Originally Posted by
vasudevan31355
அன்பு பம்மலார் சார்,
தங்கள் அன்பிற்கும், பதிவுகளைப் பற்றிய பாராட்டுதல்களுக்கும் தலை வணங்குகிறேன்.
தங்களுக்கு என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் எல்லா வளமும் பெற்று வாழ நம் நடிகர் திலகத்தை உளமார வேண்டுகிறேன்.
தங்களால்தான் காணக் கிடைக்காத பல அரிய ஆவணப் பதிவுகள் எங்களுக்குக் கிடைக்கின்றன. அதுவும் வியட்நாம் வீடு, அவன்தான் மனிதன் போன்ற படங்களின் விமர்சனங்கள் அன்றைய பத்திரிக்கைகளின் வாயிலாக நீங்கள் வழங்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேது? நான் அது போன்ற பத்திரிக்கைகளைத் தேடி அலைந்திருக்கிறேன். கிடைப்பது மிக அரிதாக குதிரைக்கொம்பாகத்தான் இன்றளவும் இருக்கிறது. சேர்த்து வைத்திருந்த சில ஆவணங்களும் சரியான பராமரிப்பின்றி சேதமுற்று விட்டன. ஆனால் எங்களை விட தாங்கள் வயதில் குறைந்திருந்தாலும் சிறுவயது முதற்கொண்டே சிறுத்தொண்டர் போல நம் இறைவனாரின் மேல் உள்ள அளவு கடந்த பக்தியினால் இந்தியாவெங்கும் தேடி அலைந்து குருவி சேர்ப்பது போல உங்கள் வாழ்நாளில் பெரும்பகுதியை இதற்காக மெனக்கெட்டு செலவிட்டுள்ளீர்கள்.
அதுமட்டுமல்ல. எனக்கு தலைவர் பற்றிய அரிய ஆவணம் ஒன்று கடலூரில் ஒரு கடையில் கிடைத்தது. அதை வாங்கலாம் என்று விலை விசாரித்தால் அதற்கு கடைக்காரர் சொன்ன விலையில் என் தலை சுற்றியது. இரண்டாவது அக்கால பொம்மை, பேசும்படம், சினிமா எக்ஸ்பிரஸ்,ஜெமினி சினிமா போன்ற பத்திரிக்கைகளைக் கேட்டால் இன்றைய தலைமுறையினர் பல பேர் சிரிக்கிறார்கள். அக்காலத்து ஆசாமிகளோ அதெல்லாம் "இப்போது எப்படி சார் கிடைக்கும்? என்று ஏளனப் பார்வை வீசுகிறார்கள். அப்படியே ஒன்றிரண்டு கிடைத்தாலும் அதற்கு அவர்கள் சொல்லும் விலையே தனி. பெரிய நூலகங்களில் கேட்டாலோ அங்கும் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். விதிமுறைகள்.
ஆனால் நாங்கள் செய்த பாக்கியம் எல்லோருக்குமாய் சேர்த்து நீங்கள் கிடைத்து விட்டீர்கள். தாங்கள் இதற்காக எவ்வளவு நேரத்தையும், பணத்தையும், உடல் உழைப்பையும் செலவிட்டீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பிரம்மிப்பாகவும், மலைப்பாகவும் இருக்கிறது. எவ்வளவு ஆவணங்கள்!. எவ்வளவு புகைப்படங்கள்!
நம் தலைவரின் ரசிகர்கள் விழா எது எடுத்தாலும் பேனர்களுக்கு புகைப்படம் வேண்டுமா... படங்களைப் பற்றிய துல்லியமான புள்ளி விவரங்கள் ஆதாரத்துடன் வேண்டுமா...தலைவரைப் பற்றிய புத்தகங்களுக்கு அனைத்து விஷயங்களும் வேண்டுமா... கல்யாணப் பத்திரிகை அடிக்க தலைவரின் ஸ்டில் வேண்டுமா....
"கூப்பிடு பம்மலாரை"
என்று அனைவரும் ஒரு சேர அழைப்பது தங்களைத் தான். அந்த நம்பிக்கைக்கும் தாங்கள் பங்கம் வைக்காமல் கேட்டவருக்கு கேட்டபடி 'கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா...கிருஷ்ணா' என்ற கூற்றுக்கேற்ப ஆவணங்களையும், ஸ்டில்களையும் கர்ணனாய் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறீகள். அவ்வளவு ஆவணகளையும் எலி, கரப்பான், கரையான், மழை, புயல், வெயில் அனைத்தையும் மீறி பாதுகாப்பது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. பல்வேறு இடங்களில் சுற்றி தாங்கள் சிரமப்பட்டு சேகரித்து வைத்துள்ள அபூர்வ ஆவணங்களையும், புகைப்படங்களையும் எங்களுடன் மனமகிழ்ச்சியோடு தாங்கள் பகிர்ந்து கொள்வது தங்களின் மேல் எங்களுக்கிருக்கும் மரியாதையை மேலும் மேலும் விரிவு படுத்திக் கொண்டே போகிறது. ஒரு விநாடியைக் கூட வீணடிக்காமல் பணமாக மாற்றி கொள்ளத் துடிக்கும் இந்தக் காலத்தில் எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் தாங்கள் இரவு பகல் பாராமல் திரிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்வதற்கு மிக உயர்ந்த உள்ளமும், எண்ணமும் வேண்டும். அது தங்களிடம் தாராளமாய் உள்ளது. பகலில் தாங்கள் அலுவலகப் பணிகளை முடித்து வீடு திரும்பியவுடன் பல இரவுகளில் தூங்காமல் கண் விழித்து திரியே கதியென்று இருப்பதை பல முறை நான் கவனித்திருக்கிறேன். கை பேசியைக் கூட சுவிட்ச் ஆப் செய்துவிட்டு இடைவிடாமல் பதிவுகள் இட்டதை நான் நன்கு அறிவேன்.
ஏதோ உங்களைப் புகழ்வதற்காக இதை எழுதுகிறேன் என்று தாங்கள் நினைக்க வேண்டாம். நானும் ஆவணைங்களுக்காக அலைந்து திரிந்து ஏமாந்ததுதான் மிச்சம். 'சே' என்று அலுத்து, சலித்து, வெறுத்து விட்டு வந்து விட்டேன். விடா முயற்சி சென்று வெற்றி பெறுவதற்கு நான் ஒன்றும் பம்மலார் அல்லவே!
அன்பன்
வாசுதேவன்.