Originally Posted by
vasudevan31355
அன்பு திரு.சிவாஜிதாசன் அவர்களே!
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. நம் இருவருக்கும் (இதில் பம்மலாரும் அடங்குவார்) ஒரே சிந்தனைதான் என்பதை எண்ணும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.சமீபத்தில்தான் நானும், பம்மலாரும் இது பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அந்தக் கருத்தைத் தாங்கள் அப்படியே பிரதிபலித்துள்ளீர்கள். இதைத்தான் vibration என்கிறார்களோ!
பொதுவாகவே எல்லோரும் ஏன் நமது ரசிகர்களும் கூட ஏதோ இருநூறு படங்களுக்கு மேல் வந்த தலைவரின் படங்கள் சுமார் ரகம் தான். இருநூறோடு அவர் நிப்பாட்டி இருக்கலாம் என்று கூறுவார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. பழைய படங்களின் தரத்தை புதிய படங்களில் காண முடியாது என்பது வேறு விஷயம். அதற்காக பழைய படங்களின் தரத்தை அப்படியே புதிய படங்களில் எதிர்பார்க்காமல் அதில் உள்ள நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ளலாமே! நான் குறிப்பிடுவது இப்போது வரும் புதுப் படங்களை அல்ல. இருநூறுக்கு மேல் வந்த தலைவரின் திரைப்படங்களைப் பற்றி.
திரிசூலத்திற்குப் பிறகும் பல நல்ல படங்கள், வெற்றிப்படங்கள் வந்திருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. இது என்னுடைய சொந்தக் கருத்து.
திரிசூலத்திற்கு அடுத்து 201- ஆவது படமாக வந்த 'கவரிமான்' ஒரு அற்புதமான படம் என்று எல்லோராலுமே ஏற்றுக் கொள்ளப்பட்டது. தலைவர் கூட இயக்குனர் திரு S.P.முத்துராமன் அவர்களிடம் "செதுக்கி செதுக்கி அழகான சிற்பமாய் இப்படத்தை வடித்திருக்கிறாய். ஜனங்கள் ரசிப்பார்களா?" என்று கேட்டாராம். அந்தப் படத்தை தரக் குறைவாக யாருமே விமர்சித்ததே இல்லை. அதற்கு முன்னால் வந்த திரிசூலத்தின் விஸ்வரூப வெற்றியினால் கவரிமான் பாதிக்கப்பட்டதே தவிர நல்ல படம் என்ற பெயரை அது இழக்கவே இழக்காது. மிகப் பெரிய வெற்றி அடையாவிட்டாலும் அது தோல்விப்படமல்ல. (பம்மலாரின் 'கவரிமான்' பதிவின் குறிப்பில் இதனை கவனித்திருப்பீர்கள்).
'நல்லதொரு குடும்பம்' அனைவரும் குடும்பத்தோடு பார்க்கக் கூடிய ஒரு நல்ல படம். நல்ல வெற்றியைப் பெற்ற படமும் கூட. எங்கள் கடலூரில் 40- நாட்களுக்கு மேல் ஓடி நல்ல வசூலை அள்ளித் தந்தது அப்படம்.
'இமயம்' தோல்விப் படமென்றால் கூட இப்போது பாருங்கள். very intersting -ஆன தலைவரின் நடிப்பு முத்திரைகளைத் தன்னகத்தே கொண்ட படம்.
'நான் வாழ வைப்பேன்' நல்ல வெற்றிப்படம். ரஜினிக்கு மறுவாழ்வு தந்த படம். நம் தலைவரும் அருமையாகப் பண்ணியிருப்பார்.(முக்கியமாகத் தலைவலி வரும் காட்சிகளில்)
'ரிஷிமூலம்' அனைவராலும் பாராட்டுப் பெற்று வெற்றியடைந்த படம்.
'எமனுக்கு எமன்' ஜாலியாகப் போகும் படம். சிரிப்புக்கு 100% உத்திரவாதம்.
