்லாம் ஒருத்தி
அவ்வண்ணமே இருக்கிறாள்
அலுக்கிறது பழைய புதினம்
பழைய புதினம் தான்..
அழகான உயிர்ச் சித்திரங்கள்
கொஞ்சம் பழுப்படைந்து..
சில பல துணுக்குகள்,
பாதி மட்டும் இருக்கும்
சினிமா விமர்சனம்,
பாதி இருக்கும் வாசகர் கடிதம்,
என
அத்தியாயம் பிசகாமல்
பைண்ட் செய்யப் பட்டு
இருந்தது கிடைத்தது..
அக்காவுடையது தான்..
படிக்கப் படிக்க சுவாரஸ்யம்..
ஒரு அத்தியாயத்தின்
முதுகுப் பகுதியில்
சுஜா ஐ லவ்யூ ரமேஷ்
எனக் கிறுக்கியிருக்க..
சுஜா அக்கா பெயரில்லை
ரமேஷீம் யார் எனத்தெரியாது..
அக்காவிடம் கேட்க வேண்டும்..
வருடங்கள் பலவானதால்
நினைவிருக்குமா தெரியவில்லை..
ம்ம்
கதையைவிட இதில்
கூடியது சுவாரஸ்யம்
சுவாரஸ்யம் குன்றிப் போகும் உறவுகள்
சுவடுகள் கலைந்துபோன நினைவலைகள்
சுழியில் மாட்டித் திசைமறந்த சருகுகள்
சுழன்று வரும் வெறுமைப் பொழுதுகள்
வெறுமைப் பொழுதுகள் தேன்கூட்டில் இல்லை
சுறுசுறுப்பான மூளைக்கு ஓய்வென்பதில்லை
தேடலும் ஆர்வமும் ஆராய்ச்சியும் உந்தும்போது
அயர்வில்லை அலுப்பில்லை ஆனந்தம் மட்டுமே
ஆனந்தம் மட்டுமே தெரிய
வந்தவளிடம்
அம்மா எதுவும் பேசவில்லை..
மெளனமாய்க் காஃபி கலந்து
கொடுக்க
குடித்துவிட்டு
நான் அவருக்குக் கலக்கறேம்மா..
கொஞ்சம் டிகாக்*ஷன் தூக்கலா
சர்க்கரை கம்மியா இருக்கணுமாம்..
உனக்குத் தெரியாது..
எனச் சொல்ல
கோபத்தில்பார்த்த அம்மாவின் கண்களில்
தெரிந்தது சந்தோஷம் உள்ளூர..
சந்தோஷம் உள்ளூர பறந்தது வானுயர
பெற்றோரின் மனம். மகளுக்கு மணம் .
கடைசி நிமிடத்தில் மூத்தவளின் காதலரிய
படையாய் வந்தவர் இளையவளை பெண்கேட்க
திகைத்துரைத்த மௌனத்தை சம்மதத்திற் கறிகுறியாய்
திரித்துணர்ந்து மேடையில் அமர்த்தி விட்டாரே.
வாயை அடைத்து வாழ்வை கெடுத்து
கனவை கலைத்த கூட்டம் விடுத்து
கண்டம் தாவி சென்றது தம்பதி
நெஞ்சமொன்று சேராததை குறிப்பதை போல
தஞ்சம் புகுந்தனர் கண்டத்தின் இருமூலையில்
காதலால் இணையாத அவ்விரு உள்ளங்களை
காலம் வந்து பிணைக்க முடியுமாயென்ன ?
விவாகரத்தில் முடிந்தது சோகக் கதை
தாய்தந்தைய ருள்ளம் உற்றது வதை
வதை செய்கின்றான் என்னை
நொடிக்கொரு கேள்வி வருது
ஒன்றுக்குமே விடை கிடையாது
சின்னக் கண்ணை உருட்டியே
சிற்றேவல் புரிய வைக்கிறான்
தூங்காது தூங்கவிடாது படுத்தி
இன்பமான துன்பமிதை பெற
பாட்டியாகவேண்டும் ஒருத்தி
ஒருத்தி அங்கே தலைமேலே..
