Courtesy -Thiru Ilango - Net
எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ...
நமக்குத் தெரிந்த ஒருவரது பெயரைச் சொன்னாலோ அல்லது ஒருவரைப் பற்றிய நினைவு வந்தாலோ நமக்கென்று பழக்கமான அவரது முகம் நினைவினில் வந்து நிழலாடும். எனக்கு எம்ஜிஆர் என்றால் … ... ... நினைவுக்கு வருவது ” நான் ஆணையிட்டால்” என்று சவுக்கை சுழற்றும் “எங்க வீட்டுப் பிள்ளை” எம்ஜிஆர் தான். அந்தப் படம் வந்தபோது (1965) நான் பள்ளி மாணவன். தீவிர ரசிகன் என்று சொல்ல முடியாது. எம்ஜிஆர் ரசிகன். அவ்வளவுதான். அந்த படத்தை பார்த்த பின்னர் , கிராமத்தில் எங்கள் தாத்தா வீட்டு மாட்டுக் கொட்டகையில் கயிற்றை சவுக்குபோல் முறுக்கி ” நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் “ என்று பாடிய சந்தோஷமான நாட்கள் இனி வராது.
எனது பள்ளிப் பருவத்தில் நான் எம்ஜிஆர் ரசிகன். அதற்காக அவரது படங்களே கதி என்று இருந்தவன் கிடையாது. படம் பார்ப்பதோடு சரி. படிப்பில் கோட்டை விட்டதில்லை. எம்ஜிஆர் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்துள்ளார். இருந்தாலும் எனக்கு எம்ஜிஆர் – சரோஜாதேவி ஜோடிதான் பிடிக்கும். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்றே நான் நினைத்தேன். நான் மட்டுமல்ல நிறையபேர் அப்படித்தான் நினைத்தார்கள்.. அப்பொழுதெல்லாம் சினிமா என்றால் நைட்ஷோதான். எம்ஜிஆர் படங்கள் தவிர வேறு பார்ப்பதில்லை. அப்புறம் கல்லூரிக்குச் சென்ற பின்னர்தான் மற்றவர்கள் நடித்த படங்களைப் பார்த்தேன்.
எங்கள் அம்மாவின் கிராமத்திலும் சரி, அப்பாவின் கிராமத்திலும் சரி உறவினர்கள் அனைவருமே அப்போது திமுக அனுதாபிகள். இயல்பாகவே நானும் திமுக அனுதாபியாகப் போனேன். ( இப்போது எந்த கட்சி அனுதாபியும் கிடையாது ) கூடவே எம்ஜிஆர் படங்களை காணும் ஆர்வம்.. நாங்கள் குடியிருந்த சிந்தாமணி பகுதியில் ” திராவிடப் பண்ணை” என்று புத்தக பதிப்பாளர் வீடும், பதிப்பகமும் இருந்தது. இதன் உரிமையாளர் பண்ணை முத்துக் கிருஷ்ணன். அறிஞர் அண்ணா புத்தகங்களை வெளியிட்டதற்காக அபராதமும் சிறைத் தண்டனையும் பெற்றவர். அவருடன் எனது அப்பாவிற்கும், சித்தப்பாவிற்கும் நல்ல பழக்கம். அவருடைய வீட்டிற்கு திமுகவின் அப்போதைய முக்கிய தலைவர்கள் வருவார்கள். அப்போது அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நெடுஞ்செழியன், மதியழகன், அன்பில் தர்மலிங்கம் ஆகியோரை நேரில் பார்த்து இருக்கிறேன். எம்ஜிஆர் இங்கு வந்ததில்லை. அவர் திருச்சி வந்தால் ஆஸ்பி ஹோட்டலுக்கு சென்று விடுவார். எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆசை இருந்தாலும் சந்தர்ப்பம் அமையவில்லை
அறிஞர் அண்ணா மறைந்த பிறகு கலைஞர் கருணாநிதி ஆட்சியின்போது திருச்சியில் 1970 இல் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாடு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ( இப்போது அண்ணா ஸ்டேடியம் ) நடந்தது. மாநில சுயாட்சி கோஷம் எழுப்பப்பட்டது அங்குதான். அப்போது திருச்சியில் நடக்கும் திமுகவின் எந்த நிகழ்ச்சியானாலும், சிந்தாமணியில் உள்ள் அண்ணா சிலையிலிருந்துதான் தொடங்குவார்கள். அப்படியே இந்த மாநாட்டிற்கும் இந்த அண்ணா சிலையிலிருந்து ஊர்வலம் தொடங்கியது. மாலைவேளை என்பதால் அந்தபகுதி முழுவதும் விளக்குகள் மயம். ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் தேர் போன்று அலங்கரிக்கப் பட்ட ரதத்தில் தலைவர்கள். எம்ஜிஆர் நடுநாயகமாக இருந்தார். கூட்டம் எம்ஜிஆரை நேரில் பார்க்கும் ஆர்வத்துடன் அந்த ரதத்துடனேயே சென்றது. அவர்களில் நானும் ஒருவன். அப்போதுதான் எம்ஜிஆரை முதன் முதல் பார்த்தேன். கொஞ்சதூரம் சென்றுவிட்டு நேரில் பார்த்த திருப்தியில் பாதியிலேயே வந்துவிட்டேன்.
அடுத்து அந்த மாநாட்டிற்கு நானும் சென்று இருந்தேன். மாநாட்டு மேடையில் அப்போது ஒருவர் முழங்கிக் கொண்டு இருந்தார். திடீரென்று மாநாட்டு பந்தல் முன்பு ஒரே சலசலப்பு. மைக் முன்பு பேசிக் கொண்டு இருந்தவர் நிறுத்தி விட்டார். ” எம்ஜிஆர் எம்ஜிஆர் ‘ என்று கத்தினார்கள். கூடவே வாழ்க, வாழ்க என்று கோஷம். அப்போதுதான் மேடைக்கு வந்தார் எம்ஜிஆர். இதுமாதிரி கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென்று மேடைக்கு வருவதுதான் எம்ஜிஆர் ஸ்டைல். கூடவே ஜெயலலிதா. மாநாட்டில் நடக்கவிருக்கும் காவிரி தந்த கலைச்செல்வி நாடகத்திற்காக வந்து இருந்தார்.
அதன்பிறகு கட்சியில் எவ்வளவோ மாற்றங்கள். அரசியலில் நண்பர்களிடையே பூசல். அதிமுக பிறந்தது. எம்ஜிஆர் இருந்தவரை கருணாநிதியால் ஆட்சிக் கட்டிலுக்கு வரவே முடியவில்லை. எம்ஜிஆர் ரசிகனாக இருந்தாலும் நான் அவர் கட்சியில் உறுப்பினராக சேர்ந்ததில்லை.திமுக அனுதாபியாகவே இருந்தேன். இப்போது நான் எந்த கட்சி அனுதாபியும் இல்லை. ஆனாலும் நான் இப்போதும் எம்ஜிஆர் ரசிகன்தான். மனதை உற்சாகப் படுத்திக் கொள்ள எம்ஜிஆர் படப் பாடல்கள்தான .