'சத்திய சுந்தரம்' எதிர்பாராத பிரம்மாண்ட வெற்றியை அளித்த கலகலப்பான குடும்பப்படம். குவியல் குவியலாக தாய்மார்கள் இப்படத்தைக் கண்டு களித்தார்கள். நல்ல குடும்பப் படமாக குறிப்பாக பெண்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது.
இதே வரிசைகளில் கல்தூண், கீழ்வானம் சிவக்கும், வா கண்ணா வா, வசூலில் அட்டகாசம் செய்த சங்கிலி (பொதுவாக இரவுக்காட்சிகள் 9.30 அல்லது 10.00 மணிக்குத் துவங்கும். ஆனால் சங்கிலி கதையே வேறு. கடலூரில் இரவு பதினோரு மணிக்குள் இரவுக்காட்சி முடிந்துவிடும். இந்தப் படம் மட்டுமே அந்தப் பெயரைத் தட்டிச் சென்றது. அப்படி ஒரு கூட்டம் இப்படத்திற்கு. ஷோ கணக்கெல்லாம் கிடையாது. படம் விட்ட ஐந்தே நிமிடங்களில் அரங்கு நிறைந்து விடும். இப்படி பேயக்கூட்டத்துடன் எங்கள் ஊரிலும் ஓடி வசூலை வாரி அள்ளினார் 'சங்கிலி').
தீவிர வசூல் வேட்டியாடிய தீர்ப்பு, அற்புத நடிப்பைக் கொண்ட தியாகி, கேஷுவல் நடிப்பில் மனதை உருக்கிய துணை, மறுபடியும் பிராமணராக நடிப்புக் கொடி நாட்டிய பரிட்சைக்கு நேரமாச்சு, படித்ததின் பயனை மறந்து, காதலில் உழன்று, கடமையை மறந்து, பிறந்த கிராமத்தையே உதாசீனப்படுத்தும் தன் தம்பியை வித்தியாசமான அணுகுமுறையில் திருத்தி, கிராமத்து மக்களுக்கு மருத்துவ சேவை புரிய வைக்கும் கிராமத்தானாக நடித்து, நல்ல மெசேஜை சொல்லிய ஊரும் உறவும், வெள்ளி விழாக் கண்ட நீதிபதி, கேலி செய்தோரின் வாயை அடைத்து வசூலில் பின்னியெடுத்த மசாலாக் கலவை சந்திப்பு, மிருதங்க வித்வான்களே மெய் சிலிர்த்துப் பாராட்டிய மிருதங்கச் சக்கரவர்த்தி, வெள்ளை மனம் கொண்ட பாதராகவும், கர்ஜனை புரியும் போலீஸ் அதிகாரியாகவும் இரு மாறுபட்ட வேடங்களில் கலக்கிய வெள்ளை ரோஜா, திரும்பவும் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய திருப்பம், வசூலிலும், நடிப்பிலும் வரலாறு படைத்த வாழ்க்கை, மழலையின் மேல் பாசம் வைத்து மலைக்க வைத்த நடிப்பைப் பகிர்ந்து கொண்ட பந்தம், முக்காலமும் தலைவர் புகழ் பாடிக்கொண்டிருக்கும் முதல் மரியாதை, விசுவாமித்திரரை வியக்கும் வகையில் நடிப்பால் நமக்குக் காட்டிய ராஜரிஷி, அண்ணனின் அன்புப் பாசத்தை தம்பிகளிடம் கண்களிலேயே பிரதிபலித்த படிக்காதவன்,
இயக்குனர் வேடத்தில் இதயத்தை வருடிய சாதனை,
படுத்துக் கொண்டே நடிப்பில் ஜெயித்த மருமகள்,
ஸ்டைலிலும், நடிப்பிலும் ஜமாய்த்த ஜல்லிக் கட்டு,
தேவர்களும் மயங்கும் நடிப்பைக் கொண்ட தேவர் மகன்,
மகள் விதவையான சோகத்தை நேரிடையாகக் கண்டு அனுபவித்து சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகும் பசும்பொன்,
ஜாலியான அறுபது வயது இளைஞனாக யூத்களுடன் கும்மாளமிட்ட ஒன்ஸ்மோர்,
மோகன்லாலுடன் இணைந்து மோகன நடிப்பை வழங்கிய, மலையாளத் தமிழ் பேசிய ஒரு யாத்ராமொழி,
கடைசி வரையிலும் கரகாட்டம் ஆடி களேபரம் செய்த என் ஆச ராசாவே,
காதலர்களை இணையவைக்கும் முதியவராக இளையவர்களுக்கு ஈடு கொடுத்த பூப்பறிக்க வருகிறோம்
என்று தன் திறமை இறுதி வரை குறைந்ததல்ல என்று அவர் வாழ்நாள் முழுதும் தன் திறமையைக் காட்டினார் என்றுதான் கூற வேண்டும்.