..ஒழுங்காய் அழகாய் அமர்ந்திருக்க
ஒருத்தி பாதி உடலினிலே
..உள்ளம் கொடுத்தும் தானிருக்க
கருவம் ஏதும் கொள்ளாமல்
..களிப்பாய்ச் சிரிக்கும் சிவனேயுன்
புருவம் சற்றே தான் நிமிர்த்திப்
..பார்த்தே அருள்வாய் உலகினையே.
உலகினையே சிறு பந்தாக்கி
உள்ளங்கையிலதைத் தாங்கி
விரல் நுனியிலதை இயக்கி
விந்தை புரியும் விஞ்ஞானமே
மந்திரம் போட்டது போலவே
மக்கட்தொகை கிடக்குதே
இணையில்லா இணையத்திலே
இணைந்தன நெஞ்சங்களே
நெஞ்சங்களே நெடுநாளதும் கழிந்தாலெனில் நினைப்பீர்
மஞ்சில்முகம் புதைக்கும்நிலா மலர்ந்தேவெளி வரும்போல்
வஞ்சம்மிகு உலகும்நிதம் வழங்கும்சுவை அறிந்தே
கஞ்சம் இலா அறிவையிந்தப் பணியில்தரும் எமையே
எமையே வீழ்த்திய வியப்பொன்று
என்றும் இங்கு இரு பெற்றவர்கள்
மெத்தப் படித்தவர் பட்டங்கள் பல
பெற்றவர்கள் ஆயினும் அவர் கீழே
நிற்பர் தம் மழலையர் பார்வையில்
எளிய தகுதிகள் பெற்றவராயினும்
அசைக்க முடியா நம்பிக்கையுடன்
குருபக்தியுடன் பின்தொடரப்படும்
பெருமைக்குரிய ஆசிரியர்களே
பிஞ்சுவிரல் பற்றிய பிரம்மாக்கள்
பிரம்மாக்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாய்
தோன்றிக் கொண்டு தான்
இருக்கிறார்கள்..
உதாரணத்திற்கு
நமது இளம் இயக்குனர்...
பிரமாண்ட கரகோஷம் செய்ய
அந்த இயக்குனருக்கு
நினைவுக்கு வந்தது
தான் இயக்கிய படமும்
அதிலிருந்த
தான்பார்த்த நான்கு குறுந்தகடு படங்களும் தான்..
குறுந்தகடு படங்களும் தான்
வெகுவாய் மனதில் பதியும்
பொன்னான பழமொழிகளாய்
சின்ன வயது நினைவுகளாய்
மாம்பழம் சப்பி முடிந்ததும்
கொட்டையை காயவைத்து
தணலில் இட்டு சுட்டெடுத்து
சொத்தையாவெனப் பதறி
நல்ல பருப்பெனின் நிம்மதி
ஊரைக் கூட்டி விருந்துண்டு
ஆசையாய் நடக்கும் திருமணம்
சொத்தையாகும் பயமின்றி
பயமின்றி துள்ளித்தான் பாய்ந்தகாலம் போனது..
..பாரினிலே கண்டகாட்சி பாழ்மனதில் பூண்டது
சுயங்கொண்டே சோர்விலாமல் சூதுஎதும் கொண்டிரா
...சுறுசுறுப்பு மிகக்கொண்ட இளமையதும் போனதே
வயல்வரப்பில் விளைந்தநாற்று அசைந்தாடிக் காற்றிலே
..வானம்பார்த்து நின்றதுபோல் வாழ்ந்தகாலம் போனது
கயல்விழிகள் மனதினுள்ளே கலந்தாடி நீந்திய
..காலமெல்லாம் போச்சுபோச்சு முதுமைவந்து சேர்ந்ததே...!!
சேர்ந்ததே அவசரமாய் மடமையும் பேராசையும்
மரத்தினின்று உதிர்ந்த கனியில் மேதை உதயம்
நிழல் தரும் போதியின் கீழ் அமர பிறந்தது ஞானம்
காடழியும் கொடுமையில் அழியுது அறிவும் அருளும்
அருளும் அணியாய் முறுவல் முகத்தில்
..அணையாச் சுடராய் மிளிர்ந்தே ஒளிரும்
புருவம் வளைந்தே அழகாய் விரிந்தே
..புவனம் த்னையே சிரித்தே மயக்கும்
சிறுவன் எனவே நினைத்தால் மிகவும்
..சிறப்பாய்த் தகப்பன் குறையை அகற்றும்
குருவே முருகா உனையே பணிந்தேன்
..கொடுப்பாய் பணிவும் அறிவும் அறமும்..
அறமும் தூங்கிவிட்டதால்
அரக்கர் கைகளில் ஆட்சி
பேய்களும் பிசாசுகளும்
வைத்ததே சட்டமென்று
கலிகாலம் நடக்குதின்று
பாட வா பள்ளியெழுச்சி
பள்ளி யெழுச்சியினைப் பாங்காகத் தானிங்கு
அள்ளிக் கவிபுனைவேன் அம்பிகையே - விற்புருவம்
மெல்லவே மேல்போக மைவிழியின் பார்வையினைத்
துள்ளியே தந்தால் சுகம்
கண்மலர் மூடிக் கனிவுடன் தூங்கும்
..பொன்மலர் முகமும் பொலிவுடன் துலங்கும்
விண்ணவர் போற்றும் வித்தக விழிகள்
..வெண்ணில வொளியில் விசிறிடும் காற்றில்
எண்ணிடும் ஈசன் உளந்தனி லாட
..ஏங்கிடும் போதில் எழிலுடன் சற்றே
பின்னிடும் பின்னல் அசைத்திடும் தாயே..
..பேதையென் பாட்டில் பள்ளியெழு வாயே
நடராச ருடன்கூட நாட்பொழுதும் நீயும்
..நடனங்கள் பலபுரிய உன்னழகுக் காதில்
தடதடத்தே தாளமது மாறாமல் அங்கே
…தாடங்கம் தானாட பார்த்தமனம் ஆட
கடகடென்றே நெற்றியிலே வேர்வையதும் நன்றாய்
..கலந்தோடித் தான்வரவும் கயல்விழியுன் நெஞ்சம்
படபடக்க சற்றேதான் பஞ்சணையில் இங்கே
.பக்குவமாய் உறங்கியதும் போதும்பள்ளி எழுவாய்
முனிவரும் அவருடன் தேவரும் ஒருபுறம்
.. மெல்லவே எழுந்திடும் கதிரவன் ஒருபுறம்
நனிதரும் விழிகளில் வசித்திட திருமகள்
..நடையது தடைபட நிற்பதும் ஒருபுறம்
பணிவுடன் அடியவர் பதமலர் விழிகளில்
..பயத்துடன் ஒற்றியே நிற்பதும் ஒருபுறம்
இனிதென இளமயில் அன்னையே இங்குதான்
…இகபரம் நலம்பெற எழுந்தருள் செய்கவே
..
மென்மலர்க் கைகளும் மடியிலே தங்கிட
..மெலிந்தநல் லிடையதும் அழகுடன் வளைந்திட
சிற்சிறு தென்றலும் தயங்கியே கூந்தலின்
..சிறப்பதும் அறிந்ததால் பயத்துடன் விலக்கிட
மின்னலின் தன்மையில் மின்னிடும் கன்னமும்
…மெல்லவே அழுந்தவே பஞ்சணை வலித்திட
எண்ணமும் எழிலுறும் வண்ணமும் கொண்டுநீ
..ஏற்றமாய் இங்குதான் எழுந்தருள் செய்கவே
கண்மயங்கி கவசமென கண்ணிமைகள் நிற்க
..கவித்துவமாய் உதடுகளும் தான் மடிந்த போதில்
மண்ணுலக மாந்தருமே மயக்கமதில் நின்று
…மீளாமல் ஏதேதோ தான்பகரு கின்றார்
விண்ணுலக தேவருமே கலக்கமது கொண்டே
.. வித்தகனாம் சிவனிடமே சொலலாமா என்றே
தன்னிலையை மறந்தபடி தவிக்கின்றார் தாயே
..தக்கபடி தானிங்கு பள்ளியெழு வாயே
இடக்காற்று வலக்காற்று எல்லாமும் சேர்த்தே
….இயக்குகின்ற சூஷ்மத்தின் ஆதாரம் நீயே
புடம்போட்ட தங்கமென மாறிடுமே உந்தன்
..பொற்பாதம் தான்பணிந்த பக்தர்களின் மனமே
குடங்குடமாய் அபிஷேகம் கொடுத்திடவே இங்கே
…கூட்டங்கள் நிற்கிறது அறிந்திடுவாய் அம்மா
திடமாக நெஞ்சிருத்திக் கிசுகிசுப்பேன் இங்கு
..தக்கபடி அன்னையே பள்ளியெழு வாயே
உரலிடை மாட்டிய மரங்களைப் போலே
..உணர்வுகள் அனைத்துமே ஒன்றெனக் கொண்டுவுன்
குரலினைக் கேட்டிடக் குயில்களும் கூடின
…கூடிய கூட்டமும் வாடியும் போயின
சுரத்துடன் பாடிடும் தொண்டையும் வரண்டிட.
..சுரத்துடன் உடல்நிலை தளர்ந்திட நிற்பதும்
உரைக்கவே செய்கிறேன் உமையவள் நீயுமே
…உறக்கத்தை நீக்கியே எழுந்தருள் செய்கவே..
கதிரவன் குணதிசைச் சிகரத்தை அடைய
..கலக்கமாய்த் தயங்கியே நிற்கிறான் எதனால்
மதியுடன் கூடிய இளமதி மருகியே
..மயங்கியே தடையுடன் நிற்பது எதனால்
விதியினை வெல்லுமுன் கமலமென் வதனம்
..விழிகளும் மூடியே இருந்திடக் கண்டு
விதிர்த்திட நிற்கிறார் வித்தகி நீயும்
..விழித்திடு வேகமாய் எழுந்தருள் செய்கவே..
தெரிகிறது உனக்கெல்லாம் என்றுதான் நானும்
..தெரியாமல் நினைக்கின்றேன் உண்மையா சொல்வாய்
அறிகின்ற ஆற்றலையும் தந்தவள் நீயே
..ஆழமென எழுதவெனத் தூண்டியவள் உந்தன்
விரிகின்ற செம்மாந்த இதழோரம் கொஞ்சம்
..விகசிக்கும் முறுவலதன் மொழியதையும் சொல்வாய்
சிரிக்காமல் சற்றேதான் கண்விழித்து நீயும்
..சேவிக்கும் அடியவர்க்கு அருள்புரிக தாயே
கண்மலர்க் கமலமும் கனிவுடன் இங்கே
…கருணையை மழையெனப் பொழிந்திட வேண்டும்
எண்ணிய ஆசையை எழுத்தினில் வார்க்க
..ஏந்திழை அருளுடன் பார்க்கவும் கூட
சின்னதாய் எழுதிய சின்னவன் கண்ணனை
..சிரிப்புடன் நோக்கியே அடியவர் தமக்கே
வண்ணமாய்ப் பெண்மயில் அம்பிகை நீயுமே
…வாழ்த்திட இங்குதான் எழுந்தருள் செய்கவே..
****
செய்கவே மனம் போலவே
காஞ்சிபுரம் பனாரஸ் பட்டோ
கனகமணி ஆரமோ வைரமோ
கதம்ப மாலையும் மல்லிகையும
பால்கோவாவும் பக்கோடாவும்
பை நிறைய திணித்த காசும்
அன்புடனே நீர் வழங்கினால்
பெற்றுக்கொள்ள கசக்குமோ