Originally Posted by
Murali Srinivas
மகேஷ்,
உண்மைதான். மதுரையில் பிரிஸ்டிஜ் பத்மநாபன் 100-வது நாளை தவற விட்டார், இல்லை தவற விட வைக்கப்பட்டார் என்றே சொல்ல வேண்டும். வில்லன் விநியோகஸ்தர் சேது பிலிம்ஸ். தமிழகமெங்கும் பல பெயர்களில் [கிரசன்ட் மூவீஸ் போன்ற பெயர்களில்] விநியோக நிறுவனத்தை நடத்தி வந்த இந்த கீழக்கரை நபர்தான் தேவர் பிலிம்ஸ், பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் படங்களுக்கு நிரந்தர விநியோகஸ்தர். தவிர பல படங்களின் தயாரிப்பிலும் பைனான்ஸ் செய்வது வரை இந்த மனிதர்தான் என்பதால் மிகுந்த செல்வாக்கு உடையவராக திகழ்ந்தார். வியட்நாம் வீடு படத்தை திரையிட்ட வினியோகஸ்தரோ [எம்.ஏ. பிலிம் டிஸ்டிரிபியுட்டர் என்று நினைவு], எம்.ஆர். எனப்படும் மதுரை ராமநாதபுரம் ஏரியாவில் மட்டுமே வர்த்தகம் செய்துக் கொண்டிருந்த ஒரு சாதாரண விநியோகஸ்தர்.
இதற்கும் பார்த்தோமென்றால் வியட்நாம் வீடு மதுரையில் கருப்பு வெள்ளை படங்களில் ஒரு புதிய சாதனை நிகழ்த்திய படம். மதுரை ஸ்ரீ தேவியில் தொடர்ந்து 106 காட்சிகள் அரங்கு நிறைந்த படம். 106 Continuous House Full Shows. வெளியான 1970 ஏப்ரல் 11 முதல் மே 12 வரை அதாவது 32 நாட்களுக்கு அனைத்துக் காட்சிகளும் அரங்கு நிறைந்து ஓடிய படம். இந்த சாதனையை பின்னாளில் பட்டிக்காடா பட்டணமா வந்து முறியடித்தது [கோவையிலும் இரும்பு திரைக்கு பின் வசூல் சாதனை படைத்த கருப்பு வெள்ளை படம் வியட்நாம் வீடு]. இவ்வளவு ஏன், 13-வது வாரம் ஓடும் போது கூட ஞாயிறு மாலை காட்சி கூட [அதாவது 86-வது நாள் -1970 ஜூலை 5-ந் தேதி] ஸ்ரீதேவியில் ஹவுஸ் புல்.
இந்த நேரத்தில் தண்டாயுதபாணி பிலிம்ஸ் சார்பில் தேவர் தயாரித்த ஜெய்சங்கர் நடித்த மாணவன் படம் ஜூலை 10 அன்று வெளியாகிறது. அந்தப் படத்தை ஸ்ரீதேவியில் வெளியிடுவது என்று சேது பிலிம்ஸ் ஒப்பந்தம் செய்கிறார்கள். சேது பிலிம்ஸ் நினைத்தால் மாணவன் படத்தை சென்ட்ரலிலோ நியூ சினிமாவிலோ சிந்தாமணியிலோ வெளியிட்டிருக்கலாம். ஆனால் அவர்களோ பிடிவாதமாக ஸ்ரீதேவியில்தான் வெளியிட வேண்டும் என்று இருந்தார்கள். நமது பட விநியோகஸ்தரும் ரசிகர்களும் தியேட்டருக்கு சென்று பேசியும் கூட அவை சேது பிலிம்ஸின் பலத்திற்கு முன் எடுபடாமல் போனது. ஆகவே மதுரை தேவியிலிருந்து 90 நாட்கள் நிறைவு செய்த பிறகு வெள்ளைக்கண்ணுவிற்கு மாற்றப்பட்டு 100 நாட்களை நிறைவு செய்தது.
எத்தனையோ நடிகர் திலகத்தின் படங்கள் எங்கே அதிக பட்சமாக ஓடியிருக்கின்றன என்று பார்த்தால் கண்டிப்பாக மதுரைதான் என்று பெருமையோடு சொல்வோமோ அது போல் சில தீர்க்க முடியாத வருத்தங்களும் எங்களுக்கு உண்டு. அவற்றில் வியட்நாம் வீடு, ஞான ஒளி போன்றவை 100 நாட்களை தவற விட்டதும் [இரண்டுமே 90 நாட்கள்], மனோகரா, சம்பூர்ண ராமாயணம், பாசமலர், திருவிளையாடல் போன்ற படங்கள் குறைந்த நாட்களில் வெள்ளி விழாவை தவற விட்டதும் அடங்கும்.
அன்புடன்
மகேஷ், இதற்கும் முன்பு இதை பற்றி எழுதியிருக்கிறேன் என்றாலும் மீண்டும் உங்களுக்காக இதை எழுதுவதன் மூலம் ஒரு சின்ன மன ஆறுதல்.