அவருடைய முன்னாள் படங்களோடு இருநூறுக்கும் மேல் வந்த படங்களை ஒப்பிடுவதே தவறு. பின்னாட்களில் அவர் படங்கள் வேஸ்ட் என்பது தவறு என்பதும் என் தாழ்மையான கருத்து. பின்னாட்களிலும் மிகச் சிறந்த படங்களை அவர் தந்திருக்கிறார். நல்ல வித்தியாசமான நடிப்பையும் நமக்கு வழங்கி விட்டுத்தான் போய் இருக்கிறார். சில படங்கள் அவர் பெயரைக் கெடுத்திருக்கலாம். அவரும் அதற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். எல்லாவற்றையும் சிறப்பாகவும், வெற்றியுடனும் செய்யக் கூடியவர்கள் யாரும் இல்லை. ஏற்றத் தாழ்வுகள், சந்தர்ப்ப சூழ்நிலைகள், வெற்றி தோல்விகள் எல்லோருக்கும் உண்டு. இருநூறுக்கு முன்னாலும் அவருடைய மோசமான படங்கள் இருக்கின்றன. தோல்விப்படங்களும் இருந்திருக்கின்றன. எதையும் எதனுடனும் ஒப்பிடாமல் பார்ப்பது தான் ஒரு சரியான விமர்சனமாக இருக்க முடியும் என்பது என் கருத்து.
வெற்றி தோல்விகளை அவரும் எதிர்கொண்டே ஆக வேண்டும். நாம் எதிர்பார்த்த அளவுக்கு படங்களின் தரங்கள் இல்லாதிருந்திருக்கலாம். ஆனால் ஒரு இடத்திலாவது அவர் எல்லோரையும் வாயைப் பிளக்க வைத்து விடுவார். மறுபடியும் சொல்கிறேன். பின்னாட்களிலும் அவர் நல்ல படங்கள் பல கொடுத்திருக்கிறார். பிற படங்களில் இல்லாத நடிப்பையும் அளித்திருக்கிறார். அதனால் தான் இத்திரியில் நான் உறுப்பினரானவுடன் தாங்கள் மனதிலுள்ள எண்ணம் எனக்கும் இருந்ததினால் என்னுடைய முதல் ஆய்வுப் படமாக பின்னாளில் வெளியான 'கருடா சௌக்கியமா' படத்தை ஆய்வு செய்ய எடுத்துக் கொண்டேன்.
சற்று நீண்ட பதிவாகி விட்டது. பொறுமையுடன் படித்ததற்கு மிக்க நன்றி. அவர் விண்ணில் தெய்வமாக வாழ்ந்தாலும் மண்ணில் இருந்த போது அவரும் மனிதர் தான். ஆசாபாசங்களுக்கு உட்பட்டவர்தான், விருப்பு வெறுப்புகள் அவருக்கும் உண்டு. அவர் அப்போது கடவுள் இல்லை. எல்லாவற்றிலுமே நூறு சதவிகிதம் வெற்றியை எவரும் கொடுத்து விட முடியாது.
இப்படி ஒரு பதிவை நெடுநாட்களாகவே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். அது தங்களால் இன்று நிறைவேறிற்று. அதற்காகவும் தங்களுக்கு என் அன்பு நன்றிகள்.
நன்றியுடன்
வாசுதேவன்.