Originally Posted by
RAGHAVENDRA
Dear Ravi,
தங்களுக்கும் சரி, மற்ற நண்பர்களுக்கும் சரி என் பணிவான நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். கோபாலும் நானும் கொள்கையைப் பொறுத்த வரையில் இரு துருவங்களாகத் தான் இருப்பதாகத் தெரிகிறது. என்றாலும் அதற்காக சண்டையெல்லாம் கிடையாது.
என்னைப் பொறுத்த வரையில் நடிகர் திலகத்தின் ரசிகர்களில் நான் தீவிரமாக இருப்பவன். அவரை நடிகர் என்கிற வட்டத்திற்குள் அடக்காமல் ஒரு சிறந்த தேசியவாதியாக, தமிழகத்தின் சிறந்த தலைவராக எண்ணிப் போற்றுகிறவன். அவருடைய கஷ்டங்களை அவருடைய உழைப்பை சிறு வயதிலேயே பார்த்தவன், காங்கிரஸை விட்டு வெளியே வந்த போது உடன் இரவு பகலாக தொகுதியில் சுற்றிச் சுற்றி உழைத்தவன், அதனைப் பெருமையுடன் எண்ணி மகிழ்பவன். மற்ற எந்தத் தலைவரை விட பல மடங்கு அதிக தகுதி வாய்ந்த தலைவராக அவரைத் தான் நான் கருதுகிறேன். நேர்மையின் சின்னமாக உண்மையாக வாழ்ந்து காட்டியவர், வெறும் வாய் ஜாலத்திற்காக அல்ல. தேர்தலில் தோல்வியடைந்து விட்டார் என்பதற்காக அவரை அரசியலில் இருந்து ஒதுக்கிப் பார்க்க முடியாது. ஒரு தலைமுறையையே தேசியவாதியாக, தேச பக்தனாக வளர்த்து விட்டவர் அவர். வாழ்க்கையிலும் அதை செயல் படுத்தினார். அவருக்காக இன்றும் ஏராளமான ரசிகர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் உழைத்து வருகின்றனர். நம்முடைய சக்தியினை அதுவும் செயல் வடிவம் தந்தால் பல திருப்புமுனைகளை வரலாற்றில் ஏற்படுத்தக் கூடிய வலிமை வாய்ந்த சக்தியினை எதிர்காலத் தலைமுறைக்கும் அரசியல் தூய்மைக்கும் பலனளிக்கும் வகையில் பயன் படுத்த வேண்டும் என்பதே என் ஆவல்.
அரசியல் வேண்டாம் என்று சொல்பவர்கள் இருப்பார்கள். அதற்காக வேண்டும் என்று சொல்பவர்களை தவறாக சித்தரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. இன்றைய நிலைமையில் அரசியலில் நேர்மையாளர்களும் நல்லவர்களும் வராமல் இருப்பதற்கு காரணமே இந்த மேம்போக்கான வாதங்கள். அரசியலுக்கு லாயக்கில்லை என்கிற ஒரு சொற்றொடர், ஒரு தேசத்திற்கே நன்மை ஏற்படுவதற்கு தடைக்கல்லாக இருப்பதை மக்கள் உணர வேண்டும். இந்த தடைக்கல்லை உடைத்தெறிந்து நல்லவர்களையும் நேர்மையாளர்களையும் இரு கரம் கூப்பி வரவேற்று உற்சாகப் படுத்தி ஆதரவளித்தால் தான் அரசியலில் தூய்மையையும் நேர்மையையும் நாம் எதிர்பார்க்க முடியும்.
அதற்காக நான் தற்போது எந்த இயக்கத்தையும் ஆதரிக்கச் சொல்ல வில்லையே. யாரையாவது குறிப்பிட்டுச் சொன்னால் அப்போது என்னை யாரும் சுட்டிக் காட்டலாம். கண்ணுக்கெட்டிய தூரத்தில் யாராவது தென்பட்டால், அதுவும் நடிகர் திலகத்தை தலைவராக ஏற்று அவர் வழி நடப்பதாக உறுதி கொண்டு அதனை நடைமுறையும் படுத்தினால் அப்போது இந்த சக்தி அதற்கு பயன் படட்டுமே. காரணம் நடிகர் திலகத்தைத் தலைவராக ஏற்றுக் கொள்பவர் நிச்சயம் அவருடைய கொள்கைகளையும் தத்துவங்களையும் ஏற்று செயல் படுத்துவார் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.
இது தான் என் நிலைப்பாடு.
இதில் எனக்கு யாருமே ஆதரவு தரவில்லையென்றாலும் நான் அதைப் பற்றிக் கவலைப் பட மாட்டேன். தனியாக என்றாலும் கூட என்னுடைய எண்ணம் நிச்சயம் இங்கே கருத்தாக பிரதி பலித்துக் கொண்டிருக்கும்.