Originally Posted by
KALAIVENTHAN
சிரிப்பும் அழுகையும்
1978ம் ஆண்டு ஒரு நாள். தலைவர் முதல்வராக இருந்த நேரம். தோட்டத்துக்கு அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். சூரியனை தோற்கடிக்கும் பிரகாசத்தோடு ஒளிமயமாய் வந்த அவர், என்னை அன்போடு வரவேற்றார். அவர் காலில் விழுந்து வணங்கினேன். என்னை அள்ளி அணைத்து ஆசி வழங்கினார். பின்னர், இனியும் என்னால் முடியாது என்ற நிலை வரும்வரை வயிறு புடைக்க அவரே உணவு பரிமாறினார். மீண்டும் அவரிடம் ஆசி பெற்று கண்களால் அவரை விழுங்கியபடியே கும்பிட்டு விடைபெற்றேன்.
.......... இப்படியெல்லாம் சொல்லிக்கொள்ளும் பாக்கியம் இந்தப் பாவிக்கு இல்லை நண்பர்களே. பல நிகழ்ச்சிகளிலும் கூட்டங்களிலும் ஒரு மூலையில் நின்றபடி அவரை தரிசித்ததோடு சரி. ஆனாலும், என்னைப் பார்த்து அவர் கையசைத்து சிரித்திருக்கிறார். மேடைக்கு வந்த தலைவரை நோக்கி கையசைத்த ஆயிரக்கணக்கான கரங்களில் எனது கரமும் ஒன்று. பதிலுக்கு மேடையில் மூன்று புறமும் சென்று கூட்டத்தை பார்த்து அவர் சிரித்தபடியே கையசைத்தது எனக்கும் சேர்த்துதானே என்ற மகிழ்ச்சி எனக்கு. அப்போதெல்லாம், தலைவரை நேரில் பார்க்க வேண்டும், அவரது ஆசியைப் பெற வேண்டும் என்று நினைப்பேன். வாய்ப்புகளும் அதைவிட முக்கியமாக சென்னை வந்து அவரை தரிசிக்க அப்போது வசதியும் இல்லை. இருந்தாலும் என்றாவது ஒரு நாள் அவரை சந்தித்து ஆசி பெறுவேன் என்பதை எனது வாழ்க்கை லட்சியமாகவே வைத்திருந்தேன். அந்த லட்சியம் நொறுங்கிப் போன நாள் 1987 டிசம்பர் 24.
இனி அவரைப் பார்க்கவே முடியாதே. இது என் சாவு வரை என் நெஞ்சிலே உறுத்திக் கொண்டிருக்கும் முள்ளாகவே இருக்கும். தலைவர் இருக்கும்போது அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பும் வசதியும் இல்லை. இப்போது, வாய்ப்பும் வசதியும் இருக்கும்போது தலைவர் இல்லை. இதை மனதில் கொண்டுதான் சிரித்து வாழ வேண்டும் விமர்சனத்தில், ‘‘விருப்பம் இருக்கும்போது வாய்ப்பு இருக்காது. வாய்ப்பு வரும்போது விருப்பம் இருக்காது. ஆசைப்படும்போது கிடைக்காது. கிடைக்கும்போது ஆசை இருக்காது. இந்த எதார்த்தத்தின் பெயர்தான் வாழ்க்கை’’ என்று குறிப்பிட்டிருந்தேன். ‘இதைப் புரிந்து கொண்டு அனைவரும் சிரித்து வாழ வேண்டும்’ என்றும் கூறியிருந்தேன். இதுகூட என்னை நானே தேற்றிக் கொள்ளும் வார்த்தைகள்தான்.
தலைவர் உடலால் மறைந்து 27 ஆண்டுகள் ஆனாலும், புகழால் மறையவில்லை. 27 என்ன? 27,000 ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் மறையாது. அதை உறுதிப்படுத்துவதுபோல, ‘‘அடப் பைத்தியமே, இறப்பெல்லாம் உங்களுக்குத்தான். காலத்தை வென்ற எனக்கு இறப்பேது?’’ என்று சொல்லாமல் சொல்லி, தலைவர் என்னமோ வீட்டில் படமாக சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார். என்றாலும் தாங்க முடியாமல் நான்தான் அழுது கொண்டிருக்கிறேன்..... இப்போதும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்