பட அனுபவங்கள் பற்றி விஜயகுமாரி கூறியதாவது:-
அடுத்து ராஜாமணி பிக்சர்ஸ் பட நிறுவனம் "குங்குமம்'' என்ற படத்தை கிருஷ்ணன் - பஞ்சு டைரக்ஷனில் தயாரித்தது. இந்தப் படத்தில், சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், ரங்காராவ், எம்.வி.ராஜம்மா, நான் எல்லோரும் நடித்தோம். இந்தப்படத்தில் சாரதா அறிமுகமானார்.இதில், நான் சிவாஜிகணேசனை காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன்.
அடுத்து ஏ.எல்.எஸ். புரொடக்ஷன் தயாரித்த "சாந்தி'' என்ற படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், நான், எம்.ஆர்.ராதா ஆகியோர் நடித்தோம். டைரக்டர் பீம்சிங்.
இந்தப் படத்தில் சிவாஜிகணேசனுக்கும், எனக்கும் முதல் இரவு காட்சி. அந்தக் காட்சியில், முதல் இரவு நடக்கக்கூடாது என்பதற்காக என் புடவையை எரியும் விளக்கில் போட்டு புடவை எரிய ஆரம்பித்ததும் "முதல் இரவு அன்று இப்படி நடந்தது அபசகுனம்'' என்று காரணம் காட்டி, சிவாஜிகணேசன் முதல் இரவை தள்ளி வைத்துவிடுவார்.
இது அன்றைய தினம் படமாக்கப்பட வேண்டிய காட்சி.
அப்போது எதிர்பாராமல் என் புடவையில் தீ மள மளவென்று பரவியது.நான் பயந்து போய், என் கையால் அதைக் கசக்கி தீயை அணைத்துவிட்டேன். இதனால் என் கையில் தீக்காயம் ஏற்பட்டு, நான் துடித்துப்போனேன்.
உடனே, சிவாஜி மருந்து வாங்கி வரச்சொல்லி, அவரே என் அருகில் அமர்ந்து தீக்காயத்திற்கு மருந்து தடவினார். அந்த மனிதாபிமானத்தை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை.
வித்தியாசமான கதை அமைப்பை கொண்டிருந்த "சாந்தி'', நன்றாக ஓடியது.
பெல் பிக்சர்ஸ் நிறுவனம் பீம்சிங் டைரக்ஷனில் எடுத்த படம் "பச்சை விளக்கு.'' இந்தப்படத்தில் சிவாஜிகணேசன், எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர்.ராதா, ரங்காராவ், சவுகார்ஜானகி, புஷ்பலதா, நாகேஷ் ஆகியோர் நடித்தோம்.
இந்தப்படத்தில் நான் சிவாஜிகணேசனின் தங்கையாக நடித்தேன். அதில் சிவாஜிகணேசன் என்னை வாழ்த்தி "ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது'' என்று பாடுவார். "குங்குமச் சிமிழே, குடும்பத்தின் விளக்கே, குலமகளே வருக! எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக!'' என்று அந்தப்பாட்டில் வரிகள் வரும்.
அன்றே சிவாஜிகணேசன் என்னிடம், "விஜி! நீ வருங்காலத்தில் கண்ணகியாக நடிப்பாய்!'' என்றார்.
அவர் என்னை வாழ்த்தி, பச்சை விளக்கு காட்டினார் என்றே நினைத்தேன். - (கலை உலகின் ஜாதி மத பேதமற்ற கடவுள் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் தீர்கதரிசனம் - இவரை கண்ணகி கதாபாத்திரம் செவ்வனே செய்தது ! )
பச்சை விளக்கு படம் திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் வெற்றிக்கொடி நாட்டியது.''
இவ்வாறு விஜயகுமாரி கூறினார்.
Rks