கமலின் மன்மத லீலை படம் ரீமேக் -டைரக்டர் பத்ரி
கமல் நடித்து 1976-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிய படம் “மன்த லீலை”. இதில் ஜெயபிரதா நாயகியாக நடித்தார். கே.பாலச்சந்தர் இயக்கினார். இளம் பெண்களை ஏமாற்றி கற்பை சூறையாடும் கேரக்டரில் கமல் நடித்து இருந்தார். ஹலோ மைடியர் ராங் நம்பர், மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம், மன்மதலீலை மயக்குது ஆளை உள்ளிட்ட பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் கலக்கின.
இப்படத்தை மீண்டும் ரீமேக் செய்து இயக்க டைரக்டர் பத்ரி முடிவு செய்துள்ளார். இவர் ரஜினி நடித்த தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்து ரிலீஸ் செய்துள்ளார். அடுத்து மன்மத லீலை படத்தை எடுக்கிறார். இதுகுறித்து டைரக்டர் பத்ரி கூறியதாவது:-
நான் ஏற்கனவே வீராப்பு, ஐந்தாம்படை, தம்பிக்கு இந்த ஊரு படங்களை இயக்கினேன். தொடர்ந்து ரஜினியின் தில்லுமுல்லு படத்தையும் ரீமேக் செய்து வெளியிட்டேன். பழைய ரஜினி படம் போல் இல்லாமல் இந்த காலத்துக்கு ஏற்ற வகையில் காட்சிகள், வசனங்களை மாற்றி எடுத்து இருந்தேன். இப்படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தியேட்டர்களில் கைதட்டி சிரிக்கிறார்கள். படம் வெற்றிகரமாக ஓடுகிறது. கமலின் மன்மதலீலை படத்தையும் ரீமேக் செய்ய விருப்பம் உள்ளது. நடிகர், நடிகைகள், தயாரிப்பாளர் முடிவானதும் அறிவிக்கப்படும். சிவாவை வைத்து அடுத்து புதுப்படம் எடுக்கிறேன்.
இவ்வாறு பத்ரி கூறினார